வாழும்சுவடுகள் – முதல் நூல் வெளியீட்டு அனுபவம்.

மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் இடையே நீடிக்கும் உறவை சித்திரித்தேன்.
எனது தொழில்சார் அனுபவங்களின் ஊடாகவே இலக்கியத்தில் பிரவேசித்தேன்.
நடேசன் – அவுஸ்திரேலியா
covr1 copy

நூலாசிரியனாவது இலகுவானது அல்ல எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஆர்வம் திறமை கடும் உழைப்பு என்பவற்றோடு, தமிழ் மொழியில் எழுதுவது எந்தவித பிரதிபலனோ அற்ற விடயமாக இருக்கிறது. மொழி என்பது கோசத்திற்கு மட்டுமே பாவிக்கப்படும் துர்ப்பாக்கியம் நமது மொழிக்கு உண்டு. இலக்கியம் – செய்தி என்ற இரு விடயங்களைத் தவிர அறிவு சார்ந்த துறைகளில் தமிழில் எழுதுபவர்களோ, வாசிப்பவர்களோ இல்லாத காலத்தில் நாம் உள்ளோம்.
இப்படியான குறைகளைப் புரிந்துகொண்டு ஆன்ம விசாரத்திற்காக எழுதத் தொடங்கியவன் நான். முதலில் எழுதுவதற்கு எனக்குத் தெரிந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதுடன் வாசகர்களுக்கு புதிய விடயமாக இருக்கும் என்பதால் மிருகவைத்திய அனுபவங்களை எழுத நினைத்தேன்.

வாழும் சுவடுகள் என்ற எனது மிருக வைத்தியம் சம்பந்தமான கதைகளை நான் எழுதியபோது, அவை நானும் இணைந்து நடத்திய உதயம் பத்திரிகையில் பிரசுரமானது. அவைகளின் கருப்பொருள் அவுஸ்திரேலியாவிலும், இலங்கை ,இந்தியா என நான் மிருகவைத்தியம் செய்த நாடுகளில் நடந்த சம்பவங்களும் நான் சந்தித்த மனிதர்கள் பற்றியதுமாகவே எனது முதலாவது இலக்கிய முயற்சி அமைந்தது.

ஆரம்பத்தில் உதயம் பத்திரிகையில் நண்பர் மாவை நித்தியானந்தனூடாகவே பிரசுரிக்கும் விடயங்கள் செல்லும். நான் முதலில் எழுதிய நடுக்காட்டில் பிரேதப் பரிசோதனை என்ற கதையை அவரிடம் கொடுத்தபோது எழுதிய விதம் சரியில்லை, முருகபூபதியிடம் கொடுத்து திருத்தும்படி கூறினார். அவரிடம் கொடுத்தபோது திருத்தி தனது மொழியில் எழுதினார்.
என்னைப் பொறுத்த மட்டில் ஆங்கிலத்தில் படித்து ஆங்கிலத்தில் சிந்திப்பதனால், தமிழில் எழுதும்போது திண்டாட்டமாக இருந்தது. இப்படி சில கதைகளை எழுதுவதும் முருகபூபதி திருத்துவதுமாக எனது கதைகள் உதயத்தில் பிரசுரமாயின. இந்த விடயத்தில் மாவை நித்தியானந்தன் முருகபூபதி ஆகிய இருவரும் எனது நண்பர்களாகவும் தமிழில் திறமையானவர்களாக இருந்ததாலும் எனது எழுத்துத் துறையின் கதவுகள் இலகுவாக திறக்கப்பட்டது. இந்தக் கதைகள் வெளிவந்தபோது தமிழுலகத்தில் மிருகங்களைப் பற்றிய கண்ணோட்டத்தில் தாங்கள் வித்தியாசமாக தற்பொழுது சிந்திப்பதாக பல நண்பர்கள் சொன்னார்கள். நாயைப் பூனையைக் கண்டால் கல்லால் விரட்டும் எமது சமூகம், அதற்குச் சாட்சியாக நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்று பழமொழிகூட வைத்திருப்பார்கள்.

இந்தக் கதைகள் உதயத்தில் மட்டுமல்ல, இலங்கையில் தினகரன் தமிழ்நாடு, திண்ணை, கனடா- பதிவுகள் மற்றும் குமுதத்தில்- யாழ்மணம் பகுதியில் வெளிவந்து பலரை சென்றடைந்தன. எனது வயிற்றுப்பசிக்கு உணவளித்த எனது தொழில்சார் மிருக வைத்திய அனுபவங்களே இலக்கியத்துறைக்கும் என்னை அழைத்துச் சென்றது.

இவ்வாறு எனது கதைகள் வெளிவந்த காலத்தில் 2001 ஆம் ஆண்டில் எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையை நண்பர் முருகபூபதி வீட்டில் சந்திக்கின்றேன். அவர் இந்தக் கதைகளைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் இத்தகைய படைப்புகள் தமிழ் உலகத்திற்கு புதியவை எனச்சொல்லி அவற்றைத் தொகுத்து தமது மித்ர பதிப்பகத்தில் வெளியிட விரும்பினார். அதனால் மறுக்காமல் அவரிடம் கொடுத்தேன்.

மித்ர பதிப்பகத்திலிருந்து நூலின் முகப்பு அட்டைப்படத்தை அனுப்பினார். அந்தப்படம் தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஆதிமூலத்தால் வரையப்பட்டது. அத்தகைய தரமான வடிவமைப்பை அதிகம் காணமுடியாது. அதாவது வழுக்கிச் சிதறும் நீர்துளிகளின் மத்தியில் நாய் பூனைகளின் முகம் தெரிய அந்தப்படத்தை வடிவமைத்திருந்தார்.

புத்தகத்தை தடித்த மட்டையில் அச்சிட்டு, அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பினார். முன்னுரையை முருகபூபதியும் மதிப்புரையை தமிழக எழுத்தாளர் ஜெயமோகனும் எழுதினார்கள். இப்படியாக எனது முதல் புத்தகம் பிரசவமாகி மற்றவர்களால் அறிமுகமானது. இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். வாழும் சுவடுகள் என்ற எனது முதல் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே உதயம் பத்திரிகையின் மூலம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டிருந்தபடியாலும் நல்ல அறிமுகம் கிடைத்திருந்தது.

இந்த விடயத்தில் ஏனைய எழுத்தாளர்களின் முதல் புத்தகத்தோடு ஒப்பிடும்போது நான் அதிஷ்டக்காரன்தான்.
வாழும் சுவடுகள் மெல்பனில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும் சில கதைகளை அவ்வாறு தொடர்ந்து எழுதினேன். அதன் பின்னர் வாழும்சுவடுகள் இரண்டாம் பாகத்தையும் பத்தகத்தின் உள்ளே ஒளிப்படங்களுடன்; எஸ்.பொன்னுத்துரை பதிப்பித்தார். தற்போது குறிப்பிட்ட அந்த இரண்டு பாகங்களுடன்; மேலும் பல கதைகள் சேர்க்கப்பட்ட ஒரு செம்பதிப்பு தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது.

இந்தப் புத்தகங்கள் தமிழுலகில் பரவலாகச் செல்லவேண்டும். அதன் மூலம் மனிதர்களின் வளர்ப்பு மிருகங்கள் மாத்திரமின்றி மற்றைய மிருகங்களுக்கிடையிலான உறவுகளிலும் சிறப்பு ஏற்படவேண்டும் என விரும்புகிறேன். மிருகங்களிடத்தில் அன்பு செலுத்துவது ஜீவகாருண்யம் மட்டுமல்ல, அவைகளோடு வளரும் எமது குழந்தைகள்கூட மற்றைய உயிர்களை மதிப்பதற்கும், அவற்றின் சுகதுக்கங்களைப் புரிந்துகொண்டு எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக வளர்வதற்கும் பாதை திறக்கும்.

அவுஸ்திரேலியாவில் நடந்த மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு விடயம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தமது குடும்ப மருத்துவரிடம் வருடத்திற்கு 9 தடவையும் அவடவாறு வளர்க்காதவர்கள் 11 தடவையும் செல்கிறார்கள். வளர்ப்புப் பிராணிகள் மன அமைதியை கொடுப்பதோடு இரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆராய்ச்சியின் தரவுகள் சொல்கின்றன.

செல்லப்பிராணிகளால் நமக்கு மட்டுமல்ல சமூகம், நாடு சார்ந்தும் நன்மைகள் உருவாகின்றன.

நன்றி வீரகேசரி

“வாழும்சுவடுகள் – முதல் நூல் வெளியீட்டு அனுபவம்.” மீது ஒரு மறுமொழி

  1. Great..Please continue your services to Tamil world!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: