பல் மருத்துவர் ரவீந்திரராஜா

Dr.Ravindrarajah.01png
எழுத மறந்த குறிப்புகள்
அவுஸ்திரேலியாவில் சமூகப்பணிகளில் இணைந்துவரும் பல்மருத்துவர் ரவீந்திரராஜா
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தூண்களில் ஒருவராக விளங்கும் அன்பர்
மணிவிழா நாயகன் பற்றிய பார்வையில் சஞ்சரிக்கும் கடந்த காலங்கள்
முருகபூபதி – அவுஸ்திரேலியா

வாழ்க்கைப்பாதையில் எம்முடன் இணைந்து வருபவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் மறக்கமுடியாத நண்பர்கள் வட்டத்தில் நிலைத்திருப்பார்கள். கலை இலக்கியத்தில் , அரசியலில், ஊடகத்துறையில், பணியிடங்களில், பொது வாழ்க்கையில், சொந்த பந்தங்களின் உறவுகளில் நாம் சந்திக்கும் மனிதர்கள் விசித்திரமான குணஇயல்புகளுடன் எம்மோடு இணைந்திருப்பர்.
உலகத்தில் நட்பு என்பது மகத்தானது. அதனால்தான் இராமன் தனது சகோதரர்களை விட – தன் மனைவியை விட ஒரு சில நண்பர்களை ஆழமாக நேசித்தான். உண்மையான நட்பை விலைக்கு வாங்க முடியாது.
எனது தாயகத்திலும், நான் சென்ற நாடுகளிலும் நான் சந்தித்த பலர் எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருக்கின்றனர். இலங்கைக்கு நான் செல்லும் சந்தர்பங்களில் நண்பர்களைத்தேடி நான் சென்றுவிடுவது குறித்து எனது சகோதரங்களின் குடும்பத்தினருக்கு என்மீது செல்லக்கோபம் நீடித்திருக்கிறது.

எனது தங்கை மகள் நான் வந்து சேர்ந்தவுடன், எனது பொதிகளை ஆராய்ந்து பற்பசையும் பிரஷ்ஷ_ம் ஒரு துவாயும் வீட்டில் அணிந்துகொள்வதற்கு தேவையான உடைகளையும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, இதர உடைமைகளை எங்காவது ஒளித்துவைத்துவிடுவாள்.

Dr.Ravindrarajah

நான் வந்தால் அவளுடன் நீண்டபொழுதுகள் இருக்கவேண்டும் என்று என்னை ஆழமாக நேசிக்கும் செல்ல மருமகள். அவள் ஒளித்துவைத்தவை என்வசம் இருப்பின் நான் எங்காவது நண்பர்களைத்தேடிச்செல்வேன் என்பது அவளுடைய எண்ணம்.
பின்னர் கெஞ்சி மன்றாடி அவளுடைய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நான் எனது பயணத்தில் இயங்கவேண்டும்.
யாரும் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டால் ” நான் வீட்டில் இல்லை ” என்றும் சொல்லக்கூடியவள். அதனால் நான் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.
நண்பர்களில் தேவைக்காக மாத்திரம் உறவாடுபவர்கள் மத்தியில் எந்த பிரதியுபகாரமும் எதிர்பாராமல், விசுவாசத்துடன் இணைந்திருப்பவர்கள் பலரும் எனது நண்பர்கள் வட்டத்தில் உள்ளனர்.
அப்படி ஒருவருடன் எனக்கு ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் நட்புறவு நீடிக்கிறது. எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள். சமூகப்பணியாளர்கள் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதிக்குவித்துவிட்டேன். ஆனால், எனது நலனில் – எனது பணிகளில் அக்கறை காண்பிக்கும் இவர் பற்றி நான் எழுதுவதற்கு பலதடவை யோசித்தபோதும் ஏனோ சாத்தியமாகவில்லை.
இவர் எழுத்தாளரோ, கலைஞரோ, அரசியல்வாதியோ, ஓவியரோ இல்லை. இவர் ஒரு பல்மருத்துவர். பல்மருத்துவருக்கும் இலக்கியவாதியான எனக்கும் அப்படியென்ன சாசுவதமான நட்புறவு என்பதுதான் இந்த எழுதமறந்த குறிப்புகள்.

1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு என்னைப்போன்று பல Married Bachelors வந்திறங்கியபோது, நாம் அகதியாக கணிக்கப்பட்டோம். எமது எதிர்காலம் அன்று இன்றைய சமகாலத்தில் படகுகளில் வந்திறங்கியிருக்கும் அகதிகளின் நிலைக்கு ஒப்பானது.

எமது தேவைகளை மனிதாபிமான ரீதியில் கவனிப்பதற்காக ஒரு அமைப்பின் தேவையை இங்கு எனக்கு அறிமுகமான சில நண்பர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களிடம் மனிதாபிமானமும் முற்போக்கான சிந்தனைகளும் இருந்தன.
அவர்கள்தான் சட்டத்தரணி ரவீந்திரன், டொக்டர் நடேசன், இராஜரட்ணம் சிவநாதன், நல்லையா சூரியகுமாரன், தருமகுலராஜா, திவ்வியநாதன், விஜயகுமார். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட அரசியல் கொள்கைகள் இருந்தன.

சட்டத்தரணி ரவீந்திரன் இலங்கை தமிழர் அரசியலில் பல சட்டத்தரணி தலைவர்களுக்கு நெருக்கமானவர்.
சூரியகுமாரன், இலங்கையில் கல்குடா எம்.பி. ஆகவும் ஐக்கிய தேசிய அரசில் உணவு அமைச்சராகவும் பதவிவகித்த நல்லையாவின் புதல்வர். நடேசன் இந்தியாவில் தஞ்சமடைந்த ஈழ அகதிகளின் நலன்களுக்காக மருத்துவமுகாம்களை நடத்தியவர். சிவநாதன் எனக்கு மெல்பனில் தங்குவதற்கு வசதிகள் செய்து தந்த இலங்கையில் நீர்கொழும்பில் ஏற்கனவே அறிமுகமான நண்பர்.

திவ்வியநாதன் யாழ். பல்லைக்கழக துணைவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் சு. வித்தியானந்தனின் நெருங்கிய உறவினர். தருமகுலராஜா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் அங்கம் வகித்திருந்த பத்மநாபா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் நெருங்கிய உறவினர். விஜயகுமார் நாம் தொடக்கிய மக்கள்குரல் கையெழுத்து இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்தமையால் அறிமுகமானவர்.

மக்கள்குரல் மெல்பனில் மாத்திரமின்றி முழு அவுஸ்திரேலியாவிலும் அக்கால கட்டத்தில் தமிழர் மத்தியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது எனச்சொன்னால் மிகையாகாது. கணினியில் தமிழ் எழுத்துக்களை பதிவுசெய்யும் காலம் அப்பொழுது அறிமுகமாகவில்லை.
இன்று நான் மேற்கொள்ளும் பல கலை, இலக்கிய சமூகப்பணிகளுக்கு மக்கள்குரல்தான் தோற்றுவாயாகத்திகழ்ந்தது.
சட்டத்தரணி ரவீந்திரன் அச்சமயம், மெல்பனில் இயங்கிய இலங்கை தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். ஆயினும் இச்சங்கம் விடுதலைப்புலிகளை ஏகத்தலைமையாக படிப்படியாக ஏற்கத்தொடங்கியிருந்தமையால் அவருக்கு அச்சங்கத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்தது.
அவருடை நண்பர் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழக ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமி ஒரு இயக்கத்தினால் கொல்லப்பட்டிருந்தார். அத்துடன் ரவீந்திரனின் மேலும் சில நண்பர்களும் இயக்கங்களினால் கொல்லப்பட்டிருந்தனர்.
மக்கள்குரலில் அவர் இணைந்திருக்காவிட்டாலும், தனது தார்மீக ஆதரவை அதற்கு அவர் வழங்கியதற்கு காரணம், ” மாற்றுக்குரல் வேண்டும் ” என்ற எண்ணம் அவருக்கும் இருந்ததுதான்.

விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கம் பழ. நெடுமாறனை மெல்பனுக்கு அழைத்தபொழுதும் அவர் மேடையில் தோன்றி ஒரு நினைவுப்பரிசை நெடுமாறனுக்கு வழங்கினார்.
இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில் நண்பர் நடேசன் எமக்கு அறிமுகப்படுத்தியவர்தான் இந்தப்பத்தியில் நான் குறிப்பிட்ட பல்மருத்துவர் ரவீந்திரராஜா.

அவருக்கு அண்மையில் 60 வயது பிறந்துள்ளது. அவருடைய மணிவிழாக்காலத்தில் இந்தப்பதிவை நான் எழுதுவதற்கு முக்கியகாரணம், ஏற்கனவே பல இலக்கியவாதிகள், கலைஞர்கள் சமூகநலத்தொண்டர்களின் மணிவிழாக்காலத்தில் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன் என்பதுதான்.
ஆனால், அவர்களிலிருந்து முற்றாக வேறுபட்ட தன்முனைப்பு இல்லாத ஒருவர்தான் நண்பர் ரவீந்திரராஜா. அவரும் அன்று (1987) குடும்பத்தை இலங்கையில் விட்டுவிட்டு தனியாக வந்து மெல்பனில் Moorabbin என்ற ஊரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து தனது தொழில் சார் பணியில் ஈடுபடாமல் வேறு தொழில்களில் இருந்தார்.
பல்மருத்துவப்பணியை மேற்கொள்வதற்கு இங்கு வந்தபின்னரும் மேலும் படிக்கவேண்டும். பரீட்சைகளில் சித்தியடைந்து சான்றிதழ் பெறல்வேண்டும். ரவீந்திரராஜா படித்துக்கொண்டே வேறு தொழில்களில் ஈடுபட்டார்.
ஆனால், அவர் சமூகம் சார்ந்த சம்பளம் இல்லாத தொழில்களிலும் அவர் வசித்த பிரதேசத்தில் ஈடுபட்டமையால் எனது வர்க்கத்தில் இணைந்துகொண்டவர் என்ற அடிப்படையில் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானார்.
அவர் வாழ்ந்த மொறாபின் பிரதேசத்தில் பல தமிழ் அகதி இளைஞர்கள் , குடும்பஸ்தர்கள் வசித்தனர். அவர்கள் மத்தியில் நன்கு படித்த ஒருவராக அவர்களின் தேவைகளை ரவீந்திரராஜா எந்த பிரதி உபகாரமும் எதிர்பாராமல் கவனித்தார்.

அவர்களுக்கு வீடுகள் தேடிக்கொடுப்பது, கார் ட்ரைவிங் பழக்குவது, சாரதி பரீட்சைக்கு பயிற்சி வழங்குவது, வேலை தேடிக்கொடுப்பது, இப்படி பல தொண்டுகளில் ரவீந்திரராஜா ஈடுபட்டமையால் நான் அவரை இரண்டு செல்ல வார்த்தைகளில் அழைப்பதுண்டு.
அவை: விதானையார், Godfather .

இவ்வாறு இவருக்கு அந்தப்பிரதேசத்தில் நண்பர்கள் வட்டம் பெருகியது. ரவீந்திரராஜா எமது மக்கள் குரலுக்கு ஆங்கிலத்தில் இலங்கையில் வெளியான செய்திகளின் நறுக்குகளை சேகரித்துத் தருவார். நண்பர் சிவநாதன் தொடக்கிய தமிழ்க்கலை மன்றம் என்ற அமைப்பு 1989 இல் கலைமகள் விழாவை நடத்தியபொழுது ரவீந்திரராஜாதான் பொருளாளர்.
அதனால் இவர் விழாவின் சரஸ்வதி பூசைக்கு வாங்கிய தேங்காய், கற்பூரம், சாம்பிராணி, வாழைப்பழம் முதலானவற்றுக்கு செலவழித்த பணத்தைப்பற்றிய விபரங்களை பட்டியலிட்டு விழா மேடையில் வரவு – செலவு அறிக்கை சமர்ப்பித்த பொழுது அவருடைய அப்பாவித்தனம் வெளிப்பட்டது.
அவர் அவ்வாறு தெரிவித்தமைக்கும் ஒரு முக்கிய காரணம் இருந்தது.
புலம்பெயர் நாட்டில் ஒத்தோடிகள் மத்தியில் மாற்றுச்சிந்தனைகளை எவரேனும் முற்போக்காக முன்வைத்து செயல்படும்பொழுது அதற்கு அரசியல் சாயம் பூசி, இன்னாரிடம் பணம் பெற்று இயங்குகிறார்கள் என்று ஒரு புரளியை பரப்பிவிடுவார்கள்.
இந்தப்பரதேசிப்பேச்சு எம்மவர் மத்தியில் இன்றும் தொடருகிறது.
நாம் ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சியில் இலங்கையில் 2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியவேளையில் இலங்கை அரசிடம் பணம் வாங்கித்தான் அதனை நடத்துகின்றோம் என்று புலன்பெயர்ந்த சிலர் அபாண்டமாகப் பழி சுமத்தினார்கள்.
நான் இரவு பகலாக ஒரு தொழிற்சாலையில் உழைத்து எனது குடும்பத்திற்காக வங்கியில் கடன் பட்டு வீடுவாங்கியதும், இந்திய மத்திய அரசின் உதவியில் வீடுவாங்கியிருப்பதாகவும் ஒரு புரளியை பரப்பினார்கள்.
அன்று நண்பர் சிவநாதன் தமிழ்க்கலை மன்றத்தின் விழாவுக்காக அனுமதிச்சீட்டுக்கள் அச்சிட்டு, செலவு செய்யமுன்வந்தபொழுதும் இப்படித்தான் ஒரு புரளியை எழுப்பினார்கள்.
ரவீந்திரராஜா நிதானமாகச்செலவழித்து, விழாவை நடத்தியதனால் கலைமகள் விழாச் செலவு போக எஞ்சிய தொகை $ 500 அவுஸ்திரேலியன் வெள்ளிகள் என அறிவித்ததுடன், அமைப்பின் செயற்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் $ 250 வெள்ளிகளை அச்சமயம் மெல்பன் கரம்டவுன்ஸில் அமையத்தொடங்கிய ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்திற்கும் $ 250 வெள்ளிகளை நாம் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கும் வழங்கவிருப்பதாக அறிவித்தார். வழங்கினார்.
இவ்வாறு இவரது அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தை நிருமாணிக்கும் விக்ரோரியா இந்து சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் ரவீந்திரராஜாவுக்கு வலைவீசினார்கள்.
அவருடன் பல நண்பர்கள் இணைந்திருப்பதனால் அவரூடக பலரையும் தமது சங்கத்திற்கு அங்கத்தவராக்கி, வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு ஒரு வாக்குவங்கியை பெருக்குவதுதான் அவர்களின் நோக்கம்.
ஆனால், அத்தகைய எண்ணம் ரவீந்திரராஜாவிடம் இருக்கவில்லை. ஊருக்கு ஒரு கோயில் வேண்டும் என்பது மாத்திரமே அவருடைய எண்ணமாக இருந்தது. நானும் அவர் கேட்டதற்கு இணங்கி விக்ரோரியா இந்து சங்கத்தில் அங்கத்தவரானேன்.

ஒரு ஆண்டுப்பொதுக்கூட்டம் 1989 ஆம் ஆண்டு மெல்பன் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரியில் நடந்தது. இங்குதான் பல தமிழ் நிகழ்ச்சிகள் அக்காலப்பகுதியில் நடந்தன.
அந்தக்கூட்டத்தில் தலைவர் பதவிக்கு தெரிவாவதற்காக மூன்று யாழ்ப்பாணத்து தமிழ் டாக்குத்தர்மார் போட்டியிட்டார்கள்.
என்னடா இந்த சோதனை ? என்று நான் யோசித்தேன்.
அப்பர்சுவாமிகள் கையிலே ஒரு சிறிய உழவாரப்படையை வைத்துக்கொண்டு ஆலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் வளரும் புல் பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்து கோயில் திருத்தொண்டு செய்தார்.

இந்த விஞ்ஞானம் படித்த டாக்குத்தர்மார் அவ்வாறு தொண்டுகள் செய்யாமல் பதவிக்குப் போட்டியிடுகிறார்களே ? என்று ஆழ்ந்து யோசித்து நண்பர் ரவீந்திரராஜாவிடம் எனது கவலையை வெளிப்படுத்தினேன்.
” எல்லாம் ஜனநாயகத்தின் வேலை” என்று அவர் இரத்தினச்சசுருக்கமாகச்சொன்னார்.
அன்றைய மேடையில் ரவீந்திரராஜாவும் முழங்கினார்.
அவர் தமது குடும்பத்தினர் வந்ததும் Clayton என்ற ஊரில் நண்பர் திவ்வியநாதனின் இல்லத்தில் வாடகைக்கு குடியமர்ந்தார்.
திவ்வியநாதன் கலாநிதிப்பட்டம் பெற்று கன்பராவுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார்.

திவ்வியநாதனின் மனைவியின் தங்கை டொக்டர் நடேசனின் மனைவியின் சகோதரனை மணம்முடித்தபொழுது, ஒரு மணவறை செய்துகொடுத்தேன். அக்காலத்தில் இங்கு மணவறைகள் இருக்கவில்லை.

நான் பணியாற்றிய தொழிற்சாலையில் கிடைத்த சில பொருட்களுடன் மணவறை தயாரானது. திவ்வியநாதன் மெல்பன் பல்கலைக்கழகத்திலிருந்து எறியப்பட்ட சில மரச்சட்டங்களைத்தந்தார். அழகான மணவறை தயாரானது.
அதனை பாகம் பாகமாக கல்யாண மண்டபத்திற்கு ஏற்றி இறக்குவதில் ரவீந்திரராஜாவும் மேலும் சில நண்பர்களும் உதவினார்கள்.

” பூபதி இந்த மணவறையை மற்றவர்களுக்கும் வாடகைக்கு விடலாம் ” என்று மில்லியன் டொலர் பெறுமதியான ஆலோசனையை சொன்ன ரவீந்திரராஜா, நான் ஏதோ இலங்கையில் மணவறை செய்யும் தொழில்தான் ஈடுபட்டேன் என்றும் கருதியதுதான் பெரிய வேடிக்கை.
எனினும் அவருடைய அந்த ஆலோசனை வேறும் இரண்டு திருமணங்களுக்கு உதவியது. இலங்கை வானொலியில் முன்னர் பணியாற்றிய ஒரு நண்பரின் மகளுடைய சாமத்திய சடங்கிற்கும் உதவியது.
அதில் கிடைத்த வாடகைப்பணத்தை எமது கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்கு கொடுத்தேன்.

இவ்வாறு உரிய ஆலோசனைகளை அவ்வப்போது எனக்கு வழங்கியிருக்கும் ரவீந்திரராஜா, எமது கல்வி நிதியத்திற்கும் பெரிதும் பக்கபலமாகத் திகழ்ந்தார். பலரையும் நிதியத்துடன் இணைத்துவிட்டார்.
தாமும் பல மாணவர்களுக்கு உதவினார். இவ்வாறு உதவும் அன்பர்களைத்தேடிச்செல்லும் வே ளைகளில் என்னை தமது காரில் ஏற்றிச்சென்று அன்பர்களுக்கு அறிமுகப்படுத்துவார்.
அப்பொழுதெல்லாம் ” பூபதியின் பிள்ளைகளுக்கு உதவுங்கள் ” என்று வேடிக்கையாகச்சொல்லி காலப்போக்கில் அவருடைய சில நண்பர்கள் என்னைக்காணும்பொழுது, ” அந்தா பிள்ளை பிடிகாரன் வாரான் ” என்று நகைச்சுவையாகச் சொல்லவைக்கும் நிலையையும் உருவாக்கினார்.

இவருடன் மெல்பனுக்கு பல இடங்களுக்கும் உல்லாசப்பயணம் சென்றிருக்கின்றேன். ஒரு தடவை அவுஸ்திரேலியாவின் வரைபடத்தில் அப்பிள் பழம் போன்று காட்சிதரும் தஸ்மேனியா மாநிலத்திற்கும் விமானத்தில் அழைத்துச்சென்றார். அங்கு டொக்டர் ஜெயச்சந்திரனின் நட்பை ஏற்படுத்தித்தந்தார். அவரும் எமது கல்வி நிதியத்தில் இணைந்து மாணவருக்கு உதவினார்.
தஸ்மானியாவில் போர்ட் ஆதர் என்னும் இடத்தில் அமைந்த அவுஸ்திரேலியாவின் மூத்த எழுத்தாளர் ஹென்றிலோசனின் கல்லறையை பார்த்திருக்கின்றேன். இவ்வாறு எனது பயண இலக்கியங்களுக்கும் நண்பர் ரவீந்திரராஜா தகவல் திரட்டுவதற்கு உதவியவர்.
நண்பர் நடேசன் தொடர்ந்து எழுதும் பயண இலக்கியங்களில் ரவீந்திரராஜாவின் பெயர் இடம்பெறுவது தவிர்க்கமுடியாதது.
பயணங்கள் மேற்கொள்வதில் அலாதிப்பிரியம் கொண்டிருக்கும் ரவீந்திரராஜா, இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியிருப்பவர்

சமூக நலன் என்பது அவருடைய இயல்பு. அதேசமயம் பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கும் காலத்திலேயே மாணவர் இயக்கங்களிலும் முக்கிய பங்காற்றியவர். இவருடைய நண்பர்தான் திருகோணமலையில் பல்மருத்துவராக விளங்கிய சமூகப்பணியாளர் டொக்டர் ஞானி என அழைக்கப்பட்ட ஞானசேகரன்.
ஞானியை எனக்கும் நன்கு தெரியும். அடிக்கடி வீரகேசரிக்கு வந்து திருகோணமலை மாவட்டத்தில் ஆயுதப்படைகளின் அட்டகாசத்தைப்பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் பற்றியும் செய்திகள் வழங்கி, வெளிநாட்டு தூதரகங்களின் கவனத்திற்கு தெரிவிப்பவர்.
நான் அவுஸ்திரேலியா வந்த பின்னரும் ஞானியுடன் தொடர்பில் இருந்து, திருகோணமலையில் போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவியிருக்கின்றோம்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் காலூன்றியவேளையில் நடந்த தேர்தலின் பின்னர் வரதராஜப்பெருமாள் வடக்கு – கிழக்கு முதல்வரானார். அச்சந்தர்ப்பத்தில் பல் மருத்துவர் ஞானியும் கடத்தப்பட்டு காணாமல்போனார்.

ஞானி எமது கல்வி நிதியத்தின் திருகோணமலை மாவட்ட தொடர்பாளராக இருந்தவர். நாம் மாணவர்களுக்காக அனுப்பிய நிதியுதவி காசோலையை வங்கியில் வைப்பிலிட்டு திரும்பியவேளையில் அவர் கடத்தப்பட்டு காணாமல்போனார்.
உடனடியாக தகவல் அறிந்த நண்பர் ரவீந்திரராஜா என்னிடம் ஓடிவந்து , இலங்கையில் பல்மருத்துவர் சங்கத்தின் அப்போதைய செயலாளருடன் தொடர்புகொண்டு ஞானியை காப்பாற்ற முயற்சியெடுத்தார்.

வரதராஜப்பெருமாளின் அலுவலகத்துடனும் தொடர்புகொண்டு நாம் உரையாடினோம். ஆனால், மறுமுனையில் எம்முடன் பேசியவர் வரதராஜப்பெருமாளின் மாமனார்தான்.
ஞானியும் காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைந்துகொண்ட எளிமையான மனிதர்.
அவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பதற்கு ரவீந்திரராஜா பல தடவை முயன்றும், ” மக்களை விட்டு வரமாட்டேன் ” என்று மறுத்துக்கொண்டிருந்தவர்தான் ஞானி.
ஞானியின் இழப்பு ரவீந்திரராஜாவுக்கு மாத்திரமல்ல எமக்கும் பேரிழப்பு.
தொடர்ச்சியாக எமது கல்வி நிதியத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிவரும் ரவீந்திரராஜாவை நிதியத்தின் துணைத்தலைவர்களில் ஒருவராகத் தெரிவுசெய்தோம்.
கன்பராவில் வதியும் ரவீந்திரராஜா அங்கும் பல அன்பர்களை எம்முடன் இணைத்துவிட்டவர்.
இதுவரையில் அங்கு இரண்டு ஒன்றுகூடல்களை நடத்தி மேலும் பல அன்பர்களை நிதியத்துடன் இணைத்து அவர்களின் உதவியையும் எமது ஏழைத்தமிழ்மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
அத்துடன் கன்பராவில் நாம் நடத்தும் கலை இலக்கிய சந்திப்புகள் வெற்றியடைவதற்கும் ரவீந்திரராஜா பக்கத்துணையாக விளங்குபவர். அண்மையில்தான் இவருக்கு 60 வயது பிறந்துள்ளது என அறிந்தேன்.
இவருடைய மணிவிழாக்காலத்தில் இந்தப்பதிவு வெளிவருதல் மிகவும் பொருத்தமானது.
இவ்வாறு தன்னலம் கருதாமல் எம்மத்தியில் சமூகப்பணியாற்றுபவர்கள் இலைமறைகாயாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்படவேண்டியவர்கள்.
நண்பர்கள் என்றால் பிறந்தநாள் காலங்களில் ஒன்றுகூடி, மலையேறி ஜோதியில் கலப்பது அல்ல பெருமை. அதற்கும் அப்பால் அவர்கள் பெறுமதியான மனிதர்களாயின் அவர்களின் சிறப்பியல்புகளை எழுதி வெளியுலகிற்கு தெரிவிப்பதும் பெருமையானதுதான்.

ரவீந்திரராஜாவை பல சமூகப்பணிகளில் முன்மாதிரியாகக்கொள்ளலாம். அதற்கு அவரிடம் குடியிருக்கும் எளிமையான பண்புதான் தன்முனைப்பு அற்ற நல்லியல்பு.
இனிய நண்பர் ரவீந்திரராஜாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
—0—-

“பல் மருத்துவர் ரவீந்திரராஜா” மீது ஒரு மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: