சாகர புஷ்பங்கள்.

Tuna
நடேசன்

சமீபத்தில் நடந்த ஒரு சிறு சம்பவம் மனத்தில் பதிந்திருந்த பல சம்பவங்களை திரும்பிப் பார்க்க வைத்தது,

புலம்பெயர்ந்தவர்களிடம் இருக்கும் பொதுத்தன்மை இந்த நொஸ்ரல்ஜீக்கான இயல்பாகும். எஸ். பொவின் பாணியில் இது நனவிடைதோய்தலாகும்.

ஸ்பிரிங்வேல் மீன் கடையொன்றில் மீன் வாங்குவதற்கு வரிசையாக நின்றேன். எனக்கு முன்பு நின்ற தென் ஆசிய பெண் என்னைத் திரும்பி புன்முறுவல் செய்தாள். சில வார்த்தை பரிமாற்றத்தில், கேணல் ரம்புக்காவின் இராணுவ புரட்சியின் பின்பு பிஜியில் இருந்து தப்பி, அவுஸ்திரேலியாவுக்கு குடிவந்தவள் என தெளிந்து கொண்டேன்.

அவளது முறை வந்ததும் கண்ணாடிக்குள் இருந்த பாரிய மீனின் வால்பகுதியை தனக்குத் தரும்படி வியட்னாமிய வியாபாரியிடம் கேட்டாள். நான் இடைமறித்து ”மன்னிக்க வேண்டும் வால்பகுதியை விட வயிற்றுப்பகுதியே ருசு¢யானது” என்றேன்.

”அப்படியா” எனக் கூறி ஆச்சரியத்தால் கண்களை அகல விரித்து விட்டு, வயிற்றுப்பகுதி மீன் துண்டை வாங்கிக் கொண்டாள். போகும்போது புன்முறுவலுடன் நன்றி கூறிவிட்டுச் சென்றாள்.

நமது அனுபவம், அறிவு மற்றவருக்கு உதவும் போது மகிழ்ச்சி தருகிறது.

இதேபோல் 86ம் ஆண்டு புதுடில்லியில் ஒரு சம்பவம் நடந்தது,

”எப்பொழுது கல்கத்தாவில் இருந்து வந்தாய் வங்காளத்தில்” என
மீன் விக்கும் வயோதிப மாது கேட்டாள். திருதிருவென முழித்த எனக்கு உடன் வந்த ஜவகார்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படிக்கும் எனது நண்பன் உதவிக்கு வந்தான். இங்கு வந்து மீன் வாங்குபவர்கள், விற்பவர்கள் வங்காளிகள். மீன் வேண்டுவதற்கு வந்ததால் உன்னையும் வங்காளி என நினைத்து ஊர் புதினம் கேட்க நினைத்திருக்க வேண்டும்.

புதுடில்லியில் நண்பனுடன் ஒரு கிழமை தங்கி, சப்பாத்தியும் பருப்பும் தின்றதால் ஏற்பட்ட விரக்தியின் விளைவால் மீன் சந்தை தேடி புறப்பட்ட போது ஏற்பட்ட சம்பவம் இதுவாகும்.

சென்னையில் மீன்வாங்குபவர்கள் மலையாளத்துவர்களாகவும் பின்பு சிலோன்காரார் ஆகவும் இருந்தார்கள். மேலும் சிலோன்காரார் வந்தால் மீன் விலைகள் உயர்ந்துவிட்டது என 84ம் ஆண்டில்
சென்னை வாசிகள் குற்றம் சாட்டியதும் உண்டு.

எனது ஊரில் ஒரு பழமொழி உண்டு.

”எந்த மீனிலும் இவன் நடுமுறி கேட்பான்” . ஒருவரின் முதன்மைப்படுத்தலை குறித்து கூறப்படும் இந்த கூற்று. ஆனாலும் பலருக்கு மீனின் நடுமுறிதான் உருசியானது என்றதை தெரிந்து கொள்வதில்லை. மீனின் வால்பகுதி அதிகமாக வேலை செய்வதால் அப்பகுதி மாமிசம் இறுக்கமாக இருக்கும். வயிற்றுப்பகுதி மெதுமையாக இருக்கிறது. இதேபோல் ஆழ்கடல் மீன்கள் கடலின் அழுத்தத்தை தாங்குவதால் இறுக்கமானதாகவும் பரவை கடல் மீன்கள் மெதுமையாகவும் இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் பொன்னாலை, பண்ணை கடல் மீன்கள் பிரசித்துவம்  பெற்றதற்கு இதுவே காரணம்.

சிறுவயதில் எழுவைதீவுக்கு மேற்குப்புற கடலில் சிறுநண்டுகள், மட்டிகள், சிலவேளை மீன்கள் கூட எங்களால் கைகளாலும், துணிகளாலும் அமுக்கி பிடிக்க முடியும். நண்டுகள் இலகுவாக துணிகளில் சிக்கிக் கொள்ளும். மட்டிகள் சேற்றுக்குள் புதைந்து இரு கண்ககள் திறந்திருக்கும். ஆனால் நாங்கள் அருகே சென்றதும் கண்களை மூடுவதால் ஏற்படும் அசைவு அவைகளை காட்டிக் கொடுத்துவிடும். மீன்கள் சிறு சாடைகாட்டி ஓடிவிளையாடும். ஆனால் பறி எனப்படும் சிறிய கூண்டுகளுக்குள் வசமாக மாட்டிக்கொள்ளும். கடல்வேட்டையில் எமக்கு கிடைத்தவைகளை வீட்டுக்குக் கொண்டுபோக முடியாது. பனை வடலிகளில் பச்சை ஓலைகளினால் சுற்றப்பட்டு நெருப்பால் எரிக்கும் போது, பச்சை ஓலை எரிந்து முடியும் போது மீன், நண்டு, மற்றும் மட்டிகள் பதமாக வெந்திருக்கும்.

இவைகளில் உருசி தனிரகம். அந்த ருசியில் தொடர்ந்து இன்னும் மீன்கடைகளுக்கு செல்கிறேன். ஆனால் அந்த உருசி கிடைக்கவில்லை.

பல வருடங்கள் முன்பு எழுதி உதயத்தில் வெளியானது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: