Life may be difficult; Circumstances may be impossible. There may be obstacles but we are responsible. We cannot shift that Burdon into God or Nature.
ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போகும் மனிதன் பத்து அல்லது பன்னிரண்டு பேருடன் மட்டுமே காட்டுக்குப் போவான் காரணம் உயிர்ப்பாதுகாப்பு. அதற்கு மேலானவர்கள் இருக்கும் போது போட்டி, பொறாமை என ஏற்படும். இந்தக் காரணங்கள் நாகரீகமான காலத்திலும் பொருந்தும். என்னைப் பொறுத்தவரை நட்பு வட்டத்திலும் இந்த விடயம் சிறுவயதில் இருந்தே பொருந்தியுள்ளது.
பெரும்பாலான எனது நண்பர்கள் சிறுவயதில் இருந்து வருபவர்கள். அவுஸ்திரேலியா வந்த பின்பு நட்பாகியவர்களில் முக்கியமானவர் நண்பர் முருகபூபதி. புத்திரிகைத்துறையில் இருந்து வந்தவர். நான் இலங்கையில் பத்திரிகையையோ, சஞ்சிகையையோ வாசிப்பதோடு அதற்கப்பால் சிந்திக்காதவன்.
87 ல் மெல்பேனில் ஒரு சுருக்கமான சந்திப்பின் பின்பு நான் மேல் படிப்பதற்காக சிட்னி போய்விட்டேன். மெல்பேனில் சந்தித்த காலத்தில் அவர் மக்கள் குரல் என்ற பத்திரிகையில் சம்பந்தப்பட்டிருந்தாலும், எனக்கு அதில் பங்கில்லை.
இந்திய ஒப்பந்தததற்கு ஆதரவாக நண்பர் சிவநாதன், திவ்வியநாதன் மற்றும் சிலர் இணைந்து ஆதரவு கொடுக்க முருகபூபதி நடத்திய கையெழுத்து பத்திரிகை. இப்பொழுது நிலைமையில், இலங்கையில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தைஆதரித்தவர்கள் எவ்வளவு தீர்க்கதரிசனமாக செயற்பட்டார்கள் என்பதும், அதை எதிர்த்தவர்கள் எங்வளவு முட்டாள்களாக இருந்தார் என்பது காலம் நமக்கு விளக்கியுள்ளது. ஆனால் அக்காலத்தில் ஆதரித்தவர்கள் துரோகிகளாக கணிக்கப்பட்டார்கள்.
மக்கள்குரல் பத்திரிகையைத் தொடக்குவதற்கு சிலகாலம் முன்பு முருகபூபதியை இங்குள்ள விடுதலைப்புலியாதரவு ஈழத்தமிழ்சங்கம் வருந்தி தங்கள் சங்கத்தின் சஞ்சிகைக்கு ஆசிரியராக வரும்படி அழைத்தார்கள் ஆனால் முருகபூபதி மறுத்துவிட்டார். இது எளிதான விடயமல்ல. சோழர்களின் பொற்காலத்தில் இராஜராஜசோழனோ இல்லை அவரது மகன் இராஜேந்திரனே அழைத்து கவிஞர் ஒருவருக்கு அரசவை கவிஞராக கொடுக்கும் பொறுப்பு போன்றது. அக்காலத்தில் புலிக்கொடி பறக்க மெல்பேனில் தமிழ்ச்சங்கம் இருந்த காலம்.படித்து பட்டம் பெற்றவர்கள் புகழுக்கு மயங்கிய காலத்தில்அதை நிராகரித்தது ஒரு தீர்க்கதரிசனம்.
நான் சிட்னியில் இருந்தபோது மக்கள்குரல் பத்திரிகையில்ஆங்கிலத்தில் இந்திய அரசைப் பற்றி எழுதிய கட்டுரையே எனது முதல் எழுத்து வடிவம். அதன்பின்பு அக்காலத்தில் ஈரோஸ் இயக்கத்தால் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூகசேவகருமான கந்தசாமி அவர்களின் இரங்கற்கூட்டத்தில் பேச டாக்டர் பிரையன் செனிவவிரத்தினாவுடன் மேடையேறினேன்.எனது எழுத்து, மற்றும் மேடையேற்றத்திற்கு உதவியவர் நண்பர் முருகபூபதி.
இந்த எழுத்து, மேடை ஏற்றம் எனது மனைவிக்குப் பிடிக்காது ஆனாலும் முருகபூபதியை என் மனைவிகுறை சொல்லாதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. அக்காலத்தில் சிட்னியில் எங்கள் வீட்டிற்கு வந்த முருகபூபதியே எனது பிள்ளைகளை முதல் முதலாக மக்டொனாலட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்த மக்டொனல்ட் விடயம் மிகவும் முக்கியமானது. எனது மனைவி என்னை எழுத்துத்துறையில் இழுத்துச் சென்று பழுதாக்கியதாக அடிக்கடி சொன்னாலும் முதலாவதாக மக்டொனாலாடடுக்கு முருகபூபதி கொண்டு சென்றதை அடிக்கடி நினைவு கூருவது வழக்கம். பெண்களின் உலகம் எப்பொழுதும் தனது குழந்தைகளை சுற்றிவரும்தானே.
இப்படியாக அறிமுகமான முருகபூபதியுடன் 29 வருடங்களாக நட்பு நீடிக்கிறது. அவரது 65 வயதான நிலமையில் நாங்கள் இருவரும் சேர்ந்து செய்த விடயங்களை நினைவு கூருவது நல்லது என நினைக்கிறேன்.பலரை நினைவுக் குறிப்பாக எழுதி, உலகிற்கு அறிமுகமாக்கிய அவரை பற்றிய எனது நினைவுகள் இக்காலத்தில் வருவது முக்கியமானது.
கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக இருவரும் பலவிடயங்களில் ஒன்றாக ஈடுபட்டோம். அவற்றில் தர்க்கங்களும், வாதங்களும் செய்தாலும் சேர்ந்து நடந்த தூரங்கள் அதிகமானவை.
இலங்கை மாணவர் நிதியத்தை தனியொருவாக அமைத்து இதுவரை ஆயிரம் மாணவர்களுக்கு உதவி செய்யும் அவரது அமைப்புக்குப் பலர் உதவி செய்தாலும் ,பாரத்தைத் தாங்குவது அவரே. தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அந்த நிதியத்தை ஒரு வருடம் என்னிடம் ஒப்படைத்திருந்தார்.அதிலிருந்து மீண்டபோது, மீண்டும் நிதியத்தைத் தொடர்கிறார். தனி ஒருவரின் முயற்சிகள் காலத்தால் முற்றுப்புள்ளி வைக்கப்படுமென என்பதால், எதிர்காலத்தில் எப்படி இந்த அமைப்பு தொடரும் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு
80 களின் இறுதியில் இருந்து ஏழு வருடங்கள் நாங்கள் வேறு சிலருடன் சேர்ந்து இலங்கைத் தமிழர் அகதிகள் கழகம் என நடத்தியபோது பல காலமாக ஒன்றிணைந்து உழைத்தவர். சமூகத்தில் குறுகிய நோக்கமுள்ளவர்களின் செயலால் அந்தக் கழகத்தை விட்டு இருவரும் வெளியேறியதும் சிலகாலத்திற்குப் பின் அந்தக் கழகம் அழிந்தது.
1997ம் ஆண்டில் உருவாக்கி நடத்திய உதயம் பத்திரிகையில் நான் பெரும் பங்கு வகித்தபோது பலர் வந்து போனார்கள். ஆனால் கடைசிவரையும் என்னுடன் இருந்தவர் முருகபூபதி .அதனால் எனக்கு இலக்கியத்திற்கும் அறிமுகம் ஏற்பட்டது.அந்த 13 வருடங்கள் சாதாரணமானவை அல்ல. ஏராளமான சவால்கள், சச்சரவுகள், பயமுறுத்தல்கள் அத்துடன் வெற்றிகள் என வந்தவை. அவற்றை புத்தகமாக எழுத முடியும்.
போர் முடிந்தபின்பு 2011ல் இலங்கையில் முருகபூபதியின் முன்முயற்சியால் கொழும்பில் நடந்த இலக்கிய மகாநாட்டில் என்னை சம்பந்தப்படுத்தியபோதிலும் ஆத்மரீதியான ஆதரவைத் தவிர எனது முயற்சி எதுவம் இருக்கவில்லை ஆனால் எஸ். பொன்னுத்துரை அதை என்னுடனும் இலண்டன் இராஜேஸ்வரியுடனும் இணைத்து சேறடிக்க முயற்சித்தார்.சமீபத்தில் கூட ஒரு நண்பர் மகிந்த இராஜபக்சவுடன் இலக்கிய மகாநாட்டை சம்பந்தப்படுத்திக் கேட்டபோது சிரிப்பதைத் தவிர எதுவும் சொல்ல முடியவில்லை.
இதை விட 300 மேற்றபட்ட விடுதலைப்புலிகளில் இருந்தவர்கள் மாணவர்களாகப் பரீட்சை எழுத விரும்பியபோது தனிப்பட்ட கல்விக்கு ஒழுங்கு பண்ணுவதற்கு புனர்வாழ்வுக் கமிசனராக இருந்தவர் இலங்கையில் என்னிடம் கேட்டபோது அதை ஏற்படுத்குவதற்கு ,அங்கிருந்து இருந்து முருகபூபதியைத் தொடர்பு கொண்டபோது ஒழுங்குகள் செய்தவர் அவரே. அந்த கல்வி முடிந்தவுடன் அம்மாணவர்கள் பெற்றோருடன் சேர்க்கப்பட்டனர்.
தற்பொழுது இருவரும் ஈடுபட்டிருப்பது தமிழ் இலக்கிய சங்கம் இதில் நான் ஆதரவாளனாகவே செயல்பட்டபோது ஆதார சக்தியாக இருந்தவர். பிற்காலத்தில் அகதிகள் கழகத்திற்கு ஏற்பட்டது போன்ற நிலை படாமல் இருப்பதற்காக சில நண்பர்களுடன் சேர்ந்து நாம் இயங்குகிறோம்.
தொடர்ச்சியாக இயங்கும் மனிதராக முருகபூபதி இருப்பது அவுஸ்திரேலிய தமிழ்ச்சமூகத்திற்கு மட்டுமல்ல அவரது நண்பர்களுக்கும் நன்மையே . மாவை நித்தியானந்தன் முருகபூபதியை பற்றி அடிக்கடி சொல்லும் விடயம் ‘பூபதி தனிமனினல்ல, ஒரு இயக்கம்’ என்பார்.
இப்படிப் பல பொதுவேலைகளில் ஒன்றாக இயங்கிய நான், கனடா, கியூபா, இலங்கை எனப் பலநாட்கள் அவருடன் சுற்றுப்பிரயாணமும் செய்திருக்கிறேன். அதிக திட்டமிடல் இன்றி ஒரு வித அலட்சியத்தோடு செல்லும் என் போன்றவர்களுக்கு முருகபூபதியோடு செல்வது இரண்டாவது பாஸ்போட்டுடன் செல்வது போன்றது. வழக்கமாகப் பயணம் செய்யும்போது பொதிகள், பாஸ்போட் என்பவற்றில் எனது மனைவி கவனம் செலுத்துவார் முருகபூபதி அந்த பொறுப்பைத்தானே எடுத்து விடுவதுமல்ல, ஒவ்வொரு முறையும் பயணம் செய்யும்போது கவனம் சொல்லி அனுப்பும் ஒரு மனிதன்.
பல நிறைகளுள்ள மனிதனாக இருக்கும் நண்பர் முருகபூபதி மற்றவர்களையும் அதேபோல எதிர்பார்ப்பார் மற்றவரால்அவை முடியாது போனதும், ஏமாற்றமடைவதும் துரோகங்களைக் கண்டு கொதிப்பதும் அவரது இயல்பு.
மனிதர்கள் வாழும்போது நடப்பவற்றுக்கு அவர்களே பொறுப்பு என்பதுடன் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களது உணர்வுகளுக்கு ஏற்ப வாழ்தலே இருத்தல் எனப்படும் எக்ஸிஸ்ரன்ஸலிசம் (Existentialism) எனப்படும்.அரிஸ்ரேட்டல் இருந்து நீட்சே எனப் பலர் கூறிய விடயங்கள் அடிப்படையில் இவையே . இதை ஏற்று வாழும்போது சமூகத்தில் இருந்து அன்னியமாக வாழ்வது முடியாத காரியம். அப்படி வாழ்ந்தால் அது இந்து மத, அல்லது புத்த மத துறவறமாக(Disconnected from the society) முடியும். என்னைப் பொறுத்தவரை சமுகத்தோடு சேர்ந்து அத்துடன் அந்த சமூகதேவைகளோடு ஒரு தனிமனிதன் இணைந்து வாழலாம், வாழமுடியும் என்பதற்கு நண்பர் முருகபூபதிஉதாரணம்.
நன்றிகள்: ஞானம் சஞ்சிகை – இலங்கை
மறுமொழியொன்றை இடுங்கள்