நடேசன்
ஆண்கள் அழுவதைக்கண்டால் என்னால் சகிக்க முடியாது. எனது வாழ்கையில் சில தடவைகள் மட்டும்
மற்றவர்களுக்குத்தெரியாமல் அழுதிருக்கிறேன். ஆனால், இந்த இடத்தில் என்னை மீறிய சோகமாக வெளிப்பட்டது.
இலங்கைப் பயணத்தில் மட்டக்களப்பில் நின்றபோது அவுஸ்திரேலியாவிலிருக்கும் நண்பர் செய்யத்துடன் பேசினேன். அவர் என்னை காத்தான்குடிக்கும் போகும்படி சொன்னார்.எனது பயணம் கல்முனை நோக்கியிருந்தமையால் அதில் மாற்றம் செய்ய தயக்கமாகவிருந்தது. ஆனாலும் அவரது வற்புறுத்தல் என்னை அங்கு செல்லவைத்தது. அவர் எனக்காக ஒருவரை ஒழுங்கு பண்ணியிருந்தார்.
மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடிக்கு ஓட்டோவில் சென்றதும் என்னை காத்தான்குடி பள்ளிவாசலுக்கு செய்யத்தின் நண்பர் அழைத்துச்சென்றார்.
காத்தான்குடி பள்ளிவாசல் வளவுக்குள் பிரவேசித்து, பாதணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றபோது அங்கிருந்த சுவரில் குண்டுகளால் உருவாகிய உடைவுகளைக்காட்டினார்கள்.பல உடைவுகள் கிரிக்கட்பந்தின் அளவில் இருந்தன. நிலத்தில் கம்பளம் விரித்திருந்தது. தரையை சீர்படுத்தியுள்ளார்கள். ஆனால் சுவரை உடைவுகளுடன் அப்படியே வைத்திருக்கிறார்கள். அவை லைட் இயந்திரத்துப்பாக்கியால் ஆனவை என்றபோது அந்தச் சம்பவத்தை எனது கண்முன்பாக கற்பனையில் பார்க்கமுடிந்ததும் அடக்க முடியாது கண்ணீர் வந்தது.
ஏற்கனவே இந்த விடயம் எப்படி நடந்தது என்பது என்மனதில் ஒரு ஓவியமான கற்பனை இருந்தாலும் அதற்கு மேலாக உண்மையாக நடந்திருப்பதைப் பார்த்தபோது அதிர்வைக்கொடுத்தது. சாதாரண மனிதர்களாகத் தொழுவதற்கு வந்த ஒவ்வொருவரும் என் மனதில் வந்து சென்றனர்.பள்ளிவாசலை அடுத்து அவர்களை அடக்கம் பண்ணிய இடம் இருந்தது.
இலங்கையில் தமிழர்களாகிய நாம் பல படுகொலைகளுக்கு உட்பட்டிருக்கும்போது அதை மற்றவர்கள்மீது நடத்துவதன் தர்மம் எனக்குப்புரியவில்லை.
முள்ளிவாய்கால் படுகொலை பற்றி நாம் பேசும்போது இலங்கை முஸ்லிம்கள் காத்தான்குடியையும் சிங்களவர்கள் அனுராதபுரம் கெப்பித்திகொல்லாவையும் நினைப்பது தவிர்க்கமுடியாதது.
எப்படி கொலைகாரர்கள் நீதி கேட்கமுடியும்? உண்மையில் தற்போதைய ஜெனிவா மனித உரிமை விடயங்கள் விசாரணைகளை நான் கேலிக்கூத்தாக நினைக்கிறேன். நீதி, தர்மம் மற்றும் மனித உரிமைகளை பேசும் தார்மீகமான உரிமையை நாங்கள் கொண்டிருப்பதாக என்னால் நம்பமுடியவிலை. நான் தவறாக சொன்னால் யாராவது சொல்லுங்கள்.
இப்படியான எண்ணங்கள் எனது மனதில் ஓடியபடியிருந்தபோது எதிரில் ஒருவர் அந்த பள்ளிவாசலைச் சுத்தமாக்கிக்கொண்டிருந்தார். அவர் அருகில் வந்து ‘அந்தத் தாக்குதலில் நான் உயிர் தப்பினேன்.’ என்றார்.
நேரடிச்சாட்சி
இவ்வளவு வருடத்தின் பின்பு நேரடிசாட்சியாக ஒருவர் கிடைப்பது எனது எழுத்துத்துறைக்கு அதிஸ்டமே.
“அன்று அண்ணளவாகப் பத்துபேர் இரஞ்சித் என்பவரின் தலைமையில் வந்தார்கள். ஆரம்பத்தில் பள்ளிவாசலுக்கு வெளியே நின்றவர்களிடம் நீங்களும் உள்ளே செல்லுங்கள். நாங்கள் ஒரு கூட்டம் நடத்தவந்திருக்கிறோம் என்றதும் வெளியே நின்றவர்களும் உள்ளே வந்தார்கள். அதன் பின்பாக ஐந்து நிமிடத்தில்தொழுது கொண்டிருந்தவர்கள் மீது வாசலில் வைத்து இயந்திரத்துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்கள்.
அலறியபடி எல்லோரும் நிலத்தில் படுத்துக்கொண்டனர். நான் சிறிது நேரத்தில் இயந்திரத்துப்பாக்கிச்சத்தம் நின்றதும் படுத்தபடியே மெதுவாகத் திரும்பிப் பார்த்தபோது சில கைக்குண்டுகளை எறிந்தார்கள். நான் திரும்பிப்பார்த்தபோது எனது பக்கத்தில் கிடந்த ஒருவரது தலைவெடித்து மூளை வெளியே வந்திருந்தது. இப்படியே இயந்திரத்துப்பாக்கியாலும் கைக்குண்டுகளாலும் தாக்கிவிட்டுச் சென்றார்கள்.
பள்ளிவாசல் தரை இரத்தம் தசை மூளை என கொலைக்களமாகத்தெரிந்தது. நான் தப்பிப்பிழைத்தது இன்று இருக்கிறேன்” என அவர் சொன்னார்.
அந்த இடத்தில் மவுனமாகக் கேட்பதைத்தவிர வேறு எதுவும் சொல்லமுடியவில்லை. அந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மற்றும் ஒரு பள்ளிவாசலிலும் கொலைகளைச்செய்ததுடன் ஒரு வீட்டிற்கும் சென்று அங்கிருந்த ஒரு ஆசிரியரைக் கொலை செய்திருக்கிறார்கள்.
என்னை அழைத்துச் சென்றவர் காத்தான்குடியில் மனித உரிமை நிலையத்தில் வேலை செய்பவர். அவர் தனது இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்
“இப்படி விடுதலைப்புலிகள் காத்தான்குடியில் பயங்கரமாகச் செய்ய ஏதாவது காரணம் இருக்கிறதா? ” என அவரிடம் கேட்டேன்
” அக்காலத்தில் கரிகாலன் அரசியல் பொறுப்பாளராகவும் கருணா இராணுவப்பொறுப்பாளராகவும் இருந்தனர். அக்காலத்தில் வியாபாரிகளிடம் விடுதலைப்புலிகள் பணம் வசூலிப்பது வழக்கம். பிற்காலத்தில் அதிகபணத்தைக்கேட்டார்கள். அப்போது மறுத்தது உண்மை. அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஊர்காவல் படையில் பலர் இருந்தார்கள். இவைகள்தான் காரணம்”
” அதாவது காத்தான்குடி முஸ்லீம்களுக்கு இதனை ஒரு பாடமாக செய்தார்கள் என்கிறீர்களா…? ” எனக்கேட்டேன்.
தலையை ஆட்டினார்.
விடுதலைப்புலிகள் விசர்கொண்ட நாய்போல் தொடர்ச்சியாக தமது எதிரி எனக்கருதுவோரை கடித்துக் குதறுவார்கள். அவர்களின் செயல்களுக்கு தர்க்க ரீதியான காரணங்களை எதிர்பார்க்கமுடியாதபோதிலும், என்னைப்பொறுத்தவரை அனுராதபுரத்தில் 85 இல் அப்பாவிச் சிங்கள மக்கள் மீதான படுகொலை, அதன்பின் தமது சிறையில் வைத்திருந்த மாற்று இயக்கத்தினரையும் சில தமிழ்முதலாளிகளையும்
கந்தன்கருணை என்ற இடத்தில் (பிற்காலத்தில் வேறு இடமெனச் சொல்லப்பட்ட) என நல்லூரில் செய்த கொலைகளையும் அதன்பின்பு காத்தான்குடிப்பள்ளிவாசல் கொலைகளும் மிகவும் மிலேச்சத்த்தனமானவை.
எமது முப்பது வருடபோராட்ட வரலாற்றில் பல படுகொலைகள் எமது நாட்டில் தமிழர்கள்மேல் நடத்தப்பட்டிருக்கிறது. வெலிகடைப்படுகொலை மற்றும் குமுதினிப் படகு படுகொலை என்று நடந்தன. அதேபோல யுத்தகாலத்தில் மூதூரில் தொண்டு நிறுவனத்தில் வேலைசெய்தவர்கள் கொலைசெய்ப்பட்டார்கள். பல தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம் ஊர்காவல்படைகளாலும் படையினராலும் தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
ஜிகாத், அலபற்றா என்ற பெயரில் இயங்கிய முஸ்லீம் இளைஞர்கள் இதில் முக்கியமானவர்கள். ஆரம்பத்தில் தமிழ் இயக்கங்களில் சேர்ந்து இயங்கியவர்கள் பிற்காலத்தில் இயக்கங்களின் நடத்தையால் வெளியேறியதும் அவர்களை அரசாங்கம் தனக்கு சாதகமாக பாவித்தது.
அண்ணளவில் 25 முஸ்லீம் இளைஞரகள் விடுதலைப்புலி இயக்கத்திலிருந்து மரணமடைந்திருக்கிறார்கள். மற்ற இயக்கங்களில் இணைந்திருந்த முஸ்லீம் இளைஞர்களையும் எடுத்துப் பார்த்தால் வட – கிழக்குப் பகுதியில் இருந்த முஸ்லீம் மக்களில் கணிசமான ஆதரவு ஆயுதப்போராட்டத்திற்கு இருந்தது.
அவர்களைப் பிற்காலத்தில் எதிரிகளாக்கியதும் இப்படியான செயல்களே. ஈழப்போராட்டத்திற்கு எதிராக முஸ்லிம்களை மட்டுமல்ல, இந்திய மக்களை, ஏன் கணிசமான இலங்கைத் தமிழர்களையே எதிர்பாளராக்கியது நமது சாதனையே.
மறுமொழியொன்றை இடுங்கள்