பழைய புத்தகக்கடைகளை எட்டிப் பார்க்கும் பழக்கம் சிறுவயதிலே இருந்து தொடர்கிறது. இதை பர்மாவிலும் தொடர்ந்தேன். முக்கியமாக எந்த ஆங்கிலப்புத்தகம் கிடைக்கும் என்பது எனது நோக்கமாக இருக்கம். புத்தகங்கள் மூலம் நாட்டின் வரலாறு, கலாச்சாரத்தை மேலும் புரிந்துகொள்ள எத்தனிப்பேன்
யங்கூனில் ஒரு பழைய புத்தக கடையில் இருந்த ஆங்கிலப்புத்தகம் ஜோர்ஜ் ஓர்வலால் எழுதப்பட்ட பர்மிய நாட்கள்(Burmese Days). தனது புத்கம் இந்த அளவு பர்மாவில் புகழ்பெறுமென ஜோர்ஜ் ஓர்வல் நினைத்திருக்கமாட்டார். நாவலில் ஆங்கில காலனி ஆதிக்கத்தையும் அதை நடத்திய பிரித்தானியரையும் அவர்களது சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளின் கோரமான முகத்தைக் காட்டியிருந்த போதிலும், அதில் வரும் பர்மியர்கள் பெருமைப்படும் விதமாக இல்லை.
நீதிபதியாக வருபவர் முக்கிய சதிகாரனாகவும், கதாநாயகனான புளோரி என்ற ஆங்கிலேயரின் காதலியாக வரும் பர்மியப்பெண் பணத்திற்காக உடலுறவு கொள்பவளாகவும் , திருடுபவளாகவும் சித்தரிக்கப்படுவார்கள். மாறாக இந்திய மருத்துவர் சிறப்பான குணத்துடன் வருகிறார்
இந்தியாவில் பிறந்த ஓர்வெல் இங்கிலாந்தில் படித்த பின்பு பர்மாவில் பொலிசாகிறார். அக்காலத்தில் இந்திய அரச பொலிஸ் சேவை எனப்படும் (Indian Imperial police service- 1922 ) இல் சேர்ந்த ஓர்வல், ஐந்து வருடம் பர்மாவில் வேலை பார்த்துவிட்டு இங்கிலாந்து செல்கிறார். எழுத்தாளராக வரவேண்டுமென்ற இலட்சியத்துடன் லண்டன், பரிஸ் நகரங்களில் அலைந்தார்
அவரது முதலாவது நாவல் பர்மீய நாட்கள் பதினைந்து வருடத்துக்கு முன்பு படித்தேன். பர்மா போய் வந்த பின்பு மீண்டும் படித்தபோது புதிதாக இருந்தது. பர்மிய கலாச்சாரத்தை, பர்மிய மனிதர்கள் மற்றும் நில அமைப்பைப் பார்த்த பின்பு நாவல் திரைப்படமாக மனத்தில் விரிந்தது.
காட்டிலாகா மர வியாபாரத்தில் வேலைசெய்யும் இளம் உத்தியோகத்தரின் நிறைவேறாத காதல் கதை. பிரித்தானிய காலனி ஆட்சி பர்மியர்களையும் இந்தியர்களையும் விலங்குகளாக நடத்துவதைப் பகைப்புலமாக கொண்டது. ஓர்வெல் ஆரம்பத்தில் கம்யுனிஸ்ட்டாக இருந்து, ஸ்பெயின் சிவில் போரில் கலந்து கொண்டு காயமடைந்தவர். பிற்காலத்தில் கம்யுனிசத்தின் அதிகார கோரமுகத்தை சோவித் ரஸ்சியாவில் பார்க்க முடிந்ததால் விலங்குப்பண்ணை , 1984 என இரு நாவல்கள் உருவாகிறது.
பர்மாவில் இராணுவ ஆட்சி நடந்தபோது பர்மாவைப்பற்றி பர்மீய நாட்கள் மட்டுமல்ல , மற்றைய இரண்டு நாவல்களும் சேர்த்து மூன்று நாவல்கள் பர்மாவை நோக்கி எழுதியதாகப் பிற்கால பர்மியர் நகைச்சுவையாகக் கூறுவதுண்டு.
மண்டலேக்கு அருகில் உள்ள கற்பனையான ஒரு சிறிய நகரத்தில் கதை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. புளோரி என்ற இளம் காட்டிலாகா அதிகாரி பத்து வருடங்கள் அங்கிருக்கிறார் . அவருக்கு வீராசாமி என்ற இந்திய டாக்டர் நண்பராகிறார். பிரித்தானியர் மட்டுமே அங்கத்தவர்களாக இருக்கும் கிளப்பில் இந்திய டாக்டர் வீராசாமியை சேர்ப்பதற்கு புளோரி ஆதரிக்கிறார். அதை மற்றைய பிரித்தனிய அங்கத்தவர்கள் எதிர்க்கிறர்கள். இந்த நிலையில் அந்த நகரத்தில் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் பரமியர் பல சதிகளை செய்து வீராசாமியையும் புளோரியைம் ஓரம் கட்ட முனைகிறார்.
புளோரிக்கு ஒரு பர்மிய பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இந்த நேரத்தில் எலிசபெத் என்ற அழகிய ஆங்கிலேயப் பெண் வருகிறாள். அவளின் மேல் தீராத காதல் கொள்கிறார் புளோரி. ஆனால், எலிசபெத்திற்கு புளோரியின் மீது காதலில்லை. எலிசபெத்திற்கு எப்படியும் ஒரு ஆங்கிலேய ஆண் திருமணத்திற்கு வேண்டும். புதிதாக வரும் இராணுவப் பொலிஸ் அதிகாரி வொரல் மீது அவளுக்கு காதல் உருவாகிறது. இதை அறிந்து மனமுடைந்த புளோரி வேலை நிமித்தமாக காட்டுக்கு சென்று விடுகிறன். கடன்பட்டிருந்த வொரல் அவளிடம் சொல்லாமல் இறுதியில் பர்மாவை விட்டுக் கிளம்பியதால் மீண்டும் எலிசபெத், புளோரியின் மீது கவனம் செலுத்தி திருமணத்திற்குத் தயாராகும்போது, பர்மிய நீதிபதியால் அனுப்பப்பட்ட புளோரியின் பழைய காதலியாகிய பர்மியப் பெண் தனது உறவை எல்லோருக்கும் முன்னிலையில் போட்டு உடைத்தபோது , எலிசபெத் புளோரியை வெறுத்து விலகுகிறாள். காதலில் தோல்வியடைந்த புளோரி, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்வதாக கதை முடிகிறது.
இந்த நாவலின் மூலம் நூறு வருடங்களுக்கு முன்பான பர்மாவை பார்த்து தற்போதைய பர்மாவுடன் ஒப்பீடு செய்ய முடிந்தது. புத்தகங்கள் எதுவித அசைவுமின்றி இருந்த இடத்திலே எம்மைப் பல இடங்களுக்குக் கொண்டு செல்கிறது என்ற உண்மையை பார்க்க முடிந்தது.
18ஆம் (1774) நூற்றாண்டில் எழுதப்பட்ட (The Sorrows of Young Wether – Johann Wolfgang von Goethe) ரொமான்டிக் நாவல் ஐரோப்பாவில் பரபரப்பானது. ரோமான்டிக் காலத்தின் முக்கிய இலக்கியமாகப் பேசப்படுகிறது. அதுவும் காதலில் தோல்வியடைந்த ஆண் தற்கொலை செய்வதாக முடிந்தது. கடிதங்களாக(Epistolary) எழுதப்பட்ட இந்த நாவலின் தாக்கத்தால் அக்காலத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இதன் ஆசிரியரை நெப்போலியன் சந்தித்தாக வரலாறு உள்ளது. அந்த நாவலிலும் பார்க்க பர்மிய நாட்கள் மிகவும் வலிமையாக எழுதப்பட்டது. ஆனால் இந்த நாவல் 150 வருடங்கள் பிந்திவிட்டது.
இதேபோல் லியனேட்வுல்வ் (Leonard Woolf)-(Partner of Virginia Woolf) இலங்கையில் அரச அதிகாரியாக இருந்தபோது எழுதிய காட்டில் ஒரு கிராமம் ( The Village in the jungle) என்ற நாவல் காலனித்துவத்தின்கீழ் அம்பாந்தோட்டைப்பகுதியில் துன்புறும் மக்களின் பார்வையில் எழுதப்பட்டபோதிலும் இந்த நாவல் ஜோர்ஜ் ஓர்வலினது பர்மீய நாட்கள்போல் பிரசித்தமாகவில்லை.
இக்காலத்திலும் நல்ல நாவல்கள் பேசாப் பொருளாவதும் சில நாவல்கள் பல்வேறு காரணங்களால் பேசப்படுவதும் இப்பொழுது மட்டும் நடக்கிறது என்பது என்று குறைப்படுவதில் அர்த்தமில்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்