மெல்லுணர்வு – நோயல் நடேசன்

By அனோஜன் பாலகிருஷ்ணன்

அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே.

‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ் பண்பாட்டுச் சூழல் சார்ந்த மனிதர்களின் அணுகுமுறைகளைப் பட்டார்வத்தனமாகப் பேசுவதோடு, ஆழமான உணர்வு ரீதியிலான பற்றாக்குறைகளையும் கேள்வி எழுப்புகிறது. உண்மையில் இக்கதை அகவயமான பிரச்சினையைப் புறவயமான சித்தரிப்புகளோடு பேசுகின்றது. எனினும் மையமாக ஓடும் பிரச்சினை அகவயம் சார்ந்தது என்பதால் இக்கதையை ஓர் அகவயமான உளவியலைப் பேசும் கதையாகவே என் மதிப்பீட்டில் நிறுத்துவேன்.

‘ஆனந்தன்’ என்கிற பாத்திரம் அட்டகாசமாக அசல் யாழ்ப்பாணத்துப் பாத்திரமாக உருவகிப்பட்டுள்ளது. ஆனந்தன் எஞ்சினியரிங் துறைக்குப் பல்கலைக்கழகத்திற்கு நுழைந்த பிற்பாடு அவனை வைத்துப் பெருந்தொகையான சீதனம் வேண்டுவதில் முனைப்புக்காட்டுகிறார் அவனது தந்தை. முற்பத்தி இரண்டு வயதில் இறுதியில் அவனுக்குத் திருமணமாகிறது. அதற்குப்பின் ஏற்படும் யுத்த சூழல் அவர்களை மெல்போர்ன் நோக்கிச் செலுத்துகின்றது. ஆரம்பத்தில் எஞ்சினியரிங் வேலைக்குச் செல்ல இயலாமல் போவதால் தற்காலிகமாக டக்ஸி ஓட்டச் செல்கிறார் ஆனந்தன். கடினமான வாழ்க்கைச் சூழலும் பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டமும் அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையில் இருண்ட திரையை விரிக்கின்றது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளும் சிந்தனை ஆனந்தனுக்கு உதிக்கவேயில்லை. மெல்ல மெல்ல விரிவு அகலமாகிறது. என்ன பிரச்சினை என்பதைப் புரிந்து சரி செய்ய ஆரம்பிக்கச் செல்லும்போது எல்லாம் கைமீறிச் சென்றுவிட்டது. அகலமாகும் பிரிவினை விவாகரத்துவரை செல்கிறது.

நாற்பதுகளின் பின் வயதில் இருந்தாலும் விகாரத்தின்பின் எஞ்சிய காலப்பகுதியை வேறொரு பெண்ணோடு கழிக்க ஆனந்தன் விரும்புகிறார். உணர்வுகளுக்கு வயதெல்லைகள் இல்லை தானே. இறுதியில் ஐரிஸ் பெண் ஒருவரைத் திருமணம் செய்கிறார். அவளோடு மகிழ்வாக ஹனிமூனை கொண்டாடச் சிட்னியிலுள்ள விடுதி ஒன்றுக்குச் செல்கிறார்கள். இரவு உணவுக்குச் செல்லும்போது வாசலில் இருந்த கண்ணாடி சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்ததால் மூடிய கண்ணாடிக் கதவு ஆனந்தனின் புது துணைவியான சேராவின் முன் தலையில் இடித்தது விடுகிறது. சற்று நிலையிழந்து பின்வாங்கி அவள் தன் தலையைத் தடவும் போது ‘சேரா நீ ஓகேயா’ என்று வெறுமே கேட்டு மட்டும் வைக்கிறார் ஆனந்தன். அந்தச் செயல் ஒருவித மௌனத்துக்குச் சேராவை இழுத்துச் செல்கிறது. விடுதிக்குத் திருப்பிய பின் சேர்ந்து படுக்கையை பகிராமல் தனிமையில் துயில் கொள்ளச் செல்வதாகச் சொல்கிறார் சேரா.

“நாம் ஹனிமூனுக்கல்லவா வந்தோம்” என்று புரியாமல் திகைத்து அவரிடம் கேட்கும் ஆனந்தனிடம் “ஆனந்தன் மன்னிக்க வேண்டும். எனக்கு அப்போது தலையில் அடிபட்டபோது உங்களை மெல்லிய உணர்வுள்ள கணவனாக என்னால் பார்க்க முடியவில்லை. தற்போதைய மனநிலையில் தனிமையில் படுக்க விரும்புகிறேன்” சென்று கூறிவிட்டுப் படுக்கச் செல்கிறார். ஆனந்தனால் இறுதிவரை சேரா குறிப்பிட்ட மெல்லுணர்வு என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ளவே இயலவில்லை.

இந்த மெல்லுணர்வு என்கிற சமாச்சாரமே முன்னைய தன் திருமண வாழ்கையில் இல்லாமல் தோல்விக்கு வந்தது என்பதைக் கூட ஆனந்தனால் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறது. ஒருவகையில் கதையின் மையை இழையான இந்த உணர்வு வெளிப்பாட்டின் பிரயோகத் தன்மையை அவனது கூறு நிலையில் சொல்லாமல், கதை செல்லியின் கூறு நிலையில் இருந்து சொல்வது திறம்பட வாசகர்களை ஊகிக்கவைக்கிறது. இச்சிறுகதையில் துழாவிக் கண்டடையும் அகதரிசனம் என்பது அங்கேயே சிக்குண்டு ஜாலம் செய்கிறது.

வேலைப்பளுவில் இருக்கும்போது கிடைக்கும் சொற்ப நேரத்தில் மனைவியின் தலையை வருடிக்கொடுத்து அவரின் கைகளைத் தடவிக்கொடுத்து அவரின் மேல் இருந்த அன்பைச் செயல் வடிவில் வெளிப்படுத்தி இருந்திருந்தால் அவனது குடும்ப வாழ்க்கை வென்றிருக்கும். இந்த மெல்லுணர்வு என்பது மானுட வாழ்கையின் இயங்கு தளத்துக்கு மிக முக்கியச் சுழற்சி மையமாக இருக்கிறது. ஒருவருடன் அணுகும் நாகரீகம் என்று கூட இதைச் சொல்லலாம்.

எம்முடையை ஈழத்துச் சமூகம் எப்போதும் அன்பைச் செயலில் வெளிக்காட்டத் தயங்கும் மனநிலையைக் கொண்டது. கசியும் அன்பை தனக்குள்ளே சேமித்து வைத்து வெளியே முரடர்களாகவே காட்டவைக்கும். அவ்வாறான வாழ்க்கை முறையில் இருந்து வெளியேவர அடுத்தத் தலைமுறைக்கு நிறையவே சுதந்திரம் கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. (இங்கு யாரும் யாருக்கும் சுதந்திரம் கொடுக்கத் தேவையில்லை, அவர்களாகவே எடுத்துக் கொள்வார்கள், திணிப்பை மேற்கொள்ளாமல் இருந்தாலே போதும்)

யாழ்ப்பாணத்துக் குடும்ப மனநிலையை அட்டகாசமாக இச்சிறுகதை வடித்துச் செல்கிறது. என்னதான் காலம் சூழலும் மாறினாலும் என்றும் வற்றாமல் அடியில் தேங்கியிருக்கும் எமது அணுகுமுறைகளைப் பற்றி நாம் பரிசீலனை செய்ய வேண்டியே இருக்கிறது.

ஆனந்தன் தன் ஆண்மையை உறுதிப்படுத்த பாலியல் தொழிலாளியிடம் சென்று தன் உச்சத்தைக் கண்டு, அவளிடம் குலாவி எப்படி மனைவியுடன் அன்பாக இருப்பது என்பதை அவளின் துணை கொண்டு அறிதல் போன்ற சித்தரிப்புகள் மிகக் கச்சிதமாக விரசம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆனந்தனின் மனைவியின் காமம் சார்ந்த வெற்றிடத்தின் பின்னே சொல்லப்படதா இன்னுமொரு சிறுகதை புதைந்துள்ளதை அவதானிக்கலாம்.

மெல்லுணர்வு சிறுகதையை நோயல் நடேசனின் தளத்தில் இங்கே சொடுக்குவதன் ஊடாக வாசிக்கலாம்
https://noelnadesan.com/2014/01/13/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: