கனவுச்சிறை- தேவகாந்தன்.

இலக்கிய காலங்கள், அந்தக்காலத்தின் சூழல், சமூகம், பொருளாதார உறவுகள் என்பவற்றின் தாக்கத்தால் வரையறை செய்படுகிறது. அது சரியாக வரையறுக்கப்பட்ட வருடங்கள், மாதங்களாக இருக்கத் தேவையில்லை. இதை உதாரணமாக விளக்குவதானால் இரண்டாவது உலகப்போர் 1939ல போலந்திற்கும் 1941ல் அமரிக்கர்களுக்கும் தொடங்குகிறது.

ஆச்சரியமாக இருக்கிறதா?
kanavuchirai
மேற்கிலக்கியத்தில் ரோமான்ரிக், ரியலிசம், நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் என காலங்கள் தொடர்ந்து வருகிறது. அவர்களது நிகழ்வின்படி பார்த்தால் நாம் பின்னத்துவகாலத்தில் இருக்கவேண்டும். ஆனால் அந்த சூழ்நிலைகள் நம்மைச்சுற்றி இல்லை.

தற்பொழுது நாம் என்ன நிலையில் உள்ளோம் என்பதைப் பார்ப்போம்.

ஈழத்தமிழ் இலக்கியத்தில் எனக்கு தெரிந்த காலம் 60-80 வரை முற்போக்கு காலம். அக்காலத்தில் புரட்சி, சாதியம் என்பன பேசப்பட்டது.இரண்டு பிரிவுகளாக சிவப்பிலக்கியம் பேசியவர் ஒருவரை ஒருவர் திரிபுவாதிகள் என எழுதியதை சஞ்சிகைளில் வாசித்தேன். சோவியத்தின் உடைவு மற்றும் கம்மியுனிசம் என்ற கருத்தியலின் தோல்வியால் அந்தக் காலம் முடிபுக்கு வந்தது. பிற்காலத்தில் சிலர் தமிழ்த் தேசியத்துக்குள் ஐக்கியமாக,
பெரும்பான்மையினர் ஓட்டைவாளியை கிணத்துக்கு விடுபதுபோல் முற்போக்கை விட்டுவிட்டார்கள்.

அக்காலத்தை கடந்து, பின்பு 80-2009 வரையான காலம் தமிழ்த் தேசிய காலம். இக்காலம் சிங்களத்தின் ஆதிகத்துக்கெதிராகாக கவிதைகள் ஆரம்பத்தில் வந்தன. காரணம் இலகுவானது. பதுங்கு குழிகளில் இருந்து கொண்டே கவிதைகள் எழுத முடியும. பின்பு சிறுகதை கடைசியாக நாவல்கள் வந்தன.

போரில் சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தமே இல்லாமல் தப்பி வெளிநாடு போனவர்கள் என எல்லோரும் முன்வைத்த கருப்பொருள் இந்த தமிழ்த்தேசியம். இதை தவிர்த்து மற்றய விடயங்களை எடுத்தவர்கள் சமூகத்தில் எள்ளி நகையாடப்பட்டார்கள். முற்போக்கு காலத்தை எதிர்த்து நின்றவர்களால் தமிழ்த் தேசியகாலத்தை எதிர்க்க முடியவில்லை.
இப்பொழுது நாம் இருப்பது பின்தமிழ்த் தேசியகாலம். அதாவது தமிழ்தேசியத்தின் விளைவுகளை எடுத்து அதன் துன்பங்கள் துயரங்களை அனுபவத்துடாக எழுதும் காலம் – ஆங்கிலத்தில் கருத்துரிமைக் காலம்(Phenomenological construct) எனலாம்.
ஈழத்தமிழரைப் பொறுத்தவரை எழுத்து சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தை எமக்கு அளித்த காலம். கோட்பாடுகளால் மூச்சுத்திணறாமல் சுவாசிக்க முடிந்த முக்கியமான காலம்.

கமிழ் தேசியத்தின் காலத்தில் யதார்த்தமாக எழுதப்பட்ட ஒரு முக்கிய நாவலாக நாங்கள் கனவுச்சிறையை கருதலாம். அதற்கான பல காரணங்கள் உள்ளது. இருபது வருடங்களைத் தன்னுள் அடக்கியது. மற்றவர்களது நாவல்போல் வீரதீர விடயங்களை சொல்லி அதிர்வூட்டாமல் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை எடுத்து சொல்லுகிறது.

வழக்கமான சம்பவங்களை அல்லது தங்களது நினைவுகளை மட்டும் எழுதி நாவலாக்குபவர்கள் மத்தியில் அவதானங்களால் வாசிப்பவரை சிந்திக்கப்பண்ணும் நூண்ணிய சித்தரிப்புகள் கொண்டு இலக்கியமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பல சிங்களப் பாத்திரங்களை உள்ளே கொண்டு வருவதன் மூலம் ஓரளவுக்கேனும் இரண்டு தரப்புகளைப் பற்றிய தகவலையும், உளவியல் ஓட்டங்களை வைக்கிறது.

கதையாசிரியர் இங்கு சகலபாத்திரங்கள் வழியாகவும் பேசுகிறார்.

தமிழில் ஜானகிராமனின் மோகமுள் என்ற நாவலின் பெயர் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதற்கு பிறகு பிடித்த நாவலின் பெயர் கனவுச்சிறை.

இலங்கை அரசியல் போராட்டத்தில் இருதரப்பினரும் அரூபமான(Abstract) விடயங்களை உருவகப்படுத்தினார்கள். இரண்டு பக்கத்தினரும்ஆணித்தரமான ஆதரங்களற்ற ஐதிகங்களை ஆயுதங்களாக்கினார்கள். அவர்கள் கோரிக்கைகளும் பருவகால மாற்றம்போல் இருந்தது. இலங்கையில் எக்காலத்திலும் இருந்த சான்றில்லாத சிங்கமும் புலியையும் அயல்நாட்டில் இருந்து இரவல் வாங்கி போராட்ட சின்னங்களாக்கினார்கள்.

எந்த சமூகத்தை தேவகாந்தன் கனவுச்சிறையில் இருப்பதாக அடிக்கோடிட்டாலும் கனவுச்சிறையில் இரண்டு சமூகங்களும் இருக்கிறது. விகிதாசாரத்தில் வித்தியாசப்பட்டாலும் இரண்டு தரப்பைப் பொறுத்தவரை உண்மையான படிமமாகிறது நாவலின் பெயர்.

நாவல் இருபது வருடங்களாக கண்டங்கள் மாறி பலதேசங்களில் பல பாத்திரங்களின் கதைகளை தொட்டுக்கொண்டு தேசாந்திர யாத்திரை செய்கிறது. அந்த யாத்திரைக்கு எங்களையும் கைப்பிடித்து அழைத்து செல்கிறது. இடையில் கையை நழுவ விட்டால் வாசகர்கள் திருவிழாவில் தொலையும் குழந்தைகளாகி விடுவார்கள். புரிந்து கொள்ள வேண்டுமானால் பின்னோக்கி வந்து மீண்டும் கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

தேவகாந்தன் பாத்திரங்களை சர்கஸ்காரன் பந்துகளை மேலே எறிவதுபோல் எறிந்துவிட்டு மற்றய பந்தைகையில் எடுத்து விடுவார் மீண்டும் அவர் அந்த பாத்திரத்தை கையாளும்போது நாங்கள் ஜனவரியில் படித்ததை மார்கழி பரிட்ச்சைக்கு நினைவு கூர்ந்து எழுதுவதுபோல் எமது மூளையை சுரண்டவேண்டும் ஆயிரத்தை தொடவரும் பக்கங்கள் கொண்ட புத்தகம் பலரை பயமுறுத்தும். துணிந்து உள்ள போனவர்களை அங்கு பாத்திரங்களின் எணணிக்கை கண்ணாம்பூச்சி காட்டும். பாத்திரங்களை எண்ணாவிடிலும் சில்லறைப் பாத்திரங்களையும் சேர்த்து நூறுக்கு கிட்டத்தட்ட இருக்கலாம் என நினைக்கிறேன்.
நேரடியான மயிர்கூச்செறியும் சம்பவங்கள் இல்லை சிங்கள இராணுவத்தின் வன்முறைகள், இரத்தம்,தசை முகத்தில் தெறிக்கும் விவரணம் இல்லை. விடுதலைப்புலிகள் செய்த தாக்தலின் நேரடி ஒளிவீச்சு வர்ணனை இல்லை.புத்தபிக்கு இறந்த சிங்களப்பெண்ணை புணரும் ஒரு சம்பவத்தை தவிர மயிர்கூச்செறியும் விடயங்கள் எதுவும் அற்ற நாவல்.

முப்பது வருடப் போராட்டம் மரணத்தை பத்துவீதமானவர்களுக்கு கொடுத்தாலும் தற்போது உயிருடன் இருப்பவர்களுக்கு கொடுத்தது புவியெங்கும்அலைச்சல் என்பதே. தாயை, மகள் பிரிவதும் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள், சகோதரங்கள் என சகல உறவுகளும் பிரித்தெடுக்கப்படடு அலையவிடப்படுகின்றது. அன்னியதேசங்களில், பாலைவனங்களில், அலைகடலின் மத்தில் அலைந்த சமுகம் இன்னமும் ஓய்வு நிலைக்கு வரவில்லை. சமூகத்தில் வசதியானவர்கள், வசதியற்றவர்கள், ஆண்கள் பெண்கள் என வர்க்கபேதம், பால் வேறுபாடு அற்று அலைவதே ஈழதமிழர்களின் பொது விதியாக கடந்த முப்பது வருடங்களாக இருந்திருக்கிறது.மனநிலை குலைந்த தியாகு கூட அலைய வேண்டியதாக இருக்கிறது. இந்த அலைச்சலே கனவுச்சிறை.

இந்த நாவலின் பகைபுலம் மற்றும் பாத்திரங்கள் பெரும்பாலானவை நயினாதீவை சேர்ந்தவை. நயினாதீவு இலங்கையின் வடபகுதியில் உள்ள தீவுகளில் ஒன்று . அங்குள்ள நாகைபூசணி அம்மன்கோவில் இந்துக்கள் மத்தியில் பிரபலமானது. அதேபோல் இரண்டு புத்தவிகாரைகள் உள்ளது. பெரிய விகாரை பௌத்தர்கள் மத்தியில் பிரபலமானது. சிறிய விகாரையில் உள்ள புத்தர் தானாக உருவாகினவர் என்பார்கள். புத்தர் ஞானம் பெற்று ஐந்தாவது வருடத்தில், இரண்டாவது முறையாக இலங்கைக்கு வந்தபோது நாகதீப என்ற நயினாதீவுக்கு வருகை தருகிறார். இதைவிட மணிமேகலை வந்த இடமாகவும் கருதப்படுகிறது. இலங்கைத் தமிழருக்கும், சிங்களவருக்கு இருக்கும் ஐதிகங்கள்போல் சற்றும் குறையாமல் நயினாதீவக்கும் உள்ளது.
devakantahn
80களில் இருந்து போரின் தாக்கத்தால் வெளியேறும் நயினாதீவு மக்களிடையே கதை வளர்கிறது. ராஜி என்ற இளம் பெண் தனக்கு நிட்சயமான இளஞனைத்தேடி போவதாக தொடங்கும் கதை, அவள் அவனை ஏற்காமலே இருப்பதாக கதை முடிகிகிறது.

இந்த நாவலை உள்ள சிறப்புகள்- நாவலில் வரும் ராஜி தனக்கு திருமணமாக எழுதப்பட்ட சுதனை மறுக்கிறாள். இயக்கத்தின் பணத்துடன் அவன் வெளிநாடு சென்றதை இனத்திற்கு செய்யும் துரோகமாக நினைத்து அவனை ஒதுக்கி, அவனது ஆதரவு இன்றி தமிழ்நாட்டு அகதிமுகாமில் வாழ்வதும், மற்றய அகதிகளுக்கு உதவுதும் தனது கடமையாக செய்கிறாள். இடையில் விடுதலைப்புலிகளின் படகோட்டியாயிடம் ஒரு முறை அவளாக சென்று உடலுறவு கொள்கிறாள். ராஜி அவன் இறந்த பின்பு இரண்டாவது முறையும் தாய் தம்பி மற்றும் சுற்றியிருந்தவர்களின் திருமணத்துக்கான வற்புறுத்தலை மறுத்து விடுகிறாள். ராஜியின் சிந்தனையோட்டம் கடைசியில் மட்டுமே தெளிவாகிறது. அதுவரையும் ஒரு புதிராக வைக்கப்படுகிறாள். அதேபோல் ராஜியின் தாயான மகேஸ்வரி மிகவும் கண்டிப்பான தாயாக வருகிறாள் பல வருடங்கள் ராஜின் நடத்தையால் அவளோடு கடிதப்போக்குவரத்தில்லாமல் கனடாவில் இருக்கிறாள் அதேபோல் தம்பியான இராஜேந்திரன் தனது சொல்கேட்காமல் பம்பாயில் இருந்து, பிற்காலத்தில் அசாமியப் பெண்ணை மணம் முடித்து பேரன் இருப்பதை அறிந்தும் அந்தப் பெண்ணை எதுவித தயவு தாட்சணியின்றி மனைவி பிள்ளைகளிடம் இருந்து பிரிக்கிறாள்.
சுதனின் தமக்கையான அரசி, தம்பியை அவனது நடத்தை எண்ணி வெறுக்கிறாள் . இப்படியான பெண்பாத்திரங்கள் மிகவும் ஓர்மமானவர்களாக சித்தரிகப்படுகிறார்கள். அவர்கள் உதவிகள் தேவைப்படும்போதே ஆண்களை நாடுகிறார்கள. சில இடங்களில் ஆண்கள் வெறும் கையாள்கள்போல் பாவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரமான நடவடிக்கை எடுக்கிறார்கள். அவர்களது செயல்கள் எடுக்கும்போது தயக்கமின்றி எடுப்பதுடன் அதன் விளைவுகளையும் தாங்களே ஏற்கிறார்கள். ஆனால் அவர்களது முடிவுகளால் அவர்கள் சந்தோசமாக இருக்கவில்லை என்பதும் உண்மை.

ஓருவிதத்தில் கனவுச்சிறை நான் பார்த்த பெண்ணிய நாவல். தமிழில் கிடைக்காத கருப் பொருள்.

சிங்கள மக்களில் இரண்டு பிக்குகள் வரும்போது அவர்கள் சிங்கள சமூகத்தின் இரண்டு சிந்தனையோடடத்தையும் பிரதிபலிக்கிறார்கள். முரண்பட்டு மோதுகிறார்கள். தமிழனை மணந்த சிங்களப் பெண் தன் கணவனை கொன்றதற்காக சிங்கள சமூகத்தில் இருந்து விலகி கணவனின் நண்பனான தமிழனுடன், வவுனியாவில் வாழ்கிறாள் புத்த பிக்குவடம்மிருந்து தன்னைக் காப்பாற்ற தற்கொலை செய்கிறாள். எந்த சமூகமும் ஒற்றைப்படையானது அல்ல பல்வேறு சிந்தனையுளளவர்கள் இருக்கிறார்கள் என்ற சமூகவியலை இங்கே தரப்பட்டிருக்கிறது.

அரசியல் வரலாற்று நாவலாக இல்லாது சாதாரண மக்களது உளவியலை அரசியல் பின்னணியில் தேவகாந்தன் எழுதியிருக்கிறார்.

ராஜியின் கதை சுவர்ணா என்ற சிங்களப் பெண்ணின் கதை இராஜேந்திரன் கதை என பல கதைககளைக்கொண்டது. ஆங்கிலத்தில் மல்ரி புலட்(Multi-plot) நாவல் என்பார்கள். இப்படியான மல்ரி புளட் கொண்டவை தமிழில் குறைவு. கதைகளுக்குள் பல கதை வைத்து எழுதுவதை பிரேம் நரேறரிவ்(Frame Narrative)) என்பார்கள்

நாவலுக்குரிய முரண்ணகையாக இராஜேந்திரனை அசாமியப் பெண்ணிடம் இருந்து பிரித்து கனடாவுகக்கு அனுப்பியபின் சில காலத்தில் வாகன விபத்தில் இறந்துவிடுகிறான்.

பல சிறப்புகளைக் கொண்ட இந்த நாவலில் ஏதோ ஒரு முக்கியமான விடயம் விடுபட்டிருக்கிறது என நான் நினைத்தால் அது மனிதர்களின் மனத்தில் ஏற்படும் தீவிரமான உணர்வு.
இலக்கியம், சங்கீதம் போல் மூளையின் ரெம்பரல்(Temporal lobe)) பகுதியல் இருந்து உருவாகுவது. அங்கே பாலுணர்வு, கோபம், அன்பு, வெறுப்பு, வன்முறை என்பன உள்ளன அவை வெளிப்படவேண்டும். நான் காணும் அப்படியான இடங்கள் இரண்டு ” புத்தபிக்கு பெண்ணின் சடலத்தை புணர்வது , தாயான மகேஸ்வரி கிணற்றில் விழ எத்தனிப்பதே இரு இடங்கள்.”

ஆயிரம் பக்க நாவலுக்கு அவை இரண்டும் போதாது.

டி எஜ் லாரனஸ்படி(D H Lawrence) மனிதர்களின் தீவிர உணர்வுகள் வெளிப்படுத்தப்படவேண்டும்
(The novelist must capture the violence and suddenness of human emotions)

ராஜியின் தன் உடலை விடுதலைப்புலிகளின் ஓட்டிக்கு கொடுப்தாக வரும் உடலுவு மடடுமே இருபது வருட வாழ்க்கையில் நடக்கும் ஒரு விடயம். அதாவது இக்காலத்தில் ஜிகாடிஸ் போராளிகளைத்தேடி அவுஸ்திரேலிய பிரித்தானிய இஸ்லாமியப் பெண்கள் போவது போன்ற செயல். அதில் அதிதமான உணர்வுகள் வெளிப்படவில்லை. குறைந்த பட்டசம. முதல் உடலுறவு மறக்கக்கூடியது அல்ல.ராஜிக்கு அதுவே முதலும் கடைசியும் எனும்போது அவள் பிற்காலத்தில் இரை மீட்பது கூட நாவலில் வரவில்லை.

முதலும் கடைசியுமான உடலுறவை பற்றிய சிந்திக்காத மானுட பிறவியா ராஜி?
Nainativu_Gopuram
காதலித்து திருமணசெய்து குழந்தையும் பெற்ற இராஜேந்திரன், அம்மா கூறியதால் எதுவித மறுப்புமில்லாமல் பிரிந்துவிட்டான். குழந்தையிடம் இருந்து ஒரு பொம்மையை பிரித்தால் ஏற்படும் உணர்வுகள் இங்கு தெரியவில்லை. ராஜி ஒருவேளை உடலுறவில் நாட்டமில்லாத பெண்ணாக இருக்கலாம். ஆனால் இராஜேந்திரன் எதிர்ப்பில்லாமல் குடும்பத்தைப் பிரிவது ஏற்றமுடியாது.அவன் தாய் தமக்கை என பாசம் கொண்டவனாக உருவகிக்கிக்கப்படுகிறான். தமக்கைக்கு குடும்பத்தை உருவாக்க பாடுபடுகிறான். பம்பாயில் வீடு வாங்கி 4 அல்லது 5 வருடம் குடும்ப வாழ்வில் ஈடுபடுகிறான். அவனது ஆழமான உணர்வுகள் மனைவியைப் பிரியும்போது வெளிப்படவில்லை

நாவல் பெரிதாக இருப்பது அல்லது சில அவசியமற்ற பாத்திரங்கள் வருவது பிரச்சனையல்ல. ஒருகாலத்தின் வரலாற்றை அல்லது முக்கிய பாத்திரத்தின சிறப்பை வெளிப்படுத்த, தட்டையான பாத்திர வாயிலாக வரும்போது பக்கங்கள் கூடும்.

நாவல் இலக்கியம் என்பது சமூகத்தையும் அங்குள்ள தனிமனிதர்களின் அகவெளிபாடுகளையும் ((sociology and psychology) வைத்து பின்னப்படவேண்டும். நாவலை நகர்த்தி செல்வது அங்கு ஏற்படும் முரண்பாடு. கனவுச்சிறை நாவல் சிங்கள – தமிழ் முரண்பாடுகளையும் , ராஜி- சுதன் முரண்பாடுகளையும் வைத்து எழுதப்படுகிறது.
Phudist
இந்த நாவல் வரும் நயினாதீவு, நடமாடும் பாத்திரங்கள் ,நாகபூசணியம்மன் கோவில், வீரபத்திரகோவில் ,புத்த ஆலயம் ஊரிகாடு என்பது இடங்கள் நான் நடந்த இடங்கள் என்பதால் எனக்கு நாவலை வாசிப்பது நனைவிடை தோய்தலாக இருந்தது.
தேவகாந்தன் பிறந்த இடமும் நயினாதீவு என்பதால் இந்த நாவல்மூலம், நயினாதீவை மணிமேகலைக்கு பின்பான நவீன இலக்கியத்திலும் பகைப்புலமாக்கியிருக்கிறார்

ஈழத்தமிழ் இலக்கியத்தில் இருபது வருடங்களின் ஈழப்போர் எப்படி கலாச்சாரத்தையும், உறவுகளையும் சிதைத்தது என்பதை நாம் அறிவதற்கு கனவுசிறை முக்கிய நாவலாகும். அடுத்த2001 ல் இருந்து 2009 வரையுமான சாதாரண மக்களின் சிதைவை மீண்டும் தேவகாந்தன் எழுதும்போது நான் கூறிய ஈழ இலக்கியத்தில் ஈழப் போராட்டகாலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

“கனவுச்சிறை- தேவகாந்தன்.” அதற்கு 5 மறுமொழிகள்

 1. கச்சிதமான விமர்னம்.. ஈழத்து படைப்புகளுக்கு இவ்வாறான விமர்சனம் வருவது குறைவு.

  1. நன்றி அனோஜன் . முடிந்தவரை ஈழத்து படைப்பாளர்களின் நல்ல புத்தகங்களை அடையாளம் காட்ட விரும்புகிறேன். அதேவேளையில் முகத்திற்காக எழுத விரும்பவில்லை. ஆனால் எந்த படைப்பையும் குறை சொல்லுவதில்லை எனத் தீர்மானம் . எமது ஈழத்து இலக்கியம் மிக குறைந்த வாசகர் வட்டமே உளளது. இதில் வருடக்கணக்காக(அசோகனின் வைத்தியசாலை எழுத 3 வருடம எடுத்தது ) உழைத்து எழுதியதை கடித்து துப்புவது நாகரீகமில்லை என நினைக்கிறேன்.எவ்வளவு திறமாக எழுதியதையும் எத்தனை பேர்வாசிக்கிறார்கள்?

   நான சமிபத்தில் எழுதிய எஸ்போவவினது வரலாற்றில் வாழ்தல் கனவுச்சிறை இரண்டும் எமது ஈழச் சமூகத்தின் வாழ்வியலை அரசியலை குறுக்கு வெட்டுமுகமாக அபுனைவாகவும் புனைவாகவும் தந்தவை. இவைகளை வாசித்தல் அவசியம். வாசித்தபின்பு அவைகளில் உள்ள சில குறைகளை நீங்கி எழுதவேண்டும்.

 2. சுப.லோகநாதன் Avatar
  சுப.லோகநாதன்

  நான் கடந்த இரண்டு மாதங்களாக கனவுச்சிறை நாவலை வாசித்தேன் என்று சொல்வதை விட வசித்தேன் என்பது தான் நிதர்சனம்.

  தமிழகத்தில் ஜெயகாந்தன், தமிழீழத்தில் தேவகாந்தன்
  இருவரும் மக்களின் உணர்வுகளை தங்களின் படைப்புகள் மூலம் சித்தரிப்பதில் வல்லவர்கள்.

  1. நம்மிடையே வாழ்வர்களில் தேவகாந்தன் த

  2. நம்மிடையே வாழபவர்களில் தேவகாந்தன் மிகவும் சிறந்த நாவலாசிரியர் என்பது எனது பலகாலமாக. அபிப்பிராயம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: