<img
பர்மிய மலைப்பிரதேசம்
மண்டலே இரங்கூன் என்ற பர்மிய நகரங்கள் கோடைகாலத்தில் அதிக வெப்பமானவை. பர்மாவை காலனியாக அரசாண்ட பிரித்தானியர்களுக்கு கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பி வாழ்வதற்கு குளிர்மையான இடமொன்று தேவைப்பட்டது.
கலே (Kalaw) என்ற மலைவாசஸ்தலம் பிரித்தானியர்களால் கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக வாழ்வதற்கு ஊட்டி நுவரெலியாபோல் உருவாக்கப்பட்டது.
மூன்றாவது பர்மியப்போரில் இராசதானியாக இருந்த மண்டலேயை கைப்பற்றிய பின்பு வடபர்மாவில் சான்(Shan)மாநிலத்தில் கிட்டத்தட்ட 1500 அடி உயரமான மலைப்பிரதேசத்தில் தங்களது கோடை வசிப்பிடமாக கலேயை ஆக்கினார்கள் இந்தப் பகுதியில் வாழ்பவர்கள் மலை வாழ்மக்கள். அவர்கள் தீபத்திய பீடபூமியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். இவர்கள் பல விடயங்களில் ஐராவதிச் சமவெளியில் வாழும் பர்மியர்களில் இருந்து வேறுபட்டவர்கள்.
இந்த மலைப் பிரதேசத்தில் பெரிதான வீதிகள் அமைக்கப்படாததால் பெரும்பாலும் தார் போடாது அமைந்துள்ள பாதைகள் உள்ளன. வெளிநாட்வர்களை இந்த மலைப்பிரதேசங்களை நோக்கி நடந்து (Tracking) செல்வதற்காக
கரடு முரடான மண் பாதைகள் அமைந்துளன. இடையிடையே மலைக்காடுகள் வளர்ந்துள்ளது.
மலையூடாக நடக்கும் புரோகிராமை எமக்கும் ஒழுங்கு பண்ணியிருந்தது ஆரம்பத்தில் தெரியாது. இரண்டு மாத முன்பு முழங்கால் மூட்டில் ஆபரேசன் செய்யப்பட்ட என்னைக் கொண்ட எங்களது குழுவிற்கு இது தெரிந்திருந்தால் இதை மாற்றி இருப்போம். நாங்கள் புராகிராமை மறுத்தாலும் எமது வழிகாட்டி எம்மை விடுவதாகவில்லை. எங்கள் நால்வரையும் அழைத்துச் செல்வது அவரது வேலை ஏற்கனவே பரோகிராமில் வந்து விட்டது.அன்றய ஊதியம் அதன்மேல் நாம் கொடுக்கும் டிப்ஸ் என்பன இழப்பதற்கு முடியாதல்லவா?
சரி பார்ப்போம் எனத் துணிந்து ஒப்புக் கொண்டு பிரயாண வரைபடத்தை பார்த்தபோது எமக்கு இரண்டு பாதைகள் மலையேறுவதற்கு தரப்பட்டிருந்தது. அதில் 20 கிலோமீட்டர் பயணத்தை நிறுத்தி விட்டு, 12 கிலோமீட்ர்கள் நடந்து அந்த மலைவாழ் கிராமங்களுக்கு செல்வது என தீர்மானித்தோம்.
ஆரம்பத்தில் இலகுவாக இருந்தாலும் போகப் போக பாதை கல்லும் குழிகளும் நிறைந்தது கடினமாக இருந்தது. ஏற்றமும் இறக்கமுமான பாதை நுவரேலியா அல்லது ஊட்டியை நினைவுபடுத்தும். ஆனால உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்மையான இடங்கள்.
பாதையின் இரு மருங்கும் பல்வேறு பழத்தோட்டங்கள் அதன் கீழ், படி முறையான நெல்லு வயல்கள் அதனிடையே மரக்கறிப் பயிர்கள் , கறுவா கராம்பு என்பன மிகவும் தாரளமாக விளைந்திருந்தது. இஞ்சியையும், மிளகாயையும் ஒரே பாத்தியாக நட்டிருந்தார்கள். நாங்கள் சென்றபோது இஞ்சி அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். இஞ்சிக்கிழங்குகள் ஒவ்வொன்றும் அரை கிலோ, ஒரு கிலோ அளவில் ஒவ்வொரு செடியிலும் உள்ளங்கையிலும் பெரிதாக விளைந்திருந்தது. மழை பெய்யும் காலத்தில் வயலில் நெல்லுபயிர் செய்து விட்டு வருடத்தின் மற்றய இரு தடவை காய்கறி செய்யும் சுழற்சிபயிர் முறை எனக்கு புதிதாக இருந்தது. மலை சரிவான பிரதேசங்களில் மண்டரின் என்ற தோடைவகை பயிரிடப்பட்டிருந்தது. மற்றய சரிவில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தது. நான் நினைக்கிறேன். தேயிலை பிற்காலத்தில் பிரித்தானியர்களல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.
நாங்கள் நடந்த வழி எங்கும் ஏராளமான பழத்தோட்டங்கள் பார்க்க முடிந்தது. அத்துடன் தோடை எலுமிச்சை பாதையோரத்தில் விழுந்து காணமுடிந்தது.அவை வாகனங்களில் கொண்டு செல்லும்போது விழுந்தவை. நடந்து சென்ற எங்களுக்கு பாதையோரத்தில் குவிக்கப்பட்ட மண்டரீனில் எடுத்து எமது வழிகாட்டி தந்தார். உருசியாக இருந்தன.
அந்த மலைப்பகுதி மண் மிகவும் வளமானது.
வயலில் நின்றுவேலைசெய்தவர்களுக்கு எவ்வளவு நாட்கூலி என்றபோது 5000 பர்மிய காசு (5டாலர் )என்று விட்டு இந்த மக்கள் கூலிக்கு வேலை செய்வது இங்கு குறைவு ஒவ்வொருவரும் மற்றவர் தோட்டத்தில் வேலை செய்வது வழக்கம். பணமாக கூலி கொடுப்பதிலலை என்றது ஆச்சரியமளித்தது. இந்த மக்கள் எல்லோரிடமும் நிலம் இருந்ததால் இந்த பெருளாதாரமுறை பொருந்தியது.
12 கிலோமீட்ர்கள் நடந்து முடிவாக ஒரு மலைவாழ் மக்களது கிராமத்தை அடைந்தது ஒரு வீடொன்றில் உணவு தயாரித்து பரிமாறினார்கள். உல்லாசப்பிரயாணிகளால் பாரிய ஹோட்டேல்களும் நகரப்பகுதியினர் மட்டுமே பயனடைவார்கள் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு இந்த பிரயாணம் வித்தியாசமாக சிந்திக்க வைத்தது. எமது வழிகாட்டி பர்மியமுகம் ஆனால் கருமையாக இருந்தார். அவரது பாரம்பரை விசாரித்தபோது அவரது தாத்தா கல்கத்தாவில் இருந்து வந்த இந்தியர்.மலைவாழ் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார் இதற்கு முன்பு பேகனில் எமக்கு வழிகாட்டியாக இருந்த இளைஞனது பேரன் இந்தியர் அவரும் பாகிஸ்தான் எல்லைக்குஅருகே இருந்து வந்தவர் என்றார் அவன் ஆனால் மஞ்சள் பர்மிய நிறத்தோடு இருந்தார்
இந்த மலைவாழ் மக்கள் பல விடயங்களில் தன்னிறைவான சமூகமாக வாழ்கிறார்கள் தங்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதோடு தங்களது உடைகளை அவர்களே நெய்கிறார்கள். அவர்களில் பெண்களது உடை மற்ற பர்மிய பெண்களைது லுங்கி போன்று இருந்தது. ஆண்கள் கிட்டத்தட்ட பாகிஸ்தானியர் போன்று பிஜாமா அணிகிறார்கள் இது மற்றய பர்மியர்களில் இருந்து வித்தியாசமானது. இவர்கள் எங்களை தங்களது திருமண உடையை எமக்கு அணிவித்து போட்டோ பிடித்துக் கொள்ள விரும்பினார்கள் நான் மறுத்தாலும் எனது மனைவி விருமபியதால் அது நடந்து. இதன் பின் அவர்கள் எம்மிடம் இருந்து வெகுமதியை பெறுகிறார்கள்- அந்த வீட்டில் சந்தித்த 43 வயது பெண்ணுக்கு பத்து வயது குறைத்தே எடைபோடுவேன். எந்த இடத்திலும் கொழுப்பு அற்று அழகிய புன்முறுவலைத் துவியபடி இருந்தாள். விசாரித்தபோது அந்தப் பெண்ணுக்கு ஏழு பிள்ளைகளும் 20 பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள். இவர்கள் மிகவும் கடினமாக உழைக்கும் விவசாயிகள.;
இவர்கள் வாழும் பிரதேசத்தில் தேக்குமரங்கள் காடாக வளர்ந்திருந்தன.அதைப் பற்றி விசாரித்தபோது காட்டுத் தேக்குகள் பிரித்தானியர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது தேக்கங்காடுகளை வளர்க்கிறார்கள்.
பர்மா ஒருவிதத்தில் இலங்கைபோல் நீராலும் நிலத்தாலும் வளம் கொண்டது. அரசியல் தலைமைகள் மட்டும் இதுவரையிலும் மக்களுக்கு சிறப்பாக இருக்கவில்லை என்பது உண்மை.
மறுமொழியொன்றை இடுங்கள்