கங்காரு நாட்டுக்காகிதம்
முருகபூபதி
அவுஸ்திரேலியாவுக்கு 1987 பெப்ரவரியில் வந்து, மெல்பனில் West Brunswick என்னுமிடத்தில் ஒரு படுக்கை அறைக்குடியிருப்பை வாடகைக்கு எடுத்து புகலிட வாழ்வை நான் ஆரம்பித்து, இரண்டு நாட்களில் நண்பர் இராஜரட்ணம் சிவநாதன், ( இவரை எனக்கு இலங்கையிலேயே தெரியும்) தொலைபேசியில் ( அப்பொழுது கைத்தொலைபேசி இல்லாத காலம்) ” பூபதி, தருமகுலராஜா என்ற ஒரு நண்பர் வருகிறார். அவர் உங்களை Don caster என்ற இடத்துக்கு அழைத்துச்செல்வார். அங்கே மகேஸ்வரன் என்ற ஒரு பொறியிலாளரின் வீட்டில் ஒரு கூட்டம் நடக்கிறது…? போய்ப்பாருங்கள்.” என்றார்.
எனக்கு அவர் சொன்ன இடமும் தெரியாது சொன்ன பெயர்களுக்குரியவர்களும் அப்போது தெரியாது.
பொழுதுபோகாமல் இருந்த எனக்கு யாராவது பேச்சுத்துணைக்கு கிட்டினால் போதும் என்றிருந்தபோது, நண்பர் சிவநாதன் அன்று தொடக்கிவைத்த பேச்சுத்துணை, நாளுக்கு நாள் நீண்டு, நான் இந்தக்கண்டத்தில் தேடிய பேச்சுத்துணைகளின் எண்ணிக்கைகளும் நீண்டு முப்பது வருடங்களாகிவிட்டன.
தருமகுலராஜா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் ஒரு கணக்காளர். அவருடைய காரிலே Doncaster செல்லும்போது அங்கு நடக்கவிருக்கும் கூட்டம் பற்றி சுருக்கமாகச்சொன்னார்.
அது ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கும் கூட்டம் என்பது புரிந்தது.
இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பல வருடகாலமாக ஓயாமல் எழுதிய போர்க்காலச்செய்திகளினால் சலிப்புற்று ஒதுங்கி, ஓடி வந்திருக்கும் எனக்கு இந்தக்கூட்டம் அவசியமானதா…? என்ற கேள்வி மனதில் எழுந்தது.
ஒரு அகதியாக வந்திருக்கின்றோம். குடும்பத்தை விட்டு பிரிந்து வந்துள்ளோம். தொடர்ந்து இங்கிருப்போமா…? திருப்பி அனுப்பப்படுவோமா…? என்ற மனச்சஞ்சலங்களுடன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் ஆர்வம் இருக்கவில்லை.
எனினும், புதிய இடத்தில் பல புதிய முகங்களை சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் தருமகுலராஜா அழைத்துச்சென்ற அந்த இஞ்சினியரின் வீட்டிற்குள் சென்றேன்.
அந்த இஞ்சினியரைப்பார்த்ததும் எனது கண்கள் வியப்பால் மின்னியிருக்கவேண்டும். அவரும் என்னைக்கண்டதும் அருகே வந்து அணைத்துக்கொண்டார்.
அவர்தான் மெல்பனில் பிரபலமான சமூகப்பணியாளர் Doncaster மகேஸ்வரன். அவர் எங்கள் நீர்கொழும்பில் P.W.D. யில் Executive Engineer ஆக இருந்தவர்.
இவருடைய இல்லத்தில் காசி ஆனந்தன், கோவை மகேசன், பேரின்பநாயகம் ( அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது அவருடைய செயலாளராக இருந்தவர்) ஆகியோர் அடிக்கடி சந்தித்திருக்கிறார்கள்.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்திலும் மகேஸ்வரன் அங்கம் வகித்தவர்.
அவரே அங்கிருந்தவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
ஜெயக்குமார், சோமா. சோமசுந்தரம் அவரது மனைவி ரஞ்சி சோமசுந்தரம், நவரட்ணம், அவரது மனைவி மனோ நவரட்ணம், சுந்தரமூர்த்தி, ராஜா வில்சன். இன்னும் சிலர் இருந்தார்கள். இங்கு குறிப்பிடப்பட்டவர்கள் எமது மெல்பன் தமிழ் சமூகத்தில் பின்னாளில் பிரபலமானதனாலோ என்னவோ எனக்கு இவர்கள்தான் நினைவில் நிற்கிறார்கள்.
நான் வீரகேசரியில் பணியாற்றியவன் என்பதை தருமகுலராஜா மூலம் தெரிந்துகொண்ட சோமா அவர்கள், என்னை சுந்தரமூர்த்தியிடம் அறிமுகப்படுத்தி,” என்னை இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் செய்தி ஏட்டிற்கு (News Letter) பயன்படுத்திக்கொள்ளுமாறு” சொன்னார்.
ஆனால், அந்த News Letter அன்று அவர்களின் கைவசம் இருக்கவில்லை. நான் அதனைப்பார்க்கவிரும்புவதாக சுந்தரமூர்த்தியிடம் சொன்னேன். அதன் பிரதிகளை எனக்கு தபாலில் அனுப்புவதாகச்சொன்ன அவர், எனது வீட்டு முகவரியைப்பெற்றுக்கொண்டார்.
அவர் Springvale என்னுமிடத்தில் ஒரு அச்சகம் நடத்திக்கொண்டிருந்தார் என்பது பின்னர் தெரியவந்தது.
அன்றைய கூட்டம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நிதிதிரட்டும் சந்திப்பாக அமைந்திருந்தது என்பதை அங்கிருந்தவர்களின் உரையாடல்களின் மூலம் தெரிந்துகொண்டேன். நான் ஊருக்குப்புதியவன், அகதியாக வந்திருப்பவன். இன்னமும் எனக்கென ஒரு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ளாதவன் முதலான காரணங்களினால், அவர்கள் என்னிடம் எந்த உதவியும் அன்று எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் குறிப்பிடும் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் செய்தி ஏட்டில் எழுதுவதற்கு வாய்ப்புக்கிட்டுகிறது என்ற மகிழ்ச்சியுடன் அன்றைய தினம் அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.
சில நாட்களில் எனக்கு ஒரு சிறிய பார்சல் தபாலில் வந்தது.சுந்தரமூர்த்தி அனுப்பியிருந்தார். பிரித்துப்பார்த்தேன். விக்ரோரியா இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் செய்தி ஏட்டின் சில பிரதிகள் அதிலிருந்தன.
இலங்கைத் தமிழ்ச்சங்கம் அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களினால் உருவாக்கப்பட்ட அமைப்பு. அதன் செய்தி ஏடான தென்துருவ தமிழ் முரசு இதழ்களின் சில பிரதிகளையே அன்பர் சுந்தரமூர்த்தி எனக்கு தபாலில் அனுப்பியிருந்தார்.
இச்சங்கத்தில் அங்கத்தவராக இருப்பதாயின் என்னைப்போன்று அகதிகளாக இலங்கையிலிருந்து வந்தவர்கள், இந்நாட்டில் நிரந்தர வதிவிடவுரிமை பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு எழுதாத விதியிருந்தததாக அறிந்திருந்தேன்.
எனவே, குறிப்பிட்ட செய்தி ஏட்டினை தொகுப்பதற்கு எனக்கு அருகதையில்லை என்பது புரிந்தது. எனினும், நட்பின் அடிப்படையில் என்னையும் அதில் இணைத்துக்கொள்வதற்கே, நாமெல்லோரும் சுந்தா என அழைக்கும் சுந்தரமூர்த்தி விரும்பியிருந்தார்.
நண்பர் இராஜரட்ணம் சிவநாதனும் சுந்தரமூர்த்தியின் நண்பராக இருந்தமையாலும் வீரகேசரியில் நான் முன்னர் பணிபுரிந்தமையாலும் என்னை இணைத்துக்கொள்ள அவர் விரும்பியிருக்கவேண்டும்.ஆனால், குறிப்பிட்ட தென்துருவ தமிழ் முரசு இதழ்களின் உள்ளடக்கம் எனது கருத்தியலுக்கு உடன்படாதிருந்தமையினால், அந்தப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
எனினும் எனக்கும் சுந்தரமூர்த்திக்கும் இடையிலான நட்புறவு இற்றைவரையில் எந்த விக்கினமும் இல்லாமல் தொடருகிறது.
1988 இல் இங்கு வதியும் சில அன்பர்களுடன் நான் தொடக்கிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வ தொண்டர் அமைப்புக்கு சுந்தர் அவர்கள் தனது தார்மீக ஆதரவை வழங்கினார்.
அவரது ஸ்பிரிங்வேல் அச்சகத்தில் தென்துருவ தமிழ் முரசு அச்சிடப்பட்டது. அத்துடன் அங்கிருந்துதான் சங்கத்தின் பிரசுரங்கள், அறிவித்தல்களும் வெளியாகின.
எமது கல்வி நிதியத்திலும் இணைந்து ஒரு மாணவருக்கு உதவுவதற்கு முன்வந்த சுந்தர், நிதியத்திற்கான Letterhead ஐ இலவசமாகவும் அச்சிட்டுத்தந்தார்.
இது இவ்விதமிருக்க, வீரகேசரி பத்திரிகையை இலங்கையிலிருந்து தபாலில் பெறுவதற்காக அவ்வேளையில் வீரகேசரி விளம்பரம், விநியோகப்பிரிவு முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் அவர்களைத்தொடர்புகொண்டேன்.என்னைப்போன்று பல பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றிருப்பதனால், வீரகேசரி சர்வதேசப்பதிப்பு வெளியிடும் எண்ணத்தில் நிருவாகம் இருப்பதாகச்சொன்னார்.
கணினியில் தமிழ் பரவலாக அறிமுகமாவதற்கு முன்னர், அத்தகைய அவரது யோசனை வரவேற்புக்குரியதாக இருந்தது. அந்த யோசனை தொடர்பாக அவர் எனக்கு விரிவான கடிதமும் அனுப்பியிருந்தார்.அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் முக்கிய தமிழ்ப்பிரமுகர்களிடம் வீரகேசரி சர்வதேச பதிப்பு தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று அனுப்புமாறும் அவர் கேட்டிருந்தார்.இதுதொடர்பாக, அச்சமயம் தென்துருவ தமிழ்ச்சங்கங்களின் சம்மேளனத்தலைவர்களில் ஒருவரான ( அமரர்) பேராசிரியர் சி. ஜே. இலியேஸர், தமிழ் அகதிகளின் விண்ணப்பங்களில் ஈடுபாடு காண்பித்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ( அமரர்) சோமா சோமசுந்தரம் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு அறிக்கையை வீரகேசரி விளம்பர, விநியோக முகாமையாளருக்கு அனுப்பிவைத்தேன்.
1987 நடுப்பகுதியில் வடமராட்சியில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவுக்கு அமைய லிபரேஷன் ஒப்பரேஷன் தாக்குதல் தொடர்ந்தது.
அதனால் மக்கள் கொல்லப்பட்டும், பாதிக்கப்பட்டும் அவலப்படுவதைக்கண்ட விக்ரோரியா இலங்கைத்தமிழ்ச்சங்கம், இங்கிருந்த தமிழ் மக்களிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, தமிழக முதல்வர் எம். ஜி. ஆருக்கும், பாரதப்பிரதமர் ரஜீவ் காந்திக்கும் தந்திகளை அனுப்பினோம்.
அனைத்துலகத்திலுமிருந்து வந்த அழுத்தங்களினால் இந்திய அரசின் திடீர் உத்தரவுக்கு அமைய வடமராட்சிப்பிரதேசங்களில் இந்திய விமானங்கள் அத்துமீறிப்பிரவேசித்து உணவுப்பொட்டலங்களை வழங்கின.
இந்த சமிக்ஞையை அன்றை இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா விரும்பாதமையினால், இந்தியாவுடன் பேசுவதற்கு முன்வந்தார். இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்தானது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் சுதுமலை அம்மன்கோயில் முன்றலில் போரை நிறுத்தி ஆயுதங்களை ஒப்படைப்பதாக மக்களிடம் சொன்னார்.இந்திய அமைதிகாக்கும் படையும் பிரவேசித்தது. இதனையடுத்து நிலைமை முற்றாக தலைகீழாக மாறியது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. யின் வன்முறைகள் தொடர்ந்தன. நாட்டில் பதட்டம் தோன்றியது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் வீரகேசரி நிருவாகம் சர்வதேச பதிப்பினை அச்சிடும் யோசனையை கைவிட்டது. எனினும் வீரகேசரி தினப்பதிப்பு மற்றும் ஞாயிறு வாரவெளியீடு ஆகியனவற்றை தபாலில் தொடர்ந்து பெற்றேன்.இதற்கான வருட சந்தாப்பணத்தினை செலுத்துவதில் இங்கிருந்த சில நண்பர்கள் என்னுடன் இணைந்துகொண்டனர். ஒருவர் பின் ஒருவராக வீரகேசரியை படித்து எங்களது வாசிப்புத்தேவையை பூர்த்தி செய்துகொண்டோம்.
இலங்கை – இந்திய உடன்படிக்கை உருவான காலப்பகுதியில் இலங்கைத்தமிழ்ச்சங்கம் தமிழ்நாட்டிலிருந்து பழ. நெடுமாறன் அவர்களை இங்கு உரையாற்றுவதற்கு அழைத்திருந்தது.
அந்தக்கூட்டம். ஒரு விடுமறை நாளில் முற்பகல் வேளையில் மெல்பன் Parkville இல் அமைந்த பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
அக்காலப்பகுதியில் இந்த மண்டபத்தில்தான் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் நிகழ்ச்சிகளும் குறிப்பாக சிட்னி கலைஞர்களினால் தயாரித்து மேடையேற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் நாடகமும், மெல்பன் தமிழ்க்கலை மன்றத்தின் கலைமகள் விழாவும், அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியத்தின் கதம்ப விழா, மற்றும் பாரதி விழா, விக்ரோரியா இந்து சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் என்பனவும் நடைபெற்றன.
மெல்பன் வாழ் தமிழ் மக்களுக்கு மிகவும் அறிமுகமான மண்டபமாக அக்கல்லூரி அமைந்திருந்தது.
பழ . நெடுமாறன் முன்னர் அகில இந்தியக்காங்கிரஸின் கீழ்மட்டத்தொண்டராக இருந்து, பின்னர் கர்மவீரர் காமராஜரின் அரசியல் சீடராகவும் தமிழக சட்டசபையில் உறுப்பினராகவும் விளங்கியவர். காங்கிரஸ் பிளவுற்றவேளையில் இவர் காமராஜரின் அணியில் இணைந்தார். கர்மவீரரின் மறைவுக்குப் பின்னரும் காங்கிரஸ் பிளவடைந்தது.
பழ. நெடுமாறன் அதன்பின்னர், காமராஜ் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். குமரி. அனந்தன் காந்தி – காமராஜ் என்ற கட்சியை உருவாக்கினார். காலப்போக்கில் இவை இரண்டும் இந்திய அரசியல் அரங்கிலிருந்து காணாமல் போய்விட்டன.
எனினும் தமிழ்த்தேசியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்த பழ.நெடுமாறன் அவர்கள், இந்திய – தமிழக அரசுகளுக்கோ கடல் எல்லைக்காவலர்களுக்கோ தெரியாமல் படகில் வந்து வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்துச்சென்றிருந்தமையினால், அவர் குறித்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு குறிப்பாக விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு ஒரு பெரும் கவர்ச்சி இருந்தது.
அக்காலப்பகுதியில் விக்ரோரியா இலங்கைத்தமிழ்ச்சங்கத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களே நிரம்பியிருந்தனர். அதனால்தான் அதன் பெயரையும் பின்னாளில் ஈழம் தமிழ்ச்சங்கம் எனவும் மாற்றினர்.
பாக்கிஸ்தான் – இந்தியா மோதலுக்குப்பின்னர், பங்களா தேஷ் உருவானது. இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி பங்களாதேஷை உருவாக்கிக்கொடுத்தமை போன்று இலங்கையிலும் இந்தியா தலையிட்டு தமிழ் ஈழத்தைப்பெற்றுக்கொடுக்கும் என்ற பரவலான நம்பிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் அக்காலப்பகுதியில் இருந்தது.
எனினும் வங்கம் தந்த பாடம் என்ற நூல் பற்றி ( இதனை வெளியிட்டவர்கள் உமா மகேஸ்வரனின் புளட் இயக்கத்தினர்.) எவரும் பரவலாக அறிந்திருக்கவில்லை.
நெடுமாறன் உரையாற்றி முடித்ததும் எவரும் அவரிடம் கேள்விகள் கேட்கலாம் என்றும் ஆனால், கேள்வியை ஒரு காகிதத்தில்தான் எழுதித்தரல் வேண்டும் என்றும் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோமா. சோமசுந்தரம் தெரிவித்தார்.
உடனே நான் ஒரு காகிதத்தில் பின்வரும் கேள்வியை எழுதி மேடைக்கு அனுப்பினேன்.
” பாரத நாடு பாகிஸ்தானுடன் போரிட்டு பங்களா தேஷை பிரித்துக்கொடுத்தது. அதுபோன்று இலங்கையிலும் தலையிட்டு தமிழ் ஈழத்தை பெற்றுக்கொடுக்கும் என பலரும் நம்புகிறார்கள். ஆனால், இன்று அந்த அண்டை நாடுகள் இரண்டும் பாரத நாட்டுடன் சுமுகமாக இல்லை. இந்த நிலைதானே தமிழ் ஈழத்திற்கும் – இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் நேர்ந்துவிடும்…? நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்…?”
” அருகிலிருப்பது தாய்த் தமிழகம். ஈழத்தமிழர்களுக்கு இன்னல் வந்தால், தமிழகத்தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள். ஈழத்தையும் பெற்றுக்கொடுப்பார்கள்.” என அவர் சொன்னதும் அந்த மண்டபம் பலத்த கரகோஷத்தால் அதிர்ந்தது.
கூட்டம் முடிந்ததும் அந்த மண்டபத்திற்கு அருகிலிருந்த மற்றும் ஒரு மண்டபத்தில் நெடுமாறனுடன் தேநீர் அருந்தியவாறு உரையாடினேன்.
அந்தக்கேள்வியை அனுப்பியது நான்தான் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். தொடர்ந்தும் இந்தியத்தலையீட்டில் இருக்கும் எனது சந்தேகங்களை அவருடன் பகிர்ந்தேன். ஆனால், இந்தியாவால் முக்கியமாக தமிழகத்தினால் இலங்கைத்தமிழர்களுக்கு அர்த்தமுள்ள நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் பேசினார்.
(நன்றி: எதிரொலி)
மறுமொழியொன்றை இடுங்கள்