நாங்கள் மண்டலே அரண்மனைக்கு சென்றபோது இரண்டு மைல் நீளமான நான்கு சுற்று மதில்கள் அவற்றை சுற்றி நீர் நிறைந்த அகழி என்பவற்றின் மத்தியில் மிகப் அழகான பெரிய மாளிகை இருந்தது.. அதில் நீதிமன்றம், அரசனது கொலுமண்டபம், நாணயசாலை எனப்பல பிரிவுகள் இருந்தது. ஆனாலும் தற்போது பார்ப்பது பழைய மாளிகையின் மொடல் மட்டுமே என்று எமது வழிகாட்டி சொன்னார்.. அழிந்ததை புதுப்பிக்க முடியாதபோதிலும் அதனது மாதிரியை வைத்திருந்தது அக்கால வாழ்வை புரிந்து கொளளமுடிந்தது.. அதில் முதலாவது மனைவி இரண்டாவது மனைவிக்கு எனப் பல அறைகள் இருந்தன. மின்டோன் அரசனுக்கு பல மனைவியர் எண்ணற்ற பிள்ளைகள் இவர்களையெல்லாம் ஒரு அரண்மனையில் வைத்திருந்ததே அரசின் வீழ்ச்சிக்கு காரணம் என வழிகாட்டியும் சொன்றார். மின்டோனது இறப்பின் பின்னால் பங்காளிகளின் மத்தியில் பதவிக்கான கொலைகளை, பிரித்தானியர் தங்களது வெற்றிக்கான காரணமாக்கினர் என சரித்திரமும் பகிருகிறது..
மண்டலேயை கைப்பற்றி பர்மிய அரச அரண்மனையை பிரித்தனியர் மூன்றாவது பர்மிய யுத்தத்தில் சூறையாடினார்கள். விலை உயர்ந்த பொருட்கள், பனை ஓலையில் எழுதப்பட்ட பர்மாவின் இலக்கியம்,சரித்திரம் மற்றும் பிரபுக்கள் வம்சத்தின் தலைமுறையான சாசனப் பதிவுகள் எல்லாவற்றையும் பிரித்தானியாவுக்கு எடுத்துச் சென்றபின் அரசமாளிகையை தங்களது ஆளுநர் மாளிகையாக்கினார்கள். அரச குடும்பம் மட்டுமல்ல மந்திரி, பிரதானிகள் மற்றும் இராணுவம் என உருவாகியிருந்த நடைமுறைகளை முற்றாக அழித்தொழித்தார்கள்.
பிற்காலத்தில் பர்மாவை கைப்பற்றிய ஜப்பானியர் தங்களது ஆயுதக் கிடங்காகவும் மற்றும் பண்டகசாலையாகவும் மண்டலே அரண்மனையை வைத்திருந்தபோது முழு தேக்கு மரத்தால் கட்டப்பட்டிருந்த அரண்மனையையும் பிரித்தானியர் இரண்டாம் உலகயுத்தத்தில் குண்டு வீசி அழித்தார்கள்.. காவல்க்கோபுரம் நாணயசாலை மட்டும் அழிவில் இருந்து தப்பியது.
நாம் மண்டலேயில் சென்ற இன்னுமொரு இடம் குத்தோடோ விகாரையும் அதைச் சுற்றி சிறிய விகாரைகளும் அமைந்த இடம். அதுவும் மின்டோன் அரசனால் உருவாக்கப்பட்டது. 729 பளிங்குகற்களில் புத்தரின் போதனைகள் ( திரிபீடகம்) பளிங்கு கற்களில் எழுதப்பட்டு அவற்றை விஹாரைகளாக்கியிருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றாக வரிசையில் அமைக்கப்பட்டிருக்கிறது. (Kuthodaw).அதை உலகின் மிகவும் பெரிய புத்தகம் என்கிறார்கள். புத்தகம் என்பதற்கு, நாம் நினைப்பது போலல்லாமல் கற்களில் காலத்தால் அழியாமல் இருப்பது. இப்படியானதை வியட்நாமிலும் பார்த்தேன். இங்கு ஒவ்வொரு பளிங்குகற்களையும் சுற்றி சிறிய விஹாரையாக்கி இருந்தார்கள் பளிங்குக்கற்களை உள்ளே வைத்து பகோடாவாக வரிசையாக அமைத்;திருப்பது அழகான காட்சி.
மூன்றாவது பர்மியப் போரில் மண்டலேயை கைப்பற்றிய பிரித்தானியப்படைகள், எல்லா பௌத்த பகோடாக்களையும் மற்றும் மடாலயங்களையும் தங்களது படைகள் தங்குமிடமாக மாற்றியதுடன், பர்மியர்கள் விஹாரைகளுக்கு வந்து வழிபடவும் தடை செய்தார்கள். இறுதியில் விக்ரோரியா மகாராணியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்ததன் பின்புதான் அந்த இடங்களில் இருந்து படையினர் விலகினார்கள். அங்குள்ள தங்கம் மற்றும் பெறுமதியான இரத்தினங்கள் பளிங்குகற்கள் என்பவற்றை பிரித்தானியப்படையினர் சூறையாடினார்கள். எட்டுவருடங்கள் எடுத்து உருவாக்கப்பட்ட திரிபீடக எழுத்துக்கள் பளிங்கில் செதுக்கி உள்ளே பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. பிரித்தானியப் படைவீரர்கள் அதையும் சுரண்டி எடுத்துவிட்டார்கள். எந்தப்பொன்னும் இப்பொழுது தெரியவில்லை.
பாலி மொழியில் சாதாரண மக்களுக்கும் பிக்கு பிக்குணிகள் என்ற சங்கத்திற்குமாக புத்தர் பேசியது. இவை. சுத்த பீடகம், வினைய பீடகம், மற்றும் அபிதம்ம பீடகம் எனப்படும் மூன்றுமே திரிபீடகம் என்பது. ஆரம்பத்தில் பனையோலையில் இருந்தது. அதை அழிந்துபோகமல் இருப்பதற்காக இப்படி பளிங்கில் செதுக்கப்பட்டது..
மண்டலேயில் உலக புத்த கலாச்சார நிலையம் உள்ளது. அதில் பாகிஸ்தான், ஜப்பான், சீனா என உலகம் முழுவதும் உள்ள புத்தரின் உருவங்கள் சித்திரங்களாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இருந்த புத்தரின் முகங்கள் வேறு வகையானவை. பர்மாவில் ஆரம்பகால புத்தரின் சிலைக்கும் பிற்காலத்தில் அமைந்த சிலைக்கும் வித்தியாசம் தெரியும்.. அந்ததந்த நாடுகளில் புத்தரது முகம் தேசிய மயமாக்கப்பட்டுளளது. ஐரோப்பியர்கள் யேசுநாதரை ஐரோப்பியராக வெள்ளை நிறத்திலும் பொன்னிற முடியோடு ஐரோப்பிய மயமாக்கினார்கள்.
900 தொன் பள்ளிங்கால் உருவாக்கிய புத்தர் உள்ள விகாரை (Kyauk Taw Gyi pagoda) இந்த பளிங்குக்கல் வெட்டிய இடத்தில் இருந்து 10000 போர் சேர்ந்து ஐராவதி நதி மூலம் மண்டலேக்கு கொண்டுவந்தார்கள் . மற்றைய புத்தர் சிலைகளைவிட வித்தியாசமாக பாதி கண்மூடியபடி தரையில் கையை வத்திருக்கும் புத்தர் சிலையிது.. நான்கு அரசமரங்கள் இலங்கையில் இருந்து அங்கு நடப்பட்டது. தற்போது ஒன்றே உள்ளது.
மண்டலேயை தலைநகராக்கியபோது பகான் என்ற புராதன தலைநகரில் உள்ள ஆனந்தவிகாரையின் மாதிரியை மண்டலேயில் உருவாக்க மிண்டோன் அரசன் விரும்பியதால் இது நடந்திருக்கிறது. ஆனால், விஹாரையை கட்டி முடித்து அதை கொண்டாட முன்பு அவன் இறந்ததாக சொல்லப்படுகிறது. பர்மாவில் விஹாரைகளில் வருடத்துக்கு ஒருமுறை நமது நாட்டின் திருவிழாபோல் நடைபெறுகிறது. இந்த நாட்கள் அக்காலத்தில் கொண்டாட்ட நாளாகிறது. பர்மாவிலும் இசையும் நடனமும் புத்தவிஹாரைகளை சுற்றி வளர்ந்தன. மண்டலேயில் இந்த விஹாரையில் திருவிழா எமது நல்லூர் உற்சவத்திற்கு ஒப்பானது எனலாம்.
நாங்கள் சென்ற மற்றைய இடம் புத்தகுருமார்கள் அக்காலத்தில் வாழ்ந்த அந்த மடாலயம் ஆகும். தேக்கு மரத்தால் மிண்டோன் மன்னனால் மிகவும் அழகாக அமைக்கப்பட்ட அந்த மடாலயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வடிவமைக்கப்பட்ட சிற்பங்;கள்; – அக்காலத்து கலைஞர்களின் கலைத் திறமைக்கு சான்று பகர்கிறது.
மண்டலேயிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருப்பன பர்மாவின் பழைய தலைநகரங்கள. அவை தற்பொழுது இடிபாடுகளுடன் காணப்படுகின்றன.
ஆற்றைக் கடந்த பின்பு நல்லபாதைகள் இல்லாததால் குதிரைவண்டியில் உல்லாசப்பிரயாணிகளை அழைத்துச் செல்கிறார்கள். அந்த மூன்றுமணி நேரமும் ஒரு பெரிய கோணிப்பையில் உடலைப்போட்டு குலுக்கியதுபோல் இருந்தது.
சகங் குன்று (Sagaing Hill) என்றபகுதியில் அரைவட்டகுகையில் 45 புத்தர்சிலைகள் உள்ளன மெதுவான பச்சைநிறத்தில் பின்புலத்தில் ((U MinThonze Pagoda)) வெள்ளைப்பளிங்கில் வடிவமைக்கப்பட்ட புத்தர்சிலைகளில் தங்கமுலாம் பூசிய புத்தரின் மேல் துண்டிற்கு அந்தகுகையின் வெளியில் இருந்து நேரடியாக ஒளி வராது மறைமுகமாக வருவது மிகவும் வித்தியாசமான நிறத்தை அந்த புத்தர் சிலைகளுக்கு கொடுத்தது.
இங்குதான் ஐராவதி நதியின்மேல் இரண்டு கிலோமீட்டர் நீளமான தேக்கு மரத்திலான ஒரு மரப்பாலம் அமைந்துள்ளது. அதன் மீது நடந்து கொண்டு உல்லாசப்பிரயாணிகள் சூரிய அஸ்தமனம் பார்ப்பார்கள். நாங்கள் செல்லும் போது சற்றுத் தாமதமாகிவிட்டது. பாலத்தில் நடக்காமல் கீழிருந்து பார்த்தோம்.
பர்மீய மக்களும் பாடசாலை சிறுவர்களும் விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாக முக்கிய புத்த ஆலயங்களுக்கு யாத்திரை செய்வதையும் அந்த விகாரைகளை புதுப்பிக்க பணம் கொடுப்பதையும்; பார்க்கக்கூடியதாக இருந்தது. வசதியற்றவர்களும் விஹாரைக்கு பணம் செலுத்துவதை கடமையாகச் செய்தார்கள்.
பிரித்தானியர்கள் பர்மிய நாட்டைக் கைப்பற்றும் வரையும் அவா அரசு என்பார்கள். மண்டலேக்கு 20 கிலோமீட்டரில் அந்தஅரசு 300 வருடங்களுக்குமேலாக இருந்தது. அது இப்பொழுது சிறிய கிராமம்.
ஆவா அரசு பர்மாவின் கீழ்பகுதியை ஆண்ட மன்னர்களால் எரிக்கப்பட்டது. நமது சேரன் சோழன் பாண்டியன்போல் அங்கும் உள்நாட்டில் பல மன்னர்கள் தோன்றி மறைந்தார்கள். அவா தலைநகர் எரிந்து போனதன் பின்பு மண்டலேக்கு சில காலம் முன்பாக அமரபுர என்ற நகரம் தலைநகராக இருந்தது.
தற்போதைய ஆவாவில் தேக்குமரத்தில் ஏழு தட்டுகளில் அமைந்த புத்தமடாலயம் இருந்தது.
இலங்கையில் புத்தபிக்குகளின் மத்தியில் முக்கிய பிரிவாக அமரபுர – நிக்காய உள்ளது. இந்த அமரபுர பர்மாவின் தலைநகரில் அக்காலத் இருந்தே வந்தது. கண்டிய மன்னர்களின் காலத்தில் கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிக்குகளாக வந்த போது சலகம சாதியைச் சேர்ந்தவர்கள் பர்மாவுக்குச் சென்று அங்கு படித்து பிக்குகளானார்கள். இதைத் தொடர்ந்து கரையா மற்றும் துரவ சாதியினரும் இதைப் பின்பற்றினர். ஒருவிதத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்குப் போகமுடியாதவர்கள் இந்தியா செல்வதுபோல. ஆனாலும் இந்த அமரபுர நிக்காய, மன்னர்களின் உதவியற்றது. முக்கியமாக சிங்கள மத்திய வகுப்பினரது ஆதரவில் உருவாகியது. முக்கியமாக சியாம், (தாய்லாந்து) இல் இருந்து அஸ்கிரிய, மல்வத்த என்பன உருவாகின. அஸ்கிரிய, மல்வத்த சிங்கள உயர்சாதியினரால் உருவாக்கியதாலே புறக்கணிக்கப்பட்டவர்களால் அமரபுர நிக்காய உருவாகியது அதேபோல் பர்மாவில் இருந்தே ராமனய நிக்காயவும் உருவாகியது. இவர்களுடன் அமெரிக்கரான ஹென்றி ஒல்கோட் சேர்ந்தமையால் இலங்கையின் முக்கிய பாடசாலைகளான ஆனந்தா கல்லூரி (கொழும்பு) தர்மராஜா கல்லூரி (கண்டி) மகிந்த கல்லூரி (காலி) என்பன உருவாகின.
பர்மாவுக்கு பௌத்த தேரவாதம் இலங்கையில் இருந்து ஆயிரம் வருடங்கள் முன்பு கொண்டு செல்லப்பட்டு பின்பு அமரபுர நிக்காய ராமனய நிக்காயவும் இங்கு உருவாக பர்மியர் காரணமானார்கள். இலங்கையின் வரலாற்றில் ஒரு பகுதியில் பர்மாவின் செல்வாக்கு இருந்ததை பர்மாவுக்கு சென்ற பின்பே தெளிவாக அறிந்து கொண்டேன் என்பது எனக்கு சந்தோசமாக இருந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்