நடேசன்
முப்பது வருட ஆயுதப் போராட்டம், இலங்கைத் தமிழருக்கு என்ன விட்டுச் சென்றது என அடிக்கடி கேள்விகளை எழுப்புவேன்.இந்த போராட்ட்திற்கு தொடர்ச்சியான எதிர்ப்பாளராக எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தவன். அந்த மனப்பான்மையையும் அடிக்கடி கேள்விக்குள்ளாக்குபவன். போரின் பின் ஹபிள் ( Hobble )தொலைநோக்கியால் பார்க்காமல் தமிழ் பகுதிகளுக்கு 15 தடவைக்குமேல் சென்று சகல மட்டத்தில் உள்ளவர்களையும், மற்றும் போர்நிலங்களையும் பார்த்த அனுபவம் எனக்குண்டு.
ஒரு முறை சென்ற போது கிளிநொச்சியில் சில இசைத்தட்டுகளை ஒரு முறை பெற்று கொண்டேன். எமதுகாலத்தில் விக்கி விக்கி வந்த ஈழத்து இசையைகளை கேட்டு வளர்ந்த எனக்கு மிகவும் பிடித்தது. விடுதலைப்புலிகளின் கீதங்கள் தரமானவை. அவர்களது ஒளிவீச்சுகள் பார்க்கக் கூடியவை. சமீபத்தில் முல்லைத்தீவுமுகாமில் மீதான தாக்குதலைப் பார்த்தேன்.
இப்படியான காமரா, இசைகள் என்பன அவர்கள் போராட்டத்தின் எமக்கு விட்டுச் சென்றது. போதுமா?
விவசாயி கிணறு கிண்டி, வயலை உழுது, விதைத்து, நீர்பாச்சுகிறான்.காலம் பார்த்து பயிர்வளர்க்கிறார் . மற்றவர்கள் விவசாயியைப் பாராட்டுகிறார்கள்.
அவனது குடும்பம் உயிர்வாழ, அவன் எத்தனை மூடை நெல்கொண்டு வந்தான்?
பலனே எந்தத் துறையிலும் அளவாக வைக்கப்படுகிறது.
நான் தேடும்போது புதையலாக எனக்குக் கிடைப்பது விடுதலைப்புலி அங்கத்தவர்களாக இருந்தவர்களது எழுத்துக்கள்.
சோபாசக்தி தொடங்கி சமீபத்தில் நான் வாசித்த ஆறிப்போன காயங்களின் வலி என்ற போருக்கு பின்பான பம்பை மடு முகாமின் வாழ்வை எழுதிய வெற்றிச்செல்வி போன்றவர்களின் எழுத்துக்கள் எமக்கு இந்தப் போரின் பலனாகக் கிடைத்தவை. இலக்கியத்திற்கு, தமிழ்நாட்டு எழுத்துகளை வாசித்த நான் தற்பொழுது எமது மொழியில் எமது கலாச்சாரத்தை வாசிக்க முடிகிறது என்பது நிறைவானவிடயம்.சிறிமாவோவின் காலம் மாதிரி தன்னிறைவு தருகிறது
கூர்வாளின் நிழலை வாசிப்பதற்கு முன்பாக தமிழினியின் கதைகளை வாசித்து அவரோடு தொடர்பு கொண்டேன். கூர்வாளின் நிழல் எமது காலத்தில் தமிழுக்கு வந்த மிக சிறந்த அபுனைவாகும். அதனாலே அந்தப் புத்தகத்தை நேரடியாக காலச்சுவட்டில் இருந்து எடுத்து அவுஸ்திரேலியாவில் வினியோகித்தேன்.
ஆறிப்போன காயங்களின் வலி எழுதிய வெற்றிச்செல்வி ஒரு இலக்கிய மொழியில் எழுதாமல் இலகுவாக வாசிக்கும் பத்திரிகையாளரது நேரடியான மொழியில் எழுதியிருப்பது அந்தப் புத்தகம் எடுத்த விடயத்திற்குப் பொருத்தமானது.
போரின் பின்பு போராளி பெண்களில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட 400 பெண்ளைகளை அரசாங்கம் கொழும்பில் தையல் பயிற்சி கொடுத்தபோது அவர்களைச் சென்று பார்த்தேன். அவர்கள் மனநிலை அரசாங்கத்திற்குச் சார்பாக இருந்தது. அவர்களில் கடைசி ஒரு கிழமை பயிற்சி எடுத்தவர்களும், ஏன் பயிற்சி எடுக்காமல் பயிற்சிக்கு முன்பாக தலை மயிரை மட்டும் கட்டையாக வெட்டியதால் விடுதலைப் புலியாகி சரணடைந்த பெண்களும் இருந்தார்கள். கிட்டத்தட்ட 40 கிலோ நிறையும் உயரமும் 4 அடி குட்டையான பெண்ணைப்பார்த்து நான் கேட்டேன்.
‘உன்னை எதற்கு விடுதலைப்புலிகள் பிடித்தார்கள்? துப்பாக்கின் எடையைத் தாங்கமாட்டாயே?’
சிரித்தபடி நெளிந்து கொண்டு ‘கொழுபில் இருந்து பாட்டாவைப் பார்க்க கிளிநொச்சி வந்தபோது’ என்றாள் அந்தப்பெண்.
பம்பை மடுமகாமில் இருந்தவர்கள் பலகாலமாக போராடிய விடுதலைப்புலிப் போராளிப் பெண்கள் அதிலும் பலர் அங்கவீனர்கள். அவர்களது முகாம் வாழ்க்கை இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் யுத்தத்தில் தோல்வியடைந்து சரணடைந்தவர்கள் என்பது அங்கு பாரமாக இரு பகுதியினருக்கு இருந்தது.
வெளிநாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் போராளிகளை தேவர்களாகப் பார்த்தார்கள். அவர்கள் இறப்பு மகோன்னதமானதாகவும், மாவீரர்களாகப் பார்த்தார்கள். இவர்களுக்கும் தற்போதைய ஜிகாத்தில் இறந்தால் 72 கன்னிகைகள் தயாராக இருப்பார்கள் என்ற இஸ்லாமியவாதிகளின் சிந்தனைக்கும் அதிக வித்தியாசமில்லை. என்ன, கன்னிகள் மட்டும் இல்லை. இயக்கம் இருந்தபோது அவர்கள் ஆயுதத்திற்கு மட்டுமே பணம் அனுப்பினார்கள்.
இயக்கம் இருந்தபோது மட்டுமா? சுவிஸ், ஜெர்மனியில் சரணடைந்த பின்பும் பணம் சேர்த்தார்கள். அப்படி ஏமாந்தவர்களில் எனது தம்பியும் ஒருவன். எண்ணாயிரம யுரோக்களைக் கொடுத்தவனை நான் ‘இப்படி மடையனாக இருக்கிறாயே ? எனக் கேட்டபோது
அவனது பதில் என்னைத் திணறவைத்தது.
‘இனி வரும் ஈழப்போராட்டத்திற்கு அது அட்வான்ஸ்hக இருக்கட்டும்’;
எனது இரத்தத்தில் ஒருவனே இப்படி இருக்கும்போது மற்றவர்களை என்ன சொல்ல முடியும்?
விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்கள் அவர்களை மற்றவர்களை ஆயுதமேந்தி அழிக்கும் அசுரர்களாகவும் இரத்தத்தையும் தசையையும் காணிக்கையாக எடுக்கும் துர்த்தேவதைகளாக பார்த்தார்கள்.
இப்படியான ஒரு நிலையைத்தான் வெளிநாட்டில் இருந்த இயக்கத்தினரும் பரப்பினார்கள். ஆனால் இவர்கள் ஆசாபாசங்ள் தசை உதிரம் கொண்ட சகோதரர்கள் சந்தர்ப்பம், குடும்ப சூழ்நிலை என்பவற்றால் இந்தப் போராட்டம் என்ற சுனாமியில் சிக்கியவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். போரின் முடிவில் இவர்களுக்கு புலம்பெயந்த மக்கள் உதவி செய்திருந்தால் அரசாங்கமும் அனுமதித்திருக்கும். இவர்களும் மீண்டும் மிகத் துரிதமாகச் சமூகத்தில் அங்கமாக முன்வந்திருப்பார்கள்.
போர்முடிந்த காலத்தில் அவுஸ்திரேலிய விடுதலைப்புலி ஆதரவாளர்களிடம் பல மில்லியன் பணம் அகதிகள் மருத்துவம் என சேகரிக்கப்பட்டிருந்தது. இந்த பணத்தை போராளிகளின் புனர்வாழ்விலும் அகதிகள் மீதும செலவழிக்கவேண்டி நானும் எனது நண்பர்களும் மிகப்பாடுபட்டோம். ஆனால் தோல்வியே கிட்டியது.
வெற்றிச்செல்வியின் இந்த புத்தகத்தில அந்த முகாமில் விஜயின் தமிழ்படம்போடும்போது விசிலடிப்பதும் அந்தப் படத்தைப்பார்க்க விஜய் ரசிகை முகம் கழுவி பவுடர்போடடு தயாராகுவதும் என விமலினியை குறிப்பிடிருப்பார்.
மிகவும் சாதாரண தமிழ் வாழ்க்கை இல்லையா?
ஆனந்தவிகடனில் போராளிப்பெண்கள் வல்லுறவுக்கு உட்பட்டார்கள் என்ற பொய்யான செய்தியை படித்து எவ்வளவு ஆத்திரமும் அதிர்வும் அடைந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடவேண்டியது. ஆனந்தவிகடன் மட்டுமல்ல, அகரமுதல்வன் போன்ற ஈழத்தவரும் மற்றும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் கால்களுக்கிடையில் முகரும் பிராணியாகும் சில இணையத்தளங்களும் இப்படியான ஆதாரமற்ற விடயங்களை வெளியிட்டு, சகலரையும் அவமானபடுத்துவது எவ்வளவு கொடுமையானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கை இராணுவத்தில் பெண் இராணுவத்தினரே இந்த முகாமை நிர்வகித்ததாகவும் அவர்கள் செயல்களை ஒளிவு மறைவற்று பற்றியும் எழுதியதை வாசித்தபோது எனக்கு இரண்டு இனத்திலும் சாதரணமானவர்களில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
இந்தப் புத்தகத்தில், 18 வருடங்கள் இயக்கத்தில் இருந்து தோல்வியடைந்து முகாமில் வாழ்கிறோம் என்ற அவரது வலியை ஒவ்வொரு வார்த்தையிலும் பதிந்திருக்கிறார். இந்த வலியை வார்த்தைகளில் பதிக்காது வார்த்தைகளின் இடைவெளிகளில் நிழல்களாக விட்டிருந்தால் இது இலக்கியமாகியிருக்கும்.
இந்த இரு இனத்திலும் வித்தியாசங்களைப் பேசியே பகைமையை வளர்க்கும் அரசியல் வாதிகளும் மற்றும் புலம்பெயர்ந்தவர்களும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவேண்டும்.
Email This facebooks Share on Google+
மறுமொழியொன்றை இடுங்கள்