நடேசன்
சாபத் நாளில் மட்டும் (சிறுகதை) / நடேசன் ( ஆஸ்திரேலியா )
அவுஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து வந்த பின்னர் உணவு விடுதி, தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழகம் முதலான சில இடங்களில் பலரோடு பணியாற்றியிருக்கின்றேன். இந்தப் பணிகள் மிருகவைத்தியராக என்னை நான் இந்த நாட்டில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக இடைக்காலத்தில் மேற்கொண்டவை. இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை கவனித்தவாறு எனது துறையில் படிப்பது என்பது, கடலில் தனியாக படகைச் செலுத்தியபடி வலைவீசி மீன்பிடிப்பது போன்றது.
இலங்கையில் ஐந்து பேருக்கு மேலதிகாரியாகவும் கார், மோட்டார் சைக்கிள் என வைத்திருந்து விட்டு சமையலறையில்; வேலை செய்வது இலகுவானதாக இருக்கவில்லை. சப்பாத்தி வட்டமாக போடத் தெரியவில்லை என்று ஒரு பஞ்சாபி முதலாளியிடம் ஏச்சு வாங்கியபோதும் ,உணவுச்சாலையின் கழிப்பறையை சுத்தம் பண்ணும்போதும் கண்ணீர் வந்தது. பேசாமல் இலங்கையில் இருந்திருக்கலாம் என்றும் பலதடவை நினைப்பதுண்டு. நான் அப்படியான வேலைகள் செய்த பின்னர், ஒரு பெயின்ட் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றது ஒரு முன்னேற்றமென்றாலும் பல்லைக்கடித்தபடி திருப்தியற்று அங்கு வேலை செய்வேன்.
என் மனதில்; மிகவும் ஆழமாக பதிந்திருக்கும் காலம்; சிட்னியில் பெயின்ட் தொழிற்சாலையில் வேலை செய்த காலங்கள்தான். அங்கு உற்சாகமூட்டும் விதமாக பாலியல் கதைகள் சொல்லி கவுன்சிலிங் செய்த மார்க் என்ற ஆங்கிலேயனை மறக்கமுடியாது.
உடலை வருத்தி வேலை செய்த அந்த மூன்று மாதங்கள் மறக்க முடியாதவை. இலங்கையில் மிருகவைத்தியர் எனச் சொன்னால் பெரும்பாலும் நல்ல வேலை தரமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை இவன் வேலையில் சில காலமேயிருப்பான் என்ற நினைப்பு வந்துவிடும். அது தவறுமில்லை நான் இந்த நாட்டில் மிருகவைத்தியம் செய்ய படித்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் உண்மைதானே.
எனது ஒருநாள் அதிஷ்டம். சிவந்த தலைமுடியும் வெளுத்த நிறமும்கொண்;ட ஐரிஷ் பெண் ஒருத்தி நேர்முகத் தேர்வின்போது இருந்தாள். அவளிடம் உண்மையைச் சொன்னேன். அன்றே அங்கு வேலையைத் தொடங்குமாறு அவள் சொன்னாள். என்னால் நம்ப முடியவில்லை. உண்மையாகத்தான் சொல்கிறாளா? என்னிடம் கேள்விகள் கூட கேட்கவில்லையே? பெண் தெய்வமாக இருக்கிறாளே? அவளை ஒரு தேவதையாக மனதில் இருத்திக்கொண்டேன்.
அதிக வேலை கிடையாது. பெரிய கொதிகலனைக் கொண்ட தொடர் மெஷினில் அதிக வெப்பத்தில் பெயின்ரின் இரசாயன களிமத்தை உற்பத்தி செய்து பெரிய ட்ரம்களில் அடைப்பார்கள். மெஷினுக்கு சரியான அளவில் இரசாயானப் பொருட்களை ஊற்றினால் மெசின் தனது வேலையைச் செய்யும். மெஷினின் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை அடிக்கடி பார்க்கவேண்டும்;. அது தரும் களிமத்தை ட்ரம்களை அடைத்து உருட்டி ஒரு புறத்தில் அவற்றை சேர்க்கவேண்டும். நான் இரவு வேலையில் சேர்ந்தேன்;.
ரெபான் என்ற போலந்துக்காரர் மார்க் என்ற ஆங்கிலேயர் ஆகியோருடன் நாம் மூவர் அந்தப்பிரிவில் வேலை செய்பவர்கள்;. அவர்கள் இருவரும் முப்பது வயதுக்காரர்கள். என்னைத் தவிர இருவரும் திருமணமாகாதவர்கள்.
ரெபான் எனது வீட்டுக்கருகில் இருப்பதால் கார் வைத்திராத என்னை தனது காரில் கொண்டு செல்வான்.
நாங்கள் மூவரும் மட்டும் ஒரு ஷிவ்ட்டில் வேலை செய்வதால் எங்களது உரையாடல்களில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. ரெபானும் மார்க்கும் வசனத்திற்கு ஒரு தூசணவார்த்தையை பாவிப்பார்கள். சாதாரணமாக தேனிர் அருந்தும் விடயத்திலும் தூசண வார்த்தை இருக்கும். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. பின்னால் பழகிவிட்டது. மார்க் பேசும்போது கோயிலில் ஐயரின் சமஸ்கிருத மந்திரம்போல் தாளலயத்துடன் தூசணவார்த்தைகள் வெளிவரும்போது அதுவே சங்கீதமாக ஒலிக்கும். ரோயல் ஆங்கிலம்போல் இவனது ரோயல்த் தூசணமிருக்கும்.
என்னைப்பொறுத்தவரை அவர்கள் முக்கியமாக இரண்டு விடயங்களை அலசுவார்கள். ஒன்று பெண்கள் விடயம். அந்த உரையாடல் மருத்துவக்கல்லூரியில் பெண் உடலுறுப்புகளை வெட்டி எடுத்து மேசையில் வைப்பது போல் இருக்கும். அதில் சிறிது கலந்து கொள்வேன். மற்ற விடயம் கார் பற்றியது. வகை வகையான கார்களையும் அவற்றின் தொழில்நுட்பத்தையும் பேசும்போது எனக்கு கார் பற்றிய அறிவு இல்லாதமையால் அந்த உரையாடல் சலித்துவிடும்.
நான் வேலைக்குச் சேர்ந்த இரு கிழமைகளில் மார்க் ஒரு கிழமை விடுமுறை எடுத்துக்கொண்டு மெல்பன் சென்றுவிட்டான். ரெபான் அமைதியாகி விட்டான். எனக்கு போரடித்தது.
மார்க்கினது விடுமுறை கழிந்ததும் வந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் மூவருக்கும் ஓவர்ரைம் தந்தார்கள். தயாரித்த களிமத்தை பெரிய ட்ரம்களை ஏற்றி மெல்பனுக்கு லொறிகளில் அனுப்ப வேண்டும். நாங்கள் தயாரித்த இராசாயனக் கூழ்களில் வண்ணத்தை மெல்பனில் கலந்து பெயிண்ட் தகரங்களில் அடைப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமை வேலை வேகமாக முடிந்துவிட்டது. எங்களைத்தவிர எவரும் அந்தத் தொழிற்சாலையில் இல்லை. இரண்டு மணிக்கான கோடை வெயில் வெளியில் அடித்தது. எட்டுமணிநேர வேலையை ஆறுமணி நேரத்தில் முடித்துவிட்டு வெளியேறினால் ஆறு மணி ஓவட்ரைம்தான் கிடைக்கும். அதுவும் இந்த வெயிலில் வெளியேசெல்லும் உத்தேசம் மற்றைய இருவருக்கும் இல்லை. இரண்டு மணிநேரம் தொழிற்சாலையின் உணவு அறையில் தங்கியபோது மார்க் தனது கச்சேரியை ஆரம்பித்தான். கார் விடயமாக பேசினால் ஓவர்;டைம் கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை நான் பஸ் ஏறிப் போய்விடுவேன் எனப் பயமுறுத்தினேன்.
” உனக்காக நான் சொல்லக்கூடாத விடயத்தை சொல்லப்போகிறேன் ” என்றவாறு மார்க் பீடிகை போட்டான்.
மாக்கைப் பார்த்தால் கிரிக்கட் வீரர் இயன் பொதம் போலத் தோன்றும்.
மெல்பனில் தனக்குக் கிட்டிய அனுபவங்களைச் சொன்னான்.
அவன் சொல்லியது முப்பது வருடங்களின் பின்னரும் எனது நினைவில் இருப்பது வேடிக்கையானது. அதற்குக் காரணம் அந்த நாள். சாபத் நாளென்பதே. ஆறு நாட்களில் தொடர்ந்து உலகத்தை படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வெடுத்த நாள். ஆன்று பிரார்த்தனையிலும் ஓய்வாகவும் கழிக்கும்படி இறைவனால் யூதர்களுக்கு கட்டளை இடப்பட்ட நாள். அதை சனிக்கிழமையில் யூதர்கள் கடைப்பிடித்து சினகொக் செல்வார்கள்
” மெல்பனில் எனது சித்தியைப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை கிங்ஸ் வீதியில் உள்ள மெல்பன் நைட் கிளப் ஒன்றுக்குச் சென்றேன்;. அங்கு இருந்த மூன்று பெண்களில் நான் சந்தித்த பெண் கத்தரின். எல்லோரும் டான்ஸ் ஆடியபோது மூன்று பெண்கள் ஆளுக்கொரு கிளாஸ்களை வைத்தபடி தனியாக இருந்தனர். அங்கு அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து பியரை குடித்தபடி திரும்பிப் பார்த்தேன். சிறிது நேரத்தில் மற்றைய இரு பெண்களும் அங்கு வந்த நண்பர்களுடன் டான்சுக்குச் சென்றார்கள். என்னருகே இருந்த பெண்ணிடம் ” ஏன் நீங்கள் போகவில்லை? ” என்றபோது
தனக்கு பாட்னர் இல்லையென்றாள்.
அவளது குரலில் இங்கிலாந்து கரைந்து வந்தது.
” நீ இங்கிலாந்தா ? ”
” கென்ட். பெயர் கத்தரின் ” என்றாள்
இருவரும் ஒன்றாக நடனமாடிய பின்பு கந்தரினுடன் ஒன்றாக இருந்து பேசியபோது தான் இங்கிலாந்தில் இருந்து வந்ததாகவும் இங்குள்ள பல்கலைக்கழத்தில் படிப்பதாகவும் சொன்னாள்.
நடு இரவு வந்ததும் என்னிடம் டாக்சியை அழைக்க சொல்லிவிட்டு அவள் ஏறியபோது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
” நானும் வரவா ” எனக் கேட்டேன்
தனது பேர்ஸில் இருந்து ஒரு கார்டை எடுத்துக் கொடுத்துவிட்டு ” இஷ்டமென்றால் நாளை காலையில் வா” என்றாள்.
அதில் கத்தரின் என எழுதப்பட்டு அவளுடைய தொலைபேசி இலக்கமும் இருந்தது.
நைட் கிளப்பின் ஒளியில் கிறங்கவைக்கும் அவளது முகஅழகு உடல் கவர்ச்சி என்பதற்கு மேலாக நமது ஊர் பெண் என்பதும் ஆவலைத் தூண்டியது.
ஏமாற்றத்துடன் வீடு சென்று அடுத்த நாள் அவளுக்குத் தொலைபேசியெடுத்தேன்.
அவளது விலாசத்தை சொல்லி விட்டு வீட்டுக்கு அருகே வராமல் சிறிது தூரத்தில் டாக்சியை நிறுத்திவிட்டு வா என்றாள். பத்துமணியளவில் அங்கு போயச்; சேர்ந்தேன்
அந்த இடம் தொடர் மாடிக்கட்டிடங்களைக் கொண்டது. அந்த இடத்தில் இரண்டறை கொண்ட அப்பார்ட்மென்ட் அவளது.
எனக்காக எதிர்பார்த்து கதவு பூட்டாது சாத்தப்பட்டிருந்தது.
கதவின் பின்னால் நின்று என்னை வரவேற்றாள்.
எதுவித பூச்சும் இல்லாதபோதும் மழைபெய்து கழுவிய மலர்ச்செடிபோல் அழகாக இருந்தாள். சிறிது நேரத்துக்கு முன்பாக குளித்திருக்கவேண்டும். தலைமயிர் ஈரமாக கன்னத்தில் ஒட்டியபடி இருந்தது. சிவப்பு நிறத்தில் கால்வரையும் மறைக்கும் கவுணை அணிந்து வெறும்காலுடன் நின்றாள்.
அவளது அபார்ட்மென்ட் ஹோலின் சுவரில் புத்தகங்கள் அடுக்கப்பட்ட அலுமாரி இருந்தது. அதனருகே மோனாலீசாவின் பிரதி ஓவியம் தொங்கவிடப்பட்டிருந்தது. அருகில்; தொலைக்காட்சியில் சமையல் செய்வது எப்படி என்பது சத்தமின்றி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அந்த தொலைக்காட்சியின் மேல் சிவந்த ரோஜாமலர்கள் ஒரு கண்ணாடிக் குவளையில் வைக்கப்பட்டிருந்தன.
அவளாக பேச்சைத் தொடங்கினாள்.
‘ மார்க் பார்த்தாயா? லண்டனில் இருந்த நீயும் கென்ட் உள்ள நானும் மெல்பனில் சந்தித்திருக்கிறோம். ”
அவளை விழுங்க விரும்பிய நான் ‘ உண்மைதான்’ என்று மென்று வார்த்தையை விழுங்கினேன்.
‘ நாளை நீ சிட்னி போகிறாய்?’
‘இன்று இரவு போகிறேன்?’
‘அதற்குள் என்னை சந்திக்கவேண்டுமென்பது உனது ஆவல் இல்லையா?’
இவள் என்ன சொல்ல வருகிறாள்?. இவளுக்கு விருப்பமில்லாவிடில் காலை தொலைபேசி எடுத்தபோதே சொல்லியிருக்கலாமே?’
‘நான் போகவா? என எழும்பினேன்
கையால் தடுத்து இருத்தினாள்.
அவளது கைகள் குளிர்மையாக இருந்தன.எனது கைகள் சூடாக இருந்தன.
நேற்று கிளப்பில் என்னோடு நாலு மணிநேரம்தான் இருந்தாய். என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?
‘ நீ ஒரு நர்சாக வருவதற்காக படிக்கும் பல்கலைக்கழக மாணவி. உனது பெற்றோர் கென்ட் இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஆறு வருடம் இவையெல்லாம் நீ சொன்னாய்தானே? ’
‘நான் சொல்லாத விடயம் ஒன்றிருக்கிறது. நான் சனிக்கிழமைகளில் மட்டும் உடல் உறவுவைத் தொழிலாகச் செய்கிறேன்.’
அவளது அப்பாட்மெணட்டின் ஹோல் மட்டுமல்ல முழுக்கட்டிடமும் சுற்றியது. தொலைகாட்சியில் பெரிதாக சத்தம் வந்து, மொனாலீசாவும் பலமாக சிரிப்பதுபோல் இருந்தது.
சில கணம் எதுவும்பேசாது இருந்தேன்.
பின்பு சுதாரித்தபடி ‘அது ஏன் சனிக்கிழமை மட்டும்?’
‘வரும்போது பார்த்தாயா? தெருவில் ஒருவருமில்லை. இந்தப் பகுதியில் வாழ்பவர்கள் யூதர்கள். சனிக்கிழமையில் சினகொக் போய்விடுவார்கள். எங்கும் அமைதி நிலவும் மற்றைய நாட்களில் சிறுவர்களும் பெண்களுமாக இந்த இடம் சந்தைபோல் நிறைந்திருக்கும். இவர்கள் எல்லாம் ரஸ்சியாவில் இருந்து வந்தவர்கள். ஒருவருக்கு ஒருவர் உறவானவர்கள் என்பதால் எப்போதும் மற்றவர் வீட்டிற்குள் நுழைவார்கள்.’
‘ஒரு நாள் உழைப்புக் காணுமா? ”
‘ஒரு நாள் இல்லை. காலையில் மட்டும்தான். நான் எனது தேவைக்காக மட்டுமே ஈடுபடுகிறேன். ஆடம்பரத்திற்காகவல்ல’
‘அது உண்மைதான்’
‘எப்படி இந்த ஐடியா வந்தது?’
மெல்பனுக்கு பாக்பக்கராக வந்து நின்றபோது இங்கு படிக்க நினைத்தேன். எனது நண்பியாக இருந்தவள் ஒருத்தியின் உதவியால் இங்கு தங்கியபோது இந்த ஐடியாவைத் தந்தாள். என்னைப் பற்றி எல்லாம் சொல்லிவிட்டேன் இப்பொழுது நீ போவதென்றால் உன்னைத் தடுக்கமாடடேன்.
‘கத்தரினுடைய படிப்புக்கு எனது உதவி என்று எனது பர்சில் இருந்து எடுத்துக் கொடுத்தேன். அத்துடன் அவளது வீட்டில் இருந்துவிட்டு நேரடியாக பஸ் ஏறி காலை தொழிற்சாலைக்கு வந்தேன்
‘உண்மையாகவா ? என்றான் ரெபான்.
‘சந்தேகமிருந்தால் என்னை மணந்து பார்’ என்று அருகில் வந்தபோது ரெபான் விலகினான்
‘புதுமையான கதையாக இருக்கிறது மார்க்’ என்றேன்
‘இராகப்பின் ன் கதைபோல் இருக்கிறது’ என்றான் ரெபான்.
ரெபான் மிகவும் பக்தியுள்ள கத்தோலிக்கன். கழுத்தில் கறுப்புக் கயிற்றில் சிலுவையை அணிந்திருந்தான்
‘அது என்ன?’ என்றேன்
‘மொசேயுடன் யூதர்கள் எகிப்தில் இருந்து வெளியேறிய 40 வருடங்கள் பாலைவனத்தில் அலைந்த பின்பு ஜெரிக்கோ போக முயற்சித்தபோது மோசசுக்கும் அவரது தம்பியான அரனுக்கும் அங்கு செல்லமுடியாது என்று இறைவனால் சாபமிடப்பட்டிருந்தது. இதனால் இரண்டு உளவாளிகள் ஜோசுவாவால் ஜெரிக்கோ நகருக்கு அனுப்பப்பட்டபோது அவர்கள் நகரின் ஓரத்தில் இருந்த கானனைட் விபசாரியின் வீட்டில் தங்கினார்கள். ஜெறிக்கோ அரசனின் பாதுகாவலர்கள் உளவாளிகளைத் தேடி வந்தபோது அந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில் வீடு மேய்வதற்காக குவித்து வைத்திருந்த சணல் செடியின் தண்டுகளிலிடையே அவர்களை மறைத்து வைத்தாள் இராகப். இதனால் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.
அந்தப் பாதுகாப்பின் பிரதியுபகாரமாக தனது பெற்றோர் மற்றும் பெண்கள், கானனைட்டினருக்கும் யூதருக்கும் நடக்கவிருக்கும் சண்டையில் பாதுகாக்கப்படவேண்டும் என அந்த உளவாளிகளிடம் உறுதி மொழி பெறுகிறாள். பிற்காலத்தில் இஸ்ரேலியர்களுக்கும் கானனைட்டினருக்கும் நடந்த சண்டையின்போது அந்த விடுதியின் யன்னல் சிவப்புத் துணியால் அடையாளமிடப்படுகிறது. அந்த வீட்டில் உள்ளவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதாக விவிலியம் கூறுகிறது.’
‘ அப்படியானால் ஆங்கிலேய கத்தரினை அந்த கானனைட் இராகப்பாக ஒப்பிடுகிறாயா ரேபான்?. ” கேட்டுவிட்டு ‘ நீ ஒரு பாஸ்ரட்’ என மார்க் தனது வழக்கமான மொழியில் சொன்னான்.
படிப்பிற்காக கத்தரினும், தனது பெற்றோரையும் சக பெண்களையும் பாதுகாக்க இராகப்பின் செய்கைகள் இருத்தலியலின் விளைவுகள். அதையே நானும் செய்கிறேன் என எண்ணியபடி எமது ஓவர்ட்டைம் கார்டை அங்குள்ள கடிகாரத்துள் வைத்து நாம் வெளிச்செல்லும் நேரத்தை பதிந்தேன்.
——
அடிக் குறிப்பு.
1 யூதர்களின் தேவாலம் சினகொக(Synagogue) எனப்படும்
2)பாக்பக்கர்( (Backpacker) தோளில் பையுடன் பல மாதங்கள் ஊர் சுற்றுபவர்கள்
3)கென்ட் (Kent) இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதி(மாவட்டம் போல)
4)ஜோசுவா(Joshua) மோசேயின் பின் யூதர்களின் தலைவர்.
5) கானனைட் (Canaanites) அப்பொழுது ஜெரிக்கோவில் வாழ்ந்தவர்கள்.
6) இராகப். (Rahab) யூதர்களுக்கு உதவிய கானனைட் விபசாரி (பழய வேதாகமம் -ஜோசுவா)
மறுமொழியொன்றை இடுங்கள்