எக்ஸைல் 1984
எழுதிய பேனையை மேசையில் வைத்துவிட்டு சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். அந்த அறையில் இருந்தவர்கள் ஈழ விடுதலைக்காக போரிட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள். ஏனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் டாக்டர் சிவநாதன், டாகடர் ஜெயகுலராஜா, டாக்டர் சாந்தி இராஜசுந்தரம்.
எனக்கு வயிற்றைக் கலக்கியது. அமைப்பின் காரியதரிசியாக இருந்து தமிழர் மருத்துவ நிலயத்தில் நடந்த கூட்டமொன்றில் விபரங்களை குறிப்பெடுத்த என்னை நிறுத்த வைத்தது.
வெளியே சென்னை வெயில் தெருச்சண்டியன் போல் ஆர்ப்பரித்தது. அவனது வார்த்தை போல் உள்ளே வந்த காற்று சூடாக இருந்து. சூளைமேடு நெடுஞ்சாலையில் போகும் வாகனங்களின் இரைச்சலும் புகையும் மேலே எழுந்து 144 இலக்க முதல் மாடியில் இருந்த எமது காது, மூக்குத் துவாரங்களை மோதி அடைந்தன.
1985 ஜூலை சென்னை மரினா கடற்கரையில் தொடர் உண்ணாவிரம் நடத்த ஈழத்து இயக்கங்கள் தீர்மானித்தன. அதற்கு ஓருங்கிணைப்பாளராக தமிழ் மக்கள் விடுதலைக் கழக வாசுதேவா, என்னை முன்மொழிய விடுதலைப்புலிகளின் யோகியால் கைவிரல் மட்டும் உயர்த்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது
ஏற்கனவே ஈபி ஆர் எல் எவ் தலைவர் பத்மநாபா இப்படி தொடர் உண்ணாவிரம் நடத்த வேண்டும் என என்னிடம் பிரஸ்தாபித்திருந்தார். அக்காலத்தில் விடுதலைப்புலிகளுடன் மற்றய இயக்கங்கள் சேர்ந்து இருந்த காலம். தங்களது ஒற்றுமையை வெளிக்காட்ட அவர்கள் செய்யும் அரசியல் முயற்சி என நினைத்து மறந்திருந்தேன்
இதில் நான் முன் தள்ளுப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே விடுதலைப்புலிகள் ஆதரவாளர் டாக்டர் ஜெயகுலராஜா இருந்தார். அவர் எமது நிறுவனத்தின தலைவர் மடடுமல்ல வயதாலும் பெரியவர். அத்துடன் வெலிக்கடை பின்பு மட்டக்கிளப்பு சிறைகளில் இருந்தவர்.
அவரை விட்டு என்னை பிரேரித்ததை மற்றய இயக்கங்களும் அப்படியே ஏற்றுக் கொண்டனர்.
அக்காலத்தில் இயக்கங்கள் சேர்ந்திருந்தாலும் தங்களுக்குள் செல்லமாக ஒருவரை ஒருவர் சுட்டபடி இருந்தவர்கள். எல்லோரும் ஏகமனதாக ஒருவனை அங்கீகரிக்கும்போது என்னுள் பெருமைக்குப் பதிலாக பயம் ஏற்பட்டது. ஒருவிதத்தில் கிடாய் ஆட்டிற்கு மாலை போடுகிறார்களா என்ற எண்ணம் ஏற்பட்டது.
மனத்தைத் திறந்து நினைத்ததை வெளியே சொல்ல முடியாது. இயக்க ஒற்றுமைகள் பற்றி பலரிடம் நான் வலியுறுத்தியவன். வெலிகடையில் இறந்தவர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்ணாவிரதம் இருந்து ஏற்படுத்துவது நல்ல காரியம் என்பதாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
இதுவரையும் மருத்துவ விடயங்களில் ஈடுபடும்போது மனத்தில் எதுவித தயக்கமில்லை . இந்த விடயம் உண்ணாவிரதம் என்று சொன்னாலும் ஒரு அரசியல் பிரச்சாரம். அதுவும் தமிழக மக்களிடையே ஈழத்தின் தேவையை எடுத்து செல்லும் வழி என்பது புரிந்தால் தயக்கம் ஏற்பட்டது.
வேறு வழியில்லை. ஏற்றுக் கொண்டேன்
அதற்கான வழிமுறைகள் பேசப்பட்டன. இந்தியக் கட்சிகளின் அரசியல் தலைவர்களைக் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளப் பண்ணுவது அதேபோல் தமிழ் இயக்கத் தலைவர்கள் பிரமுகர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. வேலைகள் பிரித்தளிக்கப்பட்டது என்னைப் பொறுத்தவரை அதிக வேலை இருக்கவில்லை. வருபவர்களை வரவேற்பது அவர்களுடன் பேசுவதும் கொடுக்கப்பட்டது.
எந்த இயக்கமும் நேரடியாக உண்ணாவிரதத்திற்கு சம்பந்தப்படவில்லை.
சிலகாலம் முன்பாக யாழ்பாணத்தில் உண்ணாவிரதத்தை குழப்பிய விடுதலைப்புலிகள், உண்ணாவிரமிருந்தவர்களை இந்தியாவுக்கு தூக்கி வந்திருந்தார்கள். மற்றவர்களுக்கும் உண்ணாவிரதம் தங்களது வழியல்ல எனக்காட்ட வேண்டும். இலை குழை எங்கள் உணவு அல்ல. இது சாதாரண ஈழ மக்களின். உண்ணாவிரதம். எல்லாருக்கும் பொதுவானது. இயக்க அரசியல் இல்லாதது எனக் காட்டவேண்டியிருந்தது.
மரினா கடற்கரையில் தெருவிற்கும் மணற்பிரதேசத்திற்கும் இடையில் புல் முளைத்த பிரதேசத்தில் பந்தல் போட்டு பானர் கட்டி மூன்று நாட்கள் நடந்த இந்த உண்ணாவிரத நிகழ்சிக்கு நான் நேரடியாக பல தலைவர்களை சென்று அழைத்தேன். என் நினைவில் இருப்பவர்கள் அக்கால எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் வக்கீலாக இருந்த வானமாமலை போன்ற கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்.
அமிர்தலிங்கம் தம்பதியினரை மிகவும் நினைவில் இருப்பதன் காரணம் வீடு சென்ற அழைத்தபோது அவர்கள் வருவோம் என்று சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாக வந்துவிட்டார்கள் மற்றயவர்கள் எல்லோரும் சொல்லிய நேரத்திற்கு பிந்தியே வந்தார்கள்.
கத்தரி வெயில் எரிக்கும் பகல் முழுவதும் உண்ணாவிரதம் நடக்கும். குறைந்த பட்சம் நூறு பேர்களாவது பந்தலில் எப்போதும் இருப்பார்கள். இயக்கத்தினர்கள் தமிழநாட்டு பிரமுகர்கள் பலர் வந்து அமர்ந்து பேசி செல்லுவார்கள்.
வாழ்கையில் விரதமே இருக்காத நான் உண்ணாவிரமிருந்த நாட்கள். பெரும்பாலானவர்கள் வந்து சிலமணி நேரமிருந்து போவதால் ஒரு அடையாள உண்ணாவிரதம் எனத்தான் சொல்லவேண்டும். நாங்கள் எதிர்பார்த்தபடி தமிழ்நாட்டு பத்திரிகைள் எல்லாம் படத்துடன் பிரசுரித்தன.
இந்த நிகழ்சியை இலங்கை ஊடகங்கள் பதிவு செய்தார்களா எனத் தெரியாத போதும் ஈழவிடுதலை இயக்கங்கள் ராஜீவ்காந்தி, ரொமேஸ் பண்டாரி போன்றவர்கள் முன்பாக கட்டாயமாக ஓன்றாக கூட்டங்களில் கலந்து கொண்டார்கள். இவர்கள் மூன்று நாட்கள் தன்னார்வமாக இருந்தததனால் உண்ணாவிரதம் இருந்த நாட்கள் முக்கியமானது.
30 வருடங்கள் பின்பாக இந்த மூன்று நாட்களில் எனது மனத்தில் நிற்கும் இரண்டு விடயங்கள் முக்கியமானதாக கருதுகிறேன்.
உண்ணாவிரதத்தின் முதல்நாள் என்னை நோக்கி மஞ்சள் அரைக்கை சட்டையும் அழகான மீசையும் கொண்ட சிவந்த நிறமான ஒருவர் வந்து கை கொடுத்தார். நானும் கை கொடுத்தவிட்டு பக்கத்தில் நின்ற வாசுதேவாவைப் பார்தேன்
‘இவர்தான் உமா மகேஸ்வரன்’ என்றார்.
நான் அது வரையிலும் உமாவை நேரில் பார்த்ததில்லை இலங்கையில் இருந்தபோது படங்களில் பார்த்திருக்கிறேன்.
அவருடன் கை குலுக்கியது எனக்குள் சந்தோசத்தை ஏற்படுத்தவில்லை.
அக்காலத்தில் தமிழர் மக்கள் விடுதலைக் கழகத்தில் நடந்த கொலைகளை கேள்விப்பட்டிருநதேன் அதைவிட எனது மனைவியின் உறவினர் மகன் உமாவின மெய்காப்பாளர்களில் ஒருவராக இருந்தார். அவரது பெற்றோர்கள் இயக்கத்தின் உட்கொலைகளினால் எப்போது மகனை யார் மூலம் இயக்கத்தில் இருந்து கழட்டி கனடா அனுப்பலாம் என்று பேசிக்கொண்டிருந்ததும் அதற்கு அவர்கள் பணம் தருவதற்கு தயாராக இருந்ததும் எனக்குத் தெரியும். இப்படியான விடயங்களால், காணாமலே உமாவின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.
உமா பார்பதற்கு அழகான மனிதர் மடடுமல்ல அவரது தோற்றம் தன்னம்பிக்கையை காட்டும் தன்மையுள்ளது. தலைமைக்குத் தேவையான கவர்ச்சி உள்ள மனிதர். இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் அமிர்தலிஙகம் அவர்களுக்கு இருந்த அதே கவர்ச்சி உமாவிடம் இருந்தது. தோற்றத்தில் அப்படியானவர்கள் இன்னமும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளில் நான் காணவில்லை ஆனால் அவர்கள் இருவரும் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்பது உண்மை.
உமா மகேஸ்வரன் மீது ஏராளமானவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஒரு காலத்தில் 15000 இளைஞர்கள் அவரை நம்பினார்கள். அதில் 6000 மேல் ஆயுதப் பயிற்ச்சி பெற்றவர்கள். அவரிடம் சிறந்த தளபதிகளாகவும் இரண்டாம் கட்டத்தலைவர்களாக இருந்தவர்கள் பலரை தனிப்பட்டரீதியில் அறிந்தவன். தமிழ்நாட்டில் முதல்வர் எம் ஜி ஆர் கூட நம்பிக்கை வைத்திருந்தார். தன்னிடம் இருந்த சிறந்த விதை நெல்லை சோறாக்கிய மனிதர் என்பது எனது கருத்து. சமீபத்தில் அவரது இயக்கத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரை சந்தித்தபோது அவர் சொல்லிய விடயம் ஆச்சரியம் அளிக்கவில்லை.
அவர் சொன்னார் “ தமிழ்மக்கள் விடுதலைக்கழகத்தின் மத்திய கூட்டம நடக்கும்போது எவரும் குறிப்பு எடுப்பதில்லை காரணம் குறிப்பு லீக்காகிவிடும் என்பதால். ஆனால் உமா எழுதும்போது ஒரு பக்கத்தில் மற்றவர்கள் கருத்தை செவி மடுத்து எழுதுவார்.
ஒரு நாள் மற்றய அங்கத்தவர் சொன்னார் இன்றைக்குப் பார் இந்த குறிப்புக் கடுதாசிக்கு என்ன நடக்கிறது என்று.
நான் தொடர்ந்து உமாவைப் பார்த்தபோது அந்த கடுதாசி ஆரம்பத்தில் மடிக்கப்பட்டது பின்பு வெளியே செல்லும்போது மிகவும் கசக்கப்பட்டு, மெதுவாக நடைபாதையில் எறியப்பட்டது’
இந்த விடயத்தை மனக்கண்ணில் கொண்டுவர வேண்டுமா?
கற்பனை தேவையில்லை
சமிபத்தில் இராஜவரோதயம் சம்பந்தன் பத்திரிகையை பார்த்தபடி சிறையில் வாடும் கைதிகளை பற்றி பேசியது முகநூலில் உள்ளது
நாம் நம்பிய தமிழ்த் தலைவர்கள் பெயர் மாறினாலும் ஒரேமாதிரியான நிழல்கள் போல் தொடர்வதை காட்டவே இந்த சம்பவத்தைக்குறிப்பிட்டேன்.
மனிதர்களின் நிழல்களில் உருவ வித்தியாசம் தெரிவதில்லைத்தானே?
உண்ணாவிரதத்தின் போது முதல் இரண்டு நாளிலும் விடுதலைப்புலி இயக்கத்தினரில் முக்கியமானவர்கள் வரவில்லை என்பது ஒரு குறையாகத் தெரிந்தது. அவர்களும் ஏற்றுக்கொண்டே இந்த உண்ணவிரதம் அரங்கேறியது
தமிழகத்தில் இருந்த காலத்தில் எப்பொழுதும் சிலர் என்னுடன் இருப்பார்கள் அவர்கள் இயக்கத்தவர்களாகவோ இல்லை மருத்துவ நிலயத்தில் என்னுடன வேலை செய்பவர்களாகவே இருக்கும்.
மூன்றாம் நாள் மாலை ஏதோ வேலை செய்து கொணடிருந்த
என்னிடம் சில மட்டக்கிளப்பு நண்பர்கள் ‘அண்ணே காசியண்ணை வந்திருக்கிறார்’
‘சரி அவரை கூட்டிக்கொண்டு வந்து பந்தலில் இருந்துங்கோ. நான் வந்து பேசுகிறேன்’ என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர்களிடம் சொன்னேன் விடுதலைப்புலிகளும் சேர்ந்து கூட்டாக இருக்கிறபோது அந்த வவுனியாவில் ஏன் ஈபி ஆர் எல் எவ் தோழர் ஒருவரை சுட்டார்கள் எனக்கேள். அவர்களும் போராடத்தானே வந்தார்கள்?’
அக்காலத்தில் வவுனியாவில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இராணுவப் பயிற்சி பெற்ற றீகன் என்ற தோழர் ஒருவர் எதுவித காரணமும் இன்றி விடுதலைப்புலிகளால் சுடப்படடிருந்தார்.
மாலை நேரமானதால் வங்காளகுடாவின் அலை மோதுவதற்கு போட்டியாக கடற்கரையில் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். எங்களையும் ஆவலுடன் பார்த்தார்கள். அவர்கள் தலைவர்கள் செய்து கொண்டிருந்த விடயங்களை ஈழத்தவர்கள் ஏன் செய்கிறார்கள் என்ற கேள்வி அவர்கள் மனத்தில் எழுந்திருக்கும்.
எனது பொறுமையும் கடைசி நாளானதால் குறைந்து விட்டது.
வேலைகள் பல முடிக்கவேண்டும் என்பதால் பரபரப்படைந்தேன்.
வந்தவர்களுக்கு நன்றி கூறவேண்டும். உண்ணாவிரதத்தை முடிக்கும் நேரம் வந்து விட்டது பந்தலை கலைக்கவேண்டுமென்பதாலும் என பல விடயங்கள் மனத்தில் இருந்ததால் நம்நாட்டு புரட்சிக் கவிஞரை மறந்துவிட்டேன்.
எல்லா விடயங்கள் முடித்தபின்பு அந்த மட்டக்கிளப்பு நண்பர்களிடம் கேட்டேன் ‘என்ன நடந்தது கவிஞர் காசியானந்தன் வரவில்லையா?’
‘அண்ணே நீங்க என்னை வவுனியாவில் ஈபி ஆர் எல் எவ் தோழரை சுட்டது என் எனக் கேட்க சொன்னதால் நாங்கள் கேட்டோம் அதற்கு அவர் தம்பியிடம் கேட்டு சொல்கிறேன்’ என வந்த ஓட்டோவில் அடையாறு திரும்பிவிட்டார்’ என சிரித்தார்கள்.
பந்தலுக்கு வராமல் சென்ற காசியானந்தனை 2002ல் எஸ் போ நடத்திய சென்னை இலக்கிய மகாநாட்டில் எனது பக்கத்து சீட்டில் இருந்தபோது இன்னும் தம்பியிடம் வவுனியாவில் ஈபி ஆர் எல் எவ் தோழரை ஏன் சுட்டது என்று கேட்கவில்லையா எனக் கேட்க நினைத்தேன்.
இரண்டு விடயங்கள் என்னைத் தடுத்தன.
பக்கத்தில் இருந்த மனைவி மற்றது, அந்த கூட்டத்தில் இருந்து தம்பிடம் கேட்க என எழுந்துபோனால் எனது வண்ணாத்திக்குளத்தை பதிப்பித்த எஸ்போவிற்கு மனம் குழம்பி விடும் என்பதால் அவர் பக்கமே திருப்பாமல் மூன்று மணித்தியாலம இருந்தேன்.
நான் நினைக்கிறேன் மீண்டும் அந்த கேள்வியைக் கேட்டால் ஆனால் ‘அதற்குள் தம்பி 2009 மே18 ல் போய்விட்டது’ எனப் பதில் வரலாம.
மறுமொழியொன்றை இடுங்கள்