நடேசன்
யங்கூன் என்ற இரங்கூனில் இரண்டு இரவுகள் தங்கிவிட்டு மண்டலே போனோம். மற்றைய நாடுகளில் காணப்படும் விமானப் போக்குவரத்து ஒழுங்குகள் இங்கு இருக்கவில்லை. காய்கறிச் சந்தைக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. எங்கள் பொதிகள் ஒரு இடத்தில், நாங்கள் வேறு ஒரு இடத்தில். எங்களுக்கென தனியான விமான சீட்டு இல்லை.
யாரிடம் கேட்ப்பது எனப் புரியவில்லை.
ஆங்கிலத்தில் கேட்டாலும் புரியுமா ?
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது என்பார்களே !
அதேபோல் திகைத்த எங்களுக்கு சில நிமிட நேரத்தில் எங்கள் பயண முகவர் நற்பேறு அளிப்பதற்கு வந்த அவதாரமாக தோன்றினார். ஆறுதல் அடைந்தோம் .
எங்கள் தோள்களிலும், எங்கள் பொதிகளுக்கும், பிரயாண முகவர்களின் ஸ்ரிக்கர்கள் விமானப்பொதிகள் மேல் ஒட்டுவதுபோல் ஓட்டி அடையாளமிட்டார்கள். அவர்களே இழுத்து செல்லாத குறையாக விமான நிலயத்தின் உள்பகுதிக்கு அனுப்பினார்கள்.
விமானப் பிரயாணிகள் அதிகமில்லாததால் இப்படியான முறையில் சமாளிக்க முடிந்தது போலும்!
தனிப்பட்ட ரீதியில் பிரயாணம் செய்திருந்தால் மொழி தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம்.. ஆங்கிலத்தால் எதுவித பிரயோசனமில்லாத நாடு. ஆனால், எமக்கு பிரயாண ஒழுங்கு பண்ணியிருந்த பிரயாண முகவர்கள், உருவாகிய சகல பிரச்சினைகளையும் தீர்த்து விட்டார்கள்.
விமானப்பயணம் மிகவும் இனிமையாக இருந்தது என்றே சொல்லவேண்டும். இரண்டு ஐஸ்வரிய ராய் போல் உலக அழகிகளை விமானப் பணிப்பெண்களாக வைத்திருந்தார்கள். இருவரும் இரண்டு விதமான வர்ணத்தில் உடை அணிந்திருந்தார்கள். சாதாரணமான லுங்கிதான் ஆனாலும் அதில் உள்ள வண்ணச்சேர்க்கை கண்களைக் கட்டிப்போட்டது. அவர்களால் ஒரு மணித்தியால விமானப்பயணம் சில நிமிடங்களாக மாறியது.
பர்மாவின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே போய்ச் சேர்ந்தோம்.
12 இலட்சம் மக்கள் மண்டலே நகரில் வாழ்கிறார்கள். இந்த நகர் பர்மாவின் வடபகுதியில் – ஐராவதி நதிக்கரையில் உள்ளது. பிரித்தானியர்கள் வந்தபொழுது இதுவே பர்மாவின் தலைநகரம். ஆங்கிலேயர் காலத்தில் இங்கு ஏராளமான விபச்சார விடுதிகள் இருந்ததாக ஜோர்ஜ் ஓவல் தனது . ‘பர்மிய நாட்கள்’ நாவலில் குறிப்பிடுகிறார். நான் இதைப்பற்றிக் கேட்டபோது ஒரு இரவு விடுதி கூட இங்கு இல்லை என்றார் எமது வழிகாட்டி.
நாங்கள் சென்றபோது கோடை வெப்பத்தால் ஊர் காய்ந்திருந்தது. இங்கே கோடையில் வசிக்க பிரித்தானியர் கஸ்டப்பட்டார்கள் என காலனித்துவ சரித்திரம் கூறுகிறது. தற்பொழுது மண்டலே பர்மாவின் கலாச்சாரத் தலைநகரம்;. அதற்கேற்றபடி பகோடாக்களும், தூபிகளும் எங்கும் நிறைந்துள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் பல பகோடாக்களைப் பார்க்க முடிந்தது.
ஐராவதி நதி இமயமலையின் கிழக்குப் பகுதியில் இருந்து உற்பத்தியாகி பர்மாவூடாகச் சென்று அந்தமான் கடலில் விழுகிறது. எகிப்திற்கு நைல் நதி போன்றது. அகலமான நதி. அதனால் கப்பல் போக்குவரத்து அதிகம். கரி, இரும்பு, போன்ற கனிமப் பொருட்களையும் தேக்குமர குற்றிகளையும்; ஏற்றியபடி கப்பல்கள் நதிமீது நகர்ந்து கொண்டிருந்தன.
ஐராவதி நதியின் நீர்ப்பாசனப் பிரதேசமே ஐராவதிச் சமவெளி என்று சொல்லப்படுகிறது. இந்த சமவெளி பர்மியமொழி பேசும் பர்மியர்களின் நாகரீகம், அரசு, என்பன உருவாகி வளர்ந்த தொட்டில் போன்றது.
மீன்பிடி, விவசாயம், மின்சாரம் என்பதற்கு உதவுவதுடன்; தேசியப்பெரும் வீதியாக முழு பர்மாவையும் இணைக்கிறது. இவற்றை நினைத்தபடி பார்த்தபோது இந்த ஆறு எனக்கு ஒரு அமுதசுரபியாகத் தெரிந்தது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளம் பெருகி வண்டல்களை கரையெங்கும் சேர்த்துவிட்டு மழையற்ற காலத்தில் உள்வாங்கி விடும்போது வெள்ளம் பெருகிய இடங்களில் வருடத்தில் மூன்று முறை விவசாயம் செய்யமுடியும். எந்த ஒரு நீர்ப்பாசனமோ, செயற்கை உரமோ இல்லாமல் விவசாயம் செய்வதை அங்கு அவதானிக்க முடிந்தது.
முற்றிலும தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்ட எமது தங்குமிடம் அங்கு நாங்கள் போய் சேர்ந்த போது புத்தாண்டின் வருகைக்காக நிகழ்சிகள் ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். நடனங்கள், பாடல்கள் வயலில் அறுவடை நடந்தபின்பு மக்கள் கொண்டாடும் பாடு பொருட்களாக இருந்தன.
அடுத்தநாள் மண்டலே நகரத்தை சுற்றிப் பார்த்தோம்
1857 இல் ஆண்ட மின்டோன் என்ற அரசன் இங்கு அதிகமாக பேசப்படுபவன். அவனது காலத்தில் மண்டலே அரசத் தலைநகரமாகியது. தற்பொழுது அதற்கு ஆதாரமாக விஸ்தீரமான செங்கட்டியாலான உட் கோட்டை மதிலும், அதைச் சுற்றி அகழியும் இருக்கிறது. அகழிக்கு ஐராவதியில் இருந்து நீர் வருகிறது. கோட்டையை சுற்றியிருந்த மண்ணாலான வெளிமதில் அழிந்துவிட்டது. இரண்டு வருடத்தில் கட்டி முடிக்கப்பட்ட மாளிகையில் மின்டோனும் அவரது மகனாகிய திபா என்ற கடைசி அரசனுமே வாழ்ந்தார்கள்.
பர்மிய துருப்புகள் பிரித்தானிய இராணுவம் தரைவழியாக வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள். பிரித்தானியர்கள் அங்கு தங்கள் போர்க்கப்பல்களுடன் படையெடுத்து நேரடியாக மண்டலே வந்து இறங்கிய அந்த நதிகரையில் நின்றவாறு சில காட்சிகளைப் பார்த்தோம்.
நண்பகலில் ஐராவதி பொன் உருகியதுபோல் காட்சியளித்தது. கப்பல்கள் நதியில் இரண்டு திசையிலும் போய்க்கொண்டிருந்தன. நதிகரைகளில் பர்மியர்கள் ஆண்களும் பெண்களுமாக குளித்துக் கொண்டிருந்தனர். புளி, மா, வாகை மரங்களின் கீழ் நாய்கள், ஆடுகள் ,மாடுகள் என மிருகங்கள் இழைப்பாறின.
நதிக்கரையிலிருந்து சில மீட்டர் தூரத்தில் பர்மியரால் அக்காலத்தில் பாதுகாப்பு அரண்களும் பீரங்கிகளை வைத்து தாக்குமிடங்கள் மற்றும் பதுங்குவதற்கான கொங்கிட் பங்கர்கள் அங்கு இருந்தன. அப்படியான பங்கர் ஒன்றை நோக்கி சென்றபோது ஒரு காதல் ஜோடி அவசரமாக உடைகளை சீர் செய்தபடி வெளியேறியதையும் அவதானிக்க முடிந்தது.
ஒரு காலத்தில் படையினரின் பதுங்கும் இடம் இன்று காதலர்கள் பதுங்குமிடமாகிவிட்டதோ என்றும் யோசித்தேன். அப்பொழுது எமது வழிகாட்டி நான் சொல்லாமலே ‘அக்காலத்தில் பிரித்தானியருக்கு எதிராக பயன்படாத இடங்கள். இப்பொழுது காதல் ஜோடிகளுக்குப் பயன்படுகிறது’ என்று எனது யோசனையை ஆமோதித்தார்.
1885 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி – ஐராவதி நதியூடாக கப்பலில் வந்த பிரித்தானியப் படைகள் பர்மியர்களின் அதிக எதிர்ப்பற்று கைப்பற்றினார்கள். அரசர் நிபந்தனை அற்ற விதத்தில் சரணாகதி அடைந்தார். அரசன் திபா, மேலும் ஒருநாள் அரண்மனையில் தங்க அனுமதி கேட்டபோது பிரித்தானியர் மறுத்தார்கள். சில மணித்தியாலம் மட்டுமே அரச குடும்பம் தங்களது பிரத்தியேக பொருட்களை மட்டும் எடுத்து வருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஐராவதி நதிக்கரைக்கு அரண்மனையில் இருந்து மாட்டுவண்டியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட அரச உடைமைகள் ஐராவதியூடாக ரங்கூன் கொண்டு செல்லப்பட்டது. இறுதியில் பர்மிய அரசகுடும்பம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டது. மன்னர், பம்பாய் அருகே 30 வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இறந்தார்.
பிரித்தானியர், பர்மாவைக் கைப்பற்ற முன்வைக்கப்பட்ட பல காரணங்களில் முக்கியமானது பர்மாவில் பிரான்சியர்களின் ஆதிக்கம் பரவாது தடுப்பதே. ஏற்கனவே இந்தோசீனா எனப்படும் வியட்னாம், கம்போடியா, லாவோஸ் என்பன பிரான்சியர் வசமிருந்தன.இதைவிட பர்மாவைக் கைப்பற்றி, அபின் வியாபாரத்தை சீனாவின் தெற்குப்பகுதியாலும் நடத்துவது இரண்டாவது நோக்கம்.
பர்மிய அரியணையை கைப்பற்றும் நோக்கத்தில் ஏற்பட்ட போட்டியால், அரச வம்சத்தினரிடையே நடந்த படுகொலைகள், பர்மாவை,பிரித்தானியர் கைப்பற்ற இலகுவாக்கியது. புத்த சமயத்தை மிகவும் தீவிரமாக கடைப்பிடித்த பர்மிய மன்னர்கள் அந்த மதத்திற்கு பொருந்தாமல் ஏராளமான பெண்களை மணந்தவர்கள். இதனால் ஏற்பட்ட பங்காளிகளின் மோதல்களால் எப்பொழுதும் அரியணைப் போட்டிகள் பர்மிய வரலாற்றில் தொடர்ந்தது.
பர்மாவின் அழிவிற்கு முக்கிய காரணம் பெண்ணாசை. ஆனால் ஆனால் அவர்களைப்போல் புத்த சமயத்தை நேசிப்பவர்கள் வேறொரு நாட்டிலும் இருக்கமாட்டார்கள்.
என்ன முரண்ணகை?
மறுமொழியொன்றை இடுங்கள்