எக்ஸைல் 1984
நடேசன்
” IS IT TRUE TELO KILLED KAVALOOR JEGANATHAN…? ”
” YES”
முகநூலில் ஒரு நண்பரிடம் சமீபத்தில் பெற்றுக்கொண்ட பதில்தான் இங்கு மேலே சொல்லப்பட்டது.
சென்னையில் தமிழர் மருத்துவ நிலையம்(MUST) நடத்திய காலத்தில் நடந்த விடயங்களை முன்னர் எழுதிக்கொண்டிருந்தேன்.
நான் எழுதும் சில விடயங்கள் சிலரை பாதிக்கும் என்ற தயக்கத்தின் காரணத்தால்தான் அந்தப்பத்தியை இடை நிறுத்தியிருந்தேன். சமீபத்தில் எனது முகநூலில் ஒரு நண்பரால் எழுதப்பட்ட விடயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. இதுவரையும் நான் யோசிக்காத ஒரு புதிரின் யன்னலைத் திறந்து காட்டியது. அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பெயரை இங்கு குறிப்பிடவில்லை.
85 ஆம் ஆண்டளவில் சென்னையில் ஒரு மாலை நேரம். ஆதவன் மறைந்து சென்னை நகரத்தின் மின்சார விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. நான் சூளைமேடு வீதியில் உள்ள தமிழர் மருத்துவ நிலையத்தில் இருந்து ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் நடத்திய தகவல் நிலையத்திற்குச் சென்றேன். அதிக தூரமில்லை. ஐந்து நிமிட நடை போதுமானது.
மாலைப் பத்திரிகையான மக்கள் குரல், அவர்களது அலுவலகத்திற்கு (எபிக் (EPIC)) வந்திருக்கும். வீடு செல்வதற்கு முன்பு இலங்கையில் நடந்த போர் செய்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பது எனது நோக்கம். எபிக் கட்டிடத்தில் ஏப்பொழுதும் என்னை வரவேற்கும் இயக்கத் தோழர்கள் இருப்பார்கள்.
அந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் அருகே சென்றபோது இருட்டில் ஒரு பெண் ஒரு குழந்தையை நெஞ்சில் அணைத்தபடி நிற்பதைக் கண்டேன். உண்மையில் அந்தக் குழந்தை பெரிய குழந்தை என்பதால் அந்தப் பெண் சுமக்கும் பாரம் முகத்தில் தெரிந்தது.
அருகில் சென்றபோது அந்தப் பெண் சிரித்தாள்.
தெரிந்த முகமாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் தெரியவில்லை.
தயங்கியபடி ‘—- நீங்கள்?’ என்றேன்.
‘ஜெகநாதனின் மனைவி. ஏங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்’
‘அதுதானே மனதில் நினைத்தாலும் உடனே ஞாபகம் வரவில்லை. மன்னிக்கவும். ஒரு நாள் பார்த்தது அல்லவா. ’ என்றேன்
ஜெகநாதன் எனப்படும் காவலூர் ஜெகநாதன், என்னுடன் யாழ். இந்துக்கல்லுரி விடுதியில் இருந்தவர். ஒரு வகுப்பு முன்பாக படித்தாலும் ஓல்ட் போடிங் என்ற அந்த விடுதியில் எனது பக்கத்துக் கட்டில் அவருடையது. ஒன்பதாவது, பத்தாவது வகுப்புகளில் படித்தபோது எங்கள் கட்டில்களுக்கிடையே கபேட் எனப்படும் சிறிய மர அலுமாரி பிரிக்கும். படுக்கும் போதும், நித்திரையிலிருந்து விழிக்கும் போதும் ஒருவரது முகத்திலே ஒருவர் விழிப்போம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இப்படி அருகருகே வாழ்ந்தோம். எனது குடும்பத்தினர் எழுவைதீவில் இருந்து யாழ்ப்பாணம் வந்ததால் பிற்காலத்தில் விடுதியை விட்டு விலகினேன். அதன் பின்னர் எமக்கிடையே எந்தத் தொடர்புமில்லை.
சில வருடங்களின் பின்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்திய பீடத்திலிருந்து நான் படித்த காலத்தில் பேராதனை சந்தியை நோக்கி எனது காதலியுடன் (தற்போதைய எனது மனைவி) போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் சிரித்தபடியே வந்து கொண்டிருந்த வேட்டியணிந்த ஜெகநாதனை சந்தித்தேன். அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். (பேராதனையில் வேட்டியுடன் திரிபவர்கள் அரிது. குறிஞ்சிக் குமரன் கோவிலுக்கு செல்பவர்களில், மிகக் குறைந்தவர்களையே வேட்டியுடன் கண்டிருக்கிறேன்).
‘என்னடாப்பா என்ன செய்கிறாய் ?’
பக்கத்தில் உள்ள விவசாயத் திணைக்களத்தை நோக்கி கையை காட்டிவிட்டு
‘இங்கு வேலை செய்கிறேன்” என்றான்
அதன் பின்பு எங்களுக்கிடையே தொடர்பு இல்லை. ஆனாலும் இந்த ஜெகநாதனே காவலூர் ஜெகநாதன் என்ற பெயரில் கதை எழுதுவது என்பதை பல வருடங்களின் பின்பு சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். இலங்கையில் இருக்கும்வரை எந்த இலக்கியவாதியையோ எழுத்தாளரையோ எனக்குத் தெரியாது.
85 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கோடம்பாக்கத்தில் லிபேர்ட்டி தியேட்டர் அருகே நான் குடியிருந்த காலத்தில் ஒரு நாள் நுங்கம்பாக்கம் சாலையை கடந்து சென்றபோது எனது கையை பிடித்து இழுத்தவரைத் திரும்பிப் பார்த்தால் அது நமது ஜெகநாதன். அதே வேட்டி, அதே சிரிப்பு.
வீதியில் நின்று கதைத்தபோது ‘வா வீட்டுக்கு. அருகில்தான்’ என பலவந்தமாக இழுத்துக்கொண்டு ஓட்டோவில் எறினான். பல சந்துகள் கடந்து அவனது வீட்டிற்கு சென்றோம். சிறிய வீடு. மனைவியையும் குழந்தையையும் அறிமுகப்படுத்தியதுடன் அன்று மதிய உணவும் தந்தான்.
நான் அவனது வீட்டில் சாப்பிட்ட சில காலத்தின் பின்பே அவனது மனைவியை ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் எபிக் அலுவலக வாசலில் கண்டேன்.
‘ எதற்காக இந்த இடத்தில் நிற்கிறீர்கள்?’
‘அவரை இரண்டு நாட்களாக காணவில்லை. அதுதான் இவர்களைக் கேட்க வந்தேன்.’
‘யாரைப் பார்க்கவேண்டும்?
‘தலைவர் புத்மநாபாவை’
‘சரி என்னுடன் வாங்கோ’
மேல் மாடிக்கு கூட்டிச் சென்றேன். அங்கு இருந்தவர்களிடம் இரஞ்சன் தோழரை பார்க்க முடியுமா? என வினவினேன் (பத்மநாபாவை இரஞ்சன் என பலர் அழைப்பார்கள்)
‘அறைக்குள் இருக்கிறார்’
‘ நான் சென்று கதவை தட்டியபோது ‘நடேசன் தோழர்’ என விளித்தார்.
வேறு சிலரும் இருந்தார்கள் யார் யார் என்பது மறந்துவிட்டது.
‘உங்களிடம் ஒரு விருந்தாளியை கூட்டி வந்தேன்”
‘யார் அது ? ”
‘காவலூர் ஜெகநாதனின் மனைவி. குழந்தையுடன் வந்து வாசலில் நிற்கிறார்.’
தலையில் கை வைத்தபடி ‘இதைப்பற்றி எங்களுக்குத் தெரியாது.’
‘உங்களுக்குத் தெரியாதென்றால் யாரைக் கேட்கவேண்டும் என சொல்லுங்கள். ஜெகநாதன் எனஅழுத்திது பாடசாலைத் தோழன்.’
சிறிது நேரத்தின் பின்பு, பாலகுமாரிடம் கேளுங்கள். நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.’
நான் வெளியே வந்து ஜெகநாதனின் மனைவியிடம் சொன்னேன். ‘இவர்கள் தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் அத்துடன் ஈரோஸ் பாலகுமாரை கேட்கும்படி கூறினார்கள். எனக்கு ஒரு நம்பிக்கை இவர்களுக்கு இதில் சம்பந்தமிராது. அப்படி இருந்தால் என்னை இதில் தலையிடவேண்டாம் என சொல்லியிருப்பார்கள்’
ஈரோஸ் பாலகுமாரின் அலுவலகத்திற்கு ஓட்டோவில் கூட்டிச் சென்றேன்.
அவர்களது இடம் அதிக தூரமில்லை. வடபழனி என நினைக்கிறேன்.
நான் அவர்களது அலுவலகத்திற்குச் சென்றபோது பாலகுமார்; மேல்மாடியில் நின்று என்னைப் பார்த்தார்.
‘என்ன இந்தப் பக்கம்? என மாடியில் இருந்தபடியே கேட்டபோது,
‘காவலூர் ஜெகநாதனது மனைவி, கணவனைத்தேடி ஈ. பி. . எல்.ஆர் எஃப்; அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பத்மநாபா உங்களை கேட்கும்படி அனுப்பினார்’
‘எங்களுக்கத் தெரியாது’
‘இப்படியே இருவரும் சொன்னால் என்ன செய்வது?
‘உண்மையில் எங்களுக்குத் தெரியாது’ என பதிலளித்துவிட்டு உள்ளே சென்றார்
அந்தப் பதில் எனக்கு ஈரோஸ் பாலகுமார் மீது சந்தேகத்தை வளர்த்தது. அத்துடன் பாலகுமாரின் மீது ஆத்திரத்தையும் உருவாக்கியது.
ஜெகநாதனது மனைவி அழுதபடி இருந்தபோது, எனக்கு வேறு வழி தெரியவில்லை அவரை மீண்டும் அவரது வீட்டில் விட்டு விட்டு நான் வீடு திரும்பினேன்.
எல்லா இயக்கங்களும் அங்கம் வகித்த தமிழர் மருத்துவ நிலையத்தின் காரியதரிசியாக நான் இருந்ததால் பலரோடு தொடர்பு இருந்தது. அதே நேரத்தில் இவர்களது ஆயுதப்போராட்டத்தில் நான் நம்பிக்கை கொண்டிருந்த காலம். ஜெகநாதனது விடயத்தை வேறு எப்படி மேலே எடுப்பது என புரியாததால் அதற்குப் பின்பு ஜெகநாதனது மனைவியைத் தொடர்பு கொள்ளவில்லை. பின்பு ஜெகநாதன் கொலை செய்யப்பட்டதாக அறிந்தேன். மிகவும் மனவருத்தமடைந்தேன்.
கொலைக்கான காரணங்களை பலர் பலவிதமாக கூறினார்கள். இலங்கை அரசாங்கத்தின் ஏஜண்ட். தனிப்பட்ட விவகாரம். அதைவிட பணப்பிரச்சினை என பல ஊகங்களுக்கு மத்தியில் அந்தக்கொலை மர்மமாக இருந்தது. இதே வேளையில் அவுஸ்திரேலியாவுக்கு நான் புறப்படுவதற்கு முன்பு ஈரோஸ் நான்கு கொலைகளையே அதுவும் மதுரையில் செய்தார்கள் என தமிழ் நாட்டு இரகசிய பொலிஸார் கூறியிருந்தார்கள்.
ரெலோ, விடுதலைப்புலிகள், புளட் என்பன ஏராளமான கொலைகளை தமிழ்நாட்டு மண்ணில் செய்திருந்தனர்.
இந்திய, தமிழ்நாட்டு பொலிசார் இலங்கையர் இயக்கங்களால் கொலை செய்யப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத போதும், எங்கெங்கு எவ்வளவு பேர் கொலை செய்யப்பட்டார்கள் என்ற புள்ளி விபரங்களை சரியாக வைத்திருந்தனர். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடல் பிரதேசத்தில் நடந்த கொலைகள் சில தப்பியிருக்கலாம.
என் மனதில் காவலூர் ஜெகநாதன் விடயம் பலகாலமாக புதிராக இருந்தது. இதற்கு அப்பால் ஜெகநாதனது தம்பியான டான் தொலைக்காட்சி குகநாதன் 2009 இல் இருந்து எனக்கு நெருங்கிய நண்பராகியதும் அவருக்கு இதுவிடயத்தில் ஏதாவது துப்பு கிடைத்ததா என பல முறை விசாரித்திருக்கின்றேன்.
இப்படி புதிராக இருந்த விடயத்தை, அக்காலத்தில் ரெலோவில் இருந்த ஒருவர் முகநூலில் பதிவுசெய்த குறிப்பு என்னைத் திடுக்கிடவைத்தது. அவரது கூற்றின்படி சின்மையா நகரில் வைத்து இலங்கை ஏஜென்ட் என்ற சந்தேகத்தில் காவலூர் ஜெகநாதன் ரெலோவால் கொலை செய்யப்பட்டார் எனச்சொல்லப்பட்டிருந்தது.
அக்காலத்தில் ரெலோவுக்கு பொறுப்பாக இருந்த சிறிசபாரட்ணம் இப்போது இல்லாதபோதிலும் அந்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
தற்போது முள்ளிவாய்கால் விடயங்களைப் பேசும் இவர்கள் தமிழர்களில் முக்கியமானவர்களையும் அதேவேளையில் இயக்கத்துள் உட்கொலைகளையும் ஏன் செய்தார்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டியுள்ளது.இக்கொலைகள் கால் நூற்றறாண்டுக்கு முன்னால் நடந்தவை என்றாலும் தமிழர்களை தமிழர்களே கொலை செய்த வரலாறு எமக்குண்டு.
போராட்ட இயக்கங்கள் என்று போதையில் இந்த இயக்கங்கள் அத்துமீறியதுதான் அந்த கறைபடிந்த வரலாறு. 90 ஆம் வருடம் வரையும் விடுதலைப்புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் சிறிதும், பெரிதுமாக பல கொலைகளை செய்தன.
தற்போதைய அரசியலில் உள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தின் கொலைகளை கண்டிக்கிறார்கள். சிறையில் வைத்திருக்கும் தமிழ் கைதிகளைப்பற்றி பேசுகிறார்கள். அது பற்றி அறிக்கை விடுகிறார்கள். ஆனால் பழைய இயக்கங்களை மீண்டும் காவியபடியே வலம் வருகிறார்கள். இயங்கங்களின் செயல்களுக்கு விளக்கமளிப்பதுடன் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் யுவதிகளின் தாய் தந்தை சகோதரங்களுக்கு என்ன நடந்தது என்ற விளக்கத்தையாவது வெளிப்படுத்தவேண்டிய கடப்பபாடு உள்ளது.
காணமல் போன பொதுமக்களை தேடித்தருமாறு ஆணைக்குழுவின் முன்னால் உறவினர்கள் நிற்கிறார்கள். அதுபோன்று ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்களினால் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றி அந்த இயக்கங்களின் இன்றைய தலைவர்கள் என்ன சொல்வார்கள்?
நான் விடுதலைப்புலிகளை விட்டுவிடுகிறேன்.
விசர்நாய் வைரஸ் தொற்றிய நாய்போன்று போன்று தமக்கு உடன்பாடற்றவர்கள் என கருதியவர்களையெல்லாம் இன, மத, பாகுபாடில்லாமல் கொலை செய்தது. அதே வைரசின் தாக்கத்தால் அது பதினைந்து நாட்களில் இறந்துவிடும்.
தற்போதைய இலங்கை அரசியலில் உள்ள தமிழரசுக்கட்சி வழிவந்தவர்களைத்தவிர அவ்வாறு வராத தமிழ் விடுதலை இயக்கங்களின் தலைவர்கள் பொறுப்புக் கூறவேண்டியவர்கள். இந்தத் தமிழ் இயக்கங்கள் இலங்கையிலும் பலரை கொன்றிருக்கிறன. சில தலைவர்களிடத்தில் இரத்தத்தின் கறை படியாத போதிலும் அவர்கள் அணிந்துள்ள வேட்டிகள் சட்டைகளில் எத்தனையோ அப்பாவிகளின் இரத்தக்கறையுள்ளது.
இலங்கை அரசின் உளவாளி, சமூக விரோதிகள், துரோகிகள் முதலான குற்றச்சாட்டுக்களை சுமத்தியே பலர் இந்த இயக்கங்களினால் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு இந்த இயக்கங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையே பின்னாளில் விடுதலைப்புலிகள் இவர்கள் மீது வைத்தார்கள்.
இதில் இருந்து தெரிவது என்ன ?
ஒவ்வொருவரும் பலமாக இருக்கும் காலத்தில் மற்றவர்கள் மீது போடும் சட்டைகளைத்தான் தற்பொழுது விடுதலைப்புலி ஆதரவாளர்கள் அவர்கள் ஆதரித்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் மீது போடுகிறார்கள்
தமிழினியில் கூர்வாளின் நிழலைப் படித்தபோது ஒரு விடயம் தெளிவானது. மாத்தையாவை புலிகள் ஏன் கொலை செய்தனர் என்பது தமிழினிக்கு அப்பொழுது தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல முக்கிய அங்கத்தினரான கருணா என்ற முரளிதரனுக்கோ கே. பி. என்ற பத்மநாதனுக்கோ தெரியாது.
இதற்காக யாரையாவது பிடித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்பது எனது நோக்கமல்ல.
அந்தக்கொலைகளை யார் செய்தனர்?
ஏன் செய்தார்கள்? என்பதை எமது சமூகமும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் அறிந்து கொள்வது அவசியம்.
குறைந்த பட்சமாக செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும். அத்துடன் பிராயச்சித்தமாக பழைய சட்டைகளான இயக்கங்களையும் விட்டு வெளியே வருவதன் மூலமே மக்களுக்கு நம்பிக்கை தர முடியும். இவர்களுக்கும் பாவ விமோசனம் கிடைக்கும்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது பெயரை மாற்றிய விடயம் வரவேற்கத்தக்கது. மற்றவர்களுக்கு இது முன்மாதிரியாக அமையவேண்டும்.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்