
நடேசன்
கடற்பரப்பிலிருந்து தண்ணீர் ஒரு மீட்டர் உயரத்திற்குப் பீறி அடித்தது.
ஏதோ வாய்க்குள் வைத்து தண்ணீரை மேல் நோக்கி வாணம்போல ஊதுவது தெரிந்தது.
‘சுவாசிக்க எப்படியும் மேலே வரவேண்டும்’
திமிங்கிலங்கள் காற்றிலிருந்தே சுவாசிக்க வேண்டும். நீரின்மேல் தலையை நீட்டி காற்றை உள்ளெடுக்க வேண்டும்.
உற்றுப்பார்த்த போது சாம்பலும், கறுப்பும் கலந்த நிறத்தில் ஒரு ஹம் பாக் திமிங்கிலம் . அந்த நீல நிற சமுத்திரத்தை கிழித்தபடி நீர் மூழ்கிக்கப்பல் எழுவதுபோல் நீர்ப்பரப்பில், ஒரு மீட்டர் உயரத்திற்கு எழுந்தது
’30 தொன் நிறையும் பதினைந்து மீட்டர் நீளமும் இருக்கலாம். நிலத்தில் வாழும் மிருகங்களில் ஐந்தாவது பெரிதாகும்’என்றான் எமது கட்டுமரத்தின் வழிகாட்டி.
‘இப்பொழுது இடது பக்கம் மூன்று மணியளவில்’ ஜோடி ஹம் பாக் திமிங்கிங்கள் எங்களது கட்டுமரத்தினருகே வந்தபோது கருமையான அகலமான வளைந்த முதுகும் நீல நீரைக் கிழித்தபடி உள்ளே சென்றது. அதன்பின் இரண்டாகப் பிரிந்த சாம்பல்நிறத்தில் கருமையான பட்டை கொண்ட இராட்சத வாலும் தெரிந்தது
‘எங்களை நோக்கி வந்தால் நாங்கள் விலகவேண்டும். 200 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டுமென்பது சட்டமாகும்.
இடது பக்கத்தில் இரண்டும் மீண்டும் எங்கள் கட்டுமரத்தினை நோக்கி வந்தன.
‘இவைகள் ஷோ ஓவ் காட்டுகின்றன’
அதற்கு ஏற்றபடி மீண்டும் மேலெழுந்தபோது வயிற்றுப்பக்கம் உள்ள செட்டை மிக அழகாகத் தெரிந்தது
200 மீட்டருக்குள் நாம் திமிங்கிலத்தை நோக்கிச் செல்ல முடியாது என்பது சட்டம். ஆனால் அவை எங்கள் கட்டுமரத்தை நோக்கி வந்த போது என்ன செய்வது?
விலகிச் சென்றது எமது கட்டுமரம். பைனாக்குலர் கொண்டு வரவில்லை என்ற விடயம் கவலை அளித்தாலும் விரும்பியதற்கு மேலாகப் பார்க்க முடிந்தது.
நாம் சென்ற கட்டுமரம், பசிபிக் சமுத்திரத்தின் அலைகளால் சிறுவனது கையில் உள்ள விளையாட்டுப் பந்துபோல தூக்கித் தூக்கி எறியப்பட்டது. மெதுவாக வயிற்கைக் கலக்கியது. அவசரமாகச் சாப்பிட்டிருந்த மதிய உணவு இரைப்பையுள் சுற்றிச் சுழன்றது. கட்டுமரம் பயணத்தைத் தொடங்கு முன்பே எங்களுக்கு தலைசுற்றாமல் இருக்கக் குளிகையை இரண்டு டாலருக்கு விற்றார்கள் அங்கு வேலை செய்த மாலுமிகள். நான் கடலில் பல தடவைகள் பிரயாணம் செய்திருக்கிறேன். நினைத்தேன். மறுத்தது எவ்வளவு முட்டாள்தனம் எனப் புரிந்தது..????
எனக்கு எழுவைதீவு, நயினாதீவுக் கடலுக்கும் பசுபிக் சமுத்திரத்திற்கும் வித்தியாசம் அனுபவத்தில் புரிந்தது. எப்பொழுதும் கடலில் பிரயாணம் செய்யாத என் மனைவிக்கு இந்தப் பிரயாண நோய் இருக்கவில்லை. வயிற்றுப் புரட்டலையும் தலைசுற்றலையும் ஒரு மணிநேரமாகச் சமாளித்தாலும் இறுதியில் வாந்தியில் முடிந்தது. முடிவில் சுகமாக இருந்தது.
தென்துருவ கடல் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான திமிங்கிலங்கள் சூடான பகுதிக்கு வருவதற்குக் காரணம், சூடான கடலில் கன்று போட்டால் அதிக கன்றுகள் உயிர்வாழும். அதாவது பிரசவ வைத்தியசாலைக்கு நாங்கள் போவதுபோல் ஜோடியாக வரும். ஆண் ஒரு விதமாகப் பாட்டு இசைக்கும். அவற்றின் உடலுறவுக்கான அழைப்பாக இந்த இசை எடுக்கப்படுகிறது. முலையூட்டிகளான ஹம்பாக் திமிங்கிலத்தின் உடலுறவு குளிர்காலத்தில் நடைபெறும். 345 நாட்கள் இவற்றின் கர்ப்பகாலம்.
இவை மூளையின் பாதியைத் தூக்கத்தில் வைத்து, அடுத்த பகுதி விழித்திருக்கும் விசித்திரத்தன்மை கொண்டவை
குளிர்காலத்தில் இவை பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கரையோரமாக வருவது தற்பொழுது பல உல்லாசப்பிரயாணிகளை கவருகிறது.
இவை 2000 கிலோஅளவு சிறிய மீன்களையும் மற்றும் இறால் போன்றவற்றையும் ஒவ்வொரு நாளும் உணவாக்குவதுடன் குளிர்காலத்தில் உணவு உண்ணாமல் தேவையான அளவு உணவைக் கொழுப்பாக தேக்கிவைத்திருக்கும். அவ்வாறு செய்வதால் தம்மை குளிரில் இருந்து பாதுகாக்க உதவும்.
கடந்த நூற்றாண்டில் அரேபியப் பாலைவனத்தில் பெற்றோல் கண்டுபிடிக்கும்வரை திமிங்கிலக் கொழுப்பே எரிபொருளாக வட அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பாவிக்கப்பட்டதால் 18 ஆம் 19 ஆம் நுற்றாண்டுகளில் திமிங்கில எண்ணெய்க்காக வேட்டையாடப்பட்டது.
அமெரிக்காவில் மோபி டிக் என்ற நாவல் இந்த திமிங்கில வேட்டையைச் சொல்கிறது . ஒரு காலத்தில் அமெரிக்காவில் 700 கப்பல்கள் திமிங்கில வேட்டையில் ஈடுபட்டன. இந்த வேட்டையால் வடபகுதியில் இந்தத் திமிங்கில எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதன் பின்பாக திமிங்கில வேட்டை சர்வதேசிய அளவில் 1946 இல் தடை செய்யப்பட்டது.
அவுஸ்திரேலியா குவின்சிலாந்து மாநிலத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் என்ற பிரதேசம் அவுஸ்திரேலியர்களின் விடுமுறைப்பிரதேசம் ஆகும். அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த நாங்கள் ஓரளவு எங்களை நிலைப்படுத்திய பின்பு பிள்ளைகளோடு சென்ற முதலாவது விடுமுறைக்கான பிரதேசம் இதுவே.
இங்கு டிஸ்னி உலகத்தின் மாதிரியாகச் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும்(Warner Bros Movie World ,WhiteWater World )பல இடங்கள் உள்ளன. இதைவிட அவுஸ்திரேலியர்கள் தேன் நிலவுக்கு வரும் பிரதேசம். அழகான கடற்கரை , வசதியான ஹோட்டல்கள், காசினோ என இருந்ததால் ஆரம்பத்தில் யப்பானியர்கள் வந்தார்கள் அதன் பின்பு போதைவஸ்துகள், விபசாரங்கள், மோட்டார் சைக்கிள் சண்டியன்கள் என பின்னிரவுத் திருடர்களாக பலதும் உள்நுழைந்தன.
சமீபத்தில் உலகமெங்கும் இருந்த பொருளாதாரப் பிரச்சினையால் யப்பானியர்கள் வருகை நின்றுவிட்டது. பொலிசாரும் வேகமாக போதைவஸ்துகளைப் பிடித்து, மோட்டார் சைக்கிள் சண்டியர்களை குறைத்துவிட்டார்கள் .
தற்பொழுது சீனர்களும், மேற்கு நாடுகளுக்கு போகாமல் இங்கு வருகைதரும் வளைகுடா அரேபியர்களுமே அதிகம்.
கோல்ட்கோஸ்டில் ஹோட்டல்காரர்கள் சீனர்களிலும் பார்க்க வளைகுடா அரேபியர்களை வரவேற்கிறார்கள். காரணம் சீனர்கள் ஒரு பிள்ளையோடு வருவதால் அவர்கள் ஒரு டாக்சி மற்றும் ஒரு ஹோட்டல் அறையைப் பதிவு செய்யும்போது, வளைகுடா அரேபியர்கள் பல மனைவியர், தாய், தந்தை, பிள்ளைகளுக்காக பெரிய வாகனங்களையும் ஹோட்டலின் பல அறைகளையும் பதிவு செய்வார்கள். உணவருந்தப்போனால் உணவுச்சாலையை ஒரு குடும்பமே நிரப்பி விடுகிறார்கள் என மிகவும் சந்தோசமாகச் சொன்னார் அந்த வானின் சாரதி. பெரும்பாலும் கோல்ட்கோஸ்டில் டாக்சியாக வான்களே ஓடுகின்றன .
எனது உனையே மயல்கொண்டால் நாவலின் முதல் அத்தியாயம் கோல்ட கோஸ்டில் இருந்தே தொடங்குகிறது. மிருகவைத்தியர்கள் மாநாடு நடந்தபோது அங்குள்ள ஜூபிட்டர் காசினோவில் தங்கியிருந்ததை வைத்தே அந்த நாவல் உருவாகியது.
மூன்றாம்முறை மனைவியுடன் கோல்ட கோஸ்டில் இருந்த ஒரு தீவில் தங்கியிருந்தேன். இம்முறை அவுஸ்திரேலியா கலை இலக்கிய சங்கத்தின் எழுத்தாளர் விழா இங்கு நடந்ததால் மனைவியுடன் நான்காவது முறையாகச் சென்றேன். ஒவ்வொரு முறையும் சென்றாலும் ஏதாவது புதிதாக பார்க்கவும் கோல்ட் கோஸ்டில் இடமுள்ளது.
—0—

மறுமொழியொன்றை இடுங்கள்