கதைகதையாம் காரணமாம்.9. / சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை.


அ.ராமசாமி

வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப்படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்துவிட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான். கைக்குள் இருப்பதாக நினைத்தால் மூன்று தடவை ஆள்காட்டிவிரலால் மணலைக்கோரி எடுக்கும்போது திரி வெளியே வந்துவிட்டாலும் வெற்றிதான். அப்படி வராவிட்டால் தேடியவருக்குத் தோல்வி. வைத்தவருக்கு வெற்றி. அப்படி விளையாடும்போது எங்கள் ஊரில் “தில்லி தில்லி பொம்மக்கா” சொல்லிக்கொண்டே வைப்பார்கள்; எடுப்பார்கள். பெண்கள் இருவர் விளையாடும் இந்த விளையாட்டைச் சில நேரங்களில் பெண்களும் ஆண்களும் சேர்ந்தே விளையாடுவார்கள். மூடியிருக்கும் எதிர்பாலினரின் கையை நோண்டிவதற்கான வாய்ப்பாகப் பயன்படும் விளையாட்டு அது. திரியைக் கண்டுபிடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியோடு, எதிராளியின் கையைச் சீண்டுவதிலும் கிடைக்கும்.

இலக்கிய வாசிப்புகூட அப்படியொரு விளையாட்டுதான். எழுதுகிறவன் மறைத்துவைக்கும் விவாதப்பொருள் அல்லது மையக்கரு என்னும் திரியைத் தேடும் பயணமே வாசிப்பு. எழுத்தாளரின் மறைபொருளைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் விட்டுச் செல்லும் சிலசொற்களைப் பிடித்துப் பயணம் செய்யும்போது எதிர்பாலினரின் கைகளை வருடிய மகிழ்ச்சி கிடைக்கும். அதை அனுபவித்து வாசிப்பதில் தான் வாசிப்பின் சுவாரசியம் கூடும். அப்படி வாசிப்பதற்கானக் குறியீடுகளை – சொல்முறையை -சொற்களை உள்வைத்து எழுதுவதில் தான் எழுத்தின் சுவாரசியமும் இருக்கிறது. எழுதுகிறவர்களுக்கு சுவாரசியமூட்டும் நோக்கமில்லையென்றால், வாசிப்பவர்கள் எப்படி சுவாரசியத்தோடு வாசிப்பார்கள்?

2015 அக்டோபர், அம்ருதாவில் வந்துள்ள இந்தக்கதை வாசிப்பு சுவாரசியத்தைச் சுட்டுச்சொற்களாக வைத்து நகர்த்துகிறது. சுட்டுச் சொற்கள் பற்றிப் பேசுவதற்கு முன்புக் கதையைப் பற்றிக் கொஞ்சம். கதையின் தலைப்புமீண்டும் ஓர் ஆதாம் – எழுதியவரின் பெயர் நடேசன்; ஆண். ஆதி ஆணாக நம்பப்படும் ஆதாமின் பெயர் இருப்பதால், அவனது ஆதிப்பிரச்னையான காமத்தைப் பேசப்போகிறது என்பது புரிந்தது. ஆணின் இச்சைக்குத் தேவை ஓர் பெண் தானே? அப்படியானால் தலைப்பில் ஏவாள் அல்லவா? இருக்கவேண்டுமென்ற சந்தேகமும் தோன்றியது. ஆண்கள் பெண் துணைதேடி அலையும் – அலைக்கழிக்கப்படும் ஆயிரத்துச் சொச்சம் கதைகளில் இதுவும் ஒன்று என்றுதோன்றுவதைத் தடுத்தது மாற்றிப் போட்ட இந்தத் தலைப்பு. இது ஆணை மோகிக்கும் கதையாக இருக்குமோ என்ற ஆவல் தோன்ற கதை வாசிப்பு தொடங்கியது.

தலைப்பு உண்டாக்கிய யூகத்தைத் தலைகீழாக்கிவிட்டது கதையின் ஆரம்பம். இப்படி ஆரம்பிக்கிறது. அதோடு அடுத்த பத்தியின் முதல் வாக்கியத்தையும் வாசித்துக் கொள்ளுங்கள்:

வீதியில் காத்திருப்பது அவனுக்குக் கடினமாக இருந்தது. நாற்பது வயதைக் கடந்துவிட்ட பின்பு நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காகக் கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி? வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும் சந்தித்த சீனத்து இளம்பெண்ணொருத்திக்காகக் காத்திருப்பது அந்தரமான குற்ற உணர்வைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது.

அவனது மனதில் ஒரு திகில் உணர்வு தொடராக நீண்டது

முதல் பாரா தெளிவாகச் சொல்லிவிட்டது. ஓர் ஆண், ஆணை மோகிக்கும் குதர்க்கமான கதையெல்லாம் இல்லை; பெண்ணை நாடும் வழக்கமான சங்கதி தொடர்பான கதையே இது என்பதை. இந்தப் பகுதியில் இடம் பெறும் சுட்டுச்சொற்கள் ”அவன். ஒரேயொருமுறை”

அவன் எனச் சுட்டப்படும் நாற்பது வயதுக்காரனான இரஞ்சன் காத்திருந்தது சீனத்து இளம்பெண்ணுக்காக என்ற தகவலைத் தரும் இந்தப்பத்தி ‘ காமம்’ சார்ந்த மையமே இந்தக் கதை என்பதையும், அவனின் குற்றவுணர்வு என்பதால் ஆணின் சிக்கலைப் பேசப்போகிறது எனவும் புரிந்துகொண்டு படிக்கலாம் என்றால் தலைப்பு, அதற்கெதிராக நின்று “ மீண்டு ஓர் ஆதாம்” என்கிறது. தலைப்பும் கதையின் தொடக்கமும் முரண்படும் நிலையில் வாசிப்பவர்கள் கொஞ்சம் திகைத்து நிற்க வாய்ப்பு உண்டு. அந்தத் திகைப்பே தொடர்வாசிப்பை விரைவுபடுத்தவும் செய்யும். அதற்கு உதவுவதாக முதல் பத்திக்கு அடுத்த பத்தியின் முதல் வாக்கியம் அமைந்துள்ளது. திரும்பவும் அந்த வாக்கியம்:

“அவனது மனதில் ஒரு திகில் உணர்வு தொடராக நீண்டது”

காமம் சார்ந்த ஒன்றாக இருந்தால் திகில் உண்டாகியிருக்கவேண்டியதில்லை. அதற்குப் பதிலாக ஓர் ஆவல் அல்லது தவிப்பு ஏற்படலாம். அந்த உணர்வைக் ’குறுகுறுப்பு’ என்ற தற்காலச் சொல்லாலோ, ‘மருட்கை’ என்ற பழைய சொல்லாலோ எழுதியிருக்கலாம். ஆனால் கதைசொல்லி ‘திகில்’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறான்.

திகில் என்ற சொல் எப்போதும் மர்மங்களோடு தொடர்புடைய சொல். அதிலும் கொலை அல்லது ஆவி போன்றவற்றோடு தொடர்புடைய சொல். அப்படியானால் வரப்போகிறவள் இளம்பெண்ணா? இளம்பெண் வடிவத்தில் இருக்கக்கூடிய ஆவியா? இப்படியொரு ஆவலைத்தூண்டிவிடுகிறது அந்தச் சொல். காத்திருந்தவனுக்கு நேர்ந்தது என்ன? அல்லது திகிலின் முடிவுதான் என்ன?

என்னைக்குத்திய பச்சை முகமூடி மனிதன் யாராக இருந்தாலும் அதற்குப் பின்பாக இருந்தது அன்று நடந்த சம்பவமே. குத்தியது யார் என்று தெரியாவிட்டாலும், அதற்குக்காரணம் எனது நண்பன். இல்லை. மாஜி நண்பன். பாட்ரிக் வொங் என்பது நிச்சயம்.

கதையின் அடுத்த நிகழ்வின் கடைசிப்பத்தி இது. காமம் சார்ந்த கதையைத் திகில் கதையாக மாற்றிவிட்டது இந்தப் பகுதியில் இருக்கும் சுட்டால். சுட்டு “ அன்று நடந்த சம்பவம்” என்ற சொற்றொடர்.

எனது மனைவியுடன் அவள் மேல்மாடியிலிருந்து பேசிவிட்டு வரும்போது எதேச்சையாக அவளை மாடிப்படிகளில் சந்தித்தேன். சாதாரணமாக ஹலோ என்றதும், அந்த மாடிப்படியின் கைப்பிடியில் பிடித்தபடி உடலின் முழுப்பாரத்தையும் என்னில் பதித்து முத்தமிட்டாள். அப்பொழுது உதட்டுடன் பற்களையும் சேர்த்து கவ்விக்கொண்டாள். எனது உடலில் மலைப்பாம்பின் இறுக்கம் தெரிந்தது.

நடந்த சம்பவம் முத்தமிட்டதும் கவ்விக்கொண்டதும். நடந்த இடம் மாடிப்படி. அது தெரிந்துகொண்ட பின்னும் நட்பு பாராட்டினான் பாட்ரிக் வொங். முத்தமிட்டவளின் – சூசனின் – கணவன். அவனே குத்திக் கொலைசெய்ய முயன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்தாலும் உறுதியானதில்லை அந்தச் சந்தேகம். உறுதியாக இல்லாமல் போனதற்கும் ஒரு காரணம் இருந்தது. தன் மனைவியைக் கவ்வி முத்தமிட்டவனைக் குத்திக் கொலைசெய்ய முயன்றிருப்பான் பாட்ரிக் என்ற சந்தேகத்திற்கும் அப்பால் இன்னொரு ரகசியத்தை நினைவிலி மனம் எழுப்பிவிவரிக்கிறது. நினைவிலி மனத்தின் ஓட்டங்களுக்குள் திகிலையும் தாண்டி ஒரு ரகசியம் இருக்கிறது. அந்த ரகசியத்தை விவரிக்கும் பகுதி கதையைத் திரும்பவும் வேறொரு பக்கம் திருப்புகிறது. அந்தத் திசைமாற்றத்திற்குள் இன்னொரு பெண் வருகிறாள். அவள் பெயர்லின்

சில நாட்களுக்குப் பின் பட்ரிக் ஒருநாள் கேட்டான்: உன்னைச் சூசன் முத்தமிட்டாளா..

‘இல்லை’ என மறுத்தேன். சிரித்தபடி.

’கவனமாக இரு. சூசன் வித்தியாசமான பெண்’ என்றான் பட்ரிக்

தன் மனைவி யாரொருவரையாவது முத்தமிட்டாள் அதன் நோக்கம் காமத்தின் தாகமல்ல; அதையும் தாண்டியது என்ற குறைப்புத் தரும் எச்சரிக்கைக் குறிப்பைத் தந்தவன் பாட்ரிக் தான். குறிப்பைத் தரும் இந்த உரையாடலில் இடம்பெறும் சுட்டுச்சொற்கள் “ ஒருநாள், வித்தியாசமான பெண்”

சூசன் காதலாலோ, காமத்தாலே முத்தமிடுவதோடு, பற்கள் படியக் கவ்விக் காயமேற்படுத்துவதின் பின்னணியில் விரியும் ரகசியமே கதையின் திகில் பிரதேசம். எப்படி வித்தியாசமானவள்? என்பது கதையின் நீட்சி.

பாட்ரிக் வொங் சொந்தமாகத் தொழில் தொடங்கினான். ஜென்ரில்மன் கிளப் தொடங்கினான். தாய்லாந்துக்கு அடிக்கடி போனான். ஒருமுறை நண்பன் இரஞ்சனையும் அழைத்துப் போனான். அங்கே லின் என்னும் இளம்பெண்ணைச் சந்தித்தான் இரஞ்சன் என்றுவிரியும் கதையில் வழக்கமாகச் சிவப்பு விளக்குப் பகுதியில் மாட்டிக்கொண்ட இளம்பெண்ணைக் காப்பாற்றிவிடத் தயாராகும் மனிதநேயனாகிறான் கதைசொல்லி. அந்த மனிதநேய நோக்கத்தின் விளைவே குத்தப்பட்டு மருத்துவமனையில் உடலாகக் கிடக்கிறான். மனம் காரணங்கள் தேடி அலைந்து கதைசொல்லிக் கொண்டிருக்கிறது. மனம் சொல்லும் முதல் காரணம்.

‘முட்டாளாக நீ நடந்ததற்கு அவன் மட்டுமே பொறுப்பல்ல. விபசாரவிடுதிக்குப் போனது உனது தவறு’. தவறுகளைப்பேச இது சந்தர்ப்பமில்லை.

களிமண்ணில் ஆதாமை உருவாக்கிய இறைவன் குனிந்து மூக்கில் ஊதி உயிர்கொடுத்த சம்பவம் அக்காலத்தில் மட்டுமா நடந்தது?

‘பேசண்ட் சுவாசம் இப்பொழுது தானாக நடக்கிறது. இனி பயமில்லை’ என்று மயக்கமருந்து கொடுக்கும் வைத்தியர் வாயில் இருந்து குளாயை இழுத்தார்.

இது ஆணின் மனம். ஊதி ஊதி உயிர் உண்டாக்கிய இறைவனையே குற்றவாளியாக்கும் ஆதாமின் மனம். தனது உயிரை எடுப்பதற்காகவே இந்த உடம்பிலிருந்து ஒரு விலா எலும்பை ஒடித்துப் பெண்ணை – ஏவாளாக உருவாக்கினான் என்பது ஆதாமின் குற்றச்சாட்டுதானே. ஆதாமின் உடலையும் ஏவாளின் உடலையும் படைத்த இறைவன் மனத்தைப் படைக்கவில்லை என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஆதாம்களும் ஏவாள்களும் – ஆண்களும் பெண்களும் – தங்களின் வாழிடம் , சூழல் தரும் வாய்ப்பு, கைவசமிருக்கும் வசதிகள் எனப் பலவற்றைக் கொண்டே மனதை உருவாக்கிக்கொள்கிறார்கள். அந்த மனதே குற்றத்தைச் செய்கிறது; குற்றத்திற்கான காரணங்களை அடுக்குகிறது. தப்பித்தலுக்கான வழியையும் காரணங்களையும் அடுக்கிக் கொள்கிறது. அதுவே வாழ்க்கையாகிறது. வாழ்க்கையின் சுவாரசியமே கதையாகிறது.

நடேசனின் இந்தக் கதை ஆதாமின் – ஆண்களின் அலையும் மனப் பயணத்தை நாயகத்தனம், குற்றமனம், மனிதநேயம், சாகசம், தவிப்பு எனப்பல நிலைகளோடு அலையும் ஒன்றாக எழுதிக்காட்டுகிறது. ஒவ்வொன்றையும் மறைப்பதற்கு அவர் பயன்படுத்தும் திருப்பங்களாகச் சில சொற்களையும் வைத்துவைத்துக் காட்டிக்கொண்டே செல்கிறார். தில்லி தில்லி பொம்மக்காவின் திரிபோல. அந்தத் திரி ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்கும் வாசகமனம் வாசிப்புத்திளைப்பில் களிக்கிறது. இந்தத் திரிச்சொற்களைத் தமிழ் இலக்கணம் சுட்டுச் சொற்கள் என்று சொல்கின்றன.

தமிழில் அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள். அவன், இவன், உவன் என்பன சுட்டுப் பெயர்கள். இவை உயர்திணைப் பெயர்கள். அது, இது, உது என்பன அஃறிணைப் பெயர்கள். அந்த, இந்த, உந்த என்பன காலத்தையும் குறிக்கும் பெயர்ச்சொற்கள். அங்கு, இங்கு, உங்கு என்பன இடத்தைக்குறிக்கும் பெயர்ச் சொற்கள். இதன் மேல் பல சுட்டுச் சொற்களை உருவாக்கமுடியும். அப்படி, இப்படி, அங்ஙனம், இங்ஙனம், அதாவது, இதாவது என்பன போல மரபுத்தமிழ் உருவாக்கிக் கொண்டதற்கு மாறாக நவீனத்தமிழ் இந்த எழுத்துகளைக் கைவிட்டுவிட்டும் சுட்டுச்சொற்களை உருவாக்கிக் கொள்ளப்பழகிக் கொண்டுவிட்டது.

இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள ‘ஒருநாள்’ ‘ஒருயொருமுறை’ , ‘வித்தியாசமான பெண்’ ‘உயிர்கொடுத்த சம்பவம்’ போன்றனவும் சுட்டுச்சொற்களே. நிகழ்காலத்தமிழ் இப்படி உருவாக்கிக் கொண்டதைப்போலச் சிலவற்றை விட்டுவிடவும் செய்திருக்கிறது. அ.,இ. என்ற இரண்டு சுட்டெழுத்து மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால் உ, ஈழத்தமிழர்கள் இன்றும் பயன்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

ஒரு கவிதையில் அல்லது கதையில் சுட்டுச்சொற்களைக் கண்டுபிடித்து அது உண்டாக்கும் பரவசத்தோடு பயணம் செய்வது வாசிப்பில் ஒருவிதம். திகில், மர்மம், ஆவி, கொலை, குற்றமனம், அதிலிருந்து தப்பித்தல் போன்றனவற்றை இதன்வழியான வாசிப்பிலேயே ரசிக்கமுடியும். ரசிக்கக்கூடிய வாசிப்புகளைத் தமிழ் மரபிலிருந்து கண்டுபிடிப்பதும் மகிழ்ச்சியானதுதான்.

நடேசன்/ மீண்டும் ஓர் ஆதாம்/அம்ருதா/ 18-
Courtesy- malaigal

“கதைகதையாம் காரணமாம்.9. / சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை.” மீது ஒரு மறுமொழி

  1. GREAT REVIEW FROM A.RAMASAMY FROM TAMILNAADU! THANKS FOR THIS FANTASTIC REVIEW WITH GRAMMATICAL EXPLANATIONS TOO!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: