பார்த்தசாரதியாக எஸ் எல் எம் ஹனீபா

நடேசன்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இயங்கிய வட-கிழக்கு மாகாணசபை 1987-90 களில் தீண்டத்தகாத மசுக்குட்டிப்புழுவாக பலரால் அருவருப்புடன் பார்க்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த மாகாணசபை இரண்டாகப் பிரிந்து வண்ணத்துப்பூச்சிபோல் அழகாகத்தோற்றமளிக்கிறது. அத்துடன் தற்பொழுது அதனை தேவைக்கு மேலாகப் பால்கறக்கும் காமதேனுவாகவும் பார்க்கிறார்கள்.

மடியில் முட்டிமுட்டி,  கடைவாயில் பால்வழிந்த ஞானசம்பந்தராக தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் குடிக்கிறார்கள். தீண்டத்தகாத மாகாணசபையின் இப்படியான உருமாற்றம் கடந்த முப்பது வருடங்களில் நடந்திருக்கிறது.

தமிழர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் சிங்களவர்களை இணைத்து உருவாக்கிய மாகாணசபைக்கு வரதராஜப்பெருமாளை முதலமைச்சராக்கினார் பத்மநாபா. அக்காலத்தில் அந்த மாகாணசபையில் அங்கம் வகித்தவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ் எல் எம் ஹனீபா. இவர் மக்கத்துச்சால்வை என்ற சிறந்த சிறுகதைத் தொகுப்பால் இலக்கியப் புகழ் பெற்றவர்.
இரண்டு வருடங்கள் முன்பாக கல்முனையில் எனது அசோகனின் வைத்தியசாலை வெளியீட்டில் சந்தித்து அவருடன் உரையாடியபோது என்னை மறந்தேன். எக்காலத்திலும் உள்ளத்தால் உரையாடுபவர்களை உடனடியாக என்னால் புரிந்துகொள்ளமுடியும். அந்தத் திறமை, உரையாடாத மிருகங்களை உடல் மொழியில் புரிந்துகொள்ளும் பழக்கத்தால் வந்ததா என நினைப்பேன்.

பிற்காலத்தில் முகநூலிலும் தொலைபேசியிலும் உரையாடி தொடர்பு வைத்திருந்தோம். இம்முறை மட்டக்களப்பிற்கு அவரைக் காணச் சென்றேன்.
ஓட்டமாவடியில் இருக்கும் அவரை, நண்பர் ரியாஸ் குரானாவுடன் சென்று சந்தித்தேன். அவரது வீட்டுக்குப் பக்கம் ஆறு ஓடுகிறது.அழகிய நிலவமைப்பு. சிறுவனாக மரத்தில் ஏறி பழங்கள் பறித்து தந்தார்.

மிருகவைத்திய உதவியாளராகப் பலகாலம் வேலை செய்தவர் என்பதால் அவருக்கும் எனக்கும் பேச பல விடயங்கள் இருந்தன. பழமரங்கள் மற்றும் தோட்டவேலைகளில் அவரது ஈடுபாடும் என்னால் இரசிக்க முடிந்தது. சினிமா அல்லது அரசியல் என்ற இருதுறைகளுக்கு வெளியால் உரையாடக் கூடியவர்களை காணமுடியாத காலமிது .

அவரது வீட்டில் இருந்து பேசியபோது அவர் பேசும் விடயங்கள் மனதில் ஆழமாகப்பதியும். காரணம் வெள்ளரிக்காய்த் துண்டில் உப்பு,  மிளகு தூள் தடவுவதுபோல் நகைச்சுவையை பூசித் தருவார் அந்தக்காரம் அவர் சொன்ன விடயத்தை மேலும் நினைவில் வைத்திருக்க உதவும்.

அவர் கூறிய இரண்டு விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
‘இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோது மாகாண சபையில் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியினர் கப்பலில் புறப்பட்டனர். அப்பொழுது பத்மநாபா, எஸ். எல். எம். ஹனீபாவை அழைத்து, ” நீங்கள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளிடம் சென்று, இந்த மாகாணசபையை எடுத்து நடத்துங்கள் எனச் சொல்லுங்கள். அதன்பின்பு எங்களுடன் வருவதோ அல்லது இங்கிருப்பதோ என்பதை முடிவுசெய்யுங்கள்” என்றார்.

அதன்பிரகாரம் அவர்,  அதை விடுதலைப்புலிகளின்  கிழக்குமாகாண அரசியல் பொறுப்பாளர் கரிகாலனிடம் சொன்னார். அதற்கு அவர்,   “அமிர்தலிங்கம் சொன்னபோது,  அதைக் கேட்காமல் அவரைத் தட்டினோம். நீங்கள் தூதுவராக வந்ததால் உங்களை மன்னித்தோம்”  எனத் துரியோதனர் பாணியில் இறுமாப்புடன் சொன்னார்.

அதன்பின்பு வரதராஜப்பெருமாள் பாவித்த காரில் ஏறி விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர் மாத்தையா,  திருகோணமலை நகரைச்சுற்றி வந்து தனது பொச்சத்தைத் தீர்த்தார்.

பிற்காலத்தில் தனது தொலைப்பேசியை, வீட்டிற்கு வந்து விடுதலைப்புலிகள் பாவித்தபோது மாதம் 7000 ரூபா தனக்குச் செலவாகியது” என்றார்.

காத்தான்குடி, ஏறாவூர் என முஸ்லீம் மக்களைக் கொலை செய்தபின்பும் தமிழர்கள், முஸ்லீம்கள் ஒன்றாக வாழமுடியும்-  வாழ்வார்கள் என நம்பும் எஸ் எல் எம் ஹனீபா போன்றவர்கள் இருக்கும் வரையில் மதம் கடந்து சிறுபான்மையினரிடம் ஒற்றுமை வரலாம் என நாம் நம்பமுடியும்.

அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு ஓட்டமாவடிக்கடற்கரைக்கு சென்றோம். கடற்கரையில் பல இளம் இஸ்லாமிய குடும்பங்கள் காற்று வாங்கினார்கள் என்பதிலும் பார்க்க ஆறுதலாகச் சுவாசித்தார்கள் என்றே கூறவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டதட்ட 30 வீதமான மக்கள் இஸ்லாமியர். ஆனால், அவர்கள் வசிப்பது 10 அல்லது 15 வீதமான நிலப்பரப்பிலே. அவர்களது ஜனத்தொகை பெருகும்போது வாழுமிடங்கள் குறைந்து விடுகிறது.

முக்கியமாக காத்தான்குடி, உலகத்திலேயே மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒன்றாகும். இது ஒரு முக்கியமான பிரச்சினை. இதில் இருந்தே கிழக்கு மாகாணத்தில் தமிழர் மற்றும் சிங்களவர்களுடன் பிரச்சினைகள் உருவாகிறது. இந்தப் பிரச்சினையை நான் அறிந்தாலும்,  ஓட்டமாவடிக்கு சென்றபோது எஸ் எல் எம் ஹனீபா மூலம் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

மக்கள்பெருக்கத்தால் உருவாகிய இட நெருக்கடிப் பிரச்சினை இனப்பிரச்சினையாக,  மதப்பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. மதப்பிரச்சினை-  இனப்பிரச்சினையாக மாறினால் அவற்றுக்கு எக்காலத்திலும் தீர்வுகாணமுடியாது. ஆனால், அவைகள் தொடர்ச்சியாக சகல இன அரசியல்வாதிகளுக்கும் வாக்குவேட்டைக்குதான் பயன்படும்.

நான் பிரிய மனமின்றி பிரிந்தபோது எஸ் எல் எம் ஹனீபாவிடம் “உங்கள் அனுபவங்களை எண்ணங்களை எழுதுங்கள் அவை அடுத்த சந்ததிக்குத் தேவையானவை” எனக் கேட்டுக்கொண்டு பஸ்சில் ஏறினேன்.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to பார்த்தசாரதியாக எஸ் எல் எம் ஹனீபா

  1. Shan Nalliah சொல்கிறார்:

    Great…! Thanks to Hanifa! What is ur opinion on Hisbullah’s recent video statement on hindu templeland was taken to build mosque?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.