உள்ளக சுயநிர்ணய உரிமை.

ANTON
என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா

விடுமுறையில் குடும்பத்துடன் கொழும்பு சென்றபோது கொழும்பு மாநகர சபை கட்டிடத்தைக் காட்டி ‘ ‘இதுதான் சந்திரிகாவுக்கு குண்டு வைத்த இடம் என கூறி வாடகை கார் சாரதி நிறுத்தினார். கொழும்பில் தங்கும் சில நாட்களில் நான் பார்க்க வேண்டிய இடம் இது என அவரே தீர்மானித்து விட்டதை எண்ணிக்கொண்டு கையில் இருந்த கமராவால் அந்தக் கட்டிடத்தை படம் பிடித்துக் கொண்டேன். பின்பு மாநகரசபை கட்டிடத்துக்கு எதிரே உள்ள விகார மாதேவி பூங்காவுக்குள் சென்றோம். பூங்கா மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவின் புல்தரையில் நடப்பவர்களை எச்சரித்து தடுப்பதற்கு பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். புத்தார் சிலை கண்ணைக் கவர்ந்தது. சிறுவர் பூங்கா எனற ஒருபகுதியில் பலர் தமது குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் கண்டியில் இருந்து கொழும்புக்குச் சென்றபோது நண்பன் ஒருவனுடன் விகாரமகாதேவி பூங்காவிற்குச் சென்றிருந்தேன். அப்போது மரங்கள் எவ்வித பராமரிப்புமின்றி புற்கள் வளர்ந்து ஒரு புதர்க்காடாக காட்சியளித்தது,

புதார்களுக்கு இடைவெளியில் ஆண்களும் பெண்களும் சோடி சோடியாக நின்றனர்.

‘ ‘இதுதான் காதலர் பகுதியா ‘ ‘ என நண்பனிடம் கேட்டேன்.

‘ ‘அவசரமான ஆண்களுடன் சில்லறைத் தேவைக்காக இந்தப் பெண்கள் நடத்தும் கைத்தொழில் ‘ ‘ என நமட்டுச் சிரிப்புடன் கூறினான்.

விகாரமாதேவி பூங்காவைப் பற்றி எனது கணிப்பு மாறுவதற்குப் பலகாலம் சென்றது. இளமைப் பருவத்து நினைவுகள். கல்லிற் பதிந்த எழுத்துக்கள் போல் என்பதால்தான் ‘ ‘இளமையில் கல் ‘ ‘ என்றார்களோ நம்மூதாதையர்.

பூங்காவுக்குள் உள்ள நடைபாதையில் நடந்து கொண்டிருக்கும் போது எங்களை நோக்கிக் குரைத்தபடி நாயொன்று கவனத்தை ஈர்த்தது. நடைபாதை ஓரத்தில் உள்ள சிறிய கட்டிடத்தின் அருகாமையில் எட்டு நாய்க்குட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று விளையாடின. ஆண்நாய் அருகில் உள்ள மரத்தின் அடியில் சிறுநீரைக் கழித்துவிட்டு அந்தப் பகுதியைத் தனது பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியது. இறுமாப்பில் மீண்டும் மீண்டும் அதே இடத்தை மணந்து பார்த்தது, பெண்நாய், எம்மை தங்கள் இடத்தை ஆக்கிரமிக்க வந்தவர்கள் என நினைத்துப் பலமாகக் குலைத்துக் கொண்டு எம்மை நோக்கி வந்தது. நாம் சற்றே விலகிச் சென்றவுடன் தனது குலைப்பை நிறுத்தியது.

வீடியோ படம் எடுப்பதற்காக எனது மகள் பாரிய மரத்தின் கொம்புகளில் ஏற முயன்றாள். மரத்தின் அடியில் இருந்து ஒரு கரட்டி ஓணான் ஆக்ரோசமாகப் பார்த்துவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டு மரத்தின் மேற்பகுதிக்குச் சென்றது. கரட்டி ஓணான் நிட்சயமாகத் தனது மொழியில் எம்மைத் திட்டியிருக்கும் என எண்ணினேன். மேலும் மரத்தைவிட்டு இறங்கியபோது பல சிற்றெறும்புகள் எனது மகளின் காலில் ஏறியிருந்தன. சிறிது அருகில் சென்று பார்த்தபோது ஒரு சிற்றெறும்பு வரிசை சிதைக்கப்பட்டு இருந்தது.

மரத்தின் உச்சிக் கொப்புகளில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் அமைதியாக அந்த மாலைப்பொழுதில் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்களது வாழ்விடம் உயரத்தில் இருந்ததால் அமைதியாக உறங்கி முடிந்தது.

மானிடர்கள் இந்தப் பூலோகத்துக்கு வருவதற்கு முன்பே மற்றய உயிரினங்கள் தங்களுக்கிடையே பரஸ்பர நல்லுணர்வோடு வாழ்விடங்களை ஏற்படுத்தி வாழ்ந்து வருகின்றன. உணவுக்காக தற்காலிக மோதல்கள் ஏற்பட்டபோதும் அவை நீடிப்பதில்லை. ஒரு இனத்தை வேரோடு அறுக்க மற்ற இனம் சத்தியப் பிரமாணம் செய்வதில்லை.

மனிதர்களுக்கு இந்தப் பூலோகம் தற்காலிகத் தங்குமிடம் என்ற உணர்வோடு, மற்றய உயிரினங்கள் இங்கு ஆதிக்குடிகள், எமக்கு முன்னோடிகள் என்ற மதிப்புடன் கூடிய பரஸ்பர நல்லுணர்வுகளுடன் வாழவேண்டிய காலம் இதுவாகும் என நான் புரிந்துகொள்வதற்கு, விகாரமகாதேவி பூங்கா வெளிக்கள பரிசோதனை கூடமாக எனக்குக் காட்சியளித்தது.

இதுவும் ஒருவிதத்தில் ஆன்மீகத்தேடலோ என நினைத்தபடி மீண்டும் புன்னகையுடன் சாந்தமாக அமர்ந்திருக்கும் புத்தரின் உருவத்தைப் பார்த்தபடி காரில் ஏறினேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: