அடுத்த நாள் யங்கூன் வீதி வழியாக சென்றபோது வழியில் சந்திந்த பெண்கள் யாவரும் வயது வித்தியசமின்றி முகத்தில் சந்தனம்போல் எதனையோ பூசி கன்னத்தை அலங்கரித்திருந்தார்கள். அதைப்பற்றிக் கேட்டபோது அது அலங்காரத்திற்கு மட்டுமல்ல வெய்யிலின் தாக்கத்தை தடுக்கும் சன் கிறீமாகவும் பாவிக்கிறார்கள் என்றார் எமது வழிகாட்டி
தனகா எனப்படும் இந்த மரம் சந்தனமரத்திற்கு ஒப்பானது. ஆனால் சிறிது விலை குறைந்தது. சந்தைகளில் மரத்துண்டுகளாகவும் கிறீமாக குப்பிகளிலும் அடைத்து விற்கப்படுகிறது. பெண்களிடம் அதிலும் மத்திய மற்றும் முதிய பெண்களிடம் அதிகமாக பாக்கு வெற்றிலை போடும் பழக்கத்தைப் பார்த்தேன். மேற்கத்தைய அழகு சாதனங்கள் இன்னும் ஊடுருவாத நாட்டிற்கு போயிருந்தேன் என்பது எனக்கு சந்தோசமாகவும் இருந்தது. எந்தவொரு தென் கிழக்காசிய நாடுகளிலும் இந்த நிலமையில்லை.
ஆங்கிலேய காலனித்துவத்திலும் பின்னர் சுதந்திரமடைந்து பல வருடங்களாக தலைநகராக இருந்த யங்கூன் இப்பொழுது வர்த்தகத் தலைநகரமாக மாத்திரம் பாவிக்கப்படுவதால் ஆங்கிலேயர் காலத்து பல கட்டிடங்களில் அரசாங்க திணைக்களங்கள் இயங்கிக் கொண்டிருந்தாலும் பராமரிப்பற்று பரிதாபமாக தெரிந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் ஸ்கொட்லாந்தினர் ஆங்கிலேயருக்குப் போட்டியாக பார்மாவில் வர்த்தகம் செய்தார்கள். இருதரப்பினரதும் கட்டிடங்களும் எதிர் எதிராக இருந்தன. இந்தக் கட்டிடங்களை இனிவரும் அரசுகள் மேற்கத்தைய நாடுகளில் இருப்பதுபோல் புராதன கட்டிடங்களாக பாதுகாக்கவேண்டும் என நினைக்க வைத்தது. காலனித்துவம் கசப்பாக வெறுக்கப்பட்டாலும் நாட்டின் வரலாறு அழிக்கப்படக்கூடாது.
பாதையோரத்துக் கடைகள் அதிக பொருட்களற்று இருந்தன. நடைபாதைக் கடைகளில் இருந்த இலத்திரன் பொருட்கள் சீனாவில் இருந்து வந்தவை. அதிக அளவில் புத்தகங்களோ அல்லது புத்தகக் கடைகளோ அங்கு இல்லை.
யங்கூனின் மத்திய பகுதியில் உள்ள பூங்காவில் சுதந்திர சதுக்கம் இருந்தது. அதன் மத்தியில் உயரமான தூண் அமைந்திருந்த ஸ்தம்பத்தினருகே நின்றபோது ஒரு இந்திய இளம்பெண் வந்து பர்மா சம்பந்தமான வர்ணப் புகைப்படங்களை எங்களுக்கு விற்க முனைந்தாள். அந்தப் பெண்ணுடன் பேசிய போது அவள் இந்தியப் தமிழ்ப் பெண் என்றாள்.
நடிகர் விஜய்யின் இரசிகை என்றும் கடைசியாக வேட்டைக்காரன் பார்த்ததாக சொல்லியதுடன் தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்றும் சொன்ன அவள் ஆங்கிலம் நன்றாகப் பேசினாள். அவள் எங்களுக்கு பர்மாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை போட்டோக்களாக விற்றாள். எங்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டாள்.
இந்தியப் படங்கள் தியேட்டர்களில் ஓடுவதைப் பார்க்க முடிந்தது. மாதுரி என்ற பெயருடைய அந்தத் தமிழ்ப் பெண் பலவருடங்களாக சுவனியர்களை (Souvenir) உல்லாசப்பிராணிகளுக்கு விற்பதாக எமது வழிகாட்டி சொன்னான். தற்போது பர்மாவில் வாழும் இந்தியர்கள் பர்மீய அடையாளத்துடன் வாழ்வதாகத் தெரிகிறது. இந்திய மொழிகள் எதுவும் அங்கு கல்வித் திட்டத்தில் இல்லை. தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு இரவு மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழ் கற்பிப்பதாக ஒருவர் சொன்னார்.
எங்களது ஹோட்டலின் மிக அருகில் இஸ்லாமிய பள்ளிவாசல் அதற்கு எதிரே பகோடா இருந்தது. சிறிது தூரத்தில் கிருஸ்ணர் கோவிலும் மேலும் சற்றுத்தூரத்தில் முத்துமாரியம்மன் மற்றும் சுப்பிரமணியர் கோவில்கள் இருந்தன. இந்தியா இலங்கையில் தென்படும் சமூக சூழ்நிலையை காணமுடிந்தது. என்னுடன் வந்த மனைவியும் நண்பர்களும் கோவில் உள்ளே பிரார்த்தனைக்காக சென்றபோது நான் வெளியில் நின்றவர்களிடம் இந்தச் சிலைகள் உள்ளுரில் செய்ததா அல்லது இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டதா எனக்கேட்டபோது உள்ளுரில் கலைஞர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். நாங்கள் நடந்து பார்த்து சில கிலோமீட்டர் பகுதி யங்கூன் நகரத்தின் முக்கியபகுதி . அங்கு முக்கியமான பல கட்டிடங்கள் கடைகள் என அமைந்திருந்த இடத்தில் நாலு இந்துக்கோயில்களை காணமுடிந்தது. கே எவ் சி உணவகம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அடுத்த கட்டிடமாக இருந்தது. அக்காலத்தில் இந்தியர்கள் யங்கூனில் நிறைந்து இருந்ததை ஆதாரமாக காட்டியது.
கோவிலின் அறிவிப்புப் பலகையில் இந்தியத் திருத்தலங்களின் யாத்திரை பற்றிய விடயம் தமிழில் எழுதப்பட்டிருந்தது. கோவில் பூசைபற்றி தமிழில் எழுதியிருந்தார்கள். கோவில்கள் உள்ளும் புறமும் மிகவும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தன.
கடைத்தெருக்களில் பார்த்தபோது பல இந்தியர்கள் இரும்புக்கடைகளை வைத்திருந்தார்கள். எமது வழிகாட்டி ‘இரும்பு மற்றும் கனரக வியாரங்களை இந்தியர்கள் செய்வதாகவும் அவர்களே சிறந்த மெகானிக்குகள்’ என்றான்.நாங்கள் தேடிக்கதைத்த பல இந்தியர்கள் தமிழர்களாகவும் முஸ்லீமகள் வங்களிகளாகவும் இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பதாக கூறினார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் பலவற்றில் அவர்கள் இருப்பதாக தெரிந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்