மெல்பன் வருகை


மெல்பன்

கரையில் மோதும் நினைவலைகள் 3
நடேசன்

எனது வாழ்வில் அதிக காலம் மெல்பனில் வாழப்போகிறேன் என அக்காலத்தில் நான் எண்ணவில்லை. மனைவியின் சகோதரர்கள் இருவர் இங்கு இருந்தபோதும் மனைவிகூட அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. நாட்டை விட்டு வாழ்வுதேடி ஓடியவர்களில் ஒருவனாக இருந்தேன். ஆனால் என்னையறியாமல் வாழ்வின் பெரும்பகுதி உலகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றான மெல்பனில் அமைந்துவிட்டது.

இந்தியாவில் இருந்து வந்து ஒரு மாதகாலம் மட்டும் சிட்னியிலிருந்தோம். எனது மனைவியின் இளைய சகோதரன் ரவி, மெல்பனில் மருத்துவராக இருந்தார். அப்பொழுது அவர் திருமணமாகி இருக்கவில்லை. அவருடன் இருக்கலாம் என்று மனைவியும் மாமா மாமியும் முடிவு செய்தனர்.
யாழ்ப்பாணக் குடும்பங்களில் மாமிமார் எஸ். பொ. வின் சடங்கு நாவலில் வரும் பாத்திரம் மாதிரி செயல்படுவார்கள். நானும் அவர்களது முடிவுகளை ஏற்று ரவியின் வீட்டிற்குச் சென்றோம். அந்தப் பகுதி சன்சைன் எனப்படும் மெல்பனின் மேற்குப்பிரதேசம். அவ்விடத்திற்கு மெல்பனின் பிரபல்யமான வெஸ்ட் கேட் பிரிட்ஜ் எனப்படும் பெரிய பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்

இரண்டு அறைகள் கொண்ட ஒரு ஃபிளட்டில் நாங்கள் நால்வரும் ஒரு ஒரு படுக்கை அறையில் வாழ்ந்த காலம். இரண்டுபிள்ளைகளும் நடுவே உறங்கினால், இருமருங்கும் நாங்கள் உறங்குவோம். மூன்று வயதில் இருந்த மகள் நித்திரையில் உடல் பயிற்சி செய்ததால் விழுந்த உதைகள் , அடிகள் இன்னமும் நினைவில் இருக்கிறது. அந்த ஆறு மாதங்கள் எனது வாழ்வில் முக்கியமானவை.

எமக்கு அக்காலத்தில் ஆங்கிலம் படிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவிப் பணம் தந்தது. அப்படியிருந்தும் மாமன் மாமி என ஏழு பேர் ஏன் ஒரே வீட்டில் இருந்தோம் என்று இப்போது நினைக்கிறேன்.

இரண்டு காரணங்கள் இருக்கமுடியும். மீண்டும் நான் அவுஸ்திரேலியாவில் மிருக மருத்துவராகவும் , மனைவி குடும்ப மருத்துவராகவும் தகைமையைப் பெறுவதற்கு பரீட்சை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் எங்களது பிள்ளைகளைப் பராமரித்தது மாமா மாமியினர்தான். அக்காலத்தில் அந்த அரச உதவியிலும் எம்மால் சேமிக்க முடிந்தது.

எனது பிற்கால வாழ்வில் பலமான தாக்கத்தை உருவாக்கிய இரண்டு விடயங்கள் மெல்பனில் இருந்தபோது நடந்தன. அவற்றில் முதன்மையானது ஃபூட்ஸ்கிரே என்ற இடத்தில் அமைந்திருந்த தொழில்நுட்பக்கல்லுரியில் – எங்களைப்போல் பல நாடுகளிலும் இருந்து வந்தவர்களோடு சேர்ந்து ஆங்கிலம் படித்தோம். அந்த வகுப்பு ஐக்கிய நாடுகளது சபை போன்றது. எங்களோடு படித்தவர்கள் எல்லோரும் மருத்துவராகவும் மிருக மருத்துவராகவும் இருந்தார்கள்.

எங்களுக்கு கற்பித்த ஆண் அலன், பெண் ஹெலன் இருவரும் பெயர் ஒற்றுமையில் மட்டுமல்ல குணத்திலும் அருமையானவர்கள். மாணவர்களது கற்பனையில் ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாகத்திகழ்ந்தார்கள். பல வருடங்கள் அவர்களுடன் நட்பைப் பேணினேன். மிருகமருத்துவராக நான் வேலை செய்த மருத்துவமனையில் தனது பூனையைக் கொண்டுவந்த ஹெலன் என்னைக் கண்டதும் ஒரு ஆசிரியராக அவர் அடைந்த சந்தோசம் இன்னமும் நினைவில் உள்ளது. அவரது பூனையின் பற்களை சுத்தப்படுத்தினேன் என்பதையும் நினைவுகூர்கிறேன்

பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்த எங்களுக்கு ஆங்கிலம் இலகுவாக இருந்தபோது, சீனா , தென்னமரிக்கா , கிழக்கு ஐரோப்பா மற்றும் அரேபிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் அடைந்த சிரமத்தை என்னால் பார்க்கமுடிந்தது. பலர் பல தடவைகள் பரிட்சையில் தோற்றி தேர்வானார்கள். என்னுடன் படித்த பல அரேபியர்கள் மற்றும் கிழக்கு ஐரோப்பியர்கள் பரீட்சைகளில் தேறமுடியாது டாக்சி சாரதிகளாகவும் தமது மருத்துவத்துறை தவிர்ந்து ஏனைய தொழில்களில் ஈடுபட்டதும் மனதிற்கு வருத்தமானவை.
பிரித்தானிய காலனித்துவத்தால் வந்த கிரிக்கட் போன்று ஆங்கில அறிவும் எமக்குகிடைத்த நன்மைகள் என்ற கணக்கில் வைக்கப்படவேண்டும். இந்தியா, இலங்கையில் இருந்து அமெரிக்கா , பிரித்தானியாவுக்குச் சென்றவர்களுக்கு முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் ஏணியாக உள்ளது. இதுவே பல இந்தியர்கள் , அமெரிக்க பல்தேசிய நிறுவனங்களில் முக்கியமடைய பிரதான காரணமாகும்.

மருத்துவ , மிருக மருத்துவ மற்றும் பல்மருத்துவ துறைகளில் உள்ளவர்களுக்கு தங்களிடம் வரும் சாதாரண அவுஸ்திரேலியரிடம் எப்படி ஆங்கிலத்தில் பேசுவது என்பதுடன் புதிய கலாச்சாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பதையும் அறிந்து கொள்வதற்காக நடந்த வகுப்பில் பயின்றவர்களுக்கு மூன்று மாதத்தின் பின்பாக பரீட்சை நடக்கும் . இதில் சித்தியடைந்தபின்பே மற்றைய பரீட்சைக்குப்போக முடியும். அந்தப்பரீட்சைக்கு எங்களைத் தயாராக்குவதே அலன், ஹெலன் ஆகியோரது பொறுப்பு. நாங்கள் வந்த காலத்தில் தொடர்ச்சியாக 12 வருடங்கள் தொழிற்கட்சி மத்தியில் அரசாண்டபோது புதிதாக நாட்டுக்குள் வரும் எங்களைப் போன்றவர்களுக்கு இப்படியாகச் சலுகைகள் இருந்தன. இந்த நாட்டுக்குத்தேவையானவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கிய இப்படியான வகுப்புகளும் , ஆசிரியர்களும் எம்மை துரிதகதியில் பரீட்சையில் தேறவைத்தன.

இந்தக் காலத்திலே எனது அரசியல் மீண்டும் புத்துயிர்ப்பு பெற்றது.

மெல்பனுக்கு வந்தபோதே நண்பர் சிவநாதனுக்கு கொடுப்பதற்காக சுரேஷ்பிரேமச்சந்திரனது அறிமுகக்கடிதத்தோடு வந்தேன். இக்காலத்தில் அவரே ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சார்பாக இயங்கி வந்தவர். இந்தியாவில் அகதிகள் மத்தியில் வேலை செய்த காரணத்தால் சிவநாதன் ஒரு கூட்டத்தை மெல்பன் வை.டபிள்யூ. சி.ஏ. மண்டபத்தில் ஒழுங்கு பண்ணியிருந்தார். அதுவே அவுஸ்திரேலியாவில் எனது முதல் சமூகச் செயல்பாடு.

மெல்பனில் மழைச்சாரல் போர்த்திய குளிர்காலம். மாலை ஆறு மணியளவில் நண்பர் சிவநாதனது காரில் வந்திறங்கியபோது இருட்டாகிவிட்டது. வீதியோரமாக நடந்தபோது எனது காலின் கீழ் மாப்பிள் இலைகள் சலசலத்தன. நான் பேசவிருந்த இடம் , அதனைக்கேட்பவர்களது நோக்கம் தெரியாததால் கால்கள் பின்ன தயங்கியவாறு நடந்தேன். போட்டிருந்த உள்ளாடை , சேட் , அதன் மேல் கம்பளி உடை என்பவற்றை மீறிய குளிர். கைவிரல் நுனிகளில் பத்து ஊசிகள் குத்தியதுபோல் விறைத்தது. உள்ளே சென்றதும் வெளியே உள்ள நிலைக்கு மாறாக அந்த மண்டபம் சூட்டில் கணகணத்தது. கிட்டத்தட்ட 40 இலங்கைத் தமிழர்கள் வந்திருந்தார்கள். நான் மூன்று வருடமாக இந்தியாவில் அகதிகளுடனும், இயக்கத்தவர்களுடனும் சென்னையில் வேலை செய்த வரலாற்றைக் கூறிவிட்டு உங்களைப்போல் ஈழவிடுதலையை நேசித்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், இந்தியாவின் இராணுவம் இலங்கைக்குப் போகவிருப்பதால் இனிமேல் தமிழராக நாம் செய்வதற்கு அதிகமில்லை. ஈழப்போராட்டம் என்பது எம்மைக் கடந்து போய்விட்டது. தற்போதைய நிலையில் எங்களால் முடிந்தது அகதிகளின் துயர் துடைப்பதே. எனது கர்ச்சீப்பை எடுத்துக் காட்டி, கண்ணீரைத் துடைப்பதுபோன்ற செயலாக இருக்குமென்றேன் .

அதுவரையும் அமைதியாக எனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் இருவர் ” நீர் எப்படிச் சொல்லமுடியும்…? உமக்கு என்னதெரியும்… ? நீர் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர் ” எனப் பேசினார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த பெரும்பான்மையினர் எனதுகூற்றை ஆதரித்தார்கள் என்று சொல்லாவிடிலும், எதிர்க்கவில்லை.
இந்தக் கூட்டம் நடந்த காலம் 1987 ஜுலை நடுப்பகுதி. இந்திய இராணுவம் இலங்கைக்குச் சென்றது ஜுலை இறுதிப்பகுதியில். இப்படி உறுதியாகச் சொல்வதற்கு என்னால் எப்படி முடிந்தது…?

நானும் மனைவியும் இந்தியாவில் இருந்த காலத்தில் எமது இந்திய விசாவை மூன்று வருடங்களாகப் புதுப்பிக்கவில்லை. இலங்கைப் பாஸ்போட்டில் ஒருவிதமான அஜாக்கிரதை இருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு விசா கிடைத்தபோதுதான் அதன் முக்கியத்துவம் தெரிந்தது . விசா இல்லாமல் இருந்தால் இந்தியாவில் இருந்து எக்சிட் விசா கிடைக்காது. ஓடிவிழுந்து புதுப்பிக்க நினைத்தபோது இந்தியாவின் பிரோக்கிரசி பயமுறுத்தியது. எனது கவலையை அறிந்து அக்காலத்தில் என்னோடு அடிக்கடி தொடர்பில் இருந்த இன்ரலிஜன்ட் பீரோவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் அதை ஒரே நாளில் செய்து தந்தார். இந்திய உளவுத்துறையினர் இயக்கங்களில் முக்கியமானவர்களுடன் மட்டுமல்ல என்போன்றவர்களுடனும் தொடர்பு வைத்திருப்பார்கள்.
அவை எந்தவொரு நிபந்தனையுமற்ற தொடர்புகள். அவுஸ்திரேலியாவுக்குப் போவதை வாழ்த்திய அவர், “இந்திய இராணுவம் இலங்கைக்குள் இறங்கத் தயாராக இந்தியக்கடற்கரையில் காத்திருக்கிறார்கள். இனிமேல் உங்களுக்குப் பிரச்சினையில்லை. எங்கள் நாட்டில் உள்ள ஈழ அகதிகளும் படிப்படியாக போய்விடுவார்கள். இதுவரையும் இங்கிருந்து செய்த சேவை போதுமானது. அவுஸ்திரேலியாவுக்குச் சென்று குடும்பத்தைப்பாருங்கள் ” என்றார்.

அவர் எனக்குச் சொன்ன விடயங்கள் நடந்திருக்கலாம் . ஆனால், எமக்கு நாமே குழியைக் தோண்டி, நாங்களே எம்மீது மண்ணைப்போடுவதற்கு சத்தியப்பிரமாணம் செய்தால் யார்தான் என்ன செய்ய முடியும்…? உதவிக்கு வந்தவர்கள் வேடிக்கைதானே பார்க்கமுடியும்…?

அந்தச் சந்திப்பின் பின்பாக பல விடயங்கள் நடந்தன. அக்காலப்பகுதியில் எனக்கு முன்னர் இலங்கையிலிருந்து முருகபூபதி வந்திருந்தார். விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மிகவும் வேகமாகச் செயல்பட்டு இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்தைதொடங்கியதால் கிட்டத்தட்ட நண்பர்கள் 12 பேர் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகையை உருவாக்க முயன்றார்கள். அதற்கான முதல் ஆலோசனைக்கூட்டம் நண்பர் திவ்வியநாதனின் கிளேய்டன் வீட்டில் நடந்தது. அந்தப்பத்திரிகையில் சிலர் கூட்டுப்பொறுப்பாக இருந்தாலும் அதன் சுமை முருகபூபதியின் தோளில் விழுந்தது. மக்கள்குரல் என்ற அந்தப்பத்திரிகை வெளியானதும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒரு குழுவாக எங்கள் மீது அழுத்தமான முத்திரை இடப்பட்டது. இந்தப் பன்னிரண்டு பேரும்
இலங்கையில் ஜே.ஆர் – ராஜீவ் ஒப்பந்தத்தால் சமாதானம் வரவேண்டுமென்று நினைத்தார்கள். அந்தப்பன்னிருவரும் எனது நண்பர்கள். ஆனால், அந்தப்பத்திரிகையில் எனக்கு எந்தப்பங்குமில்லை.

இக்காலத்தில் மட்டும் மெல்பனில் இலங்கைத்தமிழர்கள் கிட்டத்தட்ட 300 பேரளவில் அகதிகளாக விண்ணபித்துவிட்டு பலவருடங்களாகக் காத்திருந்தார்கள். அதில் பலர் எங்கள் நண்பர்களாகவும் இருந்ததால் சட்டத்தரணி ரவீந்திரனது உதவியால் அவுஸ்திரேலியத் தமிழ் அகதிகள் கழகம் என்ற பெயரில் ஒன்று அமைப்பு உருவாகியது. இதனது உருவாக்கத்தில் அதன் ஆரம்பக் கூட்டத்திலே மட்டும் நான் பங்கு கொண்டேன். ஆனால், இந்தக்கழகமும் மக்கள்குரல் போல் விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாகவே பார்க்கப்பட்டு இதில் சேர்ந்தவர்கள் அக்காலத்தில் இங்கு இயங்கிய இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினரால் துரோகிகளாக வர்ணிக்கப்பட்டார்கள். வானொலிகளை நடத்தி எதிர்பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.

மெல்பனில் தமிழர்கள் சம்பந்தப்பட்ட எந்த முயற்சிகளையும் விடுதலைப்புலி ஆதரவாளர்களோடு இணைந்தே எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எழுதாத சட்டமாகியது. மற்றவர்கள் தமிழர் சம்பந்தமாக ஏதும் செய்ய முயன்றால், அதனைத் துரோகச்செயலாகப் பார்க்கவேண்டும் என்ற மன நிலையை பரப்ப முயன்றார்கள். இதனால் கோயில்கள் பிரிந்தன. நண்பர் மாவை நித்தியானந்தன் பிற்காலத்தில் சுயாதீனமாக பாரதிபள்ளியை உருவாக்கினார்.

தீவிர புலி ஆதரவாளர்கள் சமூகவிடயங்களில் மட்டுமல்ல தமது கருத்துக்கு எதிரானவர்களது தனிப்பட்ட தொழில் சார்ந்த சட்டத்துறை மற்றும் மருத்துவத்துறை பணிகளையும் மௌனமாகவும் வெளிப்படையாகவும் பகிஷ்கரித்தார்கள்.
இவற்றால் பயந்த பலர் ஊரோடு ஒத்துவாழ்தல் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி, சூழ்நிலையின் கைதிகளாயினர். ஆமாம் சாமிகளாக தலையாட்டினர்.

1988 ஜனவரியில் நான் மேல்படிப்புக்காக தெரிவு செய்திருந்த நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம் என்னை அழைத்ததால் குடும்பமாக சிட்னி சென்றேன்.

அதுவரையில் நான் மெல்பனில் செய்த மிகவும் சிறிய பணிகளையும் அரசியலாகப் பலர் பார்த்தனர். பலர் – ” உங்களது வேலையையும் குடும்பத்தையும் பாருங்கள் ” எனப் புத்திமதி சொல்வார்கள். ஆனால், எனது பணிகள் யாவும் தன்னியல்பாகவே நடந்தவை.

சிறுவயதிலேயே வன்முறை எனக்கு அன்னியமானது. இலங்கையில் இருந்து வன்முறைக்குத் தப்பி இந்தியாவிற்குச் சென்ற நான், எமது நாட்டு இயக்கத்தினர் மத்தியில் நடந்த ஆட்கடத்தல், கொலைகளைப் பார்க்க நேர்ந்தது. அவற்றில் ஏதாவது நல்ல நோக்கமிருக்கலாம் என்ற ஆரம்பக்கட்ட நினைவுகள் பிற்காலத்தில் அடிபட்டுப்போனது.

ஏதாவது வழிமுறையில் இந்த வன்முறைப்போராட்டம் நிறுத்தப்படவேண்டுமென்பதே எனது அடிமனதின் விருப்பம். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை வரவேற்றதும் அந்த விருப்பத்தில் ஒன்று. இதனாலேயே அதற்காக ஆத்மார்த்தமாக இயங்கிய எனது நண்பர்களுடன் ஒன்றிணைந்தேன்.

எனது வாழ்நாளில், யாழ். இந்துக்கல்லூரி மாணவர் பராயத்தில் ஓரிருதடவைதான் கல்லூரிக்கு தாமதமாகச்சென்றதனால் ஆசிரியர்களிடம் பிரப்பம் பழம் வாங்கியிருக்கின்றேன். அங்கு நான் செல்லும் சைக்கிளில் காற்றுப்போயிருந்தால் ஏற்படும் தாமதங்கள்தான் அவை. எல்லோருக்கும் அந்த இளம் பருவத்தில் கிடைக்கும் பிரப்பம் பழங்கள்தான்.
கல்லூரியில் எந்தப் பெரிய காரணமுமில்லாமல் அடித்தார்கள். ஒருமுறை சில நிமிடங்கள்தாமதித்ததற்கும் மறுமுறை பாடசாலைக்கு போகாமல் ஹஸ்டலில் நின்றதாலும் கிடைத்தவை.அச்சம்பவங்கள் என்னில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அவை அக்காலத்திலே நியாயமற்றதாகவே தெரிந்ததன . ஒரு தடவை எனது தந்தையிடம் வாங்கியிருக்கிறேன் . அதற்கப்பால் நான் எனது தம்பிகளுக்கு ஓரிரு முறை பாடசாலைபோகுமாறு அடித்ததும் , எனது மகளுக்குச் சிறுவயதில் கையை ஓங்கியதும்தான் நினைவில் இருக்கிறது.ஒருசமயம் எனது பூனை, குருவியை பிடித்ததற்காக அதனை பத்திரிகையால் அடித்திருக்கின்றேன்.
இவ்வாறு மிகக் குறைந்த அளவிலேயே வன்முறையை பிரயோகித்திருக்கின்றேன் . அப்படியான வன்முறைகளுக்காக இப்பொழுதும் வருந்துகிறேன்.

எனது ரீன்ஏஜ் வயதில் பாடசாலைக்கு செல்லும் போது காசைக்கொடுத்த அம்மா மருந்து வாங்கி வரும்படி கூறியிருந்தார். அக்காலத்தில் கிளினட் ஈஸ்ட் வூட்டின் ஒரு ஆங்கிலப்படம். பெயர் நினைவில்லை. அதுவே கடைசி நாளாக இருந்தது. வெள்ளிக்கிழமை , விலங்கியல் ஆசிரியர் பிரான்சிஸ் வராததால் வகுப்பில்லை .அவர் வராது விட்ட பாடங்களை பின்பு அழைத்து ஓல்ட் பாக்கருகே நடத்துவார் என்பதால் பாடத்தை தவறவிடவில்லை. திரைப்படத்திற்கும் அதுவே கடைசி நாளாக இருந்தது. கிட்டத்தட்ட பத்துப்பேர் கூட்டமாக இந்துக்கல்லுரியில் இருந்து படம்பார்க்கச் சென்றோம். கலரி வரிசையில் படம் பார்த்தால் ரோயல் டிஸ்பன்சரியில் மருந்து வாங்க மிச்சமிருக்கும் என்பது எனது கணக்கு.தியேட்டரில் கலரி சீட்டுகள் முடிந்துவிட்டது. முன்வைத்த காலை பின்வைப்பது கௌரவக்குறைவாகத் தெரியும். அம்மாவிற்குத்தேவைப்பட்ட மாத்திரைகளை மீண்டும் மீண்டும் மனதில் நாட்கணக்குப்போட்டபோது மொத்தமாக வாங்க முடியாத போதிலும் சொற்ப மாத்திரைகளாவது வாங்கலாம் என தீர்மானித்து இரண்டாவது வகுப்பில் படம் பார்த்துவிட்டேன்.
ஆனால், ரோயல் டிஸ்பன்சரியில் மாத்திரைகள் ஒரு டப்பியில் இருப்பதால் உடைத்துத் தர மறுத்துவிட்டார்கள். என்னுடன் வந்த நண்பர்கள் ஏற்கனவே போய்விட்டார்கள். கடன் தர யாருமில்லை. சோகத்துடன் வந்த என்னிடம் வீட்டில் கேட்டபோது நடந்ததைச்சொன்னேன்.

‘பரதேசியைப் பிள்ளையாகப் பெற்றிருக்கிறாய். மருந்து வாங்கக் கொடுத்த பணத்தில் றீகல் தியேட்டரில் ஆங்கிலப் படம்பார்த்துவிட்டு வந்திருக்கு. உருப்படாது’ அம்மாவைத் திட்டி, எனக்கு அடி விழுந்தபோது கொடுமையே உருவான தமிழ்ப்பட வில்லனாக எனது தகப்பனை நினைத்து வீட்டைவிட்டு ஓட நினைத்தேன். ஆனால், எங்கே ஓடுவது எனத்தீர்மானிக்கவில்லை. அந்தநேரத்தில் எனது மூளையின் எமோஷனல் நடுப்பகுதி ஓய்வு பெற்றதும், மூளையின் பகுத்தறியும் முன்பகுதி விழித்துக்கொண்டது.
அட மடையா, படித்து ஒரு மனிதனாக வரவேண்டும். இதையெல்லாம் சகித்துப்போகவேண்டும். ஏற்கனவே பாடசாலையில் பிரச்சினை பண்ணிவிட்டு பாடப்புத்தகங்களைக் குளத்தில் எறிந்துவிட்டு பிரித்தானிய ஆர்மியில் சேர்ந்த சின்னத்தம்பியின் மகனாக இருக்கிறாய். எது செய்யக்கூடாது என்பதற்கு உன் தகப்பனே முன்னுதாரணமாக இல்லையா…?

எனது தம்பிக்கு சரியாகக் காலை எட்டுமணிக்கு வயிற்றுவலி வரும். நாங்கள் நால்வரும் எழுந்து பாடசாலைக்கும் கல்லூரிகளுக்கும் ஒன்பது மணிக்கு முன்பே போய்விடுவோம். அதன் பின்பு வயிற்றுவலி குணமான தம்பி காலையில் எழுந்து தேவையான காலை உணவை சாப்பிடுவான். இந்த எட்டுமணி வலி பாடசாலைக்கு போகும் நேரத்தில் வருவதும் பின்பு ஒரு மணி நேரத்தில் போய்விடுவதையும் ஏற்காமல் அவனை இழுத்தும் அடித்தும் பாடசாலைக்கு கொண்டு சென்றதால் எதுவித பிரயோசனமும் இருக்கவில்லை.என்ன காரணம் என நாங்கள் விசாரிக்கவுமில்லை. விசாரித்திருந்தால் ஏதாவது தெரிந்திருக்கும். அவனை நான் அடித்ததாலேயே படிப்பை பிற்காலத்தில் வெறுத்திருக்கலாம். பிற்காலத்தில் அவனது உளப்போக்கை அறிய முற்படவில்லை என்பதாக நினைப்பேன்.

மெல்பனில் வழக்கமாக மாலையில் வீடு திரும்பும்போது வீட்டுக்கு முன்பாக உள்ள சீமெந்துத்தரையில் பறவைகளின் இறகுகள் கிடக்கும். அந்த இடங்களில் சிறிய கறுப்பு எறும்புகள் ஊர்ந்தபடி இருக்கும். யார் இந்தப் பறவைகளின் கொலையாளி எனத் தெரிந்தாலும் கையும் களவுமாகப் பிடிக்கக் காத்திருந்தேன். வழக்கத்தைவிட ஒரு நாள் நேரத்தோடு வேலை முடிந்து வீடு திரும்பும்போது மாலை நான்கு மணியிருக்கும். வாயிலிருந்து இரத்தத்துளிகள் நிலத்தில் சொட்ட எனது பூனை ராணியின் , வாயில் தேன் குருவியிருந்து துடித்தது. மற்றைய நாட்களில் கொலை நடத்த இடத்தில் பறவையின் உடல் உண்ணப்பட்டுவிடும். இரத்தத்தை எறும்புகள் சுத்திகரித்துவிடும். இன்று கொலை நடக்கும்போது வந்ததால் கையில் இருந்த பத்திரிகை சுருளால் தலையில் தட்டினேன். பறவையை விட்டுவிட்டுச் சென்ற ராணி அன்று தொடக்கம் என்னருகே வந்ததில்லை.

மனிதர்களில் மட்டுமல்ல, மிருகங்களிலும் வன்முறையான எந்த நடவடிக்கையும் எந்த முடிவையும் ஏற்படுத்தாதது மட்டுமல்ல, எதிர்விளைவையே உருவாக்கும் என்பதை சொந்தவாழ்விலும், சமூகவாழ்விலும் கண்டுகொண்டேன்.

இலங்கைப் போராட்டத்தில் இரண்டு பக்கத்திலும் தொடர்ந்த வன்முறையை உள் நாட்டில் பார்த்தோ அனுபவிக்காமலோ எவருமே இருக்கமாட்டார்கள். குறைந்தபட்சம் நண்பர்களோ, உறவினர்களோ பாதிக்கப்பட்டோ பலியாகியோ இருந்திருப்பார்கள்.

நான் இயக்க வன்முறைகளை தமிழ்நாட்டில் பார்த்தேன். ஆயுதம் தாங்கியவர்கள் தங்கள் பாதுகாப்பு , தங்கள் நோக்கங்கள் அல்லது தலைவரது கட்டளையென விளக்கம் சொல்வார்கள். நாங்கள் அதை நியாயப்படுத்தமுடியாத போதும் வன்முறையின் சூழ் நிலைகளைப் புரிந்து கொள்ளமுடியும். வெளிநாட்டில் அதுவும் ஜனநாயக நாடுகளில் வாழ்ந்து அதனது சுகங்களையும் போகங்களையும் அனுபவித்துக் கொண்டு, இலங்கையில் வன்முறையைத்தூண்டியவர்களுக்கு ஆதரவு வழங்கி, அந்த வன்முறையாளர்களின் கொலைகளையும் நியாயப்படுத்தியபடி மேலும் மேலும் ஆயுதத்திற்கு எந்தக்கேள்வியும் இல்லாது பணம் கொடுத்துவந்தார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு வீதமானவர்கள் வழங்கிய பணத்தால் ஈழவிடுதலையை தாங்கள் பெறமுடியுமென நினைத்தார்கள்.

இயக்கங்களில் இருப்பவர்கள் செய்யும் கொலைகள் குறைந்தபட்சமாக, அவர்கள் சார்ந்த இயக்கத்திற்காகவே அதன் கட்டளைப்படி செய்கிறார்கள்.ஆனால்,புலம்பெயர்ந்து வாழும் இவர்கள் எந்த நிர்பந்தமுமற்றவர்கள். சுதந்திரமானவர்கள். ஆனால், அந்தக் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்பது உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை.
தற்கால இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்களுக்கு நடப்பதுபோல் மேற்கு நாடுகள் செய்திருந்தால் நகரச்சிறைகள் தமிழர்களால் நிறைந்திருக்கும்.

இந்த நிலையில்1987 ஜுலையில் போரை நிறுத்தி, குறைபட்சமான தமிழர்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க இருந்த இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்த எனது நண்பர்கள் பன்னிருவர் எவ்வளவு தீர்க்கதரிசனமாக செயல்பட்டார்கள் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.
30 வருடங்கள் எம்மைக்கடந்து போய்விட்டன. அதன்பிறகு நடந்த கொலைகள் அழிவுகளுக்கு யார் பொறுப்பு…? அக்காலத்தில் உருவான வடக்கு – கிழக்கு இணைப்பு இன்று போய்விட்டது என்பது மிகவும் சோகமான வரலாறு.

சங்கிலியனுக்கு நல்லூரில் சிலை திறந்தார்கள் தமிழரசுக் கட்சித்தலைவர் செல்வநாயகத்திற்கு சிலை வைத்தார்கள்.
உண்மையில் இலங்கைத்தமிழர் தற்போது கொள்கை ரீதியாக அனுபவிப்பது எல்லாம் இந்தியப்பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியால் கிடைத்தவைதான். நாங்கள் சிலை வைக்கவேண்டிய ஒரே தலைவர் ராஜீவ் காந்திக்குத்தான் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

8888888

நான் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பயோரெக்னோலஜி படிப்பைத் தொடங்கிய போது, குடுப்பத்தினரில் இருந்து விலகி பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் நண்பர்களுடன் இருந்தேன். அந்த இடத்திற்கும் சிட்னியின் கூஜி கடற்கரைக்கும் இடையில் அதிக தூரமில்லை. என்னோடு இருந்தவர்கள் என்னிலும் பார்க்க குறைந்தது ஐந்து வருடங்கள் இளையவர்கள். ஒவ்வொருவரும் தலா 25 டொலர் வாரம் ஒருமுறை தந்து ஒரு நாளுக்கு ஒருவராக சமைத்து சாப்பிடுவோம். ஏற்கனவே சமையலில் தேர்ச்சியிருந்ததால் எனது சமையலுக்கு அதிக வரவேற்பு இருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து சரியாக பத்து வருடங்கள் பின்னர் சிட்னி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.பேராதனையில் படித்தபோது முதலாம் தலைமுறை கம்பியூட்டர் என ஏயார் கண்டிசன் அறையில் வைத்திருந்த மிருகத்தை தூர இருந்து கண்ணாடிக்கூடாக பார்த்த நினைவுகளுடன் இருந்த எனக்கு, நடிகை சிலுக்கு மாதிரி வழுவழுப்பான மக்கின்ரோஸ் எனப்படும் அப்பிள் கம்பியூட்டரில் எனது ஆராய்ச்சிகளைப் பதிவு செய்யவேண்டும்.நல்லவேளையாக ஹொங்கொங்கில் இருந்து வந்த ஒருவன் எனக்கு நண்பனாக வந்தான். அவன் மூலமாக சில அடிப்படைகளை அறிந்துகொண்டேன். அவன் சீனாக்காரனாக இருந்தாலும் மிகவும் பக்தியுள்ள கிறீஸ்தவன். எனது நாத்தீகத்தில் எரிச்சலடைந்து உதவியை நிறுத்திவிடுவான். அடுத்த நாள் மீண்டும் வந்து சொல்லித்தருவான்.

அக்காலத்தில் நடந்த சில விடயங்களை இரைமீட்கும்போது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

என்னோடு படித்த மலேசிய சீனப் பெண் என்னைத் திருமணமாகாதவன் என நினைத்து அடிக்கடி பல இடங்களுக்கு இழுப்பாள். மதியங்களில் என்னுடன் சுற்றித் திரிவாள். ஒரு நாள் பரிசோதனைச்சாலையில் மைக்கிரஸ்கோப்பை பார்த்துக்கொண்டிருந்தபோது சூடான மூச்சை என் முகத்தருகே படரவிட்டவாறு காதுக்குள் ” என்னைப்பிடிக்கிறதா ? ” என்றபோது என் இதயம் துடிப்பை நிறுத்தியது.
இரத்தம் முழுவதும் உடலை விட்டு வெளியேறியது மாதிரியான உணர்வுடன் ” திருமணமாகி இரண்டு பிள்ளைகள் ” என்றேன்.
“எங்கே உன் மோதிரம்..? ” என்றாள்.

” எனது மிருகவைத்தியத்தொழிலில் பல இடங்களில் கைவைப்பதால் மோதிரம் போடமுடியாது. அதுவே பழக்கமாகிவிட்டது.” எனச்சொன்னபோது அவளது தங்கமுகம் தாமிரமாகிப் போனது இன்னமும் நினைவில் உள்ளது.

பிற்காலத்தில் தொடர்ச்சியான நட்பைப் பேணினாள். அவளுக்கு என்மேலிருந்த விருப்பத்தைவிட அவுஸ்திரேலியாவில் நின்றுவிடவே விருப்பம் என்பதை அறிந்தேன்

நான் இருந்த வீட்டில் இருந்த போது சில சம்பவங்கள் சுவையானவை. நாங்கள் நான்குபேர் இருந்தது மாடிவீடு. அதற்கு முன்பாக ஒரு பெரிய மதுச்சாலையிருந்தது. மேல்தளத்தில் இருந்த நாங்கள் எல்லோரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். கீழே இருப்பவர்கள் ஆண்களும் பெண்களுமாக அவுஸ்திரேலியாவின் நாட்டுப்புறத்தில் இருந்து வந்தவர்கள். இதில் ஒரு இளைஞர் இருபது வயதுக்கு மேல் இராது. பார்ப்பதற்கு ஆண்களின் உடைக்கான மொடல் போல் இருப்பான். ஆறடிக்கு மேல் உயரமானவன். கருத்த தலைமயிர். ஒவ்வொருநாளும் “குட் டே” என்பான். எனக்கு “குடேயா” எனக் கேட்டது. அதனால் நான் அவனுக்கு குட்மோர்ணிங் சொல்வேன். அவனது “குட் டே ” யை புரிந்து கொள்வதற்கு எனக்கு பல நாட்கள் சென்றது. இருவரது பெயர்களையும் பிற்காலத்தில் பரிமாறிக்கொண்டோம். ஒருநாள் காலையில் எனது பெயருக்கு ஒரு கடிதம் கடந்தது. அதை எடுத்துப்படித்தபோது மதுச்சாலைக்கு மாலை ஆறுமணிக்கு வரும்படி எழுதப்பட்டிருந்தது. அதைப்பார்த்தபோது எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால், எனது நண்பர்களிடம் கேட்போது ‘நடேஸ் அவன்கள் “கே”. நீ அங்கே போகாதே.” என்றார்கள்.

ஓரினக்காரர்களின் கவர்ச்சிக்கு நான் ஆட்பட்டது அவமானமாக இருந்தது. பின்பு யோசித்தபோது . 34 வயதில் தனித்திருப்பதால் அப்படி எண்ணிவிட்டானோ என நினைத்தேன். பதின்ம வயதிற்கு மேல் தனித்திருந்தால் இப்படியான எண்ணங்கள் மற்றவர்கள் மனங்களில் வரும்போலும்! நமது ஊர்களில் தங்கைமார் திருமணத்திற்காக காத்திருப்பதோ, அல்லது குடும்பத்திற்காக இருப்பதாகவோ இங்கு எண்ணமாட்டார்கள்.

கோடைகாலத்தில் ஒரு நாள் பல்கலைக்கழகம் போகவில்லை. நான் மட்டுமே தனித்து மதியத்தில் வீட்டில் சாரம் அணிந்தவாறு படித்தபடி இருந்தேன். தொடர்ச்சியான படிப்பு போரடித்தபோது வீட்டின் பின்பகுதியில் கிடந்த வூமன் வீக்லி, பிளேபோய் எனப் பலதரப்பட்ட சஞ்சிகைகளில் ஒன்றை எடுத்துப் பார்ப்போம் எனப் பின்புறக்கதவைத் திறந்தபடி வந்தபோது வீசிய காற்றினால் பின்கதவு பூட்டிக்கொண்டது. மீண்டும் உள்ளே செல்ல முடியாமல் தயங்கி நின்றேன். அறை நண்பர்கள் வருவதற்கு குறைந்தது நான்கு மணிநேரமாவது காத்திருக்கவேண்டும். அல்லது கீழே சென்று மேல்மாடிக்கு குழாயைப் பிடித்தபடி ஏறவேண்டும். மேல்மாடிக்கு ஏறுவதற்கும் தயக்கம். உள்ளாடை அணியாத லுங்கியுடன் இருந்தேன். கீழ் வீட்டில் பல மாணவிகள் இருந்தார்கள் என்ன செய்வது..?

நமது ஊர்ப்பழக்கத்தில் சாரத்தை கொடுக்காக கட்டிப்பார்த்தேன். சிங்கப்பூரில் வாங்கிய வழவழப்பான சாரம் இடுப்பில் நிற்பதே கடினம். கொடுக்காக அது நிற்கவில்லை. கீழே காத்திருந்தபோது ஒரு பெண் வந்து பார்த்து “எப்படி..?” என சாதாரணமாகக்கேட்டாள். அவளுக்கு ஒன்றுமில்லை எனச் சொன்னேன்.
அவர்கள் வீட்டு யன்னல் அருகே மணிக்கணக்கில் நிற்கமுடியாது. என்னை வித்தியாசமாக நினைத்து விடுவாள். ஒரே வழி உண்மை பேசுவது. எனது நிலமையை அந்தப் பெண்ணிடம் சொன்னேன். சிரித்தபடி உள்ளே சென்று தனது பீச் சோர்ட்ஸைத் தந்தாள். அதை அணிந்தபடி மேலே ஏறினேன்.

அவள் கீழே நின்று நான் ஏறுவதைப்பார்த்தாள். நான் வெட்கத்துடன் ஏறி மேல் மாடியில் இருந்து நன்றி சொன்ன பின்பே அவள் அகன்றாள். அவளைப்பொறுத்தவரை நான் விழுந்தால் உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் இருக்கும். ஆனால், எனக்கு வெட்கம் மலைப்பாம்பாக உடலை வளைத்தது. அடுத்த நாள் அவள் தந்த பீச்சோர்ட்ஸை கவனமாக தோய்த்து காயவைத்து ஸ்திரிபோட்டு அவளுக்கு மீண்டும் கொடுத்தேன்.
அவள் அதனை நிச்சயமாக அணியமாட்டாள். ஆனால், நான் திருப்பிக்கொடுக்காமலிருக்க முடியுமா…?

அன்றிலிருந்து இன்றுவரை நான் வீட்டிலும் சாரம் அணிவதில்லை.
—-0—-

“மெல்பன் வருகை” அதற்கு 3 மறுமொழிகள்

  1. B.M.Murshideen ( " ILANENJAN" MURSHIDEEN) Avatar
    B.M.Murshideen ( ” ILANENJAN” MURSHIDEEN)

    Dr.Nadesan,This article is very informative and interesting to read.And i remember those days meeting you with y good friend Murugpoopathy.And i still remember Mr.Maavai Niththiyaananthan and Barathi Academy.Your writings are well balanced and realistic.All the best.

  2. Thanks for writing truth about war in Srilanka!
    Some people from both sides never learn their mistakes during the war! Never accept! Never listen!Never change,! But truth is like the Sun!
    We cannot hide it by our palm! Ignorance,idiotism arroganse,undemocratic thinking/actions made many millions to suffer! God punish them all soon!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: