பார்த்தோம், ரசித்தோம், புசித்தோம்

காலச்சுவடு நாட்காட்டி “அடிசில்” பேசும் நளபாகத்தில் இலக்கிய ஆளுமைகளின் அர்த்தமுள்ள வரிகள்

Murugapoopathy

முருகபூபதி

” ஒரு காலைக்காட்சி. வெள்ளைச்சட்டையில், இரட்டைப்பின்னல் போட்ட இரண்டாம் வகுப்பு மாணவி நான். சைக்கிள் மிதித்து விரைகிறேன். வேம்பும் வாகையும் பனையும் நிழல்தர, மா, பலா, வாழை, தென்னை, கனிகள் நிறைந்து செழித்த ஊர் அது. பாடசாலை போகும் பாதை. ஒவ்வொரு வீட்டைக்கடக்கும்போதும் காற்றில் ஒவ்வொரு வாசம்.

ஒருவீட்டில், தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பிழிந்துவிடும் வாசம். – அது ‘பாற்சொதி’. இன்னொரு வீட்டில், செத்தல் மிளகாய் பொரிக்கும் வாசம் – அது ‘ இடித்த சம்பல்’. அடுத்தவீட்டில் நல்லெண்ணெய் கல்லில் முறுகும் வாசம். – அது தாளித்த ‘ மஞ்சள் தேசை’. எதிர்வீட்டில், இடித்து வறுத்த சிவப்பு அரிசிமா தேங்காய்ப் பூவுடன் மூங்கில் குழலில் அவியும் வாசம். – அது ‘புட்டு’. எனக்குப்பிடித்த உணவு. ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள தென்னோலைகளால் வேய்ந்த வீட்டில், சின்னவெங்காயமும் பச்சை மிளகாயும் வதங்கும் வாசம் – அது ‘ முட்டைப்பொரியல்’. வளைவில் திரும்பினால், செழித்த பழத்தை இரும்புக்கத்தி அறுக்கும் வாசம் – அது ‘ கறுத்தக்கொழும்பான்’ மாம்பழம்.

ஒவ்வொரு வீட்டின் அடுப்படிக்குள்ளும் எட்டிப்பார்க்காமலேயே அந்த வாசத்தை நுகர்ந்து, மென்று, சுவைத்து மனதுக்குள் சொல்லிப்பார்ப்பேன். அது அத்தனை நேசித்த ஒரு விளையாட்டு. உணவுக்கும் வாசனைக்குமான எனது பயணம் இங்குதான் தொடங்கிற்று. ஒரு வாசம் நூறு நினைவுகளுக்குள் இழுத்துச்செல்லும். அந்த நினைவுகள் ஒரு காலத்தின் முடிச்சுகளாக உறைந்து கிடக்கும். ஒரு நொடி போதும், அவை மெல்ல உருகி அவிழ”

மேற்சொன்ன வரிகளை படிக்கும் வாசகர்களுக்கு, தமது இளமைக்காலம் நினைவுக்கு வரலாம். அதில் ” ஒரு வாசம் நூறு நினைவுகளுக்குள் இழுத்துச்செல்லும்” என்ற வரி ஒவ்வொருவர் வாழ்வின் அந்தரங்கத்தையும் பேசும்.

இவ்வாறு ஒரு சிறுமியின் காலைக்காட்சியின் சித்திரிப்பை அதில் ஆழ்ந்திருக்கும் உணவு மீதான ருசியின் ரசனையை படித்து பரவசமைடைந்தது ஒரு நூலிலிருந்து அல்ல.

வழக்கமாக வீடுகளில் தொங்கும் தமிழ் நாட்காட்டிகளில் விடுமுறை – பண்டிகை தினங்கள், சமயங்களின் விசேட உற்சவதினங்கள்தான் பதிவாகியிருக்கும். புதியவருடம் பிறந்துவிட்டால் பழைய வருடத்தின் கலண்டர் (நாட்காட்டி) அகற்றப்பட்டு, அவ்விடத்தில் புதியது தோன்றிவிடும்.

ஆனால், மலர்ந்துள்ள 2017 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காலச்சுவடு வெளியிட்டுள்ள நாட்காட்டி முற்றிலும் வித்தியாசமான உள்ளடகத்துடன் உணவு நாகரீகத்தையும் தமிழர்தம் பண்பாட்டுக்கோலங்களையும் விருந்தோம்பலின் தாற்பரியத்தையும் அழகுறச் சித்திரித்துள்ளது.

அதன் முகப்பில்தான், பிரசாந்தி சேகரம் என்ற ஒரு தமிழ்ச்சிறுமி ரசித்த காலைக்காட்சியின் சித்திரிப்பில், எம்மவர்களின் கிராமத்து வீடுகளிலிருந்து பரவும் உணவு வாசனைகளின் சிறப்பம்சம் இயல்பாக பதிவாகியிருக்கிறது.

நூற்றுக்கணக்கான தமிழ் நூல்களை வரவாக்கியிருக்கும் காலச்சுவடு பதிப்பகத்தின் முற்றிலும் வித்தியாசமான பயனுள்ள வெளியீடாக வந்திருக்கும் ‘ அடிசில்’ என்னும் நாட்காட்டியை அண்மையில்தான் பார்க்க நேர்ந்தது.

தினமும் காலை எழுந்ததும், வீட்டின் சுவரில் தொங்கும் நாட்காட்டியைப் பார்த்து, அன்றைய நாளின் பணிகளை திட்டமிடுவோம். முக்கியமான திகதிகள் நினைவிலிருந்து தப்பிவிடாதிருக்க அதில் பேனையால் குறித்தும் வைப்போம்.

ஆனால், காலச்சுவடு வெளியிட்டிருக்கும் அடிசில் நாட்காட்டியானது கையில் எடுத்து விரித்து படிக்கவும், ரசிக்கவும், அதில் சொல்லப்பட்டிருப்பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், அதில் பதிவாகியிருக்கும் சமையல் குறிப்புகளின் பிரகாரம் செய்துபார்த்து வீட்டில் பகிர்ந்துண்ணவும்தான் தூண்டுகிறது.

ஆக்க இலக்கியம் படித்தோம். அடிசில் இலக்கியம் படிக்கவேண்டுமா…? காலச்சுவடு வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை பாருங்கள்.

சங்க இலக்கியம் முதல் நவீன தமிழ் இலக்கியம் வரையில் இந்த அடிசில் இலக்கியம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதையும் இந்நாட்காட்டி நினைவுபடுத்துகிறது.

நளவெண்பாவின் நாயகன் நளன் சமையலில் தேர்ச்சிபெற்றவனாகவும் இருந்தமையால்தான், நளபாகம் என்ற பதம் எம்மவர் பேசுபொருளாகிவிட்டது. மூத்த எழுத்தாளர் தி. ஜானகிராமன் நளபாகம் என்ற நாவலையும் எழுதியிருக்கிறார்.

அதற்கு சென்னை இலக்கியச்சிந்தனை அறக்கட்டளை 1984 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த நாவல் என்ற தகுதியும் தந்து பரிசும் வழங்கியது.

இந்த அடிசில் நாட்காட்டியிலும் அவரது எழுத்துக்களை பார்க்கமுடிகிறது. ஆனால், இது அவரது நளபாகம் நாவலிலிருந்து அல்ல, மற்றும் ஒரு பிரசித்தி பெற்ற மோகமுள் நாவலிலிருந்து பதிவாகியிருக்கிறது.

” நீர் கொட்டின சோறு கடுப்பும் மணமுமாக மூக்கையிழுத்தது. ‘ மோர் வேண்டாம் பாட்டி, நீர்கொட்டின சாதத்திற்கு. அதுவும் புழுங்கலரிசிச்சோறுக்கு, ஒரு கடுப்பும் மணமும் உண்டு. மோரைப்போட்டால் அந்த மணத்தை அடிச்சிண்டு போயிடும்” என்றான் பாபு. நீர்கொட்டின சோற்றைச் சாப்பிட்டு வாழும் முறையைக்கூட ரசிகத்தன்மையோடு வகுத்துக்கொண்டவன்தான் அவன்.” (மோகமுள் – தி. ஜானகிராமன்)

நீர்கொட்டின சோறு எங்கள் ஊரில் பழஞ்சோறு. அதில் நறுக்கிய வெங்காயமும் உப்பும் கலந்து நீராகாரம் அருந்திய காலம் நினைவுக்கு வருகிறது.

முகப்புடன் சேர்த்து 13 பக்கங்களில் வந்துள்ள இந்த நாட்காட்டியில் லா. ச. ராமாமிருதம், தி.ஜானகிராமன், நாஞ்சில் நாடன், செங்கை ஆழியான், பெருமாள் முருகன், பிரபஞ்சன், அம்பை, தஞ்சை பிராகாஷ், கி. ராஜநாராயணன், சுப்பிரபாரதி மணியன், ஜெ. பிரான்சிஸ் கிருபா ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து சில வரிகள் இடம்பெற்றுள்ளன.

குறிஞ்சிப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை, சீவகசிந்தாமணி, திருக்குறள், புறநானூறு, தொல்காப்பியம், மணிமேகலை, முக்கூடற்பள்ளு முதலானவற்றிலிருந்து எடுத்தாளப்பட்ட வரிகளினாலும் இந்த நாட்காட்டி முற்றிலும் வித்தியாசமான பெருமையையும் பெறுகின்றது. வாசிப்பு அனுபவத்தையும் தருகின்றது.

உலகநாடுகளில் வெளியாகும் பன்மொழிப்பத்திரிகைகளிலும் சமையல் குறிப்புகளை பார்க்கின்றோம். சமையல் குறிப்புகளுக்காகவே பிரத்தியேகமான இதழ்கள் வெளியாகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இந்த நளபாகம் தவறாமல் தினமும் வருகிறது. இதுதொடர்பான போட்டி நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. குறித்த நேரத்தில் அதனை ரசிப்பதற்கென்றே பெருங்கூட்டம் நேரம் ஒதுக்கிவிடும்.

பாடசாலைகளில் சமையல் கலைக்கென்றே பாடநெறிகளும் வகுப்புகளும் இருக்கின்றன. போதித்து பயிற்றுவிப்பவர்களை Home Science Teacher என அழைக்கின்றோம்.

இதனால் சமையல் கலையும் எமது வாழ்வுடன் ஒன்றித்திருக்கிறது.

உலகநாடுகளில் எந்தத்தொழிற்சாலையும் ஏதோ ஒரு காரணத்தால் மூடப்படும். ஆனால், உணவு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் சுகாதாரக்கரணங்கள் தவிர்த்து மூடப்படமாட்டாது.

இந்தப்பின்னணிகளுடன் காலச்சுவடு வெளியிட்டிருக்கும் 2017 ஆம் ஆண்டிற்கான அடிசில் நாட்காட்டி எமக்கு அறிமுகமாகியிருக்கிறது.

தமிழர்களுக்கு தைமாதம் முக்கியமானது. தமிழர்களின் வருடப்பிறப்பு அதுதான் என்ற வாதமும் சமகாலத்தில் பேசுபொருள். அடிசில் நாட்காட்டியில் முதல் மாதம் ஜனவரிக்குரிய பக்கத்தில் சக்கரைப்பொங்கல் பற்றிய குறிப்பு வருகிறது. அதன் பக்குவம் பற்றிக்கூறி, ” சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்ற குறளையும் பதிவுசெய்திருக்கிறார்கள்.

“பல தொழில்கள் இருந்தாலும் உழவுத்தொழிலிலேயே உலகம் பெரிதும் தங்கியிருக்கிறது.”- என்ற ஆழமான கருத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சொல்லிவிட்டார்.

விருந்தோம்பல் என்ற அதிகாரமும் அவர் எமக்களித்த குறளில் இடம்பெறுகிறது.

இலங்கைத்தமிழர்களின் உணவு நாகரீகத்தில் முக்கிய இடம்வகிக்கும் ஒடியல் கூழ் பற்றிய குறிப்பு ஜூன் மாதத்திற்கான பக்கத்தில் வருகிறது.

” ஞாயிறு வந்தால் போதும். ஆச்சி கூழ் காச்சுவதற்கான ஆயத்தங்களில் இறங்கிவிடுவாள். வழக்கமாகக் கூழ் காச்சும் குண்டான் பானை கழுவித் துப்பரவாகி அடுக்களைக்குள் வந்துவிடும். ஆச்சிக்கு இறால் அதிகமாகக் கூழில் இருக்கவேண்டும். திரிக்கை மீன் பட்டும் படாமலும். பலா இலைகளில்தான் கூழைக் குடிக்கவேண்டும். பலா இலையின் பால் சூட்டில் அவிந்தால்தான் கூழ் சுவைக்கும் என்பது ஆச்சியின் நம்பிக்கை” – செங்கைஆழியான்.

” சூடான கூழை ஊதி ஊதி மூக்கை உறிஞ்சிக்குடிக்க, தேகம் வேர்க்கும். அது வியர்வை அல்ல. வாழ்வின் ஈரம்.” எனச்சொல்லப்படுகிறது.

அத்துடன், ” உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” என்ற புறநானூறு வரியும் பதிவாகிறது.

இவ்வாறு இலக்கியநயத்துடனும் கலைத்துவமாகவும் பொருத்தமான ஓவியங்களுடன் வெளியாகியிருக்கும் அடிசில் நாட்காட்டியை வெளியிடும் எண்ணம் காலச்சுவடு பதிப்பகத்திற்கு வந்திருப்பதும் முன்மாதிரியானதுதான்.

அபூர்வமான நற் சிந்தனைகள் ஆக்கபூர்வமான வெளிப்பாட்டுக்கு துணைநிற்கும். அதனால் இத்தகைய கலைநேர்த்தி கொண்ட வெளியீடுகள் சாத்தியமாகின்றன. இதற்காக பின்னணியில் நின்று உழைத்தவர்களின் பெயர்ப்பட்டியலையும் இந்த நாட்காட்டியில் காணமுடிகிறது.

இலங்கையிலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலுமிருந்து சிலர் ஆலோசனைகள் வழங்கியிருப்பதனால் கூட்டுமுயற்சியின் வெளிப்பாடாகவும் அடிசில் அமைந்துள்ளது.

ஈழத்தவர்களுக்கும் தமிழகத்தவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கும் அடிசில் நாட்காட்டி புதிய அனுபவத்தையே தருகின்றது.

சமகாலத்தில் Fast Food யுகத்தில் வாழும் நாம், அவற்றின் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்தும் தெரியாமலேயே விரைவு வாழ்க்கைக்கு பலியாகியிருக்கின்றோம். எம்முன்னோர்கள் எமக்களித்த உணவு நாகரீகம் எத்தகையது என்பதையும் அடிசில் நாட்காட்டி இலக்கிய நயத்துடன் சித்திரித்திருக்கிறது.

குறிப்பு:

அவுஸ்திரேலியாவில், அடிசில் நாட்காட்டியை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அறிமுகப்படுத்துகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக பெண்கள் தின விழாவில் அடிசில் நாட்காட்டியை பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு: மின்னஞ்சல்: atlas25012016@gmail.com

“பார்த்தோம், ரசித்தோம், புசித்தோம்” மீது ஒரு மறுமொழி

  1. World Tamils need New IDEAS & NEW ACTIONS TO SURVIVE & ENJOY LIFE!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.