பர்மா பல இனங்கள், பல மொழிகள் மற்றும் ஆதிவாசிகள் என இந்தியாபோன்ற ஜனப்பரம்பலைக் கொண்ட நாடு. இதனால் பர்மாவில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப்போரை பல வருடங்களாகச் செய்தனர். தற்பொழுது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளது. எல்லா சிறுபான்மையினரும் ஒரே அமைப்பின் கீழ் இனிவரும் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கின்றனர். புதிய அரசாங்கம் எப்படி இதை கையாளும் என்பது காத்திருந்து பார்க்கவேண்டிய விடயம்
இராணுவ ஆட்சியினர் பர்மாவின் சுதந்திரத்திற்கு முன்னோடியாகவும் திகழ்ந்து பின்னர் கொலை செய்யப்பட்ட பகழ்பெற்ற இராணுவத் தலைவர் அங் சானின் மகளாகிய அங் சன் சூகியை கைது செய்து அவரை வீட்டுகாவலில் வைப்பதுமாக பல வருடங்கள் சென்றன.
2010 இல் இராணுவ அரசாங்கம் புதிய கொள்கைகளை உருவாக்கி உல்லாசப்பிராயாணிகளை வரவேற்கிறது. அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்தது. இராணுவத்துக்கு எதிரான அங்சன் சூகியின் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் மேற்கு நாடுகளின் அழுத்தம் என்பனவும் இந்த மாற்றத்திற்கு காரணம். கடந்த மாதம் நடந்த தேர்தலில் அங்சன் சூகியின் கட்சி எண்பது வீதத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியேறுகிறது.
யங்கூனின் சர்வதேச விமான நிலையம் மிகவும் சிறியது. அதுவும் மற்றைய தென்கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர் பாங்கொக்கோடு ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் புரியும்.
இலகுவான சுங்கச் சோதனைகள் வரவேற்கும் புன்னகைகளின் பின்பாக பர்மா பணமாகிய கயற் (Kyat) பெறுவதற்காக சென்றபோது கை நிறைந்த பணம் கிடைத்தது. ஒரு அமெரிக்கன் டொலர் கிட்டத்தட்ட ஆயிரம் பர்மா கயற்கள்.
வெளியே சென்றபோது புதிதாக விமானநிலையம் நிர்மாணிப்பது தெரிந்தது. மற்றைய தென்கிழக்காசிய நாடுகளோடு ஒப்பிடும்போது கால்நூற்றாண்டு அல்லது அதற்கு மேலாக பர்மா பின்தங்கித்தான்விட்டது.
2010 ஆண்டிற்குப்பின்பு வாகனங்கள் அதிக அளவு இறக்குமதியாகி வந்ததால் இப்பொழுது போக்குவரத்து நெருக்கடி அதிகம் ‘ – என்று எமது வழிகாட்டி சொன்னார். ஆனாலும் பாங்கொக்கோடு ஒப்பிடும்போது எமக்கு அந்த நெருக்கடி பெரிதாகத் தெரியவில்லை. நாம் தங்கியிருந்த ஹோட்டல் சிங்கப்பூர் குழுமத்தைச் சேர்ந்தது. இராணுவ ஆட்சியாளர்கள் மீது தடையிருந்த காலத்தில் சிங்கப்பூரே தடையை உடைக்கும் பிரதான நுளைவாயிருந்தது. இராணுவத்தில் முக்கியமானவர்கள் சிங்கப்பூர் வங்கிகளில் பணம் வைத்திருந்ததாக அவுஸ்திரேலிய பத்திரிகை எழுதியது.
தற்போது பர்மாவில் எங்கும் இராணுவமோ பொலிசோ தென்படவில்லை. எங்கும் கட்டிடங்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள். கட்டப்படும் உயர்ந்த கட்டிடங்களை இரும்பு சிலாகை கொண்டு மறைத்திருந்தார்கள்.
பாதையோரங்களில் லொறிகளும் உயரமான பாரம் தூக்கிகளும் நின்றன. சீமெந்தும் தண்ணீரும் கலந்து பாதையில் ஓடியது. சில பாதைகள் அடைக்கப் பட்டிருந்தன. கட்டிடத் தொழிலாளர்களை எங்கும் பார்க்க முடிந்தது. யங்கூன் தொலைத்த காலங்களை அவசரமாக தேடுவதுபோல் தெரிந்தது.
பர்மாவின் மத்தியில் புதிதாகக் கட்ட நய்பிடோ (Naypyidaw)அரசதலைநகரமாக 2005 ஆக்கப்பட்டதால் ரங்கூன்
தற்பொழுது யங்கூன் என்ற பெயரில் வர்த்தக தலைநகரமாக இயங்குகிறது.
ஏழு மாநிலங்களும் ஏழு பிரதேசங்களாக ஒரு வித ஐக்கிய தேசமாக பர்மாவைப்பார்க்க முடிகிறது. 68 வீதமான பர்மியர்கள் மத்தியில் இரண்டு வீதமானவர்கள் இந்தியர்கள். அதாவது ஒரு மில்லியன் இந்தியர்கள். ஆனால் பல வருடங்களாக இந்தியர்களை கணக்கெடுப்பதை அரசாங்கம் தவிர்த்துவிட்டது. அதைவிட பல இந்தியர்கள் பர்மியப் பெண்களை மணந்து பர்மாவாசிகளாகிவிட்டார்கள். எமக்குக் கிடைத்த நாலு வழிகாட்டிகளில் இரண்டு பேரின் தாத்தாக்கள் இந்தியர்கள். ஒருவர் கல்கத்தாவை சேர்ந்தவர் , மலைஜாதி பெண்ணை மணம் செய்தவர். மற்றவர் பாகிஸ்தானை அடுத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
பர்மியர்கள் திபேத்திய பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் எனக்கருதுவோரும் இல்லை, ,பர்மாவின் ஐராவதி நதிக்கரையில் பரிணாமமடைந்தவர்கள் எனச்சொல்வோரும் உண்டு. ஆனால் பர்மாவின் பிற்கால சரித்திரத்தில் அசாம் மணிப்பூர் என தென் இமாலயத்தின் அடிவாரத்தில் இருந்து குடியேறிவந்தவர்கள் வந்தவர்கள் பர்மிய அரசுகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என எல்லோரும் சேரந்த மக்கள்தான் ஐராவதி சமவெளியில வாழும் பர்மியர்கள் என தகவல்கள் உண்டு.
இந்திய பிராமணர்களது வருகையால் இந்துமதமும் அதன்பின்பு மகாஜான புத்தமதமும் பத்தாம் நூற்றாண்டுவரை அங்கு இருந்தது. அதன் பின்பு இலங்கையில் இருந்து தேரவாத புத்தமதம் பரவியது. இந்தவிடயத்தில் இலங்கையில் இருந்துவந்த புத்த குருமார் , புத்தரின் போதனைகளின் சாரம் தேரவாத புத்தசமயத்தில் மட்டுமே உள்ளது எனப்போதித்தார்கள் அதாவது தற்கால வகாபிகள் (சவுதி அரேபியாவில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உலகெங்கும் பரப்பமுயல்பவர்கள் – இவர்களது கொள்கையில் உருவானவர்களே தற்பொழுது அல்கைடா ஐஎஸ் எஸ் பொக்ககராம் ) கூறுவதுபோல் நடந்தார்கள் என பர்மிய சரித்திரம் சொல்கிறது.
தற்போதைய பார்மாவின் கலாச்சாரம் தேரவாத புத்தம் சார்ந்தது என்றாலும் முன்னைய இந்துமதத்தின் தெய்வங்கள் ஒருவித காவல் தெய்வங்களாக வணங்கப்படுகிறது. அத்துடன் சோதிடம் , வானியல், ஏன் சாதிமுறை என்பனவற்றில் இந்துசமயத்தின் ஊடுருவல் தெரிகிறது. முக்கியமாக வைணவசமயத்தின் கூறுகளை பார்க்கமுடிந்தது.
எங்களது பயணங்கள் அடுத்தநாள் தொடர இருந்ததால் அன்றைய இரவு யங்கூன் ஹோட்டலில் கழிந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்