தாய்லாந்தின் வடபகுதியில் பர்மா, லாவோஸ் என மூன்று நாடுகள் அமைந்த இடம் தங்க முக்கோணம்(Golden triangle) எனப்படும். பர்மாவின் வட பகுதியில் விளைந்த அபின் இங்கிருந்து மீகொங் ஆறு வழியாகக் கொண்டு செல்லப்பட்டு தாய்லாந்து ஊடாக வெளிநாடு செல்லும். தங்கப்பிறை(Golden Crescent) எனப்படும் ஆவ்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக உலகில் பர்மா அதிக அபின் விளையும் நாடு. பர்மாவின் வடபகுதியில் உள்ள வ மாநிலம் ( united WA state) பர்மாவில் அதிக அபினை விளைவிக்கும் ஒரு மாநிலமாக இருக்கிறது. பர்மிய மற்றும் தாய்லாந்தின் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்த சர்வதேச வியாபாரம் இந்த அபின் கடத்தல்.
அமரிக்காவும் தாய்லாந்தும் சேர்ந்து எடுத்த நடவடிக்கைகளுடன், பர்மிய அரசின் நடவடிக்கைகளும் சேர்ந்ததால் தற்பொழுது இப்படியான அபின் கடத்தல் குறைந்து விட்டது. இந்தத் தங்க முக்கோணம் பிரதேசத்தை உல்லாசப்பிரயாணிகள் செல்லும் இடமாக தாய்லாந்து அரசாங்கம் மாற்றி வருகிறது.
இம்முறை இலங்கைக்குச் செல்லும் பொழுதில் இந்தப் பிரதேசத்திற்கு செல்ல நினைத்தேன். தாய் விமான விமானத்தில் செல்லும்போது இலகுவானதாக இருந்தது. தாய்லாந்தின் வட பகுதியில் முக்கிய நகரமான சாங்மேயில் (Chang Mai) பாங்கொக்கில் இருந்து ஒரு மணிநேரப் பயணத்தில் போய் இறங்கினேன்.
சாங்மேய் குறுநில அரசாக இருந்த காலத்தில் பரமியர்களால் 200 வருடங்களும் அதற்கு முன்பாக சீனாவையாண்ட மங்கோலிர்களாலும் பல காலம் கைப்பற்றப்பட்டிருந்தது. இப்பொழுதும் அக்கால அரச மாளிகைகள் அகழிகள் சிதைந்தும் சிதையாமலும் உள்ளது. ஓட்டோ எனப்படும் ருக் ருக்கில் நகரத்தைச் சுற்றியபோது அங்கு அழகான புத்தவிகாரைகள் இருந்தன. பாங்கொக்கை ஒப்பிடும்போது வெப்பம் மற்றும் வாகனப்போக்குவரத்து நெருக்கடி குறைவான நகரமாக இருந்தது.
தாய்லாந்தின் மலைப்பிரதேசத்தின் நுழைவாயிலாக இருப்பதால் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் வருகிறார்கள். இங்கு மலையேறுபவர்கள், காட்டில் நடப்பவர்கள், நீர்விளையாட்களில் ஈடுபடுபவர்கள், வன விலங்குளைப் பார்வையிட வருபவர்கள் எனப் பல வகையானவர்கள் வரும் மத்தியதர நகரமாக உள்ளது. இங்கு யானைகள் ஓய்வெடுக்கும் சரணாலயம் உள்ளது. அதைப்பார்கவும் பலநாடுகளில் இருந்து வருவார்கள். இங்கு ஓடும் நதியின் பெயர் பிங் நதி. நான் போனகாலம் மழைக்காலமானதால் நதி புரண்டு அதிக வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. புது வெள்ளமானதால் நதி மண்ணிறத்தில் ஓடியது. பிங் நதி (Ping River) அருகே இருந்த கபேயில் மதிய உணவை உண்டபடி மதியத்தில் ஒரு மணித்தியாலம் சென்றது.
நான் சென்ற மாலை நேரத்தில் மழை பெய்தது. மண்ணில் இருந்து வந்த மணம் கண்டியை நினைவுபடுத்தியது. மலைப்பிரதேசம் சுற்றி பச்சையாகவும் எங்கும் ஈரலிப்பாக இருந்தது. நகரத்தைச் சுற்றியுள்ள அகழி இயற்கையான அழகைக் கொடுத்தது. சாங் மேய் அழகான புத்தவிகாரைகள் அமைந்த நகரம். விகாரைகளை சுற்றி மஞ்சள் உடையுடன், அமைதியாக மழைக்குக் குடையை பிடித்தபடி, எதுவித அவசரமற்று வெறும் காலுடன் நடக்கும் புத்த பிக்குகளைக் காணக்கூடியதாக இருந்தது.
பாங்கொக்போல் பாதையில் எந்த நடைபாதைக் கடைகளையோ, பொருட்களைக் கூவி விற்கும் வியாபாரிகளையோ, கண்ணைச் சிமிட்டியபடி அழைக்கும் பெண்களையோ காணவில்லை. பழைய நகரத்தில் விகாரைகளும் புதிய நகரப்பகுதியில் நவீன கட்டிடங்களும் என நகர ஒழுங்குடன் காணக்கூடியதாக இருந்தது. மாலைநேரம் நகரத்தை சுற்றிப் பார்ப்பதில் கழிந்தது.
அடுத்த நாள் ஓர் ரூர் குழுவாக சேர்ந்து மினிவானில் தங்க முக்கோணம் என்ற இடத்திற்குச் சென்றேன் போவதற்கு ஐந்து மணிநேரம் எடுத்தது. வழி எங்கும் காடுகள் பச்சைப் பசேலென இருந்தது. இடைக்கிடையே நெல்லு வயல்கள் மலையடிவாரங்களில் அமைந்திருந்தது.
எனது வாகனத்தில் இருந்தவர்களில் என்னைத் தவிர மற்றவர்கள் சீனர்கள். ரூர்கைட் இடங்களைப் பற்றிய விளக்கம் சீன மொழியில் சொல்லிவிட்டு சிறிதளவு எனக்காக ஆங்கிலத்தில் தொட்டுத் தருவார். சீனர்கள் ஆங்கிலம் பேசாததிலும் எனது வயிறு நிரம்ப தாங்கள் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்தார்கள். சீனாவில் தற்போழுது 5 வீதமானவர்களிடம்தான் பாஸ்போட் உள்ளது தற்பொழுது நான் செல்லும் பெரும்பாலான இடங்களில் அதிகமான சீனர்களை காணமுடியும். அவுஸ்திரேலியாவில் அதிகமாக பணம் செலவழிப்பதும் சீனப் பிரயாணிகளே. அவர்கள் குழுவாகவும் அமைதியாகப் பிரயாணம் செய்வார்கள்.
போகும் வழியில் ஒரு இடத்தில் பஸ்ஸை நிறுத்தினார்கள். இறங்கிய இடத்தில் சுற்றி மரங்கள் அடர்ந்த மலைக்குன்றுகள். அமைதியாக இருக்கவேண்டிய இடத்தில் ஒரு ஜெற் எஞ்ஜினது இரைச்சல் தொடர்ந்து கேட்டது. சுற்றிப் பார்த்தபோது பலர் நின்று போட்டோ எடுத்தபடி நின்றார்கள். எட்டிப்பார்த்தபோது அந்த இடத்தில் நிலத்தில் இருந்து ஐந்து மீட்டர்கள் உயரத்திற்குப் புகையுடன் கொதி நீர் பீறிடடுக்கொண்டிருந்து. அந்த நீரின் வெப்பத்தில் முட்டையை அவிக்கமுடியும் என்றார்கள். நமது கன்னியாய் நீரூற்று மாதிரி. ஆனால் பொங்கியடி இரைச்சலுடன் தண்ணீர் மேல் நோக்கி பீச்சிகொண்டிரிக்கும். இதை பஸ்தரிப்பிடமாக வைத்ததுடன் பல கடைகள் உள்ளன. அதற்கு அருகில் அழகிய கட்டியம் இருந்தது.
சாங்மேய்யில் இருந்து 15 கிலோ மீட்டர் துரத்தில் வெள்ளைக்கோயில் (Wat Rong Khun) என்று மிக அழகான விகாரை உள்ளது ஆரம்பத்தில் இருந்த புத்தவிகாரையை ஒரு கட்டிடக கலைஞர் தனது பணத்தில் செலவிட்டு பிளாஸ்டரும் கண்ணாடியும் சேர்த்து கட்டிய கட்டிடம் . சொர்கத்தை அடையும் வழியில் உலக ஆசைகளைத் துறக்கவேண்டும். ஆசைகள் இருந்தால் மீண்டும் பிறக்கவேண்டும் என்ற படிமத்தில் கட்டப்பட்டுள்ளது. பாலமாக ஏறிச் செல்லும்போது இரு பக்கத்திலும் கைகளையும் தட்டுகளையும் ஏந்தியபடியாக சிலைகள் உண்டு. அவற்றைக் கடந்தால் இறுதியில் புத்தரின் இரு சிலைகள். ஆசை, பாசம் இவற்றைக் கடந்தால் நிர்வாணத்தை அடைய முடியும் என குறியிடுகிறது. விகாரை மிகவும் நுணக்கமான வேலைப்பாடுகள் கொண்ட கட்டிடம். கட்டிடவேலைகள் இன்னமும் தொடர்ச்சியாக நடக்கிறது அத்துடன் வழக்கமான புத்த விகாரைகளின் தங்க நிறத்தில் இருந்து மாறுபட்டு வெள்ளை நிறத்தில். அது பரிசுத்தம் என்பதை குறிகிறது.
இறுதியில் தங்க முக்கோணம் அடைந்தபோது அங்கு மீகொங் ஆறு ஓடியது. அதனது அடுத்த கரை லாவோஸ். எங்களை ஒரு வள்ளத்தில் அழைத்துச் சென்று நடு ஆற்றில் அடைந்தபோது பர்மா தெரிந்தது. இந்த மூன்று நாடுகள் சந்திக்கும் இடத்தில் ஒரு தீவு ஆற்றில் மத்தியில் அமைந்துள்ளது. அதை எந்த நாடும் சொந்தம் கொண்டாடுவதில்லை. அந்தத் தீவில்தான் ஒரு காலத்தில் அபின் பொதிகள் கைமாறும்
இந்தத் தீவில் இருந்து அருகில் லாவோசுக்கு சொந்தமான தீவு டான்சோ( Done Xao) உள்ளது இங்கு போய் வருவதற்கு பாஸ்போட் தேவையில்லை. இங்குள்ள சந்தையில் உடைகள், பாம்பு, நட்டுவக்காலியில் ஊறிய வைன்கள் மற்றும் ஆபரணங்கள் கிடைக்கும். இங்கு ஒரு மணிநேரம் அங்கு நின்று சந்தையை சுற்றிப்பார்த்துவிட்டு எமது வள்ளம் மீண்டும் தாய்லாந்தை அடைந்தது. ஆற்றின் ஒரு இடத்தில் நின்றபோது தாய்லாந்து,லாவோஸ், பர்மா மூன்றையும் பார்க்க முடிந்தது.
எனக்கு மிகவும் பிடித்த இடம் பிளக் கவுஸ் (Black house) எனப்படும் அருங்காட்சியகம். இதன் பெயர் வாழ்க்கையின் இருண்மையைப் பிரதிபலிப்பதால் இந்தப் பெயர் வந்தது.
காட்டு மிருகங்களது எலும்புகள்,தோல் மிருகங்களின் கொம்புகளைக் கொண்டது. சிற்பங்கள், வீடுகள் மற்றும்
பாம்பின் தோல், மிருகங்களின் எலும்புகள், புத்தர் மனிதர்களில் கண்ட நோய், இறப்பு என்பதைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
உள்ளே இருந்த ஓவியங்கள், சிற்பங்கள்
தேக்கு மரத்தில் அமைக்கப்பட்ட பல கட்டிடங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருந்தது.
தாய்லாந்து மொழிபேசிய பெண்ணிடம் பல நிமிடம் பேசி அர்த்தத்தை புரிந்து கொண்டேன் தாய்லாந்து(Thawan Duchanee) கலைஞரால் உருவாக்கப்பட்டு தற்பொழுது நாட்டுடைமையாக்கப்பட்டது
சாங்மேயில் பிறந்து தாய்லாந்திலும் ஒல்லாந்திலும் படித்த இந்தக் கலைஞருக்கு ஆரம்பத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.இவரது படைப்புகள் பவுத்தத்திற்கு எதிரானது எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
பரந்த நிலத்தில் பல கட்டிட அமைப்புகள் மத்தில் இவரது வீடும் கலைப்படைப்பாக இருந்தது. அது தற்பொழுது பிரதான மியுசியமாக்கப்பட்டுள்ளது
மறுமொழியொன்றை இடுங்கள்