பாரதி பள்ளியின் நாடகவிழா .


பங்குபற்றிய மாணவர்கள்

பாரதி பள்ளியின் நாடகவிழாவிற்குச் சென்றபோது, மீண்டும் என்னை ஒரு சிறுவனாக நினைத்து சிறுவர் நாடகங்களை அனுபவித்து நினைவோடையில் நீந்த முடிந்தது. ஒருவிதத்தில் நாங்கள் சிறுவயதில் அனுபவிக்காத விடயங்கள் என்பதில் பொறாமை மதியத்து நிழலாக மனத்தில் படிந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலியா வந்தபின்பு ஆங்கிலத்தில் பார்த்து, படித்து சிறுவர் இலக்கியங்கள், நாடகம் மற்றும் சினிமாவை புரிந்து கொண்டபோது ,எமது நாடுகளில் முக்கியமாக தமிழ்மொழியில் வறுமைக்கோட்டின்கீழ் கவனிப்பாரற்ற ஒரு துறையாக உணர்ந்தேன். அதனால் பல முறை மனத்தில் ஏக்கம் ஏற்பட்டது.

மொழி என்பது ஒரு இனத்தின் சகல பிரிவில் உள்ளவர்களிடமும் உரையாட ஏற்பட்ட ஊடகம். அதன் வாயிலாக எமது குழந்தைகள், சிறுவர்கள் என்பவரிடம் அறிவுரீதியாக உரையாடத் தயாராக இல்லாத சமூகமாக நாம் இருப்பது ஒரு குறையாக எமது மொழி விற்பனர்களுக்குத் தெரியவில்லையா? கோடிக் கணக்கில் பணம் புரளும் திரைப்படம், பத்திரிகை ,தொலைக்காட்சி என்ற ஊடகச்சந்தைக்கு உரிமையானவர்கள் எமது மக்கள். இந்த ஊடகவெளியில் சிறுவர் இலக்கியம், சிறுவர் நாடகம், மற்றும் சினிமாவிற்கு வெளியற்றுப்போய்விட்டதே? குறைந்த பட்சம் சிறுவர்கள், குழந்தைகளை அள்ள அள்ளக் குறையாத பொருளாதார சந்தையாக நினைக்கமுடியவில்லையா? ஆங்கிலத்தில் ஹரிபொட்டர் போன்றவற்றைத் தயாரித்து எவ்வளவு பொருள் குவிக்கிறார்கள்?

மெல்பேனில் மாவை நித்தியானந்தனின் உழைப்பில் உருவாகிய நாடகவிழாவிற்குச் சென்றபோது அது ஒரு தீப்பொறியாகத் தெரிந்தது. ஆனாலும் இது பாரதி பள்ளியின் மெல்பேனுக்கு மட்டுமே சொந்தமானது.

நான் பார்த்த பல நாடகங்களை லயித்து என்னால் அனுபவிக்கமுடிந்தது. சிறுவர்களின் நாடகத்தைப் பார்க்கும்போது, நாங்களும் சிறுவர்களாகும் நனவோடை உணர்வு ஏற்படுகிறது. அதேநேரத்தில் அங்கு ஒரு உயர்வான மனித விழுமியம் முன் வைக்கப்படுகிறது. நித்தியானந்தன் பேசும் போது சிறுவர் நாடகங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து நடிக்கவைக்கும் வழக்கமான முறைக்கு மாறாக, சகலரையும் அதாவது 500 மாணவர்களையும் நாடகத்தில் ஈடுபடுத்தியதாகக் குறிப்பிட்டது எனக்கு அசுர சாதனையாகத் தெரிந்தது.

சிறுவர் நாடகம் என்பது இலகுவானது அல்ல. அவர்களை நெறிப்படுத்துவது மட்டுமல்ல; தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் அவுஸ்திரேலியாவில் அந்த மொழியை மேடையில் பேச வைப்பது என்பது பிரமிப்பான விடயம். நாடகங்களை நெறிப்படுத்தியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

பணம் பற்றிய அறிவைச் சிறு வயதில் வளர்ப்பதற்கு அவுஸ்திரேலிய வங்கிகளில் டொலர் மேற் (Dollar Mate) எனக் குழந்தைகளுக்கு ஒரு சேமிப்பு திட்டமிருக்கிறது. அதேபோல் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் இந்த நாடகப்பங்கேற்பு ஒரு விதமான சிறுவயதின் சேமிப்பு. மனிதர்களுக்கு வாய் மொழி எவ்வளவு அவசியமோ அதற்கு மேல் உடல் மொழி அவசியமானது. மொழி தெரியாத நாடுகளிற்குச் செல்லும்போதும், மற்றும் மிருகங்களுக்கு வைத்தியம் செய்யும் என்னைப் போன்றவர்களுக்கும் இந்த உடல் மொழியின் முக்கியத்துவம் தெரியும். மேடை நாடகத்தில் சிறுயதில் தங்களை வெளிப்படுத்தும் குழந்தைகள் பிற்காலத்தில் எந்த இடத்திலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியும். திறமைகளை எந்தக் கூச்சமுமின்றி வெளிப்படுத்துபவர்களைக் கொண்ட சமூகமே, சமூகப்பரிமாணத்தின் உச்சத்தை அடையும்.

ஆரம்பக் காலத்தில் மெல்பேன் பொது நிகழ்வுகளில் சிறுவர்களை, பெரியவர்களது பிரச்சனைகளைப் பேசவைத்து நாடகம் போட்டதைப் பார்த்து எனக்குள் வருத்தமடைந்தேன். அதைச் சிறுவர் நாடகமென நினைத்து குதூகலமடைந்து கைதட்டியவர்களையும் பார்த்தேன்.

மேற்கு நாடுகளில்கூட சிறுவர் இலக்கியம் தாமதமாக 18 ம் நூற்றாண்டில் வந்தது. ஆரம்பத்தில் பெரியவர்களது வாய்வழி கிராமியக் கதைகளே அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அக்காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களாக பயிற்சியளிக்கும் நோக்கம் இருந்தது. ஆனால் தற்போது குழந்தைகளை மற்றும் சிறியவர்களை அவர்களது நிலையிலே வைத்துக் கதை சொல்லவேண்டுமென்பது முக்கியமாகிறது

ஆரம்பக்காலத்தில் கிறிம் பிறதேர்ஸ் (Grimm Brothers) என்ற சகோதரர்கள் ஜெர்மன் மற்றும் ஸ்கண்டிநேவியா போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு வாழ்ந்த கிராமிய மக்களின் வாய்மொழிக் கதைகளை சேகரித்தார்கள். அவர்களது அயராத உழைப்பே சிண்டரில்லா (Cinderella), சிலிப்பிங் பியூட்டி((Sleeping Beauty, சினோ வைட் அன்ட் செவின் டுவாவ்ஸ் (Snow White and the Seven Dwarfs)) என்ற உலகப் புகழ்பெற்றவை. பிற்காலத்தில் தொடர்ச்சியாக பலர் வாயிலாக சிறுவர் இலக்கியம் வெளிவந்தது. வால்ட் டிஸ்னியின் தயாரிப்புகள் உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்கின்றன.

ஆரம்பக்காலத்தில் இந்தியாவில் கிராமிய கதைகளாக இருந்தவை ஜாதகக் கதைகள். இவை பௌத்த இலக்கியத்திற்குள் அடக்கப்பட்டபோதும் மிருகங்களை முன்வைத்து மனித விழுமியங்களை நிலை நிறுத்த உலகில் முதலாவதாக உருவாகியவை. புத்தருக்கு முன்பானவை. இவற்றின் அடியொற்றியே ஈசாப் நீதிக்கதைகள், அதன் தொடர்ச்சியாக டிஸ்னி வேள்ட் மிக்கி மவுஸ் போன்றன உருவாகின.

இலக்கியம், நாடகம் மற்றும் சினிமாவை நாம் உணர்வுரீதியாக மட்டும் அணுகுவது ஏற்றதல்ல. நமது நண்பர், ஊர், மொழியென்ற வரைவுகளுக்கு அப்பால் பார்க்கவேண்டும் சிறுவர் இலக்கியம், நாடகம் தற்போது இப்படித்தான் இருக்கவேண்டும் என வரையறுக்கப்படுகிறது அதன்பிரகாரமே பாரதிபள்ளியின் நாடகங்களைப் பார்த்தேன்

1) சிறுவர்கள் அல்லது மிருகங்கள் மட்டுமே பாத்திரமாக இருக்கவேண்டும்

2) கதை அமைப்பு மிகவும் எளிதாகவும் ஒரு நோக்கத்தை மட்டும் அணுகுவதாகவும் நிச்சயமாக மகிழ்ச்சியான முடிவுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்

3) கதையின் உள்ளமைப்பு ஒரு இலகுவான கற்பித்தலை நோக்கிய நிரந்தரமான முடிவுகளைக் கொண்டதாக இருக்கவேண்டும்

3) இலகுவாகச் சொல்லக்கூடிய சரளமான மொழியில் இருக்க வேண்டும்

4) காட்சி வடிவமாக, ஓவியமாக வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்

5) குழந்தைகள் இலக்கியத்தில் ஒரு மாயத்தோற்றம்( Fantasy) இருக்கும். மற்றைய மொழிகளில் இத்தகைய பல படைப்புகள் உள்ளன.

இப்படியான விதிகளுக்கு உட்பட்டே குழந்தை நாடகம், சினிமா, இலக்கியம் இருக்கவேண்டும்.

“பாரதி பள்ளியின் நாடகவிழா .” அதற்கு 2 மறுமொழிகள்

  1. ADULTS TOO COULD PARTICIPATE IN A CHILDREN’S DRAMA IF NECESSARY AS AN ADVISER OR GUIDE/TEACHER!

  2. odi vilaiyaadu paappaa nee oynthirukkalaakaathu paappaa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: