அன்புள்ள ரேணுகா துரைசிங்கம் அவர்களுக்கு
( SBS ஊடகவியலாளர் ) வணக்கம்.
தாங்கள் அண்மையில் தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் தொடர்பாக எழுந்துள்ள வாதப் பிரதிவாதங்களை வானொலி நேயர்களும் அறிந்துகொள்வதற்காக ஒலிபரப்பிய நேர்காணல்களின் தொகுப்பினை கேட்டேன். இந்நூல் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முதல் தடவையாக நடத்திய அனைத்துலகப்பெண்கள் தினவிழாவில் தமிழினி நினைவரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, இதுபற்றி அவுஸ்திரேலியா நேயர்களுக்கும் மின்னியல் ஊடகம் ஊடாக வெளிநாட்டு நேயர்களுக்கும் எடுத்துச்சென்றதையிட்டு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் விழாவுக்கு முன்னர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்களின் நேர்காணலை ஒலிபரப்பியமைக்கும் தாங்களும் விழாவில் கலந்து சிறப்பித்தமைக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன்.
எமது சங்கம் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்வதற்காக தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எழுத்து, மற்றும் கலை இலக்கியத்துறை ஈடுபாடுள்ளவர்களை சங்கமிக்கச்செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட எழுத்தாளர் விழாக்கள் – இலக்கிய சந்திப்புகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் விமர்சன அரங்குகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் புகலிட நாடுகளில் வதிபவர்கள் பலருடைய நூல்களும் இந்த விமர்சன அரங்குகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பெண்கள் தின விழாவில் அண்மையில் மறைந்த இரண்டு பெண்ஆளுமைகளை நினவுகூரும் முகமாகத்தான் அந்த நினைவரங்கு நடத்தப்பட்டது. அவ்வேளையில் தமிழினியின் நூலின் வரவை அறிந்து அதனையும் அவர் நினைவாக பொதுவெளியில் எடுத்துக்கொண்டோம்.
இதுவரையில் எமது சங்கத்தின் விமர்சன அரங்குகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட நூல்களின் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு அரசியல் கருத்தோட்டம், இலக்கியக்கோட்பாடுகள் கொண்டவர்கள். அத்துடன், இச்சங்கத்திலும் அத்தகையோரே அங்கம் வகிக்கின்றனர்.
முன்னாள் – இந்நாள் தலைவர்களும் அப்படித்தான். இச்சங்கத்தை ஸ்தாபித்தவர்களில் நானும் ஒருவன் என்பதனால் இதன் வரலாறு நன்கு தெரியும்.
தங்கள் நேர்காணல் தொகுப்பில் பால சுதர்சன் என்பவரின் சங்கம் பற்றிய கருத்துக்கு மேற்படி எனது செய்தியை சமர்ப்பிக்கின்றேன்.
அவர் அவுஸ்திரேலியாவில் இருக்கும் பட்சத்தில் எமது எதிர்கால விமர்சன அரங்குகளுக்கு அவரையும் அழைக்கின்றேன். அந்த நேர்காணலில் இடம்பெற்ற மற்றவர்களில் சயந்தனின் எழுத்துக்களை மாத்திரமே படித்துள்ளேன்.
தங்களின் ஒரு கேள்வி குறித்தும் எனது பதில்:
இலங்கையில் – திருவள்ளுவர், பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாமக்கல் சின்னப்பபாரதி, மல்லிகைஜீவா, செ. கணேசலிங்கன், செங்கைஆழியான், தெணியான், முருகபூபதி, திக்குவல்லை கமால், நடேசன், தி.ஞானசேகரன், டென்மார்க் ஜீவகுமரான் உட்பட பலருடைய படைப்புகள் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன.
நேற்றைய (20-03-2016) தினம் தங்கள் பார்வைக்கு நான் அனுப்பியிருந்த எனது கட்டுரையின் ஆங்கில வடிவத்தில் மேலதிக விபரம் இருக்கிறது.
எனவே, தமிழினியின் நூல் சிங்களத்தில் வெளிவரவிருப்பதும் ஆச்சரியமான செய்தியல்ல.
அந்த நூலை நானும் படித்தவுடன் சில நண்பர்களுடன் உரையாடியபொழுது , அது உடனடியாக ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டியது என்று வலியுறுத்தினேன்.
எனது தரப்பு காரணம்: தமிழினி இருந்த வெலிக்கடை சிறை. அதன் உள்ளே நடக்கும் போதைவஸ்து பாவனை. இன்று சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் ஒரு தமிழர். அவருக்கு தமிழ் எழுத பேசத்தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. அவரிடம் தமிழில் அந்த நூலை வழங்கினால், தமது சிங்கள அதிகாரிகளுக்கு அந்த நேரடி சாட்சியத்தை எவ்வாறு சொல்வார் என்பது தெரியாது. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழினியின் நூல் வெளியானால் இலங்கை சிறைச்சாலைகளை குறைந்த பட்சமாவது மறுசீரமைக்கமுடியும்.
திகார் சிறையில் பணியாற்றிய கிரண்பேடியின் தன்வரலாற்று நூலை நீங்களும் படித்தால் எனது கோரிக்கையின் நோக்கம் புலனாகும்.
அறியாமையில் கருத்துச்சொல்வது குற்றமல்ல. மனிதவாழ்வே அறியாதை அறிந்துகொள்வதுதான். அறிந்ததை பகிரும்பொழுது உண்மைகள் வெளியாகும். உண்மைக்கு சுடும் இயல்பும் உண்டு. பொய்களையும் உண்மைகளையும் கடந்து செல்வதுதான் வாழ்க்கை. முடிவுகளுக்கு முன்னர் எத்தனையோ நடக்கும். ஆனால், முடிவு நல்லதாக அமைய வேண்டும். தமிழினி அதனைத்தான் தனது அந்திம காலத்தில் செய்துள்ளார்.
எப்படியோ நீங்கள் தங்கள் வானொலி ஊடாக நல்லதொரு பணியை முன்னெடுத்திருந்தீர்கள். இதுதான் இன்றைய ஊடாக தர்மம். தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தங்கள் நேர்காணல் தொகுப்பு என்னை இரண்டு விரிவான கட்டுரைகளை எழுதுவதற்கு தூண்டியுள்ளது. விரைவில் எழுதுவேன்.
விரைவில் எமது சங்கம் (ATLAS) கன்பராவிலும் அதனை அடுத்து குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டிலும் நடத்தவுள்ள கலை, இலக்கிய எழுத்தாளர் விழா நிகழ்வுகளுக்கு தங்களையும் அழைக்கின்றேன். அடுத்த வாரம் இதுபற்றிய விரிவான செய்தி தரப்படும்.
மிக்க நன்றி.
அன்புடன்
முருகபூபதி
மறுமொழியொன்றை இடுங்கள்