நினைவில் வாழும் விசுவானந்ததேவன்

நடேசன்

77 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மார்ஸ் மண்டபத்தில் தங்கியிருந்தேன். நான் கலகா வீதியைக்கடந்து எதிர்ப்பக்கமாக புகையிரதநிலையம் அமைந்த பகுதியில் உள்ள மிருகவைத்தியத்துறைக்கு செல்லும்போது பலதடவைகள் விசுவானந்ததேவனைக் கண்டிருக்கிறேன்.

துணிப்பையை தோளில் கொழுவியபடி குறைந்தது இரண்டு நண்பர்களுடன் எதையோ தொலைத்துவிட்டதுபோல் புற்களோ அல்லது ஊர்வனவோ நசிந்துவிடாதிருக்கவேண்டும் என்பதுபோல் கால்களை எட்டி எட்டி வைத்தபடி சிரிப்பைத் தழுவ விட்டபடி என்னைக்கடந்து நடக்கும் விசுவானந்ததேவன் எப்பொழுதும் நினைவில் நிற்கிறார்.
அவரது உருவம், முகம், அவரது புதுமையான பெயர் , அத்துடன் கம்யூனிஸ்ட் என எனக்கு மற்றவர்களால், முக்கியமாக ஜனதா விமுக்தி பெரமுனையைச் சேர்ந்த சிங்கள நண்பன் ஜோதிரத்தினவால் அறிமுகப்படுத்தப்பட்டது எல்லாம் பசுமையான நினைவுகள்.
எனக்கு முன்பே பல்கலைக்கழகம் வந்தவர், எங்களது காலத்திலும் அவர் படிப்பதைத் தொடர்ந்தமையால், படிப்பதைவிட அதிகமாக புரட்சிகரமான வேலைகளில் ஈடுபடுகிறார் என்பதும் எனக்குப் புரிந்தது. நான் பல்கலைக்கழகம் பிரவேசித்த காலம், ஏற்கனவே 71 புரட்சியில் ஈடுபட்டவர்கள் தோல்வியடைந்து சிறையிலிருந்து விடுபட்டுப் படிக்க வந்த காலம் என்பதால் நான் சிரிப்புடன் மட்டுமே விசுவானந்ததேவனைக் கடந்து விடுவேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவர் சீனச்சார்பான கொள்கை உடையவர் என அக்காலத்தில் அவர் மீது முத்திரை குத்தப்பட்டிருந்தது. நாங்கள் எல்லாம் உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கே என்ற ஈழத் தேசியக் கவிஞர் காசி ஆனந்தனது கோசங்களைக்கேட்டு வளர்ந்தவர்கள். மருத்துவ, மிருகவைத்தியத்துறைகளில் படித்துக் கொண்டிருந்த எங்களுக்கு இடதுசாரி அரசியல் பிரயோசனமற்றது என்ற எண்ணமிருந்தது.
தோட்டம் செய்யத் தண்ணிரோ, தொழில் செய்ய தொழிற்சாலையோ இல்லாத தீவுப்பகுதியில் பிறந்தவர்கள் படித்தால் அரச உத்தியோகம் படிக்காவிடில் தென்னிலங்கையில் சோற்றுக்கடை அல்லது சுருட்டுக்கடை எனத்தேடும் பாரம்பரியம் எமது இரத்தத்தில் ஓடியது.

84 இல் தமிழகத்திற்கு வந்ததும் பெரும்பாலான ஈழவிடுதலை இயக்கத் தலைவர்களுடன் நேரடியாகப்பழக வாய்ப்புக்கிடைத்தது. ஆனால் எனக்கு ஏற்கனவே பேராதனையில் படித்த காலத்தில் அறிமுகமான மாணவரான, பிற்காலத்தில் தமிழ்விடுதலை இயக்கமொன்றின் பொறுப்பாளராக இருந்த விசுவோடு இந்தியாவிலும் பெரிதளவு நெருங்கிப்பழகவில்லை.
84 இறுதியில் அகதிகளுக்கும் இயக்கப்போராளிகளுக்கும் மருத்துவ உதவிகளை செய்வதற்கு அக்காலத்தில் விடுதலைப்புலிகள், புளட் டெலோ , ஈ.பி .ஆர் .எல் .எஃப். மற்றும் ஈரோஸ் அமைப்பினர் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கிய அமைப்பிற்கு நான் செயலாளரானேன். அவர்கள் அந்த அமைப்பில் தமிழீழத்தேசிய முன்னணி (என் எல் எவ் ரீ) என்ற அமைப்பை ஒதுக்கிவிட்டார்கள்.

அப்பொழுது அதைப்பற்றி விசாரித்தபோது என். எல் .எவ் .ரீ.யின், இந்திய நக்சலைட்டுகள் தொடர்பும், இவர்களது சீனச்சார்புக் கொள்கையும் இந்தியாவில் சரிவராது என்ற காரணம் சொல்லப்பட்டது.

எனினும் பலமுறை விசுவை சந்தித்திருக்கிறேன். நலம் விசாரிப்பதோடு எமது உரையாடல் முடிந்துவிடும். அதன் பின்பு ஒருநாள் நான் ஈபிஆர் எல் எஃப். செயலதிபர் பத்மநாபாவைக் காணச் சென்றபோது அங்கு அவர் என்னை விசுவுக்கு அறிமுகப்படுத்த முயன்றபோது ” ஏற்கனவே பேராதனையில் தெரிந்தவர்” என்றார்.
பிற்காலத்தில் சில ஈபி எல்ஆர் எஃப். நண்பர்கள் ” விசு எங்களிடம் ஆயுதம் கேட்கிறார். ஆனால் எங்களுக்கே இன்னும் கிடைக்கவில்லை ” என்றார்கள்.
86இல் நான் இந்தியாவில் இருந்தபோது விசு கடலில் மரணமடைந்ததாக அறிந்து மிகவும் வருந்தினேன். நான் அறிந்தவரை விசுவை எவரும் குறை சொன்னது கிடையாது. ஆனால், பிற்காலத்தில் விடுதலைப்புலிகளால் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் வலுத்ததாக அறிந்தேன்.
விசர் நாய் கடிக்கவில்லை என்றால்தானே அதிசயம்…? யாரைத்தான் அவர்கள் விட்டு வைத்தார்கள் என்பது ஒருவிதமான மனச்சாந்தி.

அத்தோடு விசுவின் படகில்பயணம் செய்த 30 பேர்அளவிலான சாதாரண மக்களையும் நாம் நினைவு கூரவேண்டும். விசுவானந்ததேவன் என்ற விசுவின் நினைவுக் கட்டுரைகள் கொண்ட நூல் எனக்குத் தபாலில் வந்தது.

இந்தப்புத்தகம் இரு விடயங்களில் முக்கியமாகிறது. புத்தகத்தைத் தொகுத்தவர்கள் அதன் பின்பகுதியால் இணைத்திருந்த அவர்களது இயக்கத்திலிருந்து இறந்தவர்கள் 31 பேரது விபரக்கொத்து. அதில் 18 போராளிகள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்கள். அதைவிட விசு உட்பட 3 பேர் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பலமாக நம்பப்படுகிறது.
5 பேர் இலங்கை இராணுவத்தால் கொலை செய்பட்டார்கள். மொத்தமாக 250 போராளிகளை மட்டும் தமது உச்சக்காலத்தில் வைத்திருந்தது இச்சிறிய இயக்கம். இவர்கள் சுவரொட்டிகளும், துண்டுப்பிரசுரங்களிலும் ஆர்வம் காட்டியவர்கள். ஆக மிகுதியாக சில துருப்பிடித்த ஆயுதங்களை தங்கள் பாதுகாப்புக்கு வைத்திருந்திருப்பார்கள். நான் கேள்விப்பட்டவரை ஒரு வங்கியைக் கொள்ளையடித்திக்கிறார்கள். அவர்கள் விடுதலைப்புலிகளின் எதிரிகளா?

இதுபோல் மற்ற இயக்கங்களும் தங்களது போராளிகளது பெயர்களை வெளியிடுவது மிக மிக அவசியமானது. எமது போராட்டம் யாரால் சிதைக்கப்பட்டது என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.

நான் புரிந்துகொண்ட மற்றைய விடயம் இலங்கையில் கமியூனிஸ்ட் கட்சிகள் சம்பந்தமானது. வரலாற்றைப் பேசுபவர்கள் கட்சிகள் சம்பந்தமாக பேசுவது அரிது. ஆனால், கொள்கை சார்ந்திருந்த முக்கியமானவர்களையிட்டு பேசுவார்கள்.

சிங்களவர்கள் மத்தியில் பீட்டர் கெனமன், டாக்டர் விக்கிமசிங்கா சண்முகதாசன், யாழ்ப்பாணத்தில் வி.பொன்னம்பலம், மாஸ்டர் கார்திகேசு , அதைவிட பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிவத்தம்பி கைலாசபதி அதில் குறிப்பிடத்தக்கவர்கள். யாழ்ப்பாணத்தில் கார்த்திகேசு மாஸ்டருடனும் சென்னையில் வி. பொன்னம்பலமுடனும் பழகியதை எனக்குக் கிடைத்த கொடையாக நினைக்கிறேன்.

இந்தத் தனிமனிதர்களுக்கு அப்பால் என் போன்றவர்களுக்கு புரியும் வகையில் இலங்கையில் இடத்துச்சாரியத்தின் வரலாறு பொதுவெளியில் பேசப்படவில்லை. இந்தப்புத்தகம் அந்தக்குறையைத் தீர்த்து வைக்கிறது. இந்த நூலில் இடது சாரிகள், நாங்கள் படித்த விலங்கியலில் அமிபா போன்ற ஒரு கல உயிர்கள்போல் பிளவுபட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது.

ஆரம்பத்தில் சீன- ரஷ்ஷிய பிளவு உருவாகியது. அப்பொழுது இரண்டு பகுதியிலும் இரு மொழி , பல மதங்கள் சார்ந்தவர்கள் கமியூனிஸ்ட் கட்சிகளில் இருந்தனர். அதன்பின் சீன சார்பில் இருந்து சிங்கள இளைஞர் அணி, ரோகண விஜயவீராவின் தலைமையில் போய்விட்டதையும் பிற்காலத்தில் சண்முகதாசன் போன்றவர்கள் தொழிற்சங்கவாதிகளாக மாறி, இறுதியில் விடுதலைப்புலி ஆதரவாளர்களாகத் திரிபடைந்ததாக அறிந்திருந்தேன்.

இந்தப் புத்தகத்தின் மூலமே பிற்காலத்தில் சண்முகதாசனது தலைமையில் இருந்து பிரிந்து மாக்சிய –லெனினிச கட்சி உருவாகியதும் அதில் காலஞ்சென்ற விசு தீவிரமாக இயங்கியதும் அதன் பின்பு தமிழர் பிரச்சினை கூர்மையடைந்தபோது தமிழ் மக்கள் தேசிய முன்னணி உருவாகி பிற்காலத்தில் விசுவால் தமிழீழத் தேசிய மக்கள் ஜனநாயக முன்னணி என்ற ஒரு ஆயுத அமைப்பாகியிருப்பதும் தெரியவருகிறது.

ஹட்டன் நேஷனல் வங்கிக் கொள்ளையின் பின்பு அதனில் இருந்து பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியாக அந்த இயக்கம் பரிணமித்த போதே விசுவின் இறப்பு நடக்கிறது. வலதுசாரி அரசியலுக்கு சமாந்தரமாக இடதுசாரிகள் பிளவு, அழிவு என்ற வரலாறு உள்ளது. இதில் சண்முகம் சுப்பிரமணியத்தின் வரலாற்றுக்கட்டுரை சிறப்பானது. ஒருவர் எழுதாமல் பலர் எழுதும்போது தொகுப்பு நூல்களில் சொல்வது சொல்லல் என்பது சில இடங்களில் சகிப்புத்தன்மையை சோதித்தாலும் படிக்கவேண்டிய நூலாகவும் அத்துடன், நாம் நினைவில் வைத்திருக்கவேண்டிய மனிதராகவும் விசு உள்ளார்.

விசுவின் சொந்த ஊர் எது என்பது எனக்கு முன்பு தெரியாது. அவரது ஊரான வடமராட்சி கல்லுவம் பற்றிய ஒரு நினைவு வருகிறது.

77இல் பல்கலைக்கழக நண்பர்களான நாங்கள் பத்துப் பேர் உடுப்பிட்டித்தொகுதியில் இராஜலிங்கத்திற்காக பிரசாரத்திற்குப்போனபோது எங்களைத் தலைவர் சிவசிதம்பரம் கல்லுவத்திற்கு அனுப்பினார். அந்த ஊரின் வீதியில் நாம் செல்லும்போது, ஒரு வீட்டு முன்றலில் மிளகாய் காயவைத்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி ” எங்கிருந்து வாறியள் தம்பிமாரே? ” என்று கேட்டார்
” பேராதனை பல்கலைக்கழகம் ” என்றோம்.
” பள்ளனுக்கு வோட்டுக் கேட்டு மட்டும் வராதீர்கள் ” என்றார் அந்த மூதாட்டி.

அதிலிருந்தே சாதித்திமிர் பிடித்த ஊர் கல்லுவம் என்ற சித்திரமே எனது மனதில் உருவானது. அதுவே விசுவானந்ததேவனது ஊர் என்பதையும் இந்தப்புத்தகம் நினைக்க வைக்கிறது. அதற்கப்பால் தமிழகத்திலும் பார்க்க இலங்கையில் சாதிப்பாகுபாடு குறைந்தது என நாம் நினைத்தால் அதற்கு இடதுசாரிகளே நன்றிக்குரியவர்கள். இதற்குமேலாக வட இலங்கையில் உருவாகிய தமிழ்த்தேசியவாதிகளான தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ், மற்றும் பிற்கால சிறிய, பெரிய போராளி அமைப்புகள் மற்றும் விடுதலைப்புலிகள் எல்லோரும் இழைத்த நாசவேலைகளோடு ஒப்பிடும்போது மிகச்சிறிய அளவில் உருவாகிய ஒற்றைக்கல அமிபாக்களான இடதுசாரிகள் எமக்கு விட்டுச் சென்றவை அதிகமானவை.

மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்பதை எங்களுக்கு எமது மாணவப்பருவத்தில் புரியவைத்தவர்கள் இலங்கை இடதுசாரிகள். அந்தவழியில் குறுகிய காலத்தில் பலரது நினைவுகளில் கலந்த ஒருவராக விவானந்ததேவனை நாம் நினைவு கூர்வோம்.

குறிப்பிட்ட இந்தப்புத்தகத்தின் பிரதிகள் சில மெல்பனில் என்னிடமுள்ளன. தேவைப்படுவோர் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புகளுக்கு : uthayam12@gmail.com – 0452631954
—0—

“நினைவில் வாழும் விசுவானந்ததேவன்” மீது ஒரு மறுமொழி

  1. Great to know about Visu..! JVP,LTTE made same mistakes! But LTTE never learn their mistakes even now outside SL! They never change too! They never listen too! All militant orgns shd be dissolved & consolidate/reform TNA!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: