இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”

” இன நல்லிணக்கத்திற்காக இலங்கையிலும் -வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”
மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கைப்படைப்பாளி மடுளுகிரியே விஜேரத்ன வலியுறுத்து


” இலங்கையில் தமிழ் – சிங்கள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அங்கிருக்கும் எழுத்தாளர்களும், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களும் தம்மாலியன்ற பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் வேண்டும். இரண்டு இனங்களினதும் தாய்மொழிகளுக்கு இடையில் கருத்து ரீதியாக அதிகம் ஒற்றுமை இருக்கிறது. மொழிகளுக்கிடையில் இருக்கும் தொன்மையான உறவு இனங்களிடத்திலும் நீடித்திருக்கவேண்டும்” என்று கடந்த சனிக்கிழமை மெல்பனில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் உரையாற்றிய இலங்கையின் பிரபல சிங்கள எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் தமிழ் அபிமானியுமான கலாநிதி மடுளுகிரியே விஜேரத்ன உரையாற்றினார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த மடுளுகிரியே விஜேரத்ன இவ்விழாவில் தமிழில் சரளமாக உரையாடி சபையினரை வியப்பில் ஆழ்த்தினார்.

இலங்கையில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு இலக்கிய நூல்களை தமது தாய்மொழியான சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கும், மடுளுகிரியே விஜேரத்ன, பல சிங்கள இலக்கியங்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

” நல்லிணக்கமும் மொழிப்பரிவர்த்தனையும் ” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
அவர் மேலும் பேசுகையில், ” ஆறுமுகநாவலர் இலங்கையில் தோன்றியிராவிட்டால், இலங்கையில் தமிழ் மொழி தழைத்து ஓங்கியிருக்காது. அவர் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றியுள்ள தொண்டு மகத்தானது. நான் எனது பட்டப்படிப்பு ஆய்விற்கு அவரது வாழ்வையும் பணிகளையுமே தெரிவுசெய்தேன்.
சின்னஞ்சிறுவயதிலேயே சகோதர தமிழ் மொழியையும் நேசித்து படித்தமையால் பின்னாளில் சங்க இலக்கியம் முதல் நவீன தமிழ் இலக்கியம் வரையில் மட்டுமல்ல இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற எம்மவர்களின் படைப்பு இலக்கியங்களையும் படித்து அவற்றையும் சிங்கள மொழிக்கு பெயர்த்து எமது சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவருகின்றேன்.

இவ்வாறு இரண்டு தரப்பிலும் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெறல் வேண்டும். இரண்டு இனங்களும் பரஸ்பரம் மொழிகளை எழுதவும், பேசவும் முயன்றால், இனங்களின் உணர்வுகளையும் பண்பாட்டுக்கோலங்களையும் புரிந்துகொள்ள முடியும். நாம் இனநல்லிணக்கத்திற்காக கடந்து செல்லவேண்டிய தூரமும் அதிகம். சமகால ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களினாலும் அந்தத்தூரத்தை விரைந்து கடக்க முடியும் ” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மலையக நாட்டார் பாடல்கள் சிலவற்றையும் கவிஞர் வைரமுத்துவின் சில கவிதைகளையும் தாம் மொழிபெயர்த்திருக்கும் தகவலையும் அவர் சொன்னார். அத்துடன் அந்தப்பாடல்களை அவர் தமிழிலும் அவற்றை அதே ராகத்துடன் தாம் சிங்கள மொழிக்கு பெயர்த்திருப்பதையும் குறிப்பிட்டு பாடியும் காண்பித்தார்.
சமீபத்தில் அவர் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ள அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நடேசனின் ” மலேசியன் ஏர் லைன் 370 ” என்ற சிறுகதைத்தொகுதியையும் அறிமுகப்படுத்தி மூல நூலாசிரியருக்கு வழங்கினார்.

குறிப்பிட்ட தொகுதியில் இடம்பெற்றுள்ள நடேசனின் ” கிறுக்குப்பிடித்தாலும் ஆம்பிளைதானே ” சிறுகதைக்கு ” உமதுவுவத் ஒஹுத் பிரிமியெகி” எனத்தலைப்பிட்டு இத் தொகுதியை சிங்களத்தில் வரவாக்கியிருக்கும் மடுளுகிரியே விஜேரத்ன, தொடர்ந்தும் இவ்வாறு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தை சிங்கள மொழியில் பெயர்த்து சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கலைஞர் மாவை நித்தியானந்தனின் தலைமையில் எழுத்தாளர் விழா அமர்வுகள் நடைபெற்றன.

மெல்பனில் சமூகப்பணியாற்றியவர்களான மருத்துவ கலாநிதி அம்பலவாணர் பொன்னம்பலம், நாகை கு. சுகுமாரன், மடுளுகிரியே விஜேரத்ன, ஞானம் ஆசிரியர் மருத்துவர் தி. ஞான சேகரன், எழுத்தாளர் திருமதி ஞானலட்சுமி ஞானசேகரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி எழுத்தாளர் விழாவை தொடக்கிவைத்தனர்.
திருமதி உஷா சிவநாதன், நிகழ்ச்சிகளை அறிவித்தார். சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் விழாவின் தொடக்கவுரையை நிகழ்த்தினார். செல்வன் ஹரிஷ் அழகேசனின் பாரதி பாடல் மெல்லிசையுடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த ஞானம் ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் ” ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை ” என்னும் தலைப்பில் உரையாற்றுகையில், ” புலம்பெயர் இலக்கியமானது ஈழத்து இலக்கியத்தின் நீட்சி எனக்கொள்ளப்படுகிறது. அதாவது ஈழத்து இலக்கியம் ஈழத்து இலக்கியமாக மட்டுமில்லாமல் புலம்பெயர் இலக்கியமாகவும் உள்ளது. இது ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியமாக இருக்கிறதேயொழிய இந்தியத் தமிழர்களின் இலக்கியமாக இருப்பதில்லை.

ஆரம்பகாலத்தில் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமது நாட்டினைப்பிரிந்த ஏக்கத்தினையும் சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட துன்ப அனுபவங்களையும் பதிவு செய்த இலக்கியமாக புலம்பெயர் இலக்கியம் இருந்தது.

புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல் உருவான காலப்பகுதியில் இருந்த சூழல் இன்று இல்லை. பலநாடுகளிலும் புகலடைந்தவர்கள் அங்கு காலூன்றி நிலைத்துவிட்டார்கள். இவர்களுக்கு அறிவு விருத்தி, அனுபவ விசாலம், தொழில் நுட்பத்தோர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரப்புரிந்துணர்வு முதலியன ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கேற்ப படைப்புகளின் உள்ளடக்க அம்சங்கள் மாற்றம் பெறத் தொடங்கிவிட்டன.” என்றார்.
அவர் மேலும் பேசுகையில், ” இந்த புலம்பெயர் எழுத்துக்களின் நிலைமை தற்காலிகமானது. இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களில் மறைந்துவிடும். அதற்குப்பிறகு நிலைமை என்ன…?

ஏனெனில் புலம்பெயர் எழுத்தாளர்களது எதிர்காலத் தலைமுறைகள் தமிழில் இலக்கியம் படைக்கப்போவதில்லை. அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அவர்கள் யாரும் தமிழகப் பத்திரிகையில் எழுதுவதாகத் தெரியவில்லை. புலம் பெயர்ந்த நாடுகள் சிலவற்றில் அடுத்த தலைமுறையினரும் தமிழ்கற்றுத் தேறியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஒருவேளை ஒருசிலர் எழுதினாலும் அவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுமா? தமிழ் தெரிந்துவிட்டால் மட்டும் எழுத்தாளர்களாகிவிட முடியாது.

ஈழத்திலே இருந்து இலக்கியம் படைப்போரின் நிலைமை இதுவல்ல.

உலகத்தின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ்ச்சமூகத்தினினரிடமிருந்து வேறுபட்டு, நிலத்தால், வரலாற்றால், வாழ்க்கை முறைகளால், பண்பாட்டால் தனித்தன்மை கொண்டவர்களாக ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். ஈழத்தமிழரின் பேச்சு மொழி, வாழ்க்கைச்சூழல், சமூகக்கட்டமைப்பு, சமூக இயக்கமுறைமை, சமுகப்பிரச்சினைகள், இனவிடுதலைப்போராட்டம் போன்றவையெல்லாம் ஈழத்து இலக்கியத்தை தனித்துவமானதாக ஆக்கியிருக்கிறது. ஈழத்தில் இருந்து இலக்கியம் படைப்போர் ஈழத்துக்கேயுரிய தனித்துவத்துடன் இலக்கியம் படைக்கிறார்கள். ” எனவும் தெரிவித்தார்.
மொழிபெயர்ப்பு அரங்கில், திரு. ந. சுந்தரேசன், ” அவுஸ்திரேலிய உரைபெயர்ப்புத் துறையில் இன்றைய நிலைமை” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
வாசிப்பு அனுபவப்பகிர்வு அமர்வில், திருமதிகள் கலாதேவி பாலசண்முகம், மாலதி முருகபூபதி, திருவாளர்கள் பொன்னரசு, முருகபூபதி, கலாநிதி ஶ்ரீகௌரி சங்கர் ஆகியோர் பங்குபற்றினர்.

கடவுள் தொடங்கிய இடம் – நாவல் ( அ.முத்துலிங்கம் ) என்றாவது ஒரு நாள் – (ஹென்றி லோசன் கதைகள் – மொழிபெயர்ப்பு கீதா மதிவாணன்) சித்திரக்கவித்திரட்டு ( திறனாய்வு – ஞானம் பாலச்சந்திரன் ) தமிழர் நாகரீகமும் பண்பாடும் ( வரலாற்றாய்வு – டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி) ஞானம் 200 ஆவது நேர்காணல் சிறப்பிதழ் என்பன இவ்விழாவின் வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டன.

மடுளுகிரியே விஜேரத்னவுக்கு விருது

தமிழ் அபிமானி கலாநிதி மடுளுகிரியே விஜேரத்ன மேற்கொள்ளும் மொழிபெயர்ப்பு மற்றும் இனநல்லிணக்கப்பணிகளுக்காக அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், நடைபெற்ற 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் பாராட்டு விருதும் வழங்கி கௌரவித்தது.
குறிப்பிட்ட விருதை முன்னிட்டு வெளியிடப்பட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
இலங்கையில் தமிழ் – சிங்கள மொழிப்பரிவர்த்தனையில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் கலாநிதி மடுளுகிரியே விஜேரத்தின அவர்கள், படைப்பிலக்கியவாதியாகவும், சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் பன்னூல் ஆசிரியராகவும் அயற்சியின்றி தொடர்ந்து இயங்கிவருகின்றார்.
எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17 ஆவது வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் இடம்பெறும் மொழிபெயர்ப்பு அரங்கில் உரையாற்ற வருகை தந்துள்ள இவரை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

சகோதர சிங்கள மொழியை தாய்மொழியாகக்கொண்டிருந்தபோதிலும், இலங்கையின் மற்றும் ஒரு தேசிய மொழியான தமிழையும் முறையாகக்கற்று, தமிழ்ப்பண்டிதர் பரீட்சையிலும் தோற்றி தேர்ச்சி பெற்றவர்.
அறிஞர் சுவாமி விபுலானந்தர் பற்றியும் சிங்களத்தில் நூல் எழுதி சிங்கள மக்களிடம் அவரை சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்.
மகாகவி பாரதியார், அழ. வள்ளியப்பா முதலான கவிஞர்களின் கவிதைகள் சிலவற்றையும் சிங்கள மொழியில் பெயர்த்திருப்பவர்.
அத்துடன், இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர்களான டொமினிக்ஜீவா, செ. கணேசலிங்கன், செ. யோகநாதன், செங்கைஆழியான், தெணியான் முதலான இலக்கியவாதிகளின் தமிழ் நாவல்களையும் பல தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள், கட்டுரைகளையும் சிங்கள மொழியில் பெயர்த்து சிங்கள மக்களுக்கும் குறிப்பாக, சிங்கள மாணவர் சமுதாயத்திற்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அத்துடன், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நடேசன் ஆகியோரின் நாவல்கள், சிறுகதைகளையும் மொழிபெயர்த்திருக்கும் கலாநிதி மடுளுகிரியே விஜேரத்தின, இதுவரையில் 75 இற்கும் மேற்பட்ட தமிழ்- சிங்கள நூல்களை எழுதியிருக்கிறார்.
அவ்வாறே பல சிங்கள இலக்கியங்களையும் தமிழ் மொழியில் பெயர்த்து இன நல்லுறவுக்கு பாலமாக விளங்குபவர்.
இவற்றில் சிலவற்றுக்கு இலங்கை தேசிய சாகித்திய விருதும் பெற்றவர்.
தமிழர் திருநாட்களான தைப்பொ ங்கல், சித்திரைப்புதுவருடப்பிறப்பு, தீபாவளி, சிவன்ராத்திரி பற்றியெல்லாம் சிங்களத்தில் நூல்கள் எழுதியிருப்பதுடன் குறிப்பிட்ட பண்டிகை காலங்களில் இலங்கையில் வெளியாகும் சிங்கள நாளேடுகளிலும் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதிவருபவர்.
இன நல்லிணக்கத்திற்காக இலக்கியரீதியில் தொடர்ச்சியாக பாடுபட்டுவரும் இவர், இலங்கையில் பல பாகங்களிலும் நடைபெற்ற இன நல்லிணக்க மாநாடுகள், கருத்தரங்குகளிலும் பங்குபற்றியவர்.

இலங்கை வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றியிருக்கும் இவர், கனடாவிலும் சில வருடங்கள் இலங்கைத்தூதரக மொழித்துறை அதிகாரியாக பணியாற்றியிருப்பவர்.

வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி உரையாற்றி வருவதுடன், கலைத்துறையிலும் மிகுந்த ஈடுபாடுள்ளவர். அத்துடன் சிறந்த பாடகருமாவார்.

சிறந்த திரைப்படங்களின் தேர்விலும் நடுவராக இயங்கியிருக்கும் பல்துறை ஆற்றல் மிக்க ஆளுமையான இவரை எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பாராட்டி விருது வழங்குகிறது.
—-0—

“இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”” மீது ஒரு மறுமொழி

  1. Great to know a Great Srilankan Sinhalese! God bless him & family!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: