இலங்கைத் தமிழர்களின் தலைமைகள்

Myth of Sisyphus

தற்போதைய இலங்கைத் தமிழர்களின் அரசியல் நிலையைப்பற்றி நினைத்தபோது கிரேக்கர்களின் (Greeks) கடவுளால் சபிக்கப்பட்ட மன்னன் சிசிபஸ்னின(Sisyphus ) நினைவு எனக்கு வந்தது.

மன்னன் சிசிபஸ் பதவி காரணமாக செய்த கொலைகள் மற்றும் அடாத்தான செயல்களால் கோபமடைந்த ஒலிப்பிக் தெய்வம் சோஸ்(Zeus) மலையின் மீது பெரிய பாறையை உருட்டி மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லவேண்டுமெனப் பணித்தார். பாறையை உருட்டினால் அந்தப் பாறை மீண்டும், பாரத்தால் மலை அடிவாரத்திற்கு வந்து விடும். இப்படியான தொடர்ச்சியான பிரயோனமற்ற முயற்சியை இருத்தலியல்(Existentialism) தத்துவவாதிகள் அபத்தத்திற்கு (Absurd) உதாரணமாக்கினார்கள் அல்பேட் கமு( Albert Camus) பல இடங்களில் இதைப் பாவித்திருக்கிறார்.சோரன் கிக்காட் (Soren Kiergaard)என் டானிஸ் தத்துவவாதி மனிதர்கள் பணத்தின் மீது ஆசையாக அதைப் பெருக்குவது பின்பு உபயோக்ககாததையும் உதாரணமாக்கிறார் பிராங் காவ்கா(Frank Kafka) அரசியல் அதிகாரத்திற்கு இந்த சிபஸ் தத்துவத்தைக் குறியீடாக்கினார்.

இலங்கை அரசியலில் தமிழர்கள் பேரால் அரசியல் அதிகாரம் கேட்பதுவும் ஆனால், அந்த அதிகாரத்தை மக்களுக்குப் பாவிக்க முடியாமல் இருப்பதும் ஒருவிதத்தில் பணத்தை தொடர்ச்சியாக உழைத்துக்கொண்டிருப்பவன் அதன் பயன்பாட்டை அறியாமல் இறப்பதற்குச் சமனாகும்.

இரண்டு கிழமைகள் இலங்கையில், அதிலும் முக்கியமாக யாழ்ப்பாணத்தில், கிளிநொச்சி போன்ற இடங்களில் இருந்தபோது முன்னாள் பாராளமன்ற அங்கத்தவர் சந்திரகுமார் பற்றியும் மந்திரி பதவியில் இல்லாத டக்ளஸ் தேவானந்தா பற்றியும் ஆதங்கமாகப் பல தமிழர்கள் பேசினார்கள். அவர்களது ஆதங்கம் அரசாங்கத்தின் உடனான தங்களது தொடர்புகளை செய்வதற்கான பாராளமன்ற பிரதிநிதி ஒருவர் இல்லாமல் அனாதையாக இருப்பதே..

பாராளமன்ற பிரநிதிகள் தெரிவு செய்யப்படும் நோக்கமே ஜனநாயக அரசில் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே சங்கிலியாக இயங்குவது. தமிழ்ப் பிரதிநிதிகளை அவர்கள் பத்திரிகையில் விடும் அறிக்கைகள் மூலமாக எனக்குத் தெரிந்தது. அதுவும் தமிழர்கள் உரிமைகளுக்காக அவர்களது குரல் இருந்தது. ஆனால் இந்தக் குரல் பழமையானதும் கேட்டுக் கேட்டு புளித்த விடயம். மக்களின் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருந்ததோடு மாகாண அரசின் கீழ் உள்ள சுகாதாரம் ,கல்வி போன்ற துறைகளில் பல குறைபாடுகளைக் நான் சந்திக்க முடியாதவர்களிடம் கேட்க முடிந்தது.

எமது மக்களை வழி நடத்த முயல்பவர்கள் மத்தியில் ஆத்மீக, சமூக. அரசியல் தலைமைத்துவம் இல்லை. இதனது வெளிப்பாடே சமீபத்தில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் சிங்கள மாணவர் மோதல். இதற்கு அரசியல்வாதிகள் மட்டும் பொறுப்பல்ல. மற்றவர்களும் காரணமே . கோயில்களையும், தேவாலயங்களையும் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தில் பெரிதாக கட்டுவதும் ,பழையவற்றை திருத்துவதும் சவக்காலையில் உள்ள நினைவு தூண்களுக்கு வெள்ளை அடிப்பது போன்ற விடயம்.

பெரும்பாலான தமிழர்கள் மதமான இந்து சமயத்தில் மைய அதிகாரமற்ற தன்மையால் மதத்தின் முலம் மற்ற மதங்களைப்போல எந்த தலைமைத்துவம் வருவதற்கான சாத்தியமில்லை. இதைப் புரிந்ததால் எமது தமிழ் அரசியல்வாதிகள் வெறும் பேச்சுகளை பேசிக்கொண்டு சுயபச்சாபத்தில் சேற்றில் உழலும் காட்டெருமைபோல் உழல்கிறார்கள். மேலும் தாங்கள் உலகத்திலிருந்து மறையும்வரை தங்களது ஆசனங்களைக் காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

இதே நேரத்தில் இலங்கையில், அதிக மதுவகை விற்பனையாகும் இடம் வடமாகாணம் என்பதோடு போதைப்பொருள் பற்றிய எச்சரிக்கை பிரசுரங்கள் எங்கும் ஒட்டப்பட்டுள்ளது.நான் படித்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முதன்மை இடமாகக் கருதப்படுகிறது.

அரசியலில் பலவீனமான தலைமைகள் இருப்பது புதியதல்ல.

வரலாற்றை எடுத்தால் இது பழங்கதையாக உள்ளது.

அரசியல் சித்து விளையாட்டுகளின் தொடக்கமாக 1927 ல் டொனமூர் கம்மிசனின் முன்பாக எமது பெருந்தலைவராக இருந்த சேர் பொன் இராமநாதன் சர்வசனவாக்கை எதிர்த்தார். பெண்களுக்கும் வெள்ளாளர் அற்றவர்களும் வாக்குரிமை பெறுவது இந்துக்களினது வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல என்பது அவரது தர்க்கமாக இருந்தது.

சோல்பரி கமிசனுக்கு முன்பாக ஜி ஜி பொன்னம்பலம் 65% வீதமாகவிருந்த சிங்கள மக்களுக்கும் 35% வீதமாகவிருந்த சிறுபான்மை மக்களுக்கும் சமனான உரிமையை வலியுத்தியபோது அது எடுபடாது போய்விட்டது.ஜி ஜி பொன்னம்பலம் மகாவம்சத்தையும் சிங்களமக்களையும எதிர்த்து பகிரங்கமாக பேசியதால் நாவலப்பிட்டியில் தமிழர்கள் கடைகள் எரிக்கப்பட்டன . வரலாற்றில் முதலாவது கடையெரிப்பை உருவாக்கிவர் என்ற பெருமை மட்டுமல்ல இவரது பேச்சைக் கேட்ட பண்டாரநாயக்க சிங்கள மகாசபையை தென்னிலங்கையின் சகல பிரதேசங்களிலும் அமைப்பதற்கும் இந்த பொன்னம்பலத்தின் பேச்சு விதையாக இருந்தது.

பண்டாரநாயக்கா தனிசிங்கள சட்டத்தை1956ல் கொண்டுவந்த போதிலும் கீழிறங்கி பண்டா செல்வா ஒப்பத்தத்தை செய்துகொண்டார். இந்த ஒப்பந்தத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனா மட்டுமல்ல, ஜி. ஜி பொன்னம்பலமும் எதிர்த்தார். இக்காலத்தில் மிகவும் சிறிய விடயமாகக் கருதப்படக்கூடியது ஸ்ரீ போராட்டம். சிங்கள ஸ்ரீ எழுதிய பஸ்களை எதிர்த்து போராட்டம் நடத்தி அதன்பின்பு பண்டா- செல்வா ஒப்பத்தமும் கிழித்தெறியப்பட்டது.1958 கலவரம் இதன்விளைவாக வெடித்தது.

சிங்கள அரசியல்வாதிகள் நேர்மையாக, உண்மையாக நடந்தார்கள் என்பது இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல . எமது பக்கத்தில் பல தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன என்பதே. சிங்கள இனவாதத்தைத் தமிழ் இனவாத்தால் எதிர்கொள்ள முயன்றோம் என்பதே இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறேன்

பண்டாரநாயக்காவிடம் சமஸ்டி அமைப்புக்காக ஒப்பந்தம் செய்தபோது சமஸ்டிக்கட்சி என ஆங்கிலத்தில் பெயரைகொண்டு தமிழில் தமிழரசுக்கட்சி என அழைத்தது ஏற்றுக்கொள்முடியாத விடயம். இதேபோல் தமிழர் விடுதலை முன்னணி என்றபெயருடன் நாங்கள் சமஸ்டிக்காக போராடுகிறோம் என்பது எந்தச் சிங்கள அரசியல்வாதிக்கோ ஏன் சாதாரமான சிங்களமக்களுக்கு சந்தேகத்தை உருவாக்கும்.. இவர்களது உண்மையற்றதனத்தை இவர்கள் மெச்சிக்கொள்ளலாம் ஆனால் வெளியே பார்க்கும்போது கபடதாரியாக தெரிவார்கள்.

எல்லாவற்றிற்கும் சிகரம்வைத்தது போல் தமிழ் ஈழப் பிரிவினையை வைத்துவிட்டு தலைவர் அமிர்தலிங்கம் இந்தியாவுக்குச் சென்றபோது இந்திய பிரதமர் இந்திராகாந்தி அதைக்கண்டித்தார் என்பதை என்னிடம் ஒரு தமிழ் அரசியல்வாதி ஒத்துக்கொண்டார்

ஜே.ஆர் ஜேயவர்தனாவின் சில செயல்கள் இந்தியாவிற்கு பிடிக்காததால் இலங்கைக்குப் பாடம் படிப்பிக்க இந்தியா விடுதலை இயக்கங்களுக்கு இராணுவ உதவியளித்தது. அதுவும் மிகக் குறுகியகாலமே. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சுகள் ஆசினிக் குளிகை மாதிரி தமிழ் இளைஞர்களால் விழுங்கப்பட்டது இப்படி இளமையில் விழுங்கிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த நஞ்சுக்குப் பிற்காலத்தில் பலியானார். ஆசினிக் உடனே கொல்லுவதில்லை மெதுவாகக் கொல்லும் விசம்.

விடுதலைப்புலிகளது போராட்டம் கடந்த முப்பது வருடங்களாகத் தமிழர்களை எப்படி பலவீனமாக்கியது என்பதை நான் நான் இங்கு எழுத வேண்டியதில்லை.பல முறை நானும் பலரும் எழுதிவிட்டோம்

சீன புரட்சியின் அதிபர் மா சே துங் கமியூனிசதத்தால் 100 கோடி சீனமக்களை பொருளாதாரத்தில் உயர்த்தமுடியும் என நினைத்தார். அமரிக்கர்களை கடுதாசிப்புலிகள் என வர்ணித்தார். ஆனால் அவரின் பின்பு வந்த டெங் சியா பிங் முதலாளித்துவ பொருளாதாரத்திற்குச் சீனாவின் கதவைத் திறப்பதன்மூலம் தற்பொழுது அமரிக்காவிற்கு சமனான பொருளாதாரத்தை சீனாவில் உருவாக்கியளளார். பூனையின் தோலை பலவிதமாக உரிக்க முடியும் என்பது டெங் சியா பிங் வைத்த கோசம்.

தற்கால வாழ்க்கை முறையில் அரசியல் அதிகாரம் என்பது பெரிய விடயமல்ல பொருளாதார பலமே முக்கியமாகும். நாங்கள் வேறு எங்கும் போகத் தேவையில்லை. இலங்கையில் இஸ்லாமிய சமூகமும் ,மலையகச் சமூகமும் ஆட்சியில் பங்கேற்பதன் மூலம் எமக்கு உதாரணமாக இருக்கிறார்கள்

இலங்கைத் தமிழர்களின் தலைமைகள் இதுவரையும் எதையும் சாதித்ததில்லை . இதற்கான காரணம் என்ன? ஏன் வித்தியாசமாக ஒருவராவது சிந்திக்கவில்லை? இவர்களில் இவர்கள் எல்லோரும் இலங்கையில் சட்டத்தை பயின்றவர்கள். மக்களின் தவறுகளில் வாழ்பவர்கள் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையையும் என்னால் காணமுடியவில்லை.

உங்களால் முடிகிறதா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: