
அவுஸ்திரேலியாவின் கிழக்கு முனை பைரன் பே (Byron Bay)
நடேசன்
பேராதனைப் பல்கலைக்கழகக் காலத்தில் ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்தேன். அதில் எனக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால், என்னுடன் சேர்ந்து குடித்த ஒரு நண்பனுக்கு முகத்தில் விறைப்புத்தோன்றி தேறி வருவதற்கு சில நாட்களாகியது.
அவனுக்கு ஏதோ வந்துவிட்டது என்ற குற்ற உணர்வில் குறிப்பிட்ட அந்தச் சிலநாட்கள் மனம் குழம்பினேன். அவனுக்கு முற்றாகக் குணமாகியதும் எனக்கு நிம்மதி வந்தது. அவனுக்கு வந்த முகவிறைப்புக்கு கஞ்சாதான் காரணமா என்பது இன்னமும் எனக்குத் தெரியாது. கஞ்சாப்புகைத்தலுக்கு அதுவே கடைசியும் முதலுமாக இருந்தது.
இம்முறை கோல்கோஸ்டுக்கு போன பின்பு அங்கிருந்து பைரன் பே என்ற இடத்திற்கு நானும் மனைவியும் போய் வந்தோம் என்று எமது மகளுக்குச் சொன்னபோது, அவள் எழுப்பிய கேள்வி நான் எதிர்பார்க்காதது.
‘அங்கு கஞ்சா அடிப்பவர்களைக் கண்டீர்களா ? ‘ எனக்கேட்டாள்
‘நான் காணவில்லை’
‘அவுஸ்திரேலியாவில் உத்தியோகபூர்வமாக கஞ்சா அடிப்பவர்கள் அங்குதான் போவார்கள்’
‘நான் கேள்விப்பட்டது ஹிப்பிகள் போகும் இடமென’
‘அதற்காகத்தான் அங்கு அவர்கள் போவது’
‘பொலிஸ் அவர்களை அனுமதிக்கிறதா?’
‘மறைவாக மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் கஞ்சா அடித்தால் கவனிக்கமாட்டார்களா.’
அங்கு செல்லும்போது எமது வாகனச் சாரதி இரண்டு கடைகளைக்காட்டி, ‘இவை ஹிப்பிகளுக்கு உரியது’ எனக்கூறியது தான் உடனே நினைவுக்கு வந்தது.
நானும் பைரன் பே கடைவீதியில் இறங்கி நடந்தபோது அந்தக்காட்சியைப் பார்த்தேன். 60 ஆம் ஆண்டுகளில் ஹிப்பிகள் காலம் முடிந்து விட்டதாகவே நினைத்திருந்தேன்.
பைரன் பே அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையில் உள்ள நகரம். அங்கு ஒரு கலங்கரை விளக்கமும் உண்டு. அதற்குச் சிறிது தூரத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. “இதுவே அவுஸ்திரேலியாவின் கிழக்கு முனை.”
பெண்ணின் இடுப்பில் இருக்கும் குடத்தை அவுஸ்திரேலியாவாகக் கற்பனை செய்தால் அந்தக் குடத்தின் வயிற்றுப் பகுதியாகத் தெரியும் கரைப்பகுதி. அலையால் அடித்து உயரமான பாறைகளால் உருவாக்கப்பட்ட கரை. அங்கிருந்து பார்த்தால் கிட்டத்தட்ட 200 அடிகள் கீழே ஆரம்பித்து நீலமாக பசுபிக் சமுத்திரம் கண்ணுக்கெட்டிய தூரம் தெரிந்தது. நாம் பார்த்த நேரம் நடுப்பகலானதால் சூரியஒளி கடலில் பட்டு தெறித்தது. வெள்ளி தங்கம் என உலோகக் கலவாகியது.
கலங்கரை விளக்கமும் சமுத்திரமும் என்னைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக அழைத்துச் சென்றது. ஐரோப்பிய கடலோடிகள் உலக சரித்திரத்தை மாற்றியவர்கள். காலனியத்தை உருவாக்கி, அடிமை வியாபாரத்திற்கு வழி சமைத்தாலும் அவர்களது நெஞ்சுரம் பசுபிக் சமுத்திரத்தை விட ஆழமானது. கொலம்பஸ் எவ்வளவு தீவிரமான நம்பிக்கையுடன் கஸ்ரலீய (பின்னாளிலே ஸ்பெயின்) இராணி இசபெல்லாவிடம் இந்தியாவை அடைய தனக்கு பொருளுதவி செய்யும்படி வற்புறுத்தியிருக்வேண்டும்?
கேப் டவுணில் நின்று நடுங்கியபடி அத்திலாந்திக் சமுத்திரத்தை மிகவும் மரியாதையுடன் பார்த்த எனக்கு பசுபிக் சமுத்திரத்தைப் பார்த்தபோது அந்த உணர்வு ஏற்படவில்லை. ஆழமானது பசுபிக் சமுத்திரமென்றாலும் பசுபிக் சமுத்திரத்தைப் பல ஆயிரம் வருடங்கள் தொடர்ச்சியாக யப்பானியர், சீனர்கள் மற்றும் பசுபிக் தீவினர் கடந்தபடி குடியேறியும் யுத்தமும் செய்தார்கள். அதேபோல் இந்து சமுத்திரம் அரேபியர்களாலும் , தமிழர்களாலும் வெற்றி கொள்ளப்பட்டது. ஆனால் , அத்திலாண்டிக் சமுத்திரம் 1495 இல் கொலம்பசால் மட்டுமே கடக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடல் பிரயாணங்கள் கடற்கரையோரங்களில்தான் நடக்கும். அதற்காகவே கலங்கரை விளக்குகள் கட்டப்பட்டன.
எங்களது வாகன சாரதி ‘ஏதாவது திமிங்கிலங்கள் தெரிகிறதா?’ எனக் கேட்டபோது ‘எனக்குத் தெரியவில்லை.’ என்றேன். சாரதி சொன்னார் ‘திமிங்கிலங்கள் தண்ணீரை வீசியடித்ததை கண்டேன்’.
கடற்கரையில் கலங்கரை விளக்கு அமைந்த பிரதேசம் கரடு முரடானாலும் பாறைகளும் அதில் வளர்ந்த அவுஸ்திரேலிய மரங்களும் அழகானவை. ஒரு காலத்தில் செடார் மரங்கள் நிறைந்து இருந்த இடம் பைரன்பே.
அந்தப்பகுதியை விட்டு சிறிது தூரத்தில் அமைந்திருந்த நீண்ட கடற்கரை பொன்னிறத்தில் மிகவும் சுத்தமாக இருந்தது. இங்கு நான் பொன்னிறமென்பது உவமானத்திற்காக மத்திரமல்ல, உண்மையிலேயே இந்த மணலில் தங்கமும் எடுக்கப்பட்டது என்பதனால்தான். அங்கு மணலில் நடந்து சென்றபோது, ஆண்களும் பெண்களும் மிகவும் குறைந்த உடைகளில் வெயிலில் குளித்தபடியும் ஒருவருக்கொருவர் சன் கிறீம் தடவியபடியும் இருந்த காட்சிகளைக்கண்டேன்.
ஆண்குறி, பெண்குறி மற்றும் பெண்ணின் மார்பகம் முதலானவற்றில்தான் காமம் இருப்பதாக சில மூன்றாந்தர சினிமாக்காரரும், எழுத்தாளர்களும் மற்றும் மதவாதிகளும் வைத்துவிட்டார்கள் என்று எனது ஒரு கட்டுரையில் முன்னர் எழுதியிருந்தேன்.
அத்துடன், உண்மையில் காமம் ஆணினதும் பெண்ணினதும் மூளையிலேதான் உள்ளது என எழுதியிருந்தேன். இன்று நான் பார்த்த கடற்கரைக் காட்சியில் பெண்ணின் வெற்றுடம்பை பார்க்கும் ஆண்கள் மதவாதியின் கூற்றுப்படி காமப்பரவசத்தில் இருக்கவேண்டும். ஆனால், அப்படியில்லை. இரத்த உறவான பெண்களை வெற்றுடம்போடு பார்க்கும்போது விலகுகிறோம். விருப்பமில்லாத பெண்ணின் அழைப்பை நிராகரிக்கிறோமே. இவையெல்லாம் எனது கூற்றுக்கு ஆதாரமானவை என நினைத்து நடந்தபோது என் மனைவி சொல்லிய விடயம் காதில் ஆரம்பத்தில் விழவில்லை.
மீண்டும் முகத்தைப் பார்த்தபோது ‘இப்படி சூரியவெளிச்சத்தில் இவளவை கிடந்தால் தோலில் கேன்சர் வராமல் என்ன செய்யும் ? ஆம்பிளைகளையும் இவள்கள் தான் இழுத்துவருகிறாள்கள் .’ என்றார்.
எனது மூளை இலக்கியத்திலும் மனைவியின் மூளை மருத்துவத்திலும் மூழ்கியிருந்தது.
நல்லூரில் கொடியேறுவதுபோல் தோல் கேன்சர் எச்சரிக்கை அறிவிப்புகள் அவுஸ்திரேலியாவில் கடற்கரையெங்கும் வசந்தகாலத்தில் எழுதப்படும். வானொலி, தொலைக்காட்சி எல்லாம் விளம்பரப்படுத்தப்படும். சூரியக்குளியலைத் தவிர்க்கும்படியும் உடலில் துணியையும் தலையில் தொப்பியையும் அணியும்படி வலியுறுத்தப்படும்.
அவுஸ்திரேலியாவில் அதிக சூரியக்கதிரின் தாக்கத்தால் மெலனோமா எனப்படும் புற்றுநோய் தோலில் ஏற்படும். இது ஒரு உயிர்க்கொல்லி. குவின்ஸ்லாந்து பகுதியில் இந்த நோய் அதிகமாக பரவுகிறது. தென்துருவப்பகுதியில் உள்ள ஓசோனில் ஓட்டையிருப்பதால் அதிகமாக அல்ரா வயலட் கதிர்கள் அவுஸ்திரேலியாவைத் தாக்குவதாகக் கூறப்படுகிறது.
பைரன் பே 5000 மக்கள்வாழும் சிறிய நகரம். ஆனால் கோடையில் பல மடங்காக உல்லாசப்பிரயாணிகள் வருவதால் அங்கு கார் நிறுத்த இடமற்றுவிடும். இதனால் வெளியூரில் இருந்து காரில் வருபவர்களை குறைக்க எண்ணியிருக்கிறார்கள்.
கவிஞர் பைரனின் பெயரை, நகரை வைத்திருக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், இணையத்தில் தேடியபோது அவுஸ்திரேலியக் கண்டத்திற்கு வந்த மாலுமி ஜேம்ஸ்குக்கின் உதவி மாலுமியின் பெயர் ஜோன் பைரன்(John Byron) அவர் கவி பைரனின் பேரனாவார். அவரது பெயரால் அந்த இடத்திற்கு ஜேம்ஸ்குக் வைத்த பெயர்தான் Byron Bay.

மறுமொழியொன்றை இடுங்கள்