
நடேசன்
எனது ஆச்சி வாயாடி!
கோபம் வந்தால் ஊரிலுள்ள தூஷண வார்த்தைகள் அவர் வாயிலிருந்து தாராளமாக வெளியே வரும். ஆச்சி எரிச்சலடையும்போது அவர் அவிட்டுவிடும் ‘பூனையின் புடுக்கு மாதிரி” என்ற வார்த்தையை சிறுவயதில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அந்த வயதில் அதன் படிமமான கருப்பொருள் புரிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் ஆச்சி பாவித்த சந்தர்ப்பத்தை பார்த்தபோது அந்தச் ‘சொல்லடை’ மனமுடைந்திருக்கும் பெண்ணிடம் ஒரு உளவியல் மருந்தாக பாவிக்கப்பட்டதை தெரிந்து கொண்டேன்.
எங்கள் பகுதியான வட இலங்கையின் தீவுப்பகுதியில் பெரும்பாலான திருமணங்கள் ‘பேசி’ச் செய்வார்கள். அந்தக் காலத்தில் ஊரில் மாப்பிள்ளை தட்டுப்பாடு வந்தால்,அடுத்த தீவுகளில் இருந்து கன்னிப் பெண்ணுக்கு மாப்பிளை தேடுவது வழக்கம். திருமணத்திற்கு ஆணை பேசி வைப்பார்கள். திருமணத்திற்கான பேச்சுவார்த்தை நடந்தபின்பு, ஏதாவது உள்குத்தால் அல்லது மற்றவர்களின் தலையீட்டால், பேசி வைத்த ஆண் திருமணத்திற்கு மறுத்துவிட்டால் திருமணம் குழம்பிவிடும்.
கவலையுடன் அழும் பெண்ணை நோக்கி இப்படியான ‘பேச்சுகள்’சரளமாக வரும். அரைவாசி கெட்டவார்த்தைகளுடன் எடுத்தெறிந்து பேசும் வயதான பெண்கள் சுற்றியிருந்து அவளுக்கு உளவியல் சமாதானம் சொல்வார்கள். பெண்ணை சமாதானப்படுத்துவதோடு மட்டுமல்ல ஒரு ஆணை அவமானப்படுத்தவதற்கும் இந்த ஒரு வசனம் போதுமானது. காது கொடுத்துக் கேட்டிருந்தால் ஆண் கயிறு எடுத்துக்கொண்டு பின்வளவில் நிற்கும் வேப்ப மரத்தை நோக்கி செல்வதற்கு தூண்டும் விதமாக அமைந்திருக்கும். இந்த வார்த்தைகள். ஆணாதிக்க சமூகத்தில் துப்பாக்கியில் இருந்து வரும் ஈயக்குண்டு போன்றது இதற்கு இணையான வசனங்கள் எல்லா சமூகத்திலும் இருக்கின்றன.
சாதாரணமானவர்கள் எத்தனை பேர் பூனையின் ஆண் குறியைப் பார்த்திருப்பார்கள்…?
பெரும்பாலானவர்கள் ஒரு குத்துமதிப்பாக இப்படிச் சொல்வர்: பூனையின் ஆண்குறி சிறிதானாலும் கடுகைப் போன்று காரமானது. அதன் ஆண்குறியின் முனையில் அமைந்திருக்கும் சிறிய முள்ளுகள் ஒவ்வொரு உடலுறவிலும் பெண்பூனையைக் கதறப் பண்ணும். பூனைகள் கருக்கொள்ளும் காலங்களில் பெண் பூனையின் இந்த ஓலத்தை நமது ஊர்களில் கேட்கலாம். நலமடிக்கப்பட்ட ஆண் பூனைகளில் இந்த முள்ளுகள் உதிர்ந்து மறைந்துவிடும்.
இந்த விடயங்கள் நம்ம ஊர் ஆச்சிமாருக்கு தெரிந்திருந்தால் அந்த ‘சொல்லடை’யை பாவிக்காமல் தவிர்த்திருப்பார்கள். அந்த வார்த்தையில் ஒரு பாதி உண்மை இருக்கிறது என்று எங்களைப்போன்ற மிருகவைத்தியர்களுக்குத் தெரியும்.
ஆண் பூனையின் குறி மிகவும் சிறியது. அதில் நூலிழை போன்றது அதன் மூத்திரக்குழாய் ( Urethra ) அதில் கல்லடைத்து சலம் வருவது தடைப்பட்டால் அந்த கல்லடைப்பை சிறு கதீட்டர்(Catheter) கொண்டு அகற்றுவோம். எனினும் இந்த முறை சற்றுக் கடினமானது. இதை ஒவ்வொரு முறை செய்யும் போதும் ஊரில் சொல்லப்பட்ட அந்த ‘சொல்லடை’ மனதில் வந்து போகும்.
சமீபத்தில் ஜோன் கேசி என்பவரின் ரைகர் என்ற பூனை இதே வியாதியால் கொண்டு வரப்பட்டு சிகிச்சை மேற்கொண்டபோது மேலும் கடுமையாகியது. காரணம் ரைகர் பத்துக் கிலோ நிறையுள்ள குண்டுப் பூனை. அதனது உடல் பருமனுக்கு அதனது ஆண்குறி மிகவும் சிறியது. விரல்களால் அதை பிடித்து கதீட்டரை உள்ளே அனுப்புவது மிகவும் கடினமாக இருந்தது..
இந்த விடயத்தில் மனிதர்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவர்கள் அதிஷ்டம் செய்தவர்கள். பேராதனையில் படித்தகாலத்தில் மூன்றாம் வருட மருத்துவ பீடத்தில் படித்த எனது நண்பன் ஒரு புத்த பிக்குவிற்கு கதீற்ரர் போட்டதைப்பற்றி பேசிக்கொண்டிருத்தான். சலம் விடுவதற்கு மட்டும் பாவித்த அவரது ஆண்குறி அடைத்து விட்டது என இரட்டை அர்த்தத்தில் சொன்னது நினைவு வந்தது. அவனுக்கு கதீட்டர் போட்ட முதல் அனுபவம் இலகுவாக இருந்தது. ஆனால் பூனைக்கு கதீட்டர் போடுவதற்கு மிருகவைத்தியருக்கு அதிக பயிற்சி பெற வேண்டும்.
ரைகரை மயக்க மருந்து செலுத்தி மிகப் பிரயாசையுடன் கதீட்டரை செலுத்தி அடைப்பை நீக்கினோம். மயக்கம் தெளிந்த நிலையில ரைகர் உண்மையில் வனப்பகுதி ரைகராக எம்மைத் தாக்கும். அதனது ஆண் குறியை நாங்கள் கையாளுவதை ரைகர் விரும்பாததுடன் தனது எதிர்ப்பை ஆக்ரோசமாக காட்டியது. அதனது எதிரில் போவதோ மருந்து கொடுப்பதோ எளிதாக இருக்கவில்லை. இரண்டு நாள் அந்த கதீட்டருடன் வைத்திருந்து அடைப்பில்லாமல் சலம் வெளியேறச் செய்தோம். இரண்டு நாட்களின் பின் மயக்கமருந்தைக் கொடுத்து அந்த கதீற்றரை எடுத்து விட்டு வீட்டிற்கு அனுப்பியபோது, மீண்டும் சிலநாட்களில் சலம் விட சிரமப்பட்டது. மீண்டும் இரண்டு மடங்கு சிரமத்துடன் அடைப்பை நீக்கினாலும் சிலகாலத்தில் இந்த நோய்வரும் என எதிர்பார்த்ததால், அதனது ஆண்குறியை அகற்றி அதனது மூத்திரக்குழாயின் நீளத்தை குறைக்க எண்ணினோம். இதன் பின் அடைப்பு வராது. கிட்டத்தட்ட பெண் குறிபோல் சிறிதாக்கும் ஒரு சத்திரசிகிச்சையை (Perineal urethrostomy) செய்ய தீர்மானித்தோம்..
இருபது வருடங்களுக்கு முன்பு இந்த சிகிச்சையை நான் செய்திருந்தாலும் ரைகருக்காக ஒரு நிபுணத்துவ சேர்ஜனை வரவழைக்க முடிவு செய்தோம். அதற்கு அந்தப்பூனையின் உரிமையாளர் ஜோன் கேசியும் சம்மதித்தார். அவர் திருமணமாகாதவர். சமீபத்தில் அவரே பெரிய சேர்ஜரியூடாக போய்வந்தவர். இந்த ரைகரில் மிகவும் பாசமானவர். பணத்தை செலவிடத் தயாராக இருந்தார். எங்களைப் பொறுத்தவரை ரைகருக்கு சிறந்த சிகிச்சை செய்வதே முதன்மை நோக்கமாக இருந்தது. நிபுணத்துவ சர்ஜனும் வந்து வெற்றிகரமாக இரண்டு மணிநேர சத்திரசிகிச்சையை செய்து முடித்தார்.
அடுத்த நாள் வேலைக்குப் போகும் போது அந்த சத்திரசிகிச்சை பற்றி என் மனைவி கேட்டார்.
‘ஆண் பூனையை பெண் பூனையாக்கிய ஆபரேசன் முடிந்தது. ஆனால் ரைகரை நெருங்க முடியுமா எனத் தெரியவில்லை” என்றேன்.
அவுஸ்திரேலியாவில் ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறும் சத்திர சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அதைப்பற்றிய விபரங்கள் மருத்துவரான எனது மனைவிக்குத் தெரிந்ததால் அப்படிச் சொன்னேன்.
—
பல வருடங்களுக்கு முன்பு எனது மனைவி, என்னிடம் மத்தியூ என்ற இளைஞனை அவனது நாயை கவனிப்பதற்காக அனுப்பினார். அந்த இளைஞன் தனது ஆறு வயது மகனுடனும் சிவந்த ரொடிசியன் றிட்ஜ பாக் (RhodesianRidgeback) நாயுடனும் வருவது வழக்கம். அந்த நாய்க்கு காலில் கேன்சர். இறுதியில் நோய் முற்றி அந்த நாயை கருணைக் கொலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டபோது அந்த இளைஞன் குலுங்கி குலுங்கி அழுதான்.
ஆண்கள் அப்படி அழுவது குறைவு. ஆனாலும் அதை வித்தியாசமாக நான் நினைக்கவில்லை.
பிற்காலத்தில் அவனது உறவினர் ஒருவர் மூலம் கேள்விப்பட்ட விடயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஆரம்பத்தில் பெண்ணாக இருந்து குழந்தை பெற்ற பின்பு ஆணாக மாறியவனாம். அத்துடன் அவனுடன் இருந்த மகனின் தந்தை, தாய் ஆணாக மாறியதால் தன்னிடம் மகன் இனிமேல் வளரவேண்டும் என குவின்சிலாந்து மாநிலத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் தற்போது அந்த மாநிலத் தலைநகரான பிரிஸ்பேனில் மத்தியு வசிப்பதாக சொன்னார்கள்.
ஆறடி உயரமும் மிகவும் பரந்த தட்டையான நெஞ்சும், குட்டையாக வெட்டிய பொன்னிறமான கேசமும் என ஆணின் சகல இலட்சணத்துடன் இருந்த அவனை என்னால் சந்தேகிக்க முடியாது. முலைகள் மற்றும் வயிற்றில் உள்ள கர்ப்பப் பையை அகற்றிவிட்டு, ஆண் ஹோர்மோன்களை ஊசி மூலம் ஏற்றி மிகவும் கச்சிதமாக அவனது உடலை செதுக்கியிருந்தார்கள் அவுஸ்திரேலிய சேர்ஜன்கள்.
ஆணில் இருந்து பெண்ணை உருவாக்குவது சிறிது சுலபமாக இருக்கலாம்.
ஆனால், பூனைகள் விஷயத்தில்…?
நமது ரைகர் இந்த பால்மாற்றத்தை இலகுவில் ஏற்கவில்லை. எங்களை எதிர்த்து அகிம்சைப் போராட்டம் நடத்தியது. இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் தவிர்த்தது. ஆனால், நெருங்கினால் நகங்களையும் பற்களையும் கொண்டு வன்முறையாக தாக்க முயன்றது. எம்மால் அருகில் நெருங்கி உணவளிக்க முடியவில்லை.
இறுதியில் நிபுணத்துவ சேர்ஜன் வந்தபோது மூன்று பேராக ரைகரை அழுத்திப் பிடித்து வலி நீக்கும் மருந்தைக் கொடுத்தோம்.
அந்த சேர்ஜன் மருந்து கொடுத்த பின்பு ‘அதனது முழு ஆண்குறியையும் வெட்டி எடுத்துவிட்டோம். அதனது வலியை எம்மால் நினைத்துப் பார்க்கமுடியுமா? ’ எனக் கேட்டு வைத்தார்.
அதே நேரத்தில் இப்படியாக மனிதர்கள் ‘பால்மாற்றம்’ செய்வதும் காலையில் எனது மனைவிக்கிடையே நடந்த சம்பாசணையும் நினைவுக்கு வந்தது.
மூன்றாம் நாள் மெதுவாக உணவுண்ணத் தொடங்கிய ரைகர் நான்காவது நாள் வீடு சென்றது.
ரைகரைப் பொறுத்தவரை பிரச்சினை தீர்ந்து விட்டது. அதன் மூத்திரக் குழாய் மிகவும் குறுகியதால் இனி மேல் அதில் கல் அடைப்பு வருவதற்கு சாத்தியமேயில்லை.
ஆனால் மத்தியூவிற்கு…?
அவனுக்கு சிகிச்சை முடிந்தாலும் வேறு விதத்தில் பிரச்சினை தொடர்கிறது.
———-
மெல்பேனில் உள்ள ஸ்பிரிங்வேல் மயானம் மிகவும் அழகான மலர்வனம் யூகலிப்டஸ் மரங்களின் இடையே ரோஜா டாலியா என பூமரங்கள் நிறைந்த இடத்தில் நான் மாலை நேரத்தில் எனது கிளினிக்கின் நேர்சான கலியுடனும் மற்றைய மிருகவைத்தியர் சமனுடன் நின்றேன். எம்மைத் தவிர மற்றயவர்கள் ஜோன் கேசியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
கலி தனது பூனைகளின் சித்திரங்கள் இருந்த தனது மேல்சட்டையை அணிந்தபடி இருந்தாள். என்னுடன் காரில் வரும்போது ஜோன் கேசிக்கு பூனைகள் பிடிக்கும் என்பதால் அணிந்து வருகிறேன் என்றாள். ஆண்களுக்குத் தெரியாத அல்லது புரியாத சில விடயங்களைப் பெண்கள் உணர்கிறார்கள்.
வந்தவர்கள் எல்லோரும் ஜோன் கேசியின் எரித்த சாம்பலை புதைக்கும் சடங்கிற்காக வந்திருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை முதல்முறை இப்படியாக சாம்பலை புதைக்கும் சடங்கொன்றில் பங்கு பற்றினேன்.
அது மட்டுமல்ல ,செல்லப்பிராணிகளின் உரிமையாளர் ஒருவர் இறந்ததற்காக கிளினிக்கைப் பூட்டிவிட்டு எல்லோருமாக இப்படியான சடங்கில் சமுகமளித்ததும் தடவையாக இதுவே முதல் தடவை.
அங்கிலிக்கன் கிறிஸ்துவ உபதேசியொருவர் கிறிஸ்தவ கீதத்தை தனது ஐ பாட்டில் இயக்கி பாடவைத்து விட்டு ‘ஆண்டவருடன் சேர்ந்துவிட்ட ஜோன்கேசிக்காக நாங்கள் பிரார்த்திப்போம். அவர் தனது தாய் தந்தையர் நண்பர்கள் உறவினர்கள் அவரது பூனைகள் என்பவற்றின் மேல் எவ்வளவு அன்பாக இருந்தார் என்பதை நாம் நினைவுகூர்வோம்’ என்றார்.
பளிங்கு நிலத்தில உள்ள சிறிய ஓட்டையில் செப்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது சாம்பல் புதைக்கப்பட்டு, அவரது பிறந்த இறந்த திகதியுடன் பெயர் எழுதப்பட்ட பட்டயம் அதன் மேல்வைக்கப்பட்டு ஒட்டப்பட்டது.
அரை மணித்தியாலத்தில் முடிந்த அந்த சடங்கிற்கு பின்பாக தாய்தந்தையினருக்கு எமது சோகத்தை தெரிவித்துவிட்டு வெளியேறினோம்.
ஜோன்கேசியின் ரைகர் பற்றிய கதையை எழுதிவிட்டு நான் ஒரு மாதம் விடுமுறையில் சென்றுவிட்டேன் அதன் பின்பாக நடந்த விடயங்கள் நான் எதிர்பார்க்காதவை. அதிர்வைக் கொடுத்தவை.
ரைகரின் உரிமையாளர் ஜோன் கேசி இறந்துவிட்டார் என்பது எனக்கு அறிவிக்கப்பட்டது. நாங்கள் ஒரு நாற்பது வயது எனக் கணித்திருந்தவர், திருமணமாகாமல் தாய் தந்தையினருக்கு ஒரே பிள்ளையாக அவர்களோடு இருந்தவர் என்பதுடன் தாய் இலங்கையையும் தந்தை சிங்கப்பூரையும் சேர்ந்தவர் எனப் பல தகவல்கள் தெரியவந்தன.
நூலகராகவேலை செய்த ஜோன் கேசி அமைதியாகவும் மிகவும் நாகரீகமாகவும் பேசுபவர் என்பதால் எங்கள் எல்லோராலும் கவரப்பட்டவர்.
அவரது வாழ்க்கையில் தாய் தந்தையரைத்தவிர அவர் வளர்த்த மூன்று பூனைகள் முக்கியமாக இருந்தன. ரைகரைத் தவிர்ந்த மற்றவைகள் எதுவித உடல் நலக்குறைவுமற்றன. வழக்கமான தடுப்பூசிக்கு மட்டுமே அவை கொண்டுவரப்படும்.
ரைகருக்கு சத்திரசிகிச்சை செய்த சில காலத்தின் முன்னர், ஜோன் கேசியும், ஒரு பெரிய சத்திரசிக்சைக்கு ஆளாகி இருந்தார் என்பதை அறிந்திருந்தோம். ஆனால், அது அவரது முதுகின் தோலில் நடந்தது.
எமக்குக் கிடைத்த தகவலில் அந்த சத்திரசிகிச்சையின் விளைவாக ஏற்பட்ட உறைந்த இரத்தம் மூளைக்குச் சென்று மரணத்திற்கு காரணமானது.
அவர் இறந்தபின்பு அவரது பூனைகளைப் பராமரிக்க அவரின் பெற்றோர் அதிக கவனம் எடுத்தார்கள். எமது சத்திர சிகிச்சையால் ரைகரின் மூத்திரக்குளாய் அடைப்பு வராத போதிலும் தொடர்ச்சியாக தொற்று வந்தபடியே இருந்தது.
பல முறைவைத்தியம் செய்தாலும் ரைகரின் ஆக்ரோஷமான குணத்தால் மருந்தை ஜோன் கேசியின் பெற்றோரால் அதற்குக் கொடுக்க முடியவில்லை.
இறுதியில் ஒரு நாள், நான் இல்லாதபோது எனது சக வைத்தியர் அய்மன் ரைகரை கொண்டுவந்திருக்கிறார்கள். ஜோன்கேசியின் தந்தையின் கரம் மற்றும்ஒரு பூனையால் கடிக்கப்பட்டு வீங்கியிருந்தது.
அய்மன் அவரை வற்புறுத்தி வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் ரைகரை கருணைக்கொலை செய்வதற்கு சிபார்சு செய்தார். அதற்கு அவர் உடனே சம்திக்கவில்லை.
மீண்டும் அவரைத் நான் தொடர்பு கொண்டபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது நேர்சான கலி வைத்தியசாலைக்கு ரைகரை கூட்டில் எடுத்துச்சென்று அனுமதி வாங்கினாள்.
நாய் பூனையை வைத்தியசாலைக்குள் அனுமதிக்காததால் வெளியே தனது நாளத்தில் பொருத்தியிருந்த சேலையின் போத்தலுடன் வந்து அனுமதி கொடுத்ததுடன், ரைகரைத் தடவி இறுதிவிடையை கண்ணீருடன் கொடுத்தர் எனக் கலி சொன்னார். முதியவர் தனது மகனை பறிகொடுத்துவிட்டு அவனது செல்லப்பிராணிகளை பராமரிக்க நினைத்தாலும் அது முடியாது போனபோது அவர் மனநிலையைப் புரிந்து கொள்வது கஷ்டமானதல்ல.
கடைசியாக அவர்களுடன் தொடர்பாக இருந்த நேர்ஸ் கலி, ஜோன் கேசியின் பெற்றோர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியாவை விட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு போவதாக கூறினாள்.
” ஏன்..?”
” அவர்கள் ஜோன் கேசிக்காவே அவுஸ்திரேலியா வந்தார்கள். இங்கு அவர்களுக்கு உறவினர்கள் எவருமில்லை.”
” அப்படியா…! ” என்பதைவிட எதுவும் சொல்லமுடியவில்லை.
—-0—-
மறுமொழியொன்றை இடுங்கள்