அசோகமித்திரன் நினைவுகள்

தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.
முருகபூபதி

சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன் குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்ஷாவை காணும் குழந்தை,
” அப்பா ரிஷ்க்கா ” என்று சொல்கிறது.
உடனே தகப்பன், ” அது ரிஷ்க்கா இல்லையம்மா…. ரிக்ஷா” என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது.
தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார்.
” ரி… க்…ஷா…”
குழந்தையும் அவ்வாறே, ” ரி…க்…ஷா…” எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா” என்கிறது. தகப்பன் பொறுமையாக, மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தையின் உச்சரிப்பை திருத்தப்பார்க்கிறார்.
ஒவ்வொரு எழுத்தையும் அழகாக உச்சரிக்கும் குழந்தை, முடிவில் “ரிஷ்க்கா” என்றே சொல்கிறது. தகப்பன் எப்படியும் குழந்தை வாயிலிருந்து சரியான உச்சரிப்பு வந்துவிடவேண்டும் என்று நிதானமாக சகிப்புத்தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்கிறார்.
ஆனால், குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்க்கா என்றே தவறாக உச்சரிக்கிறது.
அப்பொழுது கடைத்தெருவுக்குச்சென்ற மனைவி திரும்பிவருகிறாள்.
சென்ற இடத்தில் நினைவு மறதியாக குடையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்கிறாள்.
” பரவாயில்லை, ஒரு ரிஷ்க்காவில் போய் எடுத்துவா…” என்கிறார் கணவன்.
மனைவி திடுக்கிட்டு, ” என்ன சொன்னீங்க…?” எனக்கேட்கிறாள்.
” ரிக்ஷாவில் போய் எடுத்துவா” எனச்சொன்னேன்.
” இல்லை… இல்லை… நீங்கள் வேறு என்னவோ சொன்னீர்கள்…!!!”
இத்துடன் இச்சிறுகதை முடிகிறது. இதனை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வாழ்விலே ஒரு முறை என்ற சிறுகதைத்தொகுப்பில் படித்திருக்கின்றேன். ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலில் ஆழ்ந்திருக்கும் படிமத்தை அதில் கண்டு வியந்தோம்.
சிறுகதை அரங்குகளில் அசோகமித்திரனின் கதைகளை வாசிப்பதும் நல்ல அனுபவம்.
அதனை எழுதிய அசோகமித்திரன் கடந்த வியாழக்கிழமை 22 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார்.
ரிக்ஷா என்ற அச்சிறுகதையிலிருந்த உருவ – உள்ளடக்க அமைதியைத்தான் நாம் அசோகமித்திரன் என்ற படைப்பாளியிடமும் அவதானித்தோம்.
தமிழகப்படைப்பாளிகளின் வரிசையில் அசோகமித்திரன் பற்றியும் எழுதவேண்டும் என்று பல மாதங்களாக நினைத்திருந்தும், அவரது மறைவுக்குப்பின்னரே அது சாத்தியமாகியிருப்பதையிட்டு ஆழ்ந்த துயரடைகின்றேன்.
பழகுவதற்கு இனிய இலக்கிய நண்பர். முதல் முதலில் யாழ். பல்கலைக்கழகத்தில் 1976 இல் நடந்த தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கில் அவர் கலந்துகொள்வதற்காக வருகைதந்திருந்த வேளையில் சந்தித்து உறவாடியிருக்கின்றேன். அதன்பின்னர் இரண்டு தடவைகள் சென்னையிலும் சந்தித்திருக்கின்றேன்.
பேராசிரியர் க. கைலாசபதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனமானதும் பல பயனுள்ள பணிகளை தொடங்கினார். தமிழ்நாட்டில் தமிழ் நாவல் நூற்றாண்டு பற்றிய சிந்தனை வருவதற்கு முன்பே அதனை நினைவுபடுத்தி இலங்கையில் ஆய்வரங்கை பல்கலைக்கழக மட்டத்தில் அன்று அவர் நடத்தினார்.
இந்நிகழ்வுக்குப் பேராசிரியர் தோதாத்திரியும் அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் தோதாத்திரி தவிர்க்க முடியாத காரணங்களினால் வரமுடியவில்லை. இவரது கட்டுரை ஆய்வரங்கில் வாசிக்கப்பட்டது.
அசோகமித்திரன் கட்டுரை வாசித்ததுடன், இலக்கியக்கலந்துரையாடல்களிலும் கலந்துகொண்டார். நூற்றாண்டு ஆய்வரங்கிற்கு முதல்நாள் யாழ்நகரில் செங்கை ஆழியானுக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்திற்கும் வருகை தந்து உரையாற்றினார்.
சோ. கிருஷ்ணராஜாவும் சிவநேசச்செல்வனும் அழைத்துவந்தனர். ஆய்வரங்கு மதிய உணவு இடைவேளை நேரத்தில், கைலாசபதியின் பிரத்தியேக அறையிலிருந்து இவரை மல்லிகைக்காக பேட்டி கண்டேன். நண்பர் நுஃமான், இவரை குரும்பசிட்டிக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு மூத்த இலக்கியவாதி இரசிகமணி கனகசெந்திநாதன் நீரிழிவு உபாதையால் நடக்கவும் முடியாமல் வீட்டில் முடங்கியிருந்தார். அவருக்கு அசோகமித்திரனை அறிமுகப்படுத்திவிட்டு வருமாறு கைலாசபதி தனது காரையும் கொடுத்து நுஃமானுடன் அனுப்பிவைத்தார்.
இத்தனைக்கும் கருத்து ரீதியாக கைலாசபதியும் கனகசெந்தியும் முரண்பட்டிருந்தவர்கள். சக இலக்கியவாதியை வெளிநாட்டு இலக்கிய விருந்தினர் சந்திக்கவேண்டும் என்ற பெருந்தன்மை கைலாஸிடமிருந்ததை அசோகமித்திரன் விதந்து பாராட்டினார்.
அதன்பின்னர் அசோகமித்திரன் கொழும்புக்கும் வந்து எழுத்தாளர்கள் சிலரைச்சந்தித்துவிட்டு விடைபெற்றார். 1984 இல் மீண்டும் இவரை சென்னையில் சந்தித்தேன்.
நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழின் காரியாலயத்தில் நண்பன் காவலூர் எஸ். ஜெகநாதன், சென்னையில் என்னை வரவேற்கும் ஒரு இலக்கியச்சந்திப்பை மூத்த இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன் தலைமையில் நடத்தியபோது அதில் கலந்துகொண்ட இலக்கிய ஆளுமைகளில் அசோகமித்திரனும் ஒருவர். அந்தச் சந்திப்பு மனதில் பசுமையானது.
ஈழத்து எழுத்தாளர்கள், மு. கனகராசன், கணபதி கணேசன், சுந்தா சுந்தரலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், நவம் ( தெணியானின் தம்பி) தமிழகப் படைப்பாளிகள் சிட்டி, ஜெயந்தன், ராஜம் கிருஷ்ணன், சா. கந்தசாமி, தொ.மு. சி. ரகுநாதன், தீபம் திருமலை ஆகியோரும் கலந்துகொண்ட மறக்கமுடியாத சந்திப்பு. இவர்களில் சிலர் இன்று நினைவுகளாகிவிட்டனர்.
அவர்களின் வரிசையில் இன்று அசோகமித்திரனும் எமது நினைவுகளில் இணைந்துவிட்டார்.
அந்தப்பயணத்தில் சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் அசோகமித்திரனுக்காக நடந்த இலக்கியக்கூட்டத்திலும் கலந்துகொண்டேன்.
அதிலும் அசோகமித்திரனின் ரிக்ஷா சிறுகதை பற்றியே ஒருவர் விதந்து உரையாற்றினார். தீபம் காரியாலயத்தில் நடந்த சந்திப்பில் 1983 இலங்கை இனக்கலவரம் பற்றியும் நாம் உரையாட நேர்ந்தது.
அசோகமித்திரன், தமது இலங்கைப்பயணத்தில் சந்தித்த ஒவ்வொரு எழுத்தாளரின் பெயரையும் சொல்லி அவர்களின் நிலைமையைக்கேட்டு அறிந்தார். தமிழகத்துக்கு வரும் ஈழ அகதிகளை தமிழக அரசு மட்டுமல்ல, இங்கிருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்களும் அரவணைக்கவேண்டும் என்று மனிதநேயத்துடன் அன்றைய தினம் பேசினார்.
அதிர்ந்தே பேசமாட்டார். அவர் பேசினால் நாம்தான் கூர்ந்து கேட்கவேண்டும். அவரது பேச்சைப்போன்றதே அவரது எழுத்தும். அங்கு பதற்றமான உணர்வெழுச்சிகளை காணமுடியாது. ஆழ்ந்த அமைதிதான் இருக்கும். அதனால் தலைமுறைகள் கடந்தும் வாசிக்கப்பட்டார்.
தனது 25 வயதில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கி, ஆறுதசாப்தங்களும் கடந்து அயராமல் எழுதிக்கொண்டிருந்தவர். சென்னையில் அன்று பிரபல்யமாக இருந்த ஜெமினி ஸ்ரூடியோவில் ஒரு சாதாரண வேலை இவருக்கு தரப்பட்டிருந்தது. அதற்குப்பெயர் பொதுமக்கள் தொடர்பாளர். நடிப்பதற்கு சான்ஸ் கேட்டுவருபவர்களின் விபரங்களை கேட்டுப்பெறுவது முதல், இதர இலாகாக்களில் இருப்பவர்கள் சொல்லும் வேலைகளையும் கவனிப்பது. தமது ஜெமினி ஸ்ரூடியோ வாழ்க்கை அனுபவங்களையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.

ஜெமினியிலிருந்து விலகியதும் முழுநேர எழுத்தே அவரது தொழிலாகியது.
ஒருவர் முழுநேர எழுத்தாளராக எமது தமிழ்ச்சமூகத்தில் வாழ்வது மிகப்பெரிய கொடுமை. கசப்பான அனுபவங்களே புத்திக்கொள்முதலாகும். அந்தக்கொடுமைகளையெல்லாம் அநாயசமாகக் கடந்து வந்திருப்பவர் அசோகமித்திரன். ஆயினும் வாழ்வில் தான் பட்ட கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி அனுதாபம் தேடிக்கொண்டவரல்ல.
தியாகராஜன் என்ற தமது இயற்பெயரை எழுத்துலகத்திற்காக அசோகமித்திரன் என மாற்றிக்கொண்டு, நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், பத்தி எழுத்துக்கள், கலை, இலக்கிய, திரைப்பட விமர்சனங்கள் எழுதியவர்.
இந்தியத் தேசிய சாகித்திய அக்கடமி விருது, இலக்கியச்சிந்தனை விருது உட்பட பல இலக்கிய விருதுகளைப்பெற்றிருக்கும் அசோகமித்திரன், கணையாழி இதழின் ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது படைப்புகள் இந்திய – ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலும் சில நூல்களை வரவாக்கி, நிறைய மொழிபெயர்ப்புகளும் செய்திருப்பவர்.
பல வருடங்களுக்கு முன்னர் சுபமங்களா இதழுக்காக இவரை பேட்டி கண்டிருக்கும் பரீக்ஷா ஞாநி, ஒரு சந்தர்ப்பத்தில் சுஜாதா எழுதிய பிக்னிக் என்ற கதையை தொலைக்காட்சி நாடகமாக இயக்கினார்.
ஒரு சினிமா நடிகையின் குழந்தையை ஒரு கார்க் கராஜில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் அழைத்துக்கொண்டு பிக்னிக் சென்றுவிடுவார்கள். இறுதியில் பல சோகமான சுவாரஸ்யங்களுடன் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனையாக சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அந்தச்சிறுவர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள். நடிகையோ தனது பணத்தாலும் செல்வாக்கினாலும் தனது கௌரவம் கருதி குழந்தையை நீதிமன்றப்பக்கம் அனுப்பமாட்டாள்.
அந்தச்சிறுவர்களின் நலன்களுக்காக ஒரு தன்னார்வ தொண்டர் நீதிமன்றில் தோன்றுவார். அந்தத்தொண்டராக நடித்திருப்பவர் அசோகமித்திரன்.
அந்த நடிப்பிலும் அவருக்கே உரித்தான அதிர்ந்து பேசாத இயல்புதான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சமகாலத்து உணர்ச்சி கொந்தளிக்கும் தொலைக்காட்சி நாடகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது அந்த பிக்னிக்.
பின்னர் அதே கதை ரோஜா, பிரபுதேவா நடித்து திரைப்படமாகவும் வெளியானது. ஆனால், அதில் அசோகமித்திரன் நடிக்கவில்லை. திரைப்படத்தை விட அதற்கு முன்னர் வெளியான பிக்னிக் தொலைக்காட்சி நாடகம் சிறப்பாக இருந்தது.
எழுத்தில் மட்டுமல்ல அசோகமித்திரன் ஈடுபட்ட வேறு துறைகளிலும் நீடித்திருந்த அவரது ஆழ்ந்த அமைதியே அவரது பேராளுமையாகும்.
அந்த ஆழ்ந்த அமைதியான எழுத்திலும் கூர்மையான அங்கதம் இழையோடும். வாழ்விலே ஒரு முறை தொகுப்பின் கதைகள், தண்ணீர், 18 ஆவது அட்சகக்கோடு, விடுதலை, முதலானவற்றில் அந்தத்தன்மைகளைக் காணலாம்.
ஒற்றன் என்ற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் சிறந்த நாவல் வரிசையில் குறிப்பிட்டிருப்பார். ஆனால், ஒற்றன் அசோகமித்திரனின் வழக்கமான பாணியிலமைந்த கதையல்ல.
ஜெயமோகன், கமல்ஹாசன் உட்பட பலரும் இவரை பெரிதும் மதித்து பேசியும் எழுதியும் வந்திருக்கின்றனர். ஒருதடவை கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலன் என்ற சாதாரண குறிப்பிடத்தகுதியற்ற படத்துக்கு அசோகமித்திரன் விமர்சனம் எழுதினார்.
இதற்குப்போய் இவர் ஏன் எழுதினார்…? என்று படித்துப்பார்த்தால், அதிலும் ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையில் நீடிக்கும் உணர்வுபூர்வமான உறவை அங்கதமாகவே சொல்லியிருப்பார்.
தமிழ் சினிமா உலகைப்பற்றியும் அனைத்துலக சினிமா பற்றியும் தேர்ந்த ரசனை இவருக்கிருந்தமையால், அவற்றின் பாதிப்பு இவருடைய கதைகள் சிலவற்றில் இருந்தது. திரையுலக மாந்தர்களின் உணர்வுகளை சித்திரிக்கையிலும் அங்கு நாம் அதிர்வுகளையல்ல ஆழ்ந்த அமைதியையே தரிசித்தோம்.
அசோகமித்திரன் பற்றி ஜெயமோகன் குறிப்பிடும்பொழுது எழுதியிருக்கும் பின்வரும் வரிகளிலிருந்து நாம் படைப்பாளியின் ஆளுமை எத்தகையது என்பதை புரிந்துகொள்கின்றோம்.
” எழுதுபவனின் ஆளுமை மிகச்சிக்கலான ஒன்று. அவனுடைய அன்றாட வாழ்க்கையில் அவனுடைய எழுத்தாளுமை செல்லுபடியாவதில்லை. விற்கமுடியாத வைரங்களை வைத்திருக்கும் ஏழை போன்றவன் அவன். ஆகவே அவன் அன்றாட வாழ்க்கைக்காக ஒரு ஆளுமையை உருவாக்கி வைத்திருப்பான்.”
சில படைப்பாளிகளின் கதைகளை ஒரு காலகட்டத்திற்குப்பின்னர் படிக்க முடியாது. கால மாற்றங்கள் ரசனையிலும் மாற்றங்களைத்தந்துவிடும்.
ஆனால், அசோகமித்திரனின் படைப்புகள், வெவ்வேறு காலகட்டத்தையும் சேர்ந்த எந்தத்தலைமுறையும் படிக்கத்தக்கதாக காலத்தையும் கடந்து வாழும் தன்மையைக்கொண்டிருக்கின்றன.
அதனால்தான் 1950 இற்குப்பின்னர் பிறந்த வாசகரும், 1980 இற்குப்பின்னர் பிறந்த வாசகரும் அசோகமித்திரனை விரும்பிப்படிக்கின்றனர். அவர் படைத்த நடுத்தரவர்க்கத்து மனிதர்களில் நாமும் இருக்கின்றோம். அவரும் இருக்கின்றார்.
தொடர்ந்தும் வாசிக்கப்படும் அசோகமித்திரனுக்கு எமது நெஞ்சார்ந்த ஆழ்ந்த அஞ்சலி.

“அசோகமித்திரன் நினைவுகள்” மீது ஒரு மறுமொழி

  1. ONE THE GREAT WRITERS OF TAMILNAADU! UNFORGETTABLE ASOKAMITHRAN ! THANKS FOR REMEMBERING HIM!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: