புலிப் பெண்கள்

ttசோமீதரன்

விடுதலைப்புலிகளுடைய அரசியல்துறையின் மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற தன்வாழ்க்கைக் குறிப்பு புத்தகத்தை முன்வைத்து, சில நினைவுகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார் சோமீதரன்

2003 மற்றும் 2004ல் கிளிநொச்சியில் நடைபெற்ற மகளிர் தினங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு ஊடகக்காரனாக எனக்கு அப்போது வாய்த்திருந்தது. ஊர்வலம், பொதுக்கூட்டம், கலைத்துவ வெளிப்பாடுகள் என போராளிப் பெண்களும், பொதுப் பெண்களும் கூடி எழுந்துநிற்கும் நிகழ்வு. இதுபோன்ற மற்றுமொரு எழுச்சி நிகழ்வு, மாலதி படையணி கிளிநொச்சி மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த வீரத்தைப் பறைசாற்றும் விழா. கிளிநொச்சி வீதியெங்கும் பெண் போராளிகள் நிறைந்திருந்தனர்.

அப்போது சமாதானத்தின் கதவுகள் A9 நெடுஞ்சாலையில் திறந்துவிடப்பட்டிருந்ததால், உலக மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அந்த மைதானத்தில் தலைவர் பிரபாகரனைத் தவிர, மற்றைய தளபதிகள் அனைவரும் வெளிப்படையாகத் திரிந்தனர். ஒழுங்குபடுத்தும் பொறுப்பில் தமிழினி அக்காவும் முன்னின்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எனக்கு அவர் பெரிய பழக்கமில்லை. பாவாடை சட்டையில் தலைகுனிந்து நடந்துசெல்லும் பெண்களை அதிகம் பார்த்திருந்த எனக்கு, நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வரியுடை தரித்த அந்தப் பெண்களின் மிடுக்கு அதிக கவர்ச்சியுடையதாக இருந்தது. நான் 10 வயதாக இருக்கும்போதே இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டிருந்தமை சூழலில், ஒரு அன்னியத்தை ஏற்படுத்தியிருந்தது. பெண் கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் கட்டி இழுத்துவரப்பட்டு வீதிகளில் பிரமாண்டமாக நிறுத்தப்பட்டிருந்தன. நான், பெண் போராளிகளை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த மைதானத்திலேயே, மாலதி படையணியின் ஒரு தாக்குதல் நடவடிக்கையின் மாதிரியைச் செய்துகாட்டினர். ஆக்ரோஷமான ஒத்திகைப் பயிற்சியாக அது இருந்தது. பெண் போராளிகளின் கைகளில் ஒரு துப்பாக்கியும், சிலர் கைகளில் கமெராவும் இருந்தது. அங்கே ஆண்களுக்கு எந்த வேலையும் இருக்கவில்லை. பல சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு பேச்சே வரவில்லை. மச்சான் இந்த நாட்டுக்குள் இப்படியொரு பெண்களா! என்று வியந்தார்கள். சிறிலங்காவின் பெண்களில் இருந்து தமிழீழத்தின் பெண்கள் வேறுபட்டிருக்கிறார்கள் என்பதே அவர்களின் வெளிப்பாடாக இருந்தது.

2003ல் தான், எனக்கு தமிழினி பழக்கமானார். அவர் அறிமுகம் செய்துவைத்ததன் மூலம் மருத்துவப் பிரிவு, போர் பயிற்சிப் பிரிவு, புகைப்படப் பிரிவு என, சிலபல பிரிவுகளின் போராளிகள் அறிமுகமானார்கள். மற்றொருபுறம், வெளிச்சம் இதழின் ஆசிரியர் கருணாகரன் மூலமும், புலிகளின் குரல் வானொலி தவபாலன் மூலமும் சில போராளிகள் அறிமுகம் கிடைத்தது. பின்னாட்களில் தமிழீழ தேசிய தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, இசைப்பிரியா அறிமுகமானார். நான், என் ஊடகப் பணிக்காக எப்போது வன்னி சென்றாலும் தவறாமல் சந்திக்கும் நபராக தமிழினி இருந்தார். அவரின் அலுவலகத்தில் வைத்துத்தான் நான் மலைமகளையும் சந்தித்தேன். போர்க்குணமும், எழுத்துவன்மையும் கொண்டவர் மலைமகள்.

அமைப்புக்குள்ளும், வெளியேயும் வெளிப்படையாகவே இருக்கும் ஆணாதிக்க மனோநிலைக்கு, இந்த புலிப் பெண்கள் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். ஆனால், வெளிப்படையாக வீரம்செறிந்த பெண்கள் பற்றிய பிரச்சாரங்களை மட்டுமே தமிழினி அப்போது விரும்பியிருந்தார். புலிப் பெண்களிடம் குறை கண்டுபிடிக்க காத்திருந்தவர்களுக்கு பிடி கொடுத்துவிடக்கூடாதென தமிழினி அப்போது எண்ணியிருக்கலாம்.

பெண்களுக்கான படையணியையும், பெண்களுக்கான உடையையும் நேர்த்தியாக உருவாக்கிய தலைவரைப் பற்றி அவர், அப்போது பெருமையாகச் சொல்வார். இப்போதும், இந்த நூலிலும் பெண்களையும், அவர்களின் வீரத்தையும், அறிவையும் குறைத்து மதிப்பிடாத தலைமைகுறித்து தமிழினி பல தடவை குறிப்பிடுகிறார். இந்திய ராணுவத்துக்குப் பின்னான ஈழப் போர்க்களத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது, ஆண்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் இருந்திருக்கிறது என்பது தமிழினியின் தன்வரலாற்று நூலின்மூலம் உணர்ந்துகொள்ள முடியும். இயக்கம் மீதான விமர்சனங்களும், கோபங்களும், ஆற்றாமைகளும், வெப்பிராயங்களும், கண்டனங்களும் நிறைந்ததாக தமிழினியின் நூல் இருக்கிறது. ஆனால், இந்தப் பிராந்தியத்தில் நடந்துமுடிந்த, நடந்துகொண்டிருக்கும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்தைவிடவும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் இருக்கும் சிறப்பே பெண்கள் படையணிகள்தான். இன்று குர்திஸ்தானிலும் அன்று எரித்திரியாவிலும் போர்க்களத் தலைமையேற்ற பெண்கள் அணிகளின் வீரத்திற்கு ஒப்பான அல்லது அதனிலும் சிறப்பான வீரத்தை ஈழப் பெண்களும் கொண்டிருந்தார்கள். அவர்கள் களமாடுபவர்களுக்கு துணைபுரியும் அணியாக இல்லாமல் களமாடும் அணியாக இருந்தார்கள்.

இதனாலேயே, சமாதானப் பேச்சு நடந்த காலத்தில் ஒருமுறை, விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் பெண்மை உணர்வு அற்ற மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். உணர்வு மரத்தவர்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழினி கடுமையான எதிர்வினையாற்றியிருந்தார். இதை அடிப்படையாக வைத்து, பிபிசி தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பிரான்ஸிஸ் ஹாரிஸனோடு அப்போது நானும் பணியாற்றினேன். வீரம்செறிந்த போர்க்களங்களில் களமாடத் தெரிந்த அந்தப் பெண்கள் எல்லோருக்கும் வைதீக ஆச்சரங்கள் நிறைந்த, சைவ பாரம்பரியத்தில் ஊறிய, சாதியச் சிறப்புமிக்க ஆண்மேலாதிக்க ஈழத்தமிழ் வாழ்வுக் களத்தில் களமாடத் தெரியுமா? என்ற கேள்விக்கு, தமிழினியிடம் அப்போது முழுமையான பதில் இருக்கவில்லை. ஆனால், இப்போது இந்த நூலில் அதை இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘‘பெண்கள் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தபோதும், தமது உடல் வலிமையை நிருபிக்கக்கூடியதாக இருந்தபோதிலும் அவர்களது அடிப்படைச் சிந்தனைகளில் எந்தளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக் குறியானது.

குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்து வெளியேவந்து, இயக்கம் என்ற அமைப்புக்குள் புகுந்துகொண்ட புலிப் பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்துக்கு உட்பட்டார்கள் என்று சொல்லமுடியாது. எப்படி, கட்டுக்கோப்பான குடும்பப் பெண்களாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோல கடினமான இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம்.” இந்தக் கருத்தை, குறிப்பாக யாழ்ப்பாண மைய கலச்சார சமூகத்தில் நிகழ்ந்திராத சமூக மாற்றத்தினூடாகவே பார்க்க முடியும்.

தனது நூலில் தமிழினி பெண்கள் குறித்துப் பேசியிருப்பவை, போருக்குப் பின்னரான வாழ்வில் போராளிப் பெண்கள் சமுகத்தால் எதிர்கொள்ளப்படும்முறையின் தாக்கத்துடன் இணைத்தே பார்க்கப் பட வேண்டும். பல பெண்கள் இயக்கத்தில் சேர்வதற்குத் தூண்டுதலாகவும், ஆட்சேர்ப்பில் பிரபலமான பிரசாரகராகவும் தான் இருந்ததைப் பதிவுசெய்யும் தமிழினிக்கு இன்று, அந்தப் பெண்கள் வந்துநிற்கும் இடம், நிச்சயம் வலியை ஏற்படுத்தியிருக்கும். ஒரே ஆடையுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும், களமுனையில் நின்ற பெண்களின் தீரம்பற்றி தமிழினி பதிவு செய்கிறார். போராட்டத்துக்கு வெளியே பெண்களின் சமூக வகிபாகம் என்பது பரதம் ஆடுவதும், அழகுபடுத்துவதும், வெளிநாட்டில் உள்ளவர்களைக் கரம்பிடிப்பதும், பாதுகாப்பான வேலைபெறுவதும் என்பதாகத்தான் பெரும்பாலும் இருந்தது. விடுதலைப் புலிகளின் மணக்கொடைத் தடைச் சட்டம் என்பதும் வலுவிழந்தே இருந்தது என்பதை தமிழினி குறிப்பிடுகிறார். அது,

கடுமையாக்கப்பட்டபோது அதற்கான மாற்று வழிகளில் சீதனமென்ற மணக் கொடைப் பரிமாற்றத்தை தமிழ்ச் சமூகம் நடத்தியது. பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளால் அவை கண்டுபிடிக்கப்பட்டபோது வாங்கிய சீதனத்தில் இருந்தே தண்டப் பணம் கட்டியதும் நடந்திருக்கிறது. இப்போது, புலிகள் இல்லாதபோது புலம்பெயர் நாடுகள் வரையிலும் சீதனம் வாங்குவது என்பதை திருமணத்தின் சம்பிரதாயங்களில் ஒன்றாக வைத்திருகிறார்கள். அதுகுறித்த கூச்சம்கூட வாங்குபவர்களுக்கு இருப்பதில்லை.

தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலை முன்வைத்து, நான் இதை எழுத நினைத்தாலும் அந்த நூலின் பெண்கள் குறித்தான பதிவுகளின் தாக்கமாகவே இதைப் பதிவுசெய்ய விழைகிறேன். முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் பெண் போராளிகளின் நிலை மிகப் பரிதாபமாக இருந்தது என்கிறார் தமிழினி. அதுவரை போராளிகளாக இருந்தவர்கள் அந்தக் கணம்முதல் ஈழத்துப் பெண்களாக மாறுகிற தருணம் அல்லது நிர்ப்பந்தம். அந்த இடத்திலே பல புலிப் பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்று சொல்லும் தமிழினி, தான் அந்த முடிவை எடுக்காமல் வருவதை எதிர்கொள்ள முடிவெடுத்ததாகக் கூறுகிறார். அன்று, தற்கொலை முடிவை எடுக்காமல் எதிர்கொள்ளும் முடிவை எடுத்த பலர், அரச படையினரை எதிர்கொள்ளமுடியாமல் போயினர். இதைவிட,வலியானது எல்லாம் முடிந்து ஊர் மீண்டபின்னர் இந்த சமூகத்தை எதிர்கொள்ளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்கள் நமக்குச் சொல்லிவிட்டுச் சென்ற சேதி என்ன?

தமிழினியின் நூலைப் படித்தபோது அதன் உள் அரசியல், வெளி அரசியல், புலிஅரசியல், புலி எதிர்ப்பு அரசியல் எல்லாவற்றையும் கடந்து, ஈழப் பெண் அரசியல்குறித்த கேள்விகளே அதிகம் இருந்தது. புலிப் பெண்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்திருக்கலாம். அந்தத் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், அவர்கள் பெண்களாக தலைநிமிர்ந்துவிட முடியாமல் நாம் வாழும் இந்தச் சமூகம் அவர்களைத் தோற்கடிக்க முயல்கிறது. உலகின் உச்சபட்ச பெண்ணுரிமை பேசும் சமூகத்தின் போராட்டங்களைவிடவும் வீரியமான செயலை போர்க்களத்தில் அந்தப் பெண்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், நாம் நிர்வாணப்படுத்தப்பட்ட அந்தப் பெண் உடல்களை வைத்துமட்டுமே அரசியல் செய்துகொண்டிருக்கிறோம். எதை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமானாலும் நமக்குப் பெண் உடல்தான் தேவையாக இருக்கிறது. அது உயிருடன் இருக்கும் பெண்ணா, கொல்லப்பட்ட பெண்ணா என்பது மட்டும்தான் வேறுபடுகிறது. ஒரு போராட்டத்தின் பயன் என்பது, போர் வெற்றி தோல்விகளுடன் மட்டும் முடிந்து போவதல்ல; அது உருவாக்கிய தாக்கம் என்ன?, அதன்மூலம் அடைந்திருக்கும் சமுக மாற்றம் என்ன? என்பதுதான் அதன் படுதோல்வியை மீண்டும் மீண்டும் பறைசாற்றுவன. இராணுவரீதியில் தோல்வியடைந்த போராளிகள் சுயநலமும், பிற்போக்கும் நிறைந்த நம் சமூகத்தின்முன்னே மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுகிறார்கள்.

(கட்டுரையாளர் குறிப்பு -சோமீதரன் -ஆவணப்பட இயக்குநர், ஊடகவியலாளர், கட்டுரையாளர்

நன்றி minnambalam

“புலிப் பெண்கள்” மீது ஒரு மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: