<img
80 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த வாவி சான் மாநிலத்தில் (Shan province) சுற்றியுள்ள மலைகளில் இருந்து உருவாகியது இது கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது. யங்கூனில் இருந்து 660 கிலோமீட்டரில் உள்ள மலைப்பிரதேசமானதால் வெப்பம் குறைந்த இடம். இங்கு உல்லாசப்பிரயாணிகள் அதிகம் வருகிறார்கள். இந்த வாவியின் அருகே பல கிராமங்கள் சிறிய நகரங்கள் உள்ளது. புதிய ஹொட்டேல்கள் கட்டப்பட்டுள்ளது.
நாங்கள் தங்கிய ஹொட்டேல் வாவியின் கரையில் உள்ளது. காலையிலும் மாலையிலும் அந்த வாவியில் நடக்கும் தோற்ற மாற்றங்கள் மிகவும் அழகானவை. வானவில்லின் ஏழு நிறங்களும் தோன்றி கணத்திற்குக் கணம் மாறியபடி சூரியஒளியால் பெரிய நாடகமே நடக்கும். அந்த நாடகத்தில் நடிக்க ஏராளமான பறவைகள் வந்திறங்கும். வாவியில் ஓடும் வள்ளங்கள் அதில் உள்ள மனிதர்களும் பாத்திரமாக மிதப்பார்கள். அறையின் பல்கனியில இருந்தபடி பார்த்தால் தேவலோக இந்திரலோகம் என்பதெல்லாம் எண்ணத் தோன்றும்.
அதிக ஆழமில்லாத வாவியில் சிறிய கட்டுமரத்தில் வலை வீசி மீன் பிடிக்கும் போது கையில் உள்ள துடுப்பை ஒரு காலால் வலிப்பார்கள். இந்தக் காட்சியை பிபிசி தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியத்துடன் நேரில் பார்க்க வேண்டுமென நினைத்தேன். அங்கு சென்றபோது இந்தக் காலால் வலிப்பது அங்குள்ள புத்தகோயிலுடன் சம்பந்தப்பட்டது என்பதை அறிந்தேன்.
வாவியின் கரையில் ஒரு அழகான புத்த கோயில் உள்ளது அந்தப் புத்த கோயிலின் நடுவே ஐந்து சந்தனமரத்தால் செய்யப்பட்ட சிலைகள். ஆனால் தற்போது சிலை போலில்லை காரணம் அந்தச் சிலைகளின் மீது தங்க இலைகளைப் பக்தர்கள் ஒட்டுகிறார்கள். அதன் அருகே சென்று பார்த்துக் கொண்டிருந்த என்னிடமும் பர்மியர் ஒருவர் ஐந்து தங்க இலைகளைத் தந்து அந்த புத்தசிலைகளில் ஒட்டச்சொன்னார். நானும் ஒட்டினேன்.
‘கடவுளைப் பூசிப்பவர்கள் மத்தியில் பர்மியர்கள் மட்டுமே தங்கத்தால் புத்தரை பூசிப்பவர்கள் எனநினைக்கிறேன. அது மட்டுமல்ல கிட்டத்தட்ட பத்து அமரிக்க டாலர்கள் மதிப்பான தங்க இலைகளை அறிமுகமில்லாத என்னிடம் தரக்கூடியவர்கள்’ என எமது வழிகாட்டும் பெண்ணிடம் சொன்னேன்
‘தங்கம் பர்மா முழுவதும் கிடைக்கும். வீடு கட்ட , கிணறு கிண்ட என நிலத்தைத் தோண்டும் இடமெல்லாம் கிடைக்கும்.
என சாதாரணமாக சொல்லிவிட்டு அதிசயமானகதை ஒன்றை அதாவது நமது பாஷையில் அந்தப் புத்த கோயிலைப் பற்றிய தலவரலாற்றைச் சொன்னாள்
11ம் நூற்றாண்டில் பகானை ஆண்ட மன்னன் இன்லே வந்தபோது அரக்கப் பெண் தனது குழந்தையை வாவித் தண்ணீரில் தவறவிட்டதால் அழுதபடி நின்றான். அதைக் கண்ட மன்னன் மனமிரங்கி இன்லே வாவியின் காவல் தெய்வத்தை மந்திரத்கோலால் அழைத்து, அரக்கப் பெண்ணின் குழந்தையைக் கொண்டு வரும்படி பணித்தான். குழந்தையைப் பெற்ற அந்த அரக்கப்பெண் சந்தனமரக்கட்டையையொன்றை அரசனுக்குப் பரிசளித்தாள். இதைப்பெற்ற அரசன் அதில் ஐந்து புத்தர் சிலைகளைச் செதுக்கி அவற்றை வைத்து இந்த இன்லே வாவியின் அருகே கோயிலை கட்டினான்.
அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் திருவிழாவாக கொண்டாடப்படுவதுடன் இந்த ஐந்து சிலைகளும் தோணியில் வாவிக்குள் படகுகள் மேல் எடுத்து செல்லப்படும் அந்தப் படகுகள் ஒன்றை ஒன்று பிணைத்தபடி செல்லும். படகுகளைச் செலுத்துபவர்கள் காலால் நீரை வலித்தபடி படகை ஓட்டிச் செல்வார்கள்.
1965 ஆண்டு இப்படி படகு ஊர்வலம் சென்றபோது சிலைகளை ஏற்றி முன்சென்ற தோணி நீரில் மூழ்கியது. அந்தத் தோணியில் இருந்தவர்கள் உயிர் பிழைத்ததோடு நான்கு புத்தர்சிலைகளும் அன்றே மீட்கப்பட்டது.
வாவியில் மூழ்கிய ஐந்தாவது சிலை தேடியபோது அன்று கிடைக்கவில்லை. தேடிக் களைத்தவர்கள் அடுத்த நாள் தேடுவது என அவர்கள் திரும்பியபோது அந்த ஐந்தாவது புத்தசிலை வாவியின் நீர்ப் பாசிகள் ஒட்டியபடி கோயிலில் இருந்தது.
அடுத்த வருடம் இதேதினத்தில் ஊர்வலத்தை நடத்த முடியாமல் காற்றடித்தடி ,வாவி இருளாக இருந்தபோது ஊரில் உள்ள பெரியவர்கள் கலந்துரையாடி ஐந்தாவது புத்தசிலையை விட்டுவிட்டு மற்றைய நான்கு சிலைகளை மட்டும் ஊர்வலத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தபோது, காலநிலை சீரடைந்தது.
ஐந்தாவது சிலை புத்தருடையது அல்ல வேறு ஒரு புத்தபிக்குவினது என நம்பப்படுகிறது. அன்றில் இருந்து நான்கு சிலைகளை மட்டும் ஊர்வலத்திற்குக் கொண்டு செல்லும் வழமை இன்னும் தொடர்கிறது.
இந்த வாவியில் உள்ள மீன் உருசியானது என்கிறார்கள். இந்த வாயின் பக்கத்தில் பெரிய சந்தையுள்ளது. அங்குச் சந்தையில் மீன்களை வைத்திருந்தார்கள்.
இந்த வாவியின் அடியில் வளரும் பாசி எடுக்கப்பட்டு காய்கறிப் பயிருக்கு உரமாகப் பாவிக்கிறார்கள். இந்தப் பாசிகளை எடுத்து மேடையிட்டு வாவியின் ஒரு பகுதியில் மிதக்கும் தோட்டத்தை அமைத்துப் பயிரிடுகிறார்கள். இங்கு தக்காளி மிகவும் செழிப்பாக வளர்கிறது. மிதக்கும் தோட்டத்தை மூங்கில் கம்பால் கட்டியபடி இந்த விவசாயம் நடைபெறுகிறது.
இந்த வாவி பறவைகளின் சொர்க்கம். பல இடங்களில் உள்ளுர் பறவைகளையும் இங்கு பார்க்க முடியும் இவைகளைப் பார்ப்பதற்கு நான் சிலமணி நேரம் செலவழித்தேன்
கைத்தொழிலாகப் பட்டுநெய்தல் வெள்ளி ஆபரணம் செய்தல் சுருட்டு சுற்றுதல் எனப் பல வேலைகள் நடைபெறுகிறது. இங்குதான் தாமரைத்தண்டில் நூலெடுத்து அதைப் பட்டுடன் கலந்து உடை தயாரிப்பதை பார்த்தேன்
இந்த வாவியைச் சுற்றிய பிரதேசத்தில் வாழும் சான் மக்கள் தாய்லாந்தினருக்கு இன வழித் தொடர்புள்ளவர்கள். மொழியும் தாய்லாந்து மொழி போன்றது. இவர்களது நிறம் பர்மியர்களிலும் வெளிர்பானது. இவர்களைத் தவிர பழங்குடியினரும் இந்த வாவியின் அண்டைவாழ்கிறார்கள். அப்படி ஒருவகையினர்தான் கழுத்தை சுற்றி செப்புவளையம் போட்டவர்கள். படுக்கும் போதும் அந்தக் கழுத்து வளையங்கள் இருக்குமென்றார்கள்.
வாவிருகே இருந்த எமதுஅறையில் இருந்து பார்க்கும் போது காலையிலும் மாலையிலும் வாவியில் வந்து மீன்பிடிக்கப் பலவகையான பறவைகள் வருவது பார்க்க முடிந்தது.
இந்த இடம் பர்மாவிற்கு வரும் உல்லாசப்பிரயாணிகள் மத்தியில் மெதுவாக பிரசித்தமடைந்து வருகிறது. வெளிநாட்டு கம்பனிகளின் ஹோட்டேல்கள் கட்டப்படுகின்றன.
இந்த வாவியருகே இருநாட்கள் கழித்தபோது பர்மாப்பயணத்தின் உச்சமான நிலையை அடைந்தேன். பறவைகளையும் வாவியையும் பல நாட்களாக இருந்து சலிப்பில்லாமல் பார்க்க முடியும். நானும் மனைவியும் மீண்டும் வருவதற்கு முடிவு செய்தோம்.
மறுமொழியொன்றை இடுங்கள்