பன்முக படைப்பாளி சல்மா

ATLAS

தெய்வீகன்

ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பன்முக படைப்பாளி சல்மா அவர்களுக்கும் மெல்பேர்ன் இலக்கிய ஆர்வலர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய சம்மேளனத்தின் (ATLAS) ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இரண்டுநாள் வார விடுறையே போதாது என்றளவுக்கு நிகழ்ச்சிகள் பெருகிப்போயுள்ள புலம்பெயர் வாழ்வில் ஞாயிறு மாலை சுமார் 25 பேரளவில் கலந்துகொண்ட இந்த சந்திப்பு பெருமை மிக்கதாக அமைந்தது. நான்கு மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்ச்சிக்காக மண்டப வாசலில் நின்றுகொண்டிருந்தபோது “முத்துக்குமார் இறந்துவிட்டாராம்” என்று தனது கைத்தொலைபேசிக்கு வந்த தகவலை சொல்லி இடியொன்றை போட்டார் சல்மா. செய்தி உறுதி என்றானவுடன் ஒருவித வெறுமையுடன்தான் சந்திப்பில் போய் அமர்ந்து கொள்ளவேண்டியதாயிற்று.

நிகழ்ச்சியின் தொடக்கமாக சல்மா பற்றிய அறிமுகம் ஒன்றை படைப்பாளி முருகபூபதி வழங்கினார். பின்னர், தனது அரசியல் – இலக்கிய வாழ்க்கை குறிப்புக்கள் பற்றி சல்மா சுருக்கமாக கூறினார். ஒரு இஸ்லாமிய பெண்ணாக சமூகத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கு மேற்கொண்ட போராட்டங்கள் பற்றி அவர் கூறினார். ஒன்பதாம் வகுப்புவரை படித்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்து என்று தெரியாமல், தனது போராட்டங்களை வெளிப்படுத்துவதற்கு இலக்கியத்தை தனது மீட்சிக்கான கருவியாக உபயோகித்த உபாயத்தையும் கடைசியில் அதுவே தனது வாழ்வாகிப்போய்விட்ட சம்பவங்கள் பற்றியும் விவரித்தார். தனது விடாப்பிடியான பெண்ணிய கருத்துக்கள் தனது திருமணத்தையே எவ்வாறு பந்தாடி சென்றது என்பதையும் இறுதியில் அந்த நிகழ்வு நடந்தாலும் அதன் பின்னர் தான் சந்தித்த பிரச்சினைகளையும் எடுத்துக்கூறினார். தனது கணவன் ஊடாக தற்செயலாக வசமாகிப்போன அரசியல் மார்க்கம் தன்னை பிற்காலத்தில் எவ்வாறானதொரு பாதையில் அழைத்து சென்றது என்பதையும் அந்த பாதையை தனக்கேற்றவாறு எவ்வாறு பயன்படுத்த முடிந்தது என்பது குறித்தும் விரிவாக கூறினார்.

தி.மு.க. என்பது ஏன் தனக்கான தெரிவானது என்பதையும் கட்சி அரசியல் ஒரு இலக்கியவாதியின் பாதையில் எவ்வாறான இடறல்களை ஏற்படுத்தியது என்பதையும் விளக்கி சொன்னார்.

அவரது இலக்கிய பணிகளை விட, அவர் மீது படிந்துள்ள தி.மு.க. என்ற விம்பத்தின் மீதான பல விசாரணைகள்தான் சந்திப்பின்போது பலரது கேள்விகளாக அமைந்தது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ள ஒரு கட்சியின் ஊடாக சென்றால் மாத்திரமே தான் அனுபவித்த பெண்ணிய காயங்களுக்கு சிறிதளவு மருந்தாவது தடவ முடியும் என்ற காரணத்தாலும் தனது கணவனின் முன்முடிபான தி.மு.க. கட்சியும்தான் தன்னை கலைஞரை நோக்கி அழைத்து சென்றது என்று கூறினார்.

சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையின் நீட்சியாக பிறகு பெண்ணிய விடுதலை நோக்கிய அவரது அடுத்த போராட்டம் இப்போது எந்த திசை நோக்கி நகர்ந்திருக்கிறது? அரசியலா – இலக்கியமா என்று வருகின்றபோது அவரது தற்போதைய தெரிவு எதனை அண்டியதாக இருக்கும் போன்ற கேள்விகளும் சந்திப்பில் முன்வைக்கப்பட்டன.

அவரது பதில்கள் கூடியளவு யதார்த்தத்தை அண்டியதாக காணப்பட்டன. பெண்ணியவாதிகள் என்றாலே அவர்கள் எப்போதும் ஒரு வித பதற்றத்தோடும் தம்மை எந்த நோக்கத்தில் அணுகுபவர்களின் மீதும் ஒருவித கூட்டுச்சந்தேகத்துடனும் தங்களது பார்வையை முன்வைப்பார்கள். ‘என் பின்னே வாருங்கள்! பெண் விடுதலையை அடுத்த சிக்னல் லைட்டில் வைத்து பார்சல் பண்ணி தருகிறேன்” – என்ற முரட்டுத்தனமான மூர்க்கம் அவர்களது இயல்பான – அதேவேளை போலியான – வேடமாக இருக்கும். அநேகமானவர்களின் இந்த அரிதாரத்தனமான இலக்கியங்கள் பயங்கர அயர்ச்சியை ஏற்படுத்தும்.
ஆனால், சல்மாவின் இயல்பான பேச்சும் அவர் மீதான இலக்கிய – அரசியல் சர்ச்சைகளுக்கு வெளிப்படையாக உண்மைகளை கூறும் தேர்ச்சியும் அவரை ஒரு நடைமுறைக்கு சாத்தியமான படைப்பாளியான இனங்காட்டியது. அவரது அரசியல் ரீதியான கருத்துக்களில் முன்னுக்கு பின் முரண்பட்ட தொனிகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் இலக்கிய பரப்பில் மிகுந்த தெளிவுடன் தென்பட்டார். இஸ்லாமிய அமைப்புக்களாக தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளவை மீதான தனது விமர்சனங்களை துணிச்சலுடன் பொதுவெளியில் முன்வைத்த பாங்கும் அவ்வாறான தனது துணிச்சலுக்கு தனது அரசியல் பின்புலமே ஒரு பலமாக உள்ளது என்பதையும் பொதுவெளியில் துணிச்சலுடன் சொல்லும் விதமும்கூட அவரை நோக்கிய ஒரு எக்ஸ்ட்ரா பார்வையை அதிகரித்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: