தெய்வீகன்
எண்பதுகளின் ஆரம்பத்தில் சிங்கள குடியேற்றங்களினால் விழுங்கப்பட்டு “பதவியா” என்று உருமாற்றப்பட்ட தமிழ் கிராமத்தினை கதைக்கருவாகக்கொண்டு உருவாக்கப்பட்ட “வண்ணாத்திக்குளம்” என்ற நாவல் ஈழத்து இலக்கிய பரப்பிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியான நூல்களிலும் முதன்மையானது. நூலாசிரியர் நடேசன் அவர்கள் படைப்பாளி என்ற அணிகலனை சூடிக்கொள்வதற்கு முன்பு தாயகத்திலேயே மிருக வைத்தியராகவும் பின்னர் ஒரு செயற்பாட்டாளராகவும் – போராட்ட அமைப்புக்களுடன் நெருக்கமாக இணைந்து இயங்கியவராகவும் தன்னை பல வடிவங்களுக்குள் பொருத்தி வாழ்ந்தவர். ஆகவே அவரது அனுபவங்கள் இந்த நாவலை பிரசவிப்பதற்கு தாராளமான சிந்தனைகளை அள்ளி வழங்கியிருக்கிறது.
இந்த நாவல் மிகவும் மென்மையான கதைக்கருவைக்கொண்டது. கால காலமாக எல்லோரும் எழுதிவரும் காதல் கதைதான். ஆனால், அந்த காதல் கதையை தமிழ் – சிங்கள உறவுகளை பிரதிதித்துவப்படுத்தும் பாத்திரங்களாக முன்னிறுத்தி அந்த பாத்திரங்களை சுற்றி அரசியல் பேசுபவர்ளை உலவ விட்டு, அவர்கள் பயணிக்கும் கதைக்களங்களைக்கூட ஒருவித அரசியல் பதற்றங்கள் நிறைந்ததாக தெரிவு செய்து, தொடங்கியதிலிருந்து முடியும்வரை எந்த ஈடாட்டமும் இல்லாத ஒரு பயணமாக கொண்டு சேர்த்திருப்பதில் நடேசன் தனது முதலாவது நாவலிலேயே வெற்றிகண்டிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.
இந்த நாவலை ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் எழுதியிருக்கும் நடேசன் அவர்கள், இந்த கதையில் எத்தனையோ நனைவிடைதோய்தல் பாணியிலான சம்பவங்களை இடைச்செருகி பழையவற்றை கிழறுவதற்கும் அரசியல் களங்களை ஊடறுத்து கதை சொல்லும் புள்ளிகள் எங்கிலும் பிரச்சாரம் தொனிக்கும் பல விடயங்களை நீட்டி முழக்குவதற்கும் போதுமான தளங்கள் நிறைந்து கிடக்கின்றபோதும் அவற்றையெல்லாம் வலிந்து திணித்து நாவலை சிதைத்துவிடக்கூடாது என்பதில் அவர் காண்பித்திருக்கும் பெருங்கவனம் இந்த நாவல் சிறந்திருப்பதற்கு இன்னொரு காரணம் எனலாம்.
இரண்டு மூன்று மணி நேரத்தில் வாசித்துவிடக்கூடிய இந்த நாவலின் இன்னொரு பலம் எளிய உரை நடை. கதை நடைபெறுகின்ற காலத்துடன் பொருத்தி பார்க்க முடியாத மன இயல்புகளை திணிக்கவில்லை. தீவிர புனைவுகள் – மொழிச்செறிவு கொண்ட இறுக்கமான திருப்பங்கள் – இரகசிய பாதைகளின் வழியாக வாசகனை அழைத்து செல்லுகின்ற மர்ம முடிச்சுக்கள் என்று கதையின் எந்த புள்ளியிலும் வண்ணாத்திக்குளம் அச்சப்படும்படியாக அமைக்கப்படாதமை நாவலாசிரியர் கூறவருகின்ற கதைப்பின்னணியை இலகுவாக முன்னிறுத்திவிடுகிறது. அத்துடன், தான் பணிபுரிந்த இடங்களையும் தனது பணியையும் நேரடியாக குறிப்பிட்டு கதைவழியாக உல்லாவமாக வாசகனை அழைத்து செல்வதால் கதைநடை கிட்டத்தட்ட ஒரு வித்தியாசமான சுயசரிதை போலவும் சுவாரஸ்யமாக நகர்ந்து செல்கிறது.
இந்த நாவல் குறித்து இன்னும் தெளிவாக சொல்வதானால் கதையின் நாயகர்களான சூரியன் – சித்ரா காதல் போல மிகவும் தெளிவாக உள்ளது.
இந்த மென்மையான கதையோட்டத்திற்குள் அரசியலை பின்னணியில் மந்திரம் ஓதுவது போல சொல்லி வருகின்ற நடேசன், அவ்வப்போது எல்லோரையும் மெல்லிதாக நக்கல் செய்கிறார். தமிழர்களின் அரசியல், சாதி, பொருளாதாரம், பழக்கவழக்கங்கள் என்பவை குறித்து எள்ளலோடு தனது விமர்சனங்களை முன்வைக்கிறார்.
கதையில் ஓரிடத்தில் – “யாழ்ப்பாணத்தின் பிரதான ஏற்றுமதிப்பொருட்கள் மனிதர்கள்தான் என்று சொல்லவேண்டும். காலம் காலமாக இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வோம். கலவரம் ஆரம்பித்தபின்னர் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்” – என்று கூறியிருப்பார். இப்படியாக பல.
வண்ணாத்திக்குளம் நாவல் ஆங்கிலத்திலும் வெளியானது மட்டுமல்லாமல், “உதிரிப்பூக்கள்” மகேந்திரன் இந்த நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கி, அரசியல் காரணங்களால் ஈற்றில் அது கைகூடாமல் போனது என்று முருகபூபதி கூறியிருந்தார்.
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின் அரசியலை – அதன் அதிர்வுகளை – சாதாரண மக்கள் அதனை எதிர்கொண்ட அப்பாவித்தனமான தரிசனத்தை இயல்பாக அதன் போக்கில் இயன்றளவு புனைவு நீக்கி தந்திருக்கும் மிகத்தரமான நாவல் வண்ணாத்திக்குளம்
மறுமொழியொன்றை இடுங்கள்