


தாய்லாந்தின் வடபகுதியில் உள்ள மலைப்பகுதி அடர்ந்த மரங்கள் வளர்ந்த இயற்கையான வனம். அந்தப்பகுதி கிழக்குத் இமயமலைத் தொடரின் பகுதியாகும். மழைக்காலங்களில் மிகக் குறைந்த சீரோ வெப்பநிலைக்குப் போகக்கூடிய இடம். இந்த இடத்தில்தான் தாய்லாந்தின் உயர்ந்த 2600 மீட்டர் பிரதேசம் உள்ளது. இதைச் சுற்றியுள்ள வனத்திற்கு டொய் இந்தனன் (Doi Inthanon) என்ற பெயரில் தாய்லாந்து அரசால் பாதுகாக்கப்படுகிறது. சங் மாயை ஆண்ட கடைசிக் குறுநில மன்னனது பெயரால் இந்தவனம் அமைந்துள்ளது. இந்த வனத்தில் பிரத்தியேகமான தாவரங்களும், மிருகங்களும் ஏராளமான உள்ளன. தாய்லாந்தின் சில பழங்குடி மக்கள் இந்தக் காட்டை அண்டிய பகுதியில் வாழ்கிறார். அவர்களுக்கு மட்டும் அங்குள்ள ஜீவாதாரத்தை பெற உரிமையுள்ளது. தற்போது அங்குள்ள மக்கள், சிறிய நிலங்களில் விவசாயம் மற்றும் கைத்தொழிலை செய்வதால் அந்தக்காடுகள் மனிதர்களினது கரங்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
இந்தப் பகுதியை பார்ப்பதற்குச் சென்றபோது கிட்டத்தட்ட ஆறு மணிநேரப் பயணம். இந்தப் பயணத்தில் எனது வாகனத்தில் வந்தவர்கள் எல்லோரும் ஐரோப்பிய இளம் பெண்கள். அவர்கள் ஜெர்மனும், டச்சு மொழி பேசுபவர்கள்.
மனைவியை விட்டு தனியாக போனதால் பேச்சுத்துணைக்கு ஆள் இல்லை. இருபத்தைந்து வயதான பெண்பிள்ளைகளுடன் என்ன பேசமுடியும் என எண்ணியபடி இருந்தபோது ஆசிய முகத்துடன் பிரித்தானிய தொனியில் வாழ்த்து சொல்லியபடி 40 வயது மதிக்கத்தக்கப் பெண்மணி பக்கத்தில் அமர்த்தாள் .
தனது பெயர் ஜோகி என்று அறிமுகமாகிவிட்டு முதல் நாள் சென்று பார்த்த யானைகளின் ஓய்வில்லத்தை பற்றி விவரித்தாள். வயதான யானைகளை எவ்வளவு கவனமாக பார்க்கிறார்கள் என தன்னோடு வந்த இரண்டு இத்தாலிய மிருக வைத்தியர்கள் சொன்னார்கள் என்பதைக் கூறினாள். யானைகளின் அறிவுக்கூர்மை, அங்கு நடக்கும் வைத்திய முறை என்பவற்றைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக விபரமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளது பிரித்தானிய தொனியை கேட்டுக்கொண்டிருக்கலாம் போலிருந்தது. தனியாக போரடித்தபடி இருந்த எனக்கு அவள் பேச்சு பொழுது போக்காக இருந்து. எனது மனக்கண்ணில் அந்த யானைகளின் ஓய்வில்லத்தைக் பார்க்காத குறையை நிவர்த்தி செய்தாள்
இறுதியில் சொன்னேன்
‘நான் ஒரு மிருகவைத்தியன். யானைகளின் மருத்துவத்தை ஒரு பாடமாக படித்ததுடன் இலங்கையில் அவற்றுக்கு வைத்தியம் செய்தவன்.’
அவளது முகம் மத்தாப்புவாகியது.
‘அப்படியா?’
தாய்லாந்தின் ஓய்வில்லத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன் . சில அவுஸ்த்திரேலியர்கள் தொண்டர்களாக வேலை செய்வது அறிவேன். இலங்கையில் இதேபோல் உள்ளது பின்னவல எனும் ஓய்வில்லம் என எனது தொலைபேசியில் இருந்த படத்தைக் காட்டினேன். யானைகளில் ஆர்வமுள்ள ஜோகி இலங்கைக்கு வருவதாகத் தெரிவித்தாள்.
அவளுடன் பேசிய பின்பாக பின்பு நானும் அந்த யானைகள் ஓய்வில்லத்துக்கு போய்ப் பார்த்திருக்கலாம் என நினைத்தேன்
ஜோகி பேசும்போது கைகளை வீசி, கண்களை வெட்டி, அழுத்தம் திருத்தமாக இங்கிலாந்து பெண்ணாக பேசுவாள். நான் பார்த்தேன், யப்பானிய உடலுக்குள் பிரிதானிய ஆவி நுளைந்திருப்பதுபோன்று இருந்தது. யப்பானிய பெண்கள் மிகவும் பணிவாக பேசுவார்கள்.
ஜோகி இங்கிலாந்தில் படித்து இங்கிலாந்தில் வாழ்பவள்.அவளது பெற்றோர் வெளிநாட்டு யப்பானிய நிறுவனம் ஒன்றில் பல நாடுகளில் வேலையில் இருந்து இளைப்பாறியவர்கள். தனது தாய் தந்தையர் மீண்டும் திரும்பி யப்பானில் வாழ்ந்தபோது அன்னியர்களாக உணர்ந்தார்கள் என்றும், அவர்களால் யப்பானில் சகஜமாக வாழமுடியவில்லை. இறுதியில் தாய்லாந்தில் வாழ்கிறார்கள் என்று சொன்னது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் அந்நியநாட்டில் வாழ்ந்தால் எங்களையறியாமல் நாங்கள் புதிய சூழலை ஏற்றுக் கொள்வதோடு மீண்டும் எமது சொந்த மண்ணில் வாழ்வது கடினமாக இருக்கும். இப்படியான அன்னியத்தன்மையை என்னால் உணரமுடிந்து. புலம்பெயர்வதும் மீண்டும் சென்று வாழ்வதும் இலகுவானதல்ல என்பதை அந்த யப்பானியப் பெண் புரிய வைத்தாள்
நாங்கள் சென்ற வழியில் சிரித்தன ((Sirithan Waterfall) அருவியை பார்த்ததேன் அதுவே சாங்மே நகரில் ஓடும்( Mae Ping River) ஆறாகியது. ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடுகிறது என்றார்கள். இந்த இடத்திற்குச் சென்றபோது மழை பெய்யாத தொடங்கிவிட்டது. மரங்கள் அடர்ந்த ஒளி அதிகமற்ற மிகவும் ஈரலிப்பான பகுதி
நாங்கள் அங்கிருந்து நடந்தபோது ஆதிவாசிகள் குடியிருக்கும் கிராமங்கள் மலையடிவாரத்தில் இருந்தன. அங்குக் கராம்பு மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு இருந்தார்கள்.
டொய் இந்தனன் (Doi Inthanon ) வனப்பிரதேசத்திற்குச் சென்றபோது மழை கொட்டியது. எப்படியும் முன் வைத்த காலை பின்வைக்காது காட்டுக்குள் ஒரு கிலோ மீட்டர் நடந்தோம். உடலை நடுங்க வைக்கும் மழைக்குள் நாங்கள் மரப்பாலங்களில் நடக்கவேண்டும்.
காடு இருண்டு எங்களை தனது வயிற்றுக்குள் விழுங்கிக் கொண்டிருந்தது. நிலவின் ஒளியளவு வெளிச்சம் அங்கு தெரிந்தது. மரப்பாலங்கள் பாசி பிடித்து எப்பொழுது வழுக்கத் தயாராக இருந்தது. குடையைப்பிடிப்பதா, கையால் மரத்தைப் பிடிப்பதா எனத் தடுமாறியபடி ஒரு மணிநேர காட்டுப்பயணம். அங்கு தாய்லாந்தின் விமானப்படையினரது ஹலிக்கொப்டர் விழுந்து நொறுக்கியிருந்தது. அந்த இடத்தை அந்தப்பயணத்தில் இறந்தவர்களுக்கு நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார்கள். என்னைத் தவிர காட்டுக்குள் சென்ற குழுவில் எல்லோரும் இளவயதினர். அவர்களுடன் சென்றதால் அங்கு போய் வந்தேன்
வனப்பிரதேசத்தை விட்டு விலகி 6 கிலோமீட்டர் போனால் தாய்லாந்தின் கூரை எனப்படும் இடத்தில் அங்கு இரண்டு புத்த ஸ்துபிகள் தாய்லாந்து அரசருக்குப் பொன்விழாவிற்காக விமானப்படையினால் 1987 கட்டப்பட்டது. ஒன்று அரசரையும் மற்றயது அரசியையும் குறிக்கும். அவை சித்திர வேலைப்பாடுகளுடன் மிகவும் அழகானவை இவற்றைத்தழுவி அழகாக ஒரு தாவர இயல் பூங்கா உள்ளது. அங்கு நின்றால் மேகங்கள் எமது முகத்தைத் தழுவியபடி செல்லும்.
மறுமொழியொன்றை இடுங்கள்