அதீத கற்பனையும்(Fantastic) அரசியல் நையாண்டியும் ( Political satire) கலந்த ஒரு நாவல் வடிவம் தமிழில் அரிது. ஆனால் அதீத கற்பனையாக விஞ்ஞானக் கதைகளை வாசித்திருக்கிறேன். அதீத கற்பனையான விஞ்ஞானச் சிறுகதைகளை சுஜாதா எழுதியிருக்கிறார்.தமிழில் அரசியல் நையாண்டி மிகவும் அரிது
ஆங்கிலத்தில் சிறுகதைகளின் தொடக்கத்தில் எட்கார் அலன் போ (EdgarAllanPoe) மனிதர்களின் பயத்தை, அதாவது மனப்பிராந்தியை வைத்துக் கதை பின்னிய சிறுகதை எழுத்தாளர்.
குழந்தை இலக்கியத்தில் இந்த அதீதகற்பனை உருவாகியது தவளையொன்றை இளவரசி முத்தமிட்ட பின்பு அந்தத் தவளை இளவரசனாக மாறுவது என்பதெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தது.
பிற்காலத்தில் விஞ்ஞான நாவல்கள் இப்படியான அதீத கற்பனையை, ஏன் விஞ்ஞான அறிவில் நடக்கக்கூடியதாக இருக்கக்கூடாது என்ற நிலையில் பல விஞ்ஞானக்கதைகள் உருவாகின. எஜ். ஜி. வெல்சின் த இன்விசிபிள் மனிதன்(Invisible man) அதற்கான உதாரணம். அதைவைத்து மைதிலி என்ற என்ற தொடர்கதையை கே.வி .எஸ். வாஸ் மித்திரனில் எழுதியிருந்தார். சில அத்தியாயங்களை வாசித்திருக்கிறேன். இவையெல்லாம் எளிய கதைகள்.
பிராங் காஃப்கா அதீத கற்பனையை மிகச்சிறந்த இலக்கியமாக்கியவர். இவரது மெற்றமோசிஸ் என்றஉருமாற்றம் பற்றிய கதை மிகவும்பேசப்படுவது. இதில் சாதாரணமான ஒரு மனிதன் கரப்பான் பூச்சியாகிறான். இவனது நிலையப் பார்த்து குடும்பத்தினரது மனதில் ஏற்படும் மனவியலாலான தாக்கம் அழகாக சித்தரிக்கப்படுகிறது.பின்பு அவன் இறக்கும்போது அங்கு இறைச்சிக்கடை பணியாளர்கள் வந்துபோகிறார்கள் என்பது இவனது உடல் என்னவாகிறது என்பதை விளக்கும். ஒரு முதலாளித்துவ உலகில் மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதை படிமமாக்கியதே இந்தக் கதை. கிரகர் சம்சார என்ற பெயரில் உள்ள சம்சார (சமஸ்கிருதமொழியில்)எனும் உருமாற்றத்தை குறிக்கும் இதே போல் காஃப்காவின் கன்றி டாக்டர் மிக அழகான அதீத கற்பனை கலந்த கதை. வீட்டில் இருந்த பெண்ணை நினைத்தபடி ஆண் சிறுவனது காலின் காயத்தை பார்க்கும்போது டாக்டருக்கு அந்தக் காயம் பெண்குறியாகத் தெரியும்.
உண்மையில் எல்லா விஞ்ஞான நாவல்களுக்கும் ஒரு பாட்டியாக இருப்பவர் மேரி ஷெல்லி. இவரே விக்ரர் பிராங்கன்ரைன் என்ற நாவலை உலகிற்கு(1818) தந்து இப்படியான ஒரு இலக்கியப்பகுதியை உருவாக்கியவர்.
எமது இலங்கையில் வாழ்ந்த ஆர்தர்.ஸி கிளாக் இதை ஸ்பேஸ் ஓடிசியா என எழுதினார். இதன்பின்னர் ஏராளமாக அப்படியானநாவல்களும் படங்களும் வந்து நிறைந்து விட்டன .
இப்படியான ஒரு கருத்தை வைத்தே ஜெ.கே. இன் கந்தசாமியும் கலக்சியும் எழுதப்பட்டுள்ளது .
ஜயன்ஸ்ரினின் சார்புக் கொள்கையில் தூரமும் நேரமும் ஒன்றோடு ஒன்று சார்ந்தவை என்பதை வலியுறுத்துகிறது. உதாரணமாக நான் வெளிக்கிரகத்திற்குப் பயணம் செய்துவிட்டு விரைவாக வந்தால் எனது பிள்ளைகளை முதியவர்களாகச்சந்திப்பேன்.
2010 ஆண்டின் பிறகு இலங்கையில் யுத்தம் முடிந்த பின்பாக இந்தக் கதை தொடங்குகிறது. முடியும்போது விஜயனும் அவனது தோழர்களும் இலங்கைக்கு வருவதில் முற்றுப்பெறுகிறது.
நாவல் அறிமுகத்தில் கதையைச் சொல்வது தவறு.
இந்தக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் யாழ்ப்பாணத்துக்கான விசேடமான சொற் பிரயோகங்கள். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்கள், தமிழ்நாட்டு வாசகர்களுக்காகத் தமிழ் திரைப்படத்தில் இப்பொழுது பேசம்படும் தமிங்கில வார்த்தைகளைப் பாவித்து எழுதுவார்கள்.
இதைப் பல முதிர்ந்த எழுத்தாளர்களே எழுதும்போது எனக்குக் கவலை வந்துள்ளது. இலக்கியம், மண்ணின் விளைபொருள். அதைவிட நமது யாழ்ப்பாணத்துச் சொற்கள் மற்றையபிரதேசத்து மொழி வழக்கிலும் உன்னதமானது. நான் மறந்த பல யாழ்பாணச் சொற்கள் இந்நாவலில் பாவிக்கப்பட்டுள்ளது. அவற்றை வாசிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தக் கதையில் எனது மனதை நெருடிய விடயம், நான் ஏற்கனவே சொல்லியதுபோல் இது அரசியல் நையாண்டி நாவல். ஆனால், இதில் வரும் சுமந்திரன், மகிந்த, மிகின் என்ற வார்த்தைகள் இல்லாதிருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
1984 இல் ரஷ்ஷியாவில் இருந்த கொம்யூனிசத்தை நையாண்டி செய்து ஜோர்ஜ் ஓர்வலால் எழுதப்பட்ட அரசியல் சார்ந்த அதீத கற்பனை நாவல்தான் 1984. ஆனால், எந்த இடத்திலும் ஜோசப் ஸ்ராலினது பெயர் நாவலில் வரவில்லை. அதே போல் அல்பேர்ட் காமு எழுதிய பிளேக், இரண்டாவது உலக யுத்தத்தில் நாசிகளை பிளேக்காக உருவகித்து எழுதப்பட்டது. சமீபத்தில் வாசித்த நாவல்.
அங்கு எந்த இடத்திலும் ஹிட்லரோ அல்லது ஜெர்மனியின் பெயரோ குறிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் நாடுகள் மாறலாம். அரசுகள் மற்றும் தனிமனிதர்கள் மாறினாலும் இலக்கியம் பலகாலத்திலும் பல இடத்திலும் பொருந்தவேண்டும்.
இந்தப் பெயர்களை இப்படி எழுதினால் மட்டுமே தமிழ்வாசகர்களுக்கு புரியும் என்பது ஜெ.கே.யினது எண்ணமாக இருக்கலாம்.
அதீத கற்பனை கலந்த விஞ்ஞான மற்றும் நையாண்டி அரசியல் படைப்புகள் தமிழில் அரிது. அந்தவிதத்தில் இதனை முன்னோடி நாவலாகக் கருதலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்