முருகபூபதி
காவலூர் ஜெகநாதன் எனக்கு 1977 இற்குப்பின்னர்தான் அறிமுகமானார். முதலில் அவர் தமிழ்த்தேசியவாதம் பேசியவர். இன்றும் பலர் தமது சுயநலனுக்காகவும் பதவி மோகத்திற்காகவும் இந்தவாதநோயுடன் வாழ்கின்றனர். அன்று ஜெகநாதன் முற்போக்கு எழுத்தாளர்களை அவர் ஏற்கவில்லை. அக்காலப்பகுதியில் அவர் கோவை மகேசனின் சுதந்திரன் பண்ணையின் மற்றும் ஒரு வெளியீடான சுடர் இதழில் எழுதினார். காலம் கடந்தே மல்லிகையில் எழுதத்தொடங்கினார். 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் அவருடைய வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது.
யாழ்ப்பாணம் திருநேல்வேலியில் அமைந்திருந்த விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் அவ்வேளையில் பணியிலிருந்தார்.
முதலில் குடும்பத்தினரை தமிழ்நாட்டில் விட்டுவிட்டு அவர் மாத்திரம் இலங்கைக்கு அடிக்கடி வந்து திரும்பினார். அவருடைய இந்தப்பயணங்களில் சில இலக்கிய நன்மைகள் வீரகேசரிக்கும் சில ஈழத்து எழுத்தாளர்களுக்கும் கிட்டியது.
சென்னையிலிருந்து கவிஞர் மேத்தாதாசன் – அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் ஆகியோரை இலங்கைக்கு அழைத்துவந்தார். சில ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கும் ஆவனசெய்து, தமது நூல்களையும் அங்கு வெளியிட்டார். சிலரை தமிழகத்திற்கு அழைத்துச்சென்று இலக்கிய சந்திப்புகளும் ஒழுங்குசெய்தார்.
வீரகேசரியில் வாரம்தோறும் தமிழகப் புதினங்களையும் எழுதினார். தமிழக இதழ்கள் கணையாழி, தினமணிக்கதிர், கல்கி, சாவி, இதயம்பேசுகிறது, அமுதசுரபி முதலான இதழ்களிலெல்லாம் ஒரே சமயத்தில் கதைகள் எழுதினார். அவருடைய வேகம் அதிசயிக்கத்தக்கது.
என்னையும் 1984 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அழைத்தார். அதுவே எனது முதலாவது தமிழகப்பயணம். என்னுடன் தானும் வருவதாகச் சொன்னவர், இறுதி நேரத்தில் தனது நிகழ்ச்சி நிரலை மாற்றிவிட்டு என்னை மாத்திரம் இராமேஸ்வரம் செல்லும் இராமானுஜம் கப்பலில் ஏற்றிவிட்டார்.
அந்தக்கப்பலிலும் பணியாற்றிய ஒருவர் அவருடைய தமிழக இலக்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று என்னுடன் பயணிக்காமல், தமிழ்நாட்டில் மேற்கு அண்ணா நகரில் அவருடைய மனைவியும் ஆண்குழந்தையும் வசித்த முகவரியைத்தந்து செல்லும் பஸ் வழித்தடமும் சொன்னார். அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்தே அவர் அங்கு வந்துசேர்ந்தார்.
எனக்கு அந்த முதல் தமிழகப்பயணம் சற்று தயக்கத்தையும் தந்திருந்தது.
சில தமிழ் விடுதலை இயக்கங்கள் தமிழகத்தில் முகாமிட்டிருந்தன. எமது ஈழத்தமிழ் மக்களும் சென்னையில் அதிகம் வாடகைப்பணம் கொடுத்து வீடுகளை பெற்றதனால் அந்த நாட்டைச்சேர்ந்த பிறஊர் மக்கள் வாடகைக்கு சென்னையில் வீடு எடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கினர்.
” அதிக வாடகை தரமுடியாது ” என்று சென்னைக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் சொல்லும்பொழுது, ” சரிதான் போய்யா, சிலோன்காரன் வருவான். கொடுக்கலாம் ” எனச்சொல்லி வெறுப்பேற்றியவர்கள் பற்றியும் அப்பொழுது அறியமுடிந்தது.
சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் அமிர்தலிங்கம், மனைவி, மகன் பகீரதனுடன் இருந்தார். வவுனியா சிவசிதம்பரமும் வி. பொன்னம்பலமும் சென்னையில்தான் இருந்தனர்.
ஆனந்தசங்கரி மேற்கு அண்ணாநகரில் வசித்தார்.
மு.கனகராஜன், கணபதி கணேசன், நவம், வ.ஐ.ச. ஜெயபாலன், செ. கணேசலிங்கன் முதலான எழுத்தாளர்கள் உட்பட பலர் அங்கிருந்தனர். இலங்கை தமிழ் மாணவர்களும் அங்கிருந்து கற்றனர். அக்காலப்பகுதியில் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக அங்கு பலன் இருந்தது போன்று, பொருளாதார ரீதியில் சென்னை வாழ் வீட்டுரிமையாளர்கள் நன்மை பெற்றனர்.
நடிகை நளினியின் ஒரு வீட்டிலேதான் டெலோ ஸ்ரீசபாரத்தினம் வசித்தார் எனவும் சொல்லப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரியில் படித்த ஈழத்தமிழ் மாணவர்கள் உமாமகேஸ்வரனுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தனர். அவர் அடிக்கடி அம்மாணவர்கள் குடியிருந்த வீடுகளின் பக்கம் வந்து சென்றார். அம்மாணவர்கள் ஒரு இலக்கிய இதழும் வெளியிட்டனர்.
புலிகள் இயக்கத்தவர்கள் மதுரைப்பக்கம் முகாமிட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. இந்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி பயிற்சிகளையும் வழங்கிக்கொண்டிருந்தது. அந்த முகாம்கள் சென்னைக்கு அப்பால் இயங்கியதாகவும் அறியமுடிந்தது.
அவ்வேளையில் வீரகேசரியில் பணியிலிருந்தமையாலும் — ஆரம்பம் முதலே இந்த இயக்கங்கள் மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாதிருந்தமையாலும், நான் அங்கு நின்ற நாட்களில் இலக்கியவாதிகளை மாத்திரமே சந்தித்தேன்.
எனினும் எதிர்பாரத சூழ்நிலையில் அமிர்தலிங்கம், பகீரதன், வவுனியா சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி ஆகியோரை சந்திக்கநேர்ந்தது. அந்தச்சந்திப்புகளுக்கு காரணமாக இருந்தவர் காவலூர் ஜெகநாதன். எனினும் அவர்களுடன் நான் அரசியல் பேச விரும்பவில்லை.
அங்கு தங்கியிருந்த பிரபல ஈழத்துக்கவிஞர் ஒருவர் தமது காதல் மனைவியை கைவிட்டு விட்டு வந்து, உமா மகேஸ்வரன் தங்கியிருந்த விடுதிப்பக்கம் நடமாடினார்.
அவருடைய மனைவி மேற்கு அண்ணா நகரில் காவலூர் ஜெகநாதனை சந்தித்து, தன்னை கணவருடன் சேர்த்துவைப்பதற்கு உதவுமாறு கேட்டார்.
அந்த யுவதி, கடலில் கொல்லப்பட்ட ஒரு முக்கிய இயக்கத்தின் தலைவர் விஸ்வாநந்த தேவனின் தங்கையாவார்.
அந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்காக காவலூர் ஜெகநாதன் என்னையும் அழைத்துக்கொண்டு எம்.எல்,ஏ. விடுதிக்குச்சென்றார்.
சடுதியாக உணர்ச்சிவசப்படும் அந்தக்கவிஞர், ” அந்த (மனைவி) யுவதி இலங்கை அரசின் உளவாளி ” என்று நாக்கூசாமல் சொன்னதுதான் அதிசயமானது.
அவர் இன்று சிறந்த திரைப்பட நடிகர் என்பது வேறு விடயம். அவர் இலங்கை வந்ததும் பரபரப்பான செய்தியானது.
இவ்வாறுதான் எமது தமிழ் விடுதலை இயக்கங்கள் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்த்து, அதனையே மரபாகவும் கொண்டிருந்தன. தம்மீது விசுவாசம் இல்லாதவர்கள் மற்றவர்களிடத்திலும் விசுவாசமாக இருக்கமாட்டார்கள்.
காவலூர் ஜெகநாதன் 1985 நடுப்பகுதிவரையில் என்னுடன் தொடர்பில் இருந்தார். மாதத்தில் குறைந்தது இரண்டு தடவையாவது இலங்கை வந்து திரும்புவார். வரும்பொழுது இலக்கியப்புதினங்களுடன் வருவார்.
நான் அவருடன் அரசியல் பேசுவதற்கு விரும்பவில்லை. அவரும் பேசமாட்டார்.
தனது கதைகள் அடிக்கடி இதழ்களில் வெளியாகவேண்டும் என்ற வேகம் அவரிடம் நீடித்தது. அவருக்கு அடிக்கடி மூக்கு நுனியில் கோபம் வரும். ஆனால், விரைவில் சமாதானமாகிவிடும் மென்மையான இயல்பும் அவரிடம் இருந்தது.
அவர் குடியிருந்த மேற்கு அண்ணாநகர் வீட்டின் மொட்டை மாடியில் அந்த ஏப்ரில் மாத கோடை காலத்தில் உறங்குவோம். படுக்கையிலிருந்தவாறே இலக்கியம்தான் பேசினோம். அவருடைய ஆண் குழந்தை அவருடைய மார்பில் படுத்துறங்கிய காட்சி இன்னமும் எனது மனக்கண்ணில் வாழ்கிறது.
அந்தக்குழந்தையை தூக்கிக்கொண்டு அவருடைய மனைவி கண்ணீருடன் வந்து, நடேசனிடம் உதவி கேட்டதையும், அவரும் பத்மநாபா, பாலகுமார் என்று அலைந்திருப்பதையும் நடேசனின் பதிவில் பார்க்கும்பொழுது, இன்று இலங்கையில் காணாமல் போனவர்களை தேடித்தரும்படி ஆணைக்குழுவின் முன்னால் கண்ணீருடன் தோன்றும் உறவினர்களும், அன்று தனது கணவனைத்தேடித்தருமாறு தமிழ் இயக்கங்களிடம் முறையிட வந்த காவலூர் ஜெகநாதனின் மனைவியும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர்.
1985 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் காவலூர் ஜெகநாதன் எழுதியிருந்து புதிய குறுநாவல்தான் இனிவரும் நாட்கள். அதனை அவர் எனக்கு வீரகேசரி முகவரிக்கு தபாலில் அனுப்பியிருந்தார். கடித உறையில் காவலூர் ஜெகநாதனின் கையெழுத்து. அந்தக்குறுநாவல் பற்றி எனது இலக்கிய பலகணி பத்தியில் அறிமுகப்படுத்துமாறும் அவர் எழுதிக்கேட்டிருந்தார்.
ஆனால் , அந்தப்பதிவு எழுதமுன்னர் ஒருநாள் மதியம் வெளிநாடொன்றிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அதிர்ச்சியான தகவலைத்தெரிவித்து, அந்தத்தகவலை ஊர்ஜிதப்படுத்துமாறும் கேட்டது.
காவலூர் ஜெகநாதன் பற்றி துயரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது என்றே அந்தத்தொலைபேசி அழைப்பு தெரிவித்தது. ஆனால், யார் அவரைக்கடத்தினார்கள் என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.இயக்கங்கள் ஒருவர் மீது ஒருவராக பழியைப்போட்டு தப்பிக்கொண்டன.
அவர் பற்றி எந்தவொரு எழுத்தாளரும் எந்தக்குறிப்பும் எழுதாத சூழ்நிலையில் 1994 ஆம் ஆண்டளவில் பாரிஸ் ஈழநாடு இதழில் நான் எழுதிய நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரில் ஒரு கட்டுரை எழுதினேன்.
பாரிஸ் ஈழநாடு இதழை பிரான்ஸிலிருந்து வெளியிட்ட குகநாதன் ஜெகநாதனின் தம்பியாவார்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் எனது கட்டுரை கொழும்பு தினக்குரலிலும் வெளியானது. பின்னர் மீண்டும், எனது காலமும் கணங்களும் தொடர்பத்தியிலும் இடம்பெற்றது.
நாம் இந்த நாசமாகிப்போன போர்க்காலத்தில் தொலைத்துவிட்ட படைப்பாளிகளின் வரிசையில் காவலூர் ஜெகநாதன், செல்வி என்ற செல்வநிதி தியாகராஜா, புதுவை ரத்தினதுரை மற்றும் சில ஊடகவியலாளர்களும் இணைந்துள்ளனர்.
மேலும் சிலர் பெரிய இயக்கத்தால் அவ்வாறு காணமல்போயிருப்பர். ஆனால், உரியவேளையில் புதுவை ரத்தினதுரை தலையிட்டு அவர்களை காப்பாற்றிய செய்திகளும் இருக்கிறது.
ஆனால், புதுவை ரத்தினதுரையை எவரும் காப்பாற்ற முடியாமல் போனதற்கு அவர் நின்ற போர்க்களமும் ஒரு காரணம்தான்.
தமிழ்த்தேசியம் பற்றி ஊடகங்களில் பேசுகின்ற தமிழ் எழுத்தாளர்கள் கூட இவ்வாறு காணமல்போன தமிழ் இலக்கியப்படைப்பாளிகள் பற்றி இதுவரையில் ஒரு வரிகூட எழுதவில்லை.
——0—–
மறுமொழியொன்றை இடுங்கள்