தமிழ்த்தேசியம் படும் பாடு ???

மாத்தளை-சோமு
எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
முருகபூபதி

” அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்களை வருடாந்தம் ஒன்று கூட்டும் ஒரு அமைப்பு – அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இயங்கிவருகையில், தங்களால் அமைக்கப்பட்ட புதிய சங்கத்தின் அவசியம் என்ன ? ” என்று அவுஸ்திரேலியா SBS வானொலி ஊடகவியலாளர் திரு. ரெய்செல் அவர்கள் திரு. மாத்தளை சோமு என்ற எழுத்தாளரிடம் கேட்டபொழுது, தாம் தமிழ்த்தேசியத்தினை காப்பதற்காகவும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரலாக இயங்கவிருப்பதாகவும் தமது சங்கம் தமிழ்த்தேசியத்தை எழுத்தாளர்களுக்கு ஊட்டுவதற்காகவும் தொடங்கியிருக்கும் தொனியில் பேசினார்.

ஆகா, இவர் அவுஸ்திரேலியா வந்து முப்பது ஆண்டுகள் கடந்து, அதாவது மூன்று தசாப்தகாலம் ஓடியவேளையில் தமிழ்த்தேசியம் இவர் இல்லாமல் மங்கி மறைந்துவிட்டதோ ????

இவர் எப்பொழுதும் பொறுப்பற்ற முறையில் கைதட்டல்களை மாத்திரம் குறியாகக்கொண்டு மேடைகளில் பேசிவருபவர். மெல்பனுக்கு இவர் வந்து தலைமை தாங்கிய எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் சங்கத்தின் எழுத்தாளர் விழா கருத்தரங்கிலும் பொறுப்பற்ற முறையில் உரையாற்றி உறுப்பினர்களினதும் பார்வையாளர்களினதும் வெறுப்பை சம்பாதித்தார்.

அங்கிருந்த சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் திரு. ஆவூரான் சந்திரன் உடனடியாகவே இவருடைய பொறுப்பற்ற உரையை கண்டித்தார். அச்சமயம் தலைவராக இருந்த பாடும்மீன் ஸ்ரீகந்தரராசா, மாத்தளைசோமுவை தமது வீட்டுக்கு அழைத்து கண்டித்தார்.

சங்கத்தின் அமைப்பாளர் என்ற முறையில் எனது நீண்ட கால இலக்கிய நண்பரான மாத்தளைசோமுவுக்கு 14-05-2012 ஆம் திகதி கடிதம் எழுதி அவருடைய அறியாமையை சுட்டிக்காட்டினேன்.
ஆனால், அவர் அதற்கும் இதுநாள்வரையில் பதில் தரவில்லை. எனினும் அந்தக்கடிதத்தை பகிரங்கப்படுத்தவேண்டிய தேவையையும் தற்பொழுது மாத்தளைசோமு உருவாக்கிவிட்டார்.

அக்கடிதத்தை இங்கு தருகின்றேன்.
14-05-2012
” திரு. மாத்தளை சோமு அவர்கட்கு,

தாங்கள் எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று எமது 12 ஆவது எழுத்தாளர் விழாவில் கலந்துகொண்டமைக்காக எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனினும் விழாவில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைமையேற்று உரையாற்றும்போது, எமது சங்கம் தவறான திசைநோக்கிச்சென்றதாகவும் முள்ளிவாய்க்கால் சம்பவங்களை கவனத்தில் கொள்ளத்தவறியதாகவும் சங்கத்தின் தலைவரிடம் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வந்து பேசுவதற்கு சம்மதித்ததாகவும் உரையாற்றியிருந்தீர்கள்.
இதன் மூலம் தாங்கள் எமது சங்கத்தைப்பற்றியும் அதன் வரலாறு தொடர்பாகவும் தெளிவுகள் அற்றவர் என்பது எமக்குப்புலனாகியது. தங்களது அறியாமையின் நிமித்தம் வெளிப்பட்ட குறிப்பிட்ட அவதூறுப்பேச்சானது எமது சங்கத்தின் ஸ்தாபகர் என்ற முறையில் எனக்கும் இதர உறுப்பினர்கள் சிலருக்கும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதை தங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

தங்களது உரையையடுத்து நான் குறுக்கிட்டுப்பேசி எதிர்வினையாற்றியிருக்க முடியும். எமது சங்கம் கருத்துக்களுக்கும் ஆரோக்கியமான வாதங்களுக்கும் மட்டுமே களம் அமைத்துக்கொடுத்துவந்துள்ளது. விதண்டா வாதங்களை வளர்த்து வருகைதந்துள்ள பார்வையாளர்களையும் கடந்த 12 வருடகாலமாக உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் மட்டுமன்றி நிதியுதவி, அன்பளிப்புகள் ஊடாகவும் சங்கத்தை காத்துவரும் பலரை அந்த விதண்டா வாதங்கள் சோர்வடையச்செய்துவிடும் என்பதற்காகவும் கருத்தரங்கை திசைதிருப்பிவிடும் என்பதனாலும் சகிப்புடன் பொறுமை காத்தேன். வந்தவர்களை அன்புடன் உபசரித்து அனுப்பிவைக்கும் பண்பாட்டை எமது சங்கம் தொடருவதனால் அமைதிகாத்துவிட்டு, வீடு வந்த பின்னர் இக்கடிதத்தை தங்கள் பார்வைக்கு அனுப்புகின்றேன்.

எமது சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழாவில் நாம் வெளியிட்ட பூமராங் சிறப்பு மலரில் ஆறுபக்கங்களில் நான் பதிவுசெய்திருந்த ஆக்கத்தை தங்களின் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளேன். எமது விழாவொன்றில் (சிட்னியில் 2002) தாங்களும் உரையாற்றியிருப்பதையும் தங்களது சிறுகதையும் இடம்பெற்ற உயிர்ப்பு என்ற தொகுப்பினை சங்கம் 2006 இல் நடந்த விழாவில் வெளியிட்டிருப்பதையும் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். 2011 இல் அதே சிறுகதையை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தொகுத்து வெளியிட நான் முன்வந்தபோது தாங்கள் ஒரு சூழ்நிலையின் கைதியாகி அதற்கு உடன்படவில்லை என்பதையும் நினைவுபடுத்துகின்றேன். எனினும் இதர கதைகளுடன் குறிப்பிட்ட ஆங்கில தொகுப்பு (BEING ALIVE ) வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றது.
எமது சங்கம் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக இயங்குவதனாலும் வருடாந்தம் எழுத்தாளர் விழாவை நடத்திவருவதனாலும்தான் உங்களைப்போன்று பொறுப்பற்றுப்பேசித்திரியும் பலருக்கு மேடையில் களம் அமைத்துக்கொடுக்கின்றோம். கைதட்டுகளுக்காக முள்ளிவாய்க்கால் பற்றி பேசும் உங்களைபோன்ற பலரை எனக்குத்தெரியும் என்பதனால்தான் உங்களது பேச்சு எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை.

ஆனால், அன்று விழா நடந்த வேளையில் சமுகமளித்திருந்த பலர் 2009 மே இல் போர் முடிவடைந்த பின்னர் பலதடவை முள்ளிவாய்க்கால் உட்பட அதனைச்சுற்றியிருக்கும் வன்னிப்பிரதேசங்களுக்கெல்லாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கும் பெற்றவர்களை இழந்த பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி வருகின்றனர். அத்துடன் எமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கு நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை செய்துவருகின்றனர்.
இலங்கை சென்றால் கொழும்பு, கண்டி, மாத்தளைக்கு அப்பால் நகராத வாய்ச்சொல் வீரர்களில் ஒருவரான தங்களது உரை, அவர்களுக்கு ஆச்சரியத்தை தராமல் சினத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

எமது சங்கத்தின் வெளியீடுகளை விலைகொடுத்து வாங்கிப்படித்திருப்பீர்களானால் நாம் எத்தகைய திசையில் வளர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பது தங்களுக்கு தெளிவாகியிருக்கும்.

மெல்பன் வருவதற்கு தாங்கள் நிபந்தனை விதித்ததாகக் கூறும் எமது சங்கத்தின் தலைவர் திரு. பாடும்மீன் சிறிகந்தராசா அவர்கள் கடந்த 12 வருடகாலத்தில் சிட்னி, கன்பரா தவிர்ந்த ஏனைய மெல்பன் விழாக்கள் அனைத்திலும் பங்கேற்று உரையாற்றியவர். எமது சங்கம் சரியான திசையில் சென்றதனால்தான் அவர் இன்று தலைவராக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதனால் தங்களது பொறுப்பற்ற பேச்சானது அவரையும் அவமானப்படுத்தியிருக்கிறது. தாங்களும் நிதி செலுத்தி உறுப்பினராகும் பட்சத்தில் தங்களையும் நாம் தலைவராக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்வதற்காக இயங்குவதே எமது சங்கம் என்பதையும் , அற்ப புகழுக்காகவும் காற்றிலே கரைந்துவிடும் கைதட்டல்களுக்காகவும் அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தங்களுக்கு தற்போது அறுபது வயதும் கடந்துவிட்டது. ஆனாலும் தாங்கள் இன்னமும் அறியாமை இருளில் மூழ்கியிருப்பதானது தங்களை 40 ஆண்டுகளுக்கும் மேலாகத்தெரிந்த ஒருவன் என்றவகையில் எனக்கு கவலை தருகிறது. எனது அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.
எனவே, எமது சங்கத்தினதும் எமது எழுத்தாளர் விழா இயக்கத்தினதும் வரலாற்றை தயவுசெய்து படித்து தெளிவுபெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
சிட்னியில் 2013 இல் நடைபெறவுள்ள 13 ஆவது எழுத்தாளர் விழாவில் சந்திப்போம். அப்பொழுது நீங்களும் எமது சங்கத்தின் உறுப்பினராக அங்கம் வகித்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
மாற்றுக்கருத்துக்கொண்டவர்களையும் அறியாமையிலிருப்பவர்களையும் அணைப்பது எமது சங்கத்தின் மரபு.
அன்புடன்
முருகபூபதி”
—————————–

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழ் கலை, இலக்கியவாதிகளை ஒன்றிணைத்து அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்வதற்காக 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டதுதான் அவுஸ்திரேலியாவில் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் விழா.
” கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் ” என்ற தாரகமந்திரமும் உச்சரிக்கப்பட்டே அந்த தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடல் தொடங்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இரண்டாவது தமிழ் எழுத்தாளர் விழா சிட்னியிலும் மூன்றாவது விழா மீண்டும் மெல்பனிலும் நான்காவது விழா கன்பராவிலும் நடைபெற்றது.
அதன் பின்னர் விக்ரோரியா மாநிலத்தில் அரசில் பதிவுசெய்யப்பட்ட (Incorporated Organization) அமைப்பாக அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இயங்கத்தொடங்கி, தொடர்ச்சியாக தங்கு தடையின்றி தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்திவருகிறது.
படைப்பாளிகளின் பயிற்சிக்களமாக இயங்கிவரும் இவ்வியக்கம், கலை, இலக்கியத்துறையில் ஆய்வுக்கும் தேடலுக்கும் முக்கியத்துவம் வழங்கி, தேசிய மற்றும் சர்வதேசியத்திலும் எமது தமிழ் இலக்கியத்தின் இயங்குதளம் குறித்த சிந்தனையை வளர்ப்பதற்காகவும் வளர்ச்சிபெற்றது.

இரண்டாவது எழுத்தாளர் விழா சிட்னியில் (2002) நடந்த பொழுதும் 2011 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்தபொழுதும் 2012 ஆம் ஆண்டு மீண்டும் சிட்னியில் நடந்தபொழுதும் இவற்றில் கலந்துகொண்டு உரையாற்றியவர்தான் திரு. மாத்தளை சோமு.

19-01-2002 ஆம் திகதி சிட்னியில் நடந்த விழாவில் மாத்தளைசோமு புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

13-05-2012 ஆம் திகதி மெல்பனில் நடந்த 12 ஆவது எழுத்தாளர் விழாவில் மாத்தளைசோமுவின் தலைமையில் ஒரு கருத்தரங்கும் நடைபெற்றது.

அத்துடன் 2013 ஆம் ஆண்டளவில் அவர் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் சந்தா செலுத்தி அங்கத்துவம் பெற்றுக்கொண்டே சிட்னியில் 20-04-2013 ஆம் திகதி நடந்த 13 ஆவது விழாக்குழுவில் இணைந்து முக்கிய பங்காற்றினார். அன்றைய நிகழ்ச்சிகளின் முதல் அமர்வே மாத்தளைசோமுவின் தலைமையில்தான் நடைபெற்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் தாம் எமது சங்கத்தில் தற்போது இல்லை என்று பொய்யுரைத்து திரிவதுதான். இல்லையென்றால் அதற்கான காரணத்துடன் ஒரு பதவி விலகல் கடிதம் இருக்கவேண்டும். ஆனால், அப்படி ஒன்றும் இல்லை.இடத்துக்கு தக்கவிதமாக பேசுவது என்று இதனைத்தான் சொல்வோம்.

சிட்னியில் 26-04-2008 ஆம் திகதி நடந்த எட்டாவது விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவரைப்பேச அழைத்தால் – மேடை வழங்கினால் மாத்திரமே வருவார். அவருக்கு மேடைதான் முக்கியம். அச்சமயம் அவர் சிட்னி ஹோம்புஷ்ஷிலிருந்து சற்றுத்தூரத்தில் பெண்டில்ஹில் என்ற இடத்தில் வசித்தார். ஆயினும் அந்தப்பக்கமே வரவில்லை.
வருடாந்தம் ஜனநாயக முறைப்படி ஆண்டுப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு செயற்குழு தெரிவுசெய்யப்பட்டு, இயங்கி வருகிறது எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.

இச்சங்கத்தின் முதல் வெளியீடான உயிர்ப்பு (2005) என்ற அவுஸ்திரேலிய படைப்பாளிகளின் கதைத்தொகுப்பிலும் மாத்தளை சோமுவின் சிறுகதை இடம்பெற்றுள்ளது.
2001 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த முதலாவது எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்ட மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரிலும் அவருடைய சிறுகதை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு இச்சங்கத்துடன் இணைந்திருப்பவரான திரு. மாத்தளைசோமுவுக்கு தான் கடந்து வந்த பாதை மறந்துவிட்டதுபோலும்.

அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்த முதலாவது ஈழத்து எழுத்தாளர் என்ற பெருமைபெற்றவர். தற்பொழுது முப்பது ஆண்டுகளும் கடந்துவிட்டன.

இதுவரையில் அவருக்கில்லாத தமிழ்த்தேசிய உணர்வு இன்று அவர் சிட்னியில் தொடக்கியிருக்கும் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஊடாக வெளிப்படத்தொடங்கியிருப்பதாக எஸ்.பி.எஸ். வானொலிக்கு நேர்காணல் வழங்குகிறார். கடந்த முப்பது ஆண்டுகாலமாக அவருடைய தமிழ்த்தேசியம் எங்கே சென்று மறைந்துகொண்டது.

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்களை வருடாந்தம் ஒன்று கூட்டும் ஒரு அமைப்பு இயங்கிவருகையில் தங்களால் அமைக்கப்பட்ட புதிய சங்கத்தின் அவசியம் என்ன ? என்று வானொலி ஊடகவியலாளர் திரு. ரெய்செல் அவர்கள் கேட்டபொழுது, தாம் தமிழ்த்தேசியத்தினை காப்பதற்காகவும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரலாக இயங்கவிருப்பதாகவும் தமது சங்கம் தமிழ்த்தேசியத்தை எழுத்தாளர்களுக்கு ஊட்டுவதற்காகவும் தொடங்கியிருக்கும் தொனியில் பேசினார்.

எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2004 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்பே முதலில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவிலும் சிட்னியில் நடந்த இரண்டாவது விழாவிலும் ஈழத்தமிழ்த்தேசியத்திற்காகவும் சென்னையில் வாழும் பழ.நெடுமாறனுக்காகவும் பல்வேறு வழிகளில் உதவிய மருத்துவர் பொன். சத்தியநாதன் கலந்துகொண்டு தமது தமிழ் கணினி தொழில் நுட்பம் பற்றி ஆய்வுரை நிகழ்த்தியிருக்கிறார்.
இதுவரையில் 16 விழாக்கள் தங்கு தடையின்றி நடந்துவிட்டன.

தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலர் இந்த விழாக்களில் உரையாற்றியுள்ளனர்.

சிட்னியைச்சேர்ந்த (அமரர்)எஸ்.பொன்னுத்துரை, மு.தனபாலசிங்கம், குலசேகரம் சஞ்சயன், பேராசிரியர்கள் பொன். பூலோகசிங்கம், ஆசி. கந்தராஜா, ஓவியர் ஞானம், விக்டர் இராஜகுலேந்திரன், ( அமரர்) வேந்தனார் இளங்கோ, இளமுருகனார் பாரதி, திருநந்தகுமார், பிரவீணன் மகேந்திரராஜா, பாலம் லக்ஷ்மணன், பாமதி, யசோதா பத்மநாதன், செ. பாஸ்கரன், முருகர் குணசிங்கம், நடராஜா கருணாகரன், குலம் சண்முகம், விக்னேஸ்வரன், மனோ ஜெகேந்திரன், சவுந்தரி கணேசன், உஷா ஜவஹார், கலையரசி சின்னையா, சந்திரிக்கா சுப்பிரமணியன் , நட்சத்திரன் செவ்விந்தியன், கார்த்திகா கணேசர், ஆனந்தகுமார் உட்பட பலரும் மெல்பனில் நல்லைக்குமரன் குமாரசாமி, அண்ணாவியார் இளையபத்மநாதன், காசிநாதன், பாடும்மீன் சிறிகந்தராசா, அவூரான் சந்திரன், (அமரர்) நித்தியகீர்த்தி, (ஆமரர்) அருண். விஜயராணி, சட்டத்தரணி ரவீந்திரன், மெல்பன் மணி, மங்களம் ஸ்ரீநிவாசன், சுதாகரன், கிருஷ்ணமூர்த்தி, சிசு நாகேந்திரன், நடேசன், கல்லோடைக்கரன், சசிதரன் தனபாலசிங்கம், ஜெயராமசர்மா, செல்வபாண்டியன், சாந்தினி புவனேந்திரராஜா, முருகபூபதி, சண்முகம் சபேசன், நவரத்தினம் இளங்கோ, உஷா சிவநாதன், கௌசல்யா, கொர்ணேலியஸ், வசந்தன், ஜே.கே.ஜெயக்குமாரன், குமாரதாசன், கேதாரசர்மா, அறவேந்தன், பேர்த்திலிருந்து வருகைதந்த கலாநிதி அமீர் அலி, சாந்தா ஜெயராஜ், கன்பரா ஆழியாள் மதுபாஷினி, யோகானந்தன், நித்தி துரைராஜா, திருவருள் வள்ளல், சிவசபேசன் என நீண்ட பட்டியலே இருக்கிறது.
அத்துடன் சிட்னி, மெல்பன், கன்பரா, பிறிஸ்பேன், பேர்த் முதலான நகரங்களில் இருந்து மட்டுமல்ல இலங்கை தமிழகம், அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் பல படைப்பாளிகள் கலைஞர்கள், ஓவியர்கள், ஊடகவியலாளர்கள் பலரும் அவ்வாறே — இந்த நாட்டிலிருந்தும் இந்தத்துறை சார்ந்த பலரும் இளம்தலைமுறை மாணவர்களும் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாக்களிலும் கலை, இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்கள். வரும் மேமாதத்திலும் எதிர்வரும் ஓகஸ்ட் , நவம்பர் மாதங்களிலும் மெல்பன், கன்பரா, கோல்ட்கோஸ்ட் (குவின்ஸ்லாந்து) சிட்னி ஆகிய நகரங்களிலும் எமது சங்கத்தின் கலை, இலக்கிய சந்திப்பு, எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இவர்களிடமில்லாத தமிழ்த்தேசியத்தையா இன்று தனக்காகவே புதிய சங்கம் தொடங்கியிருக்கும் மாத்தளைசோமு தேடிப்பிடித்துள்ளார்.

அய்யோ பாவம்!

போட்டோ கொப்பி இயந்திரம் செய்யும் வேலையைத்தான் மாத்தளைசோமு செய்யமுனைந்துள்ளார். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய எழுத்தாளர் விழாக்களில் கலைஞர்கள், படைப்பாளிகள், ஓவியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். நாம் மேற்கொண்ட அதே பணிகளைத்தான் தாமும் தமிழ்த்தேசிய பூச்சாண்டி காண்பித்து தொடங்கியிருக்கிறார் என்பதை அந்த வானொலி நேர்காணலின் பின்னரே தெரியவந்துள்ளது.
இவர் இப்படி ஒரு அமைப்பை தொடங்கவிருக்கும் செய்தி அறிந்ததும், ” ஆயிரம் பூக்கள் மலரட்டும், ஆயிரம் சிந்தனைகள் உருவாகட்டும் ” என்றுதான் வாழ்த்துத் தெரிவித்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால், அது கிடைத்த தகவலைக்கூட எனக்குச்சொல்லவில்லை. அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் பதில்கிடைக்காது எனத்தெரிந்தும் அவருடைய முயற்சிக்கு வாழ்த்துக்கூறினேன்.
அதனை அவர் தாம் ஒழுங்குசெய்த கூட்டத்திலும் சொல்லியிருக்கிறார்.

தமிழும் கலை, இலக்கியமும் யாருடையதும் முதுசம் அல்ல. அனைவருக்கும் பொதுவானது. அதனை எவரும் வாழவைக்க முயற்சிக்கலாம். ஆனால் , இந்தநாட்டில் இயங்கும் பல தமிழ் அமைப்புகளும் தமிழ்த்தேசியத்தை மறந்துவிட்டதாக இந்தப்பூனை கண்ணை மூடிக்கொண்டு, இலங்கை தமிழ் அரசியல்வாதிகள்போன்று தமது தனிப்பட்ட தேவைக்காக ஒரு அமைப்பை உருவாக்கி, அதற்கு தமிழ்த்தேசிய சாயம் பூசுவதற்கு இறங்கியிருப்பதுதான் வேடிக்கையானது.

இதில் என்ன அதிசயம் என்றால், இலங்கைத் தமிழ் மக்கள் மறதிக்குணமுள்ளவர்கள் என்று அங்கு தமிழ் அரசியல் தலைவர்கள் நினைப்பதுபோன்று, இலக்கியவாதியான மாத்தளைசோமுவும் சிட்னி வாழ் தமிழர்களும் மறதிக்குணமுள்ளவர்கள் என கருதுகின்றார்.
தமிழ்த்தேசியத்திற்காகவும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவும்தான் தாம் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் சங்கத்தை தொடக்கியிருப்பதாகச்சொல்கிறார் அந்த வானொலியில்.
ஆகா, இவர் அவுஸ்திரேலியா வந்து முப்பது ஆண்டுகள் கடந்து, அதாவது மூன்று தசாப்தகாலம் ஓடியவேளையில் தமிழ்த்தேசியம் இவர் இல்லாமல் மங்கி மறைந்துவிட்டதோ ????
———————————-

இவர் முன்னர் வாழ்ந்த மலையகத் தமிழ்த்தேசியத்திற்கு இதுவரையில் என்ன செய்துள்ளார் ????

இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்துள்ளார் ????

குறைந்த பட்சம் தனக்கு அடைக்களம் வழங்கிய நாட்டிற்காவது விசுவாசமாக இருந்தாரா ????

இந்த பல்தேசிய கலாசார குடியேற்ற நாட்டின் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டு, இந்த நாட்டில் வயதுக்கு வந்துவிட்ட பெண்குழந்தைகளை வைத்து வளர்க்கமுடியாது என்று தமிழகம் ஓடியவர்தானே இந்தத் தமிழ்த்தேசியவாதி. தேவைகளுக்காக தேசங்களையும் தேசியத்தையும் பயன்படுத்துபவர்களுக்கு தேவைகள்தான் முக்கியம். விசுவாசம் அல்ல.

இவ்வாறு தமிழ்த்தேசியப்பூச்சாண்டி காண்பித்து மற்றவர்களை மிரட்டிய பலர் இறுதியில் பூஞ்சணமாகியிருப்பதும் வரலாறு.
தமிழ் இலக்கியத்திற்காக ஒரு படைப்பாளிகள் அமைப்பை உருவாக்குவதற்கு எவரும் முயற்சிக்கலாம். ஆனால், தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழ்த்தேசிய மருந்தை செலுத்துவதற்காக இவர் முயன்றிருப்பதுதான் வேடிக்கை. தமிழ்த்தேசிய உணர்விருப்பதனால்தானே புலம்பெயர்ந்த பின்னரும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தக்கவைத்துக்கொள்ள பலரும் பாடுபடுகின்றனர். அதென்ன இவ்வளவுகாலமும் இல்லாத புதுச்சங்கம்.

இனிமேல் இந்த நாட்டில், ஈழத்தமிழ்ச்சங்கங்கள், நாடு கடந்த தமிழ் ஈழம், அவுஸ்திரேலியா தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அவுஸ்திரேலியா தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழர் மருத்துவ நிதியம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் யாவும் மாத்தளைசோமுவிடத்தில்தான் தமிழ்த்தேசியத்திற்காக கையேந்தி நிற்கவேண்டிவரலாம்.
தமிழ்நாட்டில் தேர்தல் வரப்போகிறது, அங்கும் தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்கள் தமக்குத் தமக்கென கட்சிகளைத் தொடக்கி நாளைய முதல்வர் தான்தான் என்று காற்றிலே பேசுகின்றனர்.

இதுதான் இலங்கையிலும் தமிழர் அரசியலில் நடக்கிறது.
தமிழ்த்தேசியத்தை இவர்கள் சும்மா விடமாட்டார்கள். ஒரு கை பார்க்கத்தான் போகிறார்கள். அந்த வரிசையில் மற்றும் ஒரு அரசியல்வாதியாகியிருக்கிறார் முன்னாள் இலக்கியவாதி மாத்தளைசோமு,

தனக்கும் விசுவாசமில்லாமல், தான் கடந்து வந்த பாதைக்கும் விசுவாசமில்லாமல், தனக்கு அடைக்கலம் வழங்கிய தேசத்திற்கும் விசுவாசமில்லாமல் தான் அங்கம் வகித்த தமிழ் அமைப்புகளுக்கும் விசுவாசமில்லாமல் வாழும் ஒருவர் எத்தகைய தமிழ்த்தேசிய விசுவாசியாக இருப்பார் என்பதை சொல்வதற்கு வார்த்தைகளை தேடவேண்டிய அவசியம் இல்லை.
——0—–

“தமிழ்த்தேசியம் படும் பாடு ???” மீது ஒரு மறுமொழி

  1. for some Tamil Nationalism is a hobby, for some its a way of getting attention,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: