மலேசியன் ஏர்லைன் 370 – ஆசிரியர் நடேசன்

புத்தகம் பற்றி ஒரு பார்வை by kamaliswaminathan.blogspot.com

“மலேசியன் ஏர்லைன் 370” சிறுகதைகளின் தொகுப்பு. நடேசன் எழுதியது. மலைகள் வெளியீடு. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆ(வு)ஸ்திரேலியாவில் கால்நடை வைத்தியராக பணியாற்றிய எழுத்தாளர் அவரது பார்வையில் இலங்கையையும் அவர் பணிபுரிந்த அவர் சென்று பார்த்த இடங்களையும் பற்றிய அனுபங்களையும் அழகாக தொகுத்திருக்கிறார்.

இலங்கை தமிழர்கள் என்ன தான் சொந்த மண்ணை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் குடியுரிமை பெற்று வசதியாக வாழ்கின்ற போதும் தங்கள் மண்ணை மக்களை பிரிந்த வேதனையை சுமக்கவே செய்கிறார்கள். சிங்களவர்கள் எல்லாரையும் எதிரியாகவும் இயக்க்கத்தவர் எல்லாரையும் கடவுள் போலவும் பார்க்கும் மனிதர்களை நோக்கி தமது அனுபவங்களை சொல்லிவிட்டு எந்த நியாயமும் கேட்காமல் வாசிப்பவரின் பார்வைக்கே சில கதைகளில் விட்டு விடுகிறார் ஆசிரியர்.

ஆஸ்திரேலியா சென்று செட்டிலாகிவிட்ட ஒருவர் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின் சொந்த மண்ணை பார்க்க நண்பருடன் வருகிறார். அப்போது இயக்கத்தை சேர்ந்தவருக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி

“போருக்கு பிறகு நிலைமை எப்படி? என்றேன்

என்னத்தை சொல்ல மக்கள் உயிர் வாழ்கிறார்கள். உணவுக்காக மட்டும் தான் வாயை திறக்கிறார்கள். மலஜலம் கழிக்கும் இடத்தில் கூட ராணுவம் நிற்கிறது எனச்சொல்லிய போது முகத்தில் சோகம் தெரிந்தது.

இந்த மாதிரி தான் வன்னியில் விடுதலைப்புலிகள் காலத்திலும் மக்கள் வாழ்ந்தார்கள். இது புதிய விடயம் இல்லையே என்றேன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தவர் பிறகு அவரை மவுனத்தை கலைத்தார்.

“ விடுதலைப்புலிகள் காலத்தில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்தார்கள்தான். அதை ஏற்றுகொள்கிறேன். அப்போது விடிவு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, கஷ்டம் தெரியவில்லை ஆனால் இப்போது எதிர்காலத்தை நினைக்காமல் கஷ்டத்தை அனுபவிக்கிறோம்.

இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம்.. விடுதலைப்புலிகள் ஆட்சியில் தமிழ்ப்பிரேதசங்களில் பதினைந்து வருடங்கள் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கட்டாய வரிகள், கட்டாய ஆட்சேர்ப்பு, தண்டனைகள் எனக் கொடூரமாக இருந்தது. உடலுறுவுக்கு மட்டும் வரிவிதிக்காமல் மற்ற எல்லாவற்றுக்கும் வரி விதித்தார்கள் என்று வன்னியில் இருப்பவர்கள் சொன்னார்கள்.

அப்படி செய்ய காரணம் தமிழ் ஈழத்திற்கு அதிகமானவர்கள் தேவை என்பதாலாகும் எனச் சொல்லிவிட்டு நீங்கள் விடுதலைப்புலிகள் எதிர்ப்பவரா?

நான் விடுதலைப்புலிகள் போராட்ட வழி முறைகளை மட்டுமல்ல இலங்கையில் பிரிவினையும் எதிர்ப்பவன்.

நீங்கள் சிங்களவர்களை நம்புகிறீர்களா?

நம்புவது நம்பாதது இங்கே விடயமல்ல. இந்த நாடு பிரிந்து வாழ சர்வதேசம் அனுமதிக்காது. இந்த பிரிவினை போராட்டம் ஒடுக்கப்படும் போது மக்கள் அநியாயமாக அழிவார்கள்.. என்று நீளும் உரையாடலின் பின் இருக்கும் உண்மை யோசிக்க வைக்கிறது.

இது போல இயக்கத்தால் தற்கொலைப்படைக்கு தயாராகும் ஒரு சிறுவனை பற்றிய கதை படித்த போது துக்கம் மனதை பிசைய அசுவாசம் அடையும் வரை புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். புலிகளால் ஒரே இரவில் வெளிய்ற்றப்பட முஸ்லீம்கள் அனுபவத்தில் மிளிரும் கதை தொட்டிருக்கும் ஆழமும் அனாயசமானது.

சிங்கள ராணுவத்தில் பணிபுரியும் ஒருவன் ஒரு பெண் மீது கொண்ட மோகத்தால் செய்யும் செயல்கள் அதனால் அவள் இறுதியில் புலிகளால் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகி கயிற்றில் நாற்சந்தியில் துரோகிக்கு தண்டனை என்ற வாசகத்துடன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கதை இரண்டு திமிர் எடுத்த போராட்ட குழுக்களுக்கிடையே அப்பாவியாக உயிரை விட்ட பெண்ணின் கதையை பேசுகிறது.

இயக்கம் போராட்டம் தாண்டி அவர் வாழ்வில் நடந்த சிறு சிறு அனுபவங்களை கோர்த்திருக்கிறார். மனநோயாளி ஒருவன் அவர் மருத்துவமனையில் புகுந்து தொலைபேசியை கையில் வைத்து கொண்டு செய்யும் செயல்கள் அவனை போலீசில் ஒப்படைக்க முயல அப்போது நடக்கும் நிகழ்வுகள், எமி என்கிற டீன் ஏஜ் பெண் சிறைச்சாலைகளில் இருக்கும் மனிதர்களுக்கு அன்பாக அனுப்பும் கடிதங்கள் என்று மனிதனின் மெல்லுணர்வுகளை சொல்லும் கதைகளையும், இலங்கை வட்டார மொழியில் ஆசிரியர் விவரித்திருக்கும் முறை இக்கதை தொகுப்பில் இருக்கும் பன்முகத்தன்மை எல்லாமாக தொகுப்பு நம்மை வெகுவாக ஈர்க்கிறது.

சிவப்பு விளக்கு எரியும் தெரு என்ற கதை கூட அழகாக ஆரம்பித்து அழகாக பயணித்து கடைசியில் முடித்திருக்கும் விதம் கொஞ்சம் கதையின் சுவராஸ்யத்தை குறைத்துவிட்டது. அனேகமாக கதையை ஹாஸ்யமாக முடிக்க ஆசிரியர் அந்த முடிவை எடுத்தாரா என்று தெரியவில்லை ஆனால் பட்டி மன்ற துணுக்கு தோரணம் ஒன்றை கேட்டது போல சட்டென இயல்பான ஒரு அழகிய கதையை ஏன் இப்படி என்று கேள்வி எட்டி பார்க்கிறது.

இயக்கம் பற்றிய மாற்று பார்வையை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க செய்கிறது இத்தொகுப்பில் இருக்கும் சில கதைகள். போர் சூழல் தாண்டிய கதைகள் காமம், காதல், அன்பு, நகைச்சுவை, அழுகை, சந்தோசம், துக்கம் என்று மனித வாழ்வியலின் அனைத்து பக்கங்களையும் கண் முன் நிறுத்துகிறது.

“மலேசியன் ஏர்லைன் 370 – ஆசிரியர் நடேசன்” மீது ஒரு மறுமொழி

  1. MANY COUNTRIES GOT FREEDOM AFTER OPPRESSION BY BRUTAL STATES & LEADERS! EX.KOSOVO, EAST TIMOUR ETC! EVEN NOW, SINHALA GOVT COULD GIVE REAL AUTONOMY TO NESL TO UNITE ALL! OR FREEDOM IS THE BEST! SINGAPORE IS A SMALL STATE ! BUT THEY DO BETTER THAN SRILANKA DUE TO BETTER GOVERNANCE!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: