68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு

நடேசன்
sri.lanka_.flag_

இலங்கை சுதந்திரமடைந்த 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கையர்களாகிய நாம் தமிழர்கள், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் என்ற எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் நமது தாய்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அதிர்வுகளும் எல்லோரையும் இன, மத பாகுபாடு இன்றி பாதிக்கிறது என்பதுதான் வரலாற்றில் படித்த உண்மை.

இயற்கையின் பேரழிவு 2004 இல் நடந்த சுனாமி. அது தெற்கு மற்றும் கிழக்கு கரையோர மக்களை ஆயிரக்கணக்கில் காவு கொண்டது. அந்த சுனாமி மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையின் சீற்றம். இதைவிட மற்றைய நாடுகள்போல் பஞ்சம், பட்டினி என்பது எமது தாயகத்தில் நாம் பார்த்ததில்லை. இயற்கை வளம் உள்நாட்டிலும், சுற்றியுள்ள கடலிலும் அள்ளியள்ளி எடுத்தாலும் குறையாது. இப்படியான வளம் கொண்ட நாட்டில் பிறந்த நாங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பெரும் அழிவுகளை கண்ணீரையும் குருதியையும் சிந்தியபடி கடந்து வந்துள்ளோம்.

எமது நாட்டில் நிகழ்ந்த அழிவுகள் இலட்சக்கணக்கில் உயிர்களை பலி கொண்டது மட்டுமல்லாமல் பல இலட்சம் மக்களையும் இடம் பெயரச்செய்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாக்கியது. உயிர்களை இழந்து உறவுகளை பறிகொடுத்த சொந்தங்களாக தாய் தந்தையர் கணவன் மனைவி பிள்ளைகள் என பல இலட்சம் மக்கள் எம்மிடையே வாழ்கிறார்கள். நிரந்தர ஊனமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். அவர்கள் தமக்கு நேர்ந்த அனர்த்தத்தை எப்படி மறப்பார்கள்? அழிந்த வீடுகள் காணிகள் மற்றும் உடைமைகள் என்பன சொல்லி மாளாதவை.

1971 இல் நடந்த கிளர்ச்சிஇ சிங்கள இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. உயிரை மதிக்காமல் இளைஞர்கள் கிளர்ந்து எழுந்ததை முற்றாக அவர்களின் தவறுதான் என்று கூறிவிடமுடியாது. எவரும் தங்களது உயிர்களை காவு கொடுக்க இலகுவாக முன் வருவதில்லை. நிச்சயமாக மற்றைய வழிகள் அடைக்கப்படும்போதே இந்த வகையான ஆயுதப்போராட்டங்கள் உருவாகின்றன.

சிங்கள இளைஞர்களின் போராட்டம் 1987 இல் மீண்டும் உருவாகி பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் உயிரைக் குடித்தது. 1971 இல் உருவாகியிருந்த போராட்டக் காரணிகள் 1987 வரையும் தொடர்ந்தது என்பதையே அது தெரிவித்தது.

இதேபோல் சிறுபான்மை இனமான தமிழர்கள் தங்களது போராட்டத்தை ஆரம்பத்தில் வன்முறையற்ற விதத்தில் எடுத்தபோது அதை பராமுகமாக விட்டதும் அதற்கான காரணங்களை கண்டறியாது விட்டதுமே இந்தப் போராட்டம் வன்முறையாகியதற்கான காரணம்.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்மக்கள் தங்கள்மீது வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்தார்களா என்பதையும் அதேவேளையில் இலங்கை அரசாங்கம் முழு இலங்கை மக்களினதும் அரசாங்கமாக தொழிற்பட்டார்களா என்பதையும் அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உலகத்தில் எந்த ஒரு இனமும் கலப்பற்றதல்ல. இது இலங்கையில் உள்ள இரு மொழிகள் பேசும் சிங்களவருக்கும் தமிழர்களுக்கும் பொருந்தும். வரலாற்றை உற்று நோக்கும்போது தென்னிந்தியாவில் புத்தமதம் செழித்து தமிழர்களின் மதமாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்தது.

இதுபற்றி தமிழில் உள்ள புத்தகாப்பியமாகிய மணிமேகலை சான்று பகரும். மேலும் தமிழ்நாட்டிலும் வட இலங்கையிலும் அகழ்வாராய்வில் வந்துகொண்டிருக்கும் புத்தர் சிலைகளும் அதையொட்டிய வரலாற்று ஆதாரங்களும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கின்றன.

அறிஞர்களின் கூற்றுப்படி தென்னிலங்கையின் கலாச்சாரம் திராவிட கலாச்சாரம். புத்தத்தின் மொழியாகிய பாலி மற்றும் அதன் தாய் மொழியாகிய சமஸ்கிருதம் அத்துடன் தமிழும் கலந்து சிங்கள மொழியாக உருவாகியது.

சிங்களம் பேசும்போது தமிழ் மொழிச் சொற்கள் அதில் நிறைந்து இருப்பதை சாதாரணமானவர்களாலேயே அவதானிக்க முடியும். இதற்கும்மேல் நிறமுர்த்த அலகுகள் மூலம் இலங்கைச் சிங்களமக்கள் தமிழர்கள் தென்னிந்தியர்கள் எல்லோரும் ஒரே இனக்கூட்டத்தை சேர்ந்தவரகள் என்பதும் உறுதியாகிறது.

இவ்வாறு சமய, கலாசார ரீதியில் ஒன்றாகிய இனம். சரித்திரகாலத்தில் இலங்கையில் சிங்கள மன்னர்கள் எப்பொழுதும் தமிழ்நாட்டில் இருந்து பெண்ணெடுத்திருப்பதையும் படைத்தலைவர்கள் மந்திரிகளென பலர் தமிழர்களாக அவர்களின் அரசுகளில் இருந்திருப்பதையும் அறியமுடிகிறது.
பல தமிழர்கள் இலங்கையை ஆண்டிருக்கிருக்கிறார்கள். கடைசியாக சிங்களத் தலைநகரை ஆண்ட ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனுக்கு முன்பே பலர் தமிழர்களாக இருந்தார்கள். அவர்களை சிங்கள மக்கள் மற்றும் பிரதானிகள் பதவிகளில் ஏற்றிருந்திருக்கிறார்கள்.

அனுராதபுர இராசதானி காலத்தில் பேசப்படும் மகாவம்ச நாயகன் துட்டகைமுனுவின் இராணுவ அதிகாரிகள் தமிழர்களாகவும் எல்லாளனின் படைவீரர்கள் சிங்களவர்களாகவும் இருந்த சரித்திரம் மட்டுமல்ல, கடைசியாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிட்ட இலங்கை இராணுவத்திலும் கடற்படையிலும் முக்கிய பதவிகளில் தமிழர்கள் இருந்திருப்பதை நான் பார்த்திருக்கின்றேன்.
இப்படியாக வாழ்ந்த இரண்டு சமூகங்களிற்கிடையே ஏற்பட்ட அரசியல் வேறுபாடுகளுக்கும் யுத்தத்திற்கும் இடையே உள்ள நெருக்கடிக்கும் இரண்டு பக்கத்திலும் இருந்த அரசியல் தலைவர்கள்தான் காரணம்.

இதன் முக்கிய கதாநாயகராக ஜி.ஜி. பொன்னம்பலம் 75 வீதமான சிங்கள மக்களுக்கும் 25 வீதமான தமிழ்ப்பேசும் மக்களுக்கும் (சிறுபான்மையினருக்கும்) மக்களவையில் சமமான பிரதிநிதித்துவத்தை (ஐம்பதிற்கு ஐம்பது) 1940 இல் கேட்டபோது காலனித்துவ சோல்பரி ஆணைக்குழுவால் அது நிராகரிக்கப்படுகிறது.

இந்த வேண்டுகோள்; நிராகரிக்கபட்டபோதிலும் இந்த ஐம்பது வீதக் கோரிக்கை தமிழ் சிங்கள இனத்தின் ஒற்றுமைக்கு எதிராக வைக்கப்பட்ட முதல் வேட்டாகிறது.

1949 இல் மலையகத்து மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதை அக்காலத்தில் தமிழ்க் காங்கிரசில் இருந்த எஸ்.ஜே. வி. செல்வநாயகம் எதிர்த்தும் பொன்னம்பலம் ஆதரித்ததையுமடுத்து ஒரேகட்சியாக இருந்த தமிழக்காங்கிரஸ் பிரிகிறது. இதிலிருந்து இவர்கள் இருவருக்குமிடையிலான போராட்டம் இவர்களது கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் பிரசாரமாக மாறுகிறது.

பிற்காலத்தில் மலையகத் தமிழர்களை இந்தியா தனது மக்களாக ஏற்றுக் கொண்டு சிறிமா – சாஸ்திரி ஓப்பந்தம் அக்காலத்தில் இருந்த இலங்கை இந்தியப் பிரதமர்கள் மத்தியில் கைச்சாத்திடப்பட்டுஇ உருவாகிறது. அதன் பிரகாரம் ஐந்து இலட்சம் மலையக மக்கள் தங்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்ட இந்தியாவுக்குச் செல்கிறார்கள்.

அவர்களின் பெயரால் உருவான பிளவு வடக்கு கிழக்கில் தமிழரசு – காங்கிரஸ் என்ற ரீதியில் சிண்டைப் பிடித்துப் போராட உதவுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து பண்டாரநாயக்காவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்கட்சியில் இருந்தபோது சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சிமொழியாக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து 1956 இல் ஆட்சியைக் கைப்பற்றியது.

பண்டாரநாயக்காவின் இந்தக் கோரிக்கையை சிங்கள மக்களிடம் வைத்தபோது இலங்கை சமசமாஜக்கட்சியைச் சேர்ந்த என்.எம். பெரேரா சிங்களம் – தமிழ் இரண்டு மொழிகளுக்கும் சட்டத்தில் சமமான இடம் கொடுக்க வேண்டுமென்ற தீர்மானத்தை பாராளுமன்றத்தில் வைத்தார்.
அக்காலத்தில் எதிர்கட்சியில் இருந்த பண்டாரநாயக்கா இதை எதிர்த்தார்.

சிங்கள மொழி அரசகருமமொழியாக வந்ததை எதிர்த்த செல்வநாயகம் அதே 1956 தேர்தலின் முன்பு இரண்டு பாராளுமன்ற அங்கத்தினராக இருந்த தனது கட்சிக்கு பத்து இடங்களைப் பெற்றதுடன் தேர்தலுக்கு முன்பு பாராளுமன்றத்தில் 7 இடங்களுடன் இருந்த பொன்னம்பலம் ஒரு இடத்தை மட்டுமே பெற்றார். தற்போது இருமொழிகளும் ஆட்சிமொழியாக்கப்பட்டிருப்பதைப்பார்க்கும்பொழுது செல்வநாயகமும் பண்டாரநாயக்காவும் என்ற இரண்டு அரசியல்வாதிகளினதும் அரசியல் கோஷங்கள் எவ்வளவு தொலைநோக்கு அற்றது என்பது புரிகிறது. இவர்களின் வெற்று அரசியல் கோசங்கள் எவ்வளவு தூரம் இனவாதத்தின் கோரத்தை உருவாக்கியுள்ளது என்பதையும் நமக்கு நன்கு வெள்ளிடை மலையாக்கியிருக்கிறது.

இவர்களது செயல்கள் இத்துடன் நிற்கவில்லை. தொடர்ச்சியாக மக்கள் நிறைந்த கூட்டத்தில் பெரிய எரி பந்தத்தை எண்ணெயில் தோய்த்தெடுத்து தொடர்ச்சியாக சண்டையிடுகிறார்கள்.

இலங்கைப் பாராளுமன்றத்திற்கு எதிரில் 1956 இல் தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தங்கள் ஆதரவாளர்கள் இருநூறு பேருக்கு மேற்பட்டவர்களையும் அழைத்துக்கொண்டு சத்தியாக்கிரகம் செய்தபோது சிங்களவர்கள் இவர்களைத் தாக்குகிறார்கள். இதன் பயனாக தமிழ்ப் பகுதிகளில் முதலாவது கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் நடக்கின்றது.

அதன் விளைவாக கொழும்பில் முதல் முதலாக தமிழ்க்கடைகள் காடையர்களல் உடைத்து சூறையாடப்படுகிறது. இலங்கையில் 1915 வன்முறைக்குப்பின்னர் நடந்த இரண்டாவது வன்முறையாக இச்சம்பவம் வரலாற்றில் இடம்பெறுகிறது.

பாராளுமன்றத்தில் தமிழ் அங்கத்தினர்கள் அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள காடையர்களை ஏவிவிட்டுத் தாக்கியதாக குற்றம் சாட்டுகிறார்கள்.அதற்கு பண்டாரநாயக்கா ‘ இப்படியான ஒரு நிகழ்ச்சிகளை உருவாக்க விரும்பித்தானே சத்தியாக்கிரகம் செய்தீர்கள் ’ என்கிறார்.

இரண்டு விடயங்களும் உண்மையானவை. விளைவுகளை எதிர்பார்த்தே அரசியலை நடத்திய திறமையான வழக்கறிஞர்கள்தான் செல்வநாயகமும் பொன்னம்பலமும். இதன் பின்பு பண்டாரநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தம் வந்தபோது அதற்கு எதிராக ஜெயவர்தனா தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பாதயாத்திரை ஆரம்பிக்கின்றனர்.

தமிழரசுக்கட்சியினர் அந்த ஒப்பந்தத்தின் பின்பும் தொடர்ச்சியாக அரசாங்கத்தை எதிர்ப்பதாக பாராளுமன்றத்தில் சொல்கிறார்கள். சிங்கள தீவிரவாதிகளும் அந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர்.
பின்பு இறுதியில் பண்டா- செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுகிறது.

58 இல் புதிதாக இறக்குமதியான பஸ்களுக்கு சிங்கள ஸ்ரீ அடையாளமிடப்பட்டு வடக்கு கிழக்கிற்கு அனுப்பிய விடயத்தை அரசியலாக்கியதுடன் தமிழரசுக் கட்சியினர் அந்த எழுத்தின் மீது தார் பூசி அழித்த விடயம் இரண்டு இனங்களையும் மேலும் பிரித்தது.

இவ்வாறு குரோதத்தை உருவாக்கியதன் விளைவாக இனக்கலவரம் நாடெங்கும் பரவலாக நடந்தது. இந்தக் கலவரத்தில் இரண்டு இனங்களும் தாக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டதுடன் ஏராளமான சொத்துக்களும் அழிக்கப்பட்டன.

இதன் பின்பு நியாயமான தமிழ்மொழிப் பிரயோகம் என்ற மசோதாவை பண்டாரநாயக்கா பாராளுமன்றில் வைக்கிறார்.

இதன்பின்பு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு உருவாகியதும் பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவர்களைப்பாதிக்கும் மொழிரீதியான தரப்படுத்துதல் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே வெறுப்புகளைச் சுமந்துகொண்டிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் ஆயுதப் போராட்டதிற்கான ஆதரவு கூடுகிறது.

தனிநாடாக ஈழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கை தமிழ்த்தரப்பால் வைக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கோரிக்கை வைக்கப்படும்போது உள்ளுர் அரசியல், அயல்நாட்டு அரசியல், பூகோள நிலைமைகள் கருத்துக்கெடுக்கப்படவில்லை.

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியால் அக்காலத்தில் 40வீதமான தமிழர்கள் வாழ்வதும் கிழக்குமாகாணத்தில் தமிழர்கள், இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் ஒன்றாக கலந்து வாழ்வதும் மலையகத்தில் தமிழர்கள், சிங்களவர் மத்தியில் வாழ்வதும் அத்துடன் இலங்கையில் புதியநாடு ஒன்று உருவாகுவது சம்பந்தமான இந்தியாவின் நிலை என்ன என்ற காரணங்களை சிந்திக்காது வைக்கப்பட்டதே இந்த தனிநாட்டுக் கோசம்.

1977 இல் வந்த ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடனே தனது எதிரிகளின் மேல் வன்முறையை திணித்ததுடன் வன்முறைகள் உருவாகிறது. தமிழர்கள் மேல் பெரிய இனத் தாக்குதலின் மேகங்கள் கருக்கொள்கிறது. அதன் பின்பு வன்முறைகள் பல வடிவத்தில் தொடர்கிறது. அப்பாவி இளைஞர்களை யாழ்ப்பாணத்தில் கொல்லுதல், யாழ்ப்பாண நூலகம் எரித்தல் எனத்தொடங்கி 1983 கலவரம் எக்காலத்திலும் காணதவாறு தொடர்ந்து ஆயிரக்கணக்கில் தமிழர்கள் உயிர் இழக்கிறார்கள்.

ஆரம்பத்தில் சிறுதாக்குதல்கள் போராக மாறுவதும் அதையிட்டு அயல்நாடு – வெளிநாடுகளின் தலையீடுகள் என்று 60 வருட வரலாற்றில் இலட்சக்கணக்கான மக்களை இனவிரோதம் என்ற பலிபீடத்தில் இரு இனத்திலும் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என காவுகொடுக்கப்படுகிறது.

இந்த உயிர்ப்பலிகள் 2009 இல் உச்சத்தைத் தொட்டு அதேவருடம் மே மாதத்தில் முடிவுக்கு வருகிறது. இந்த வசனத்தில் நான் வைத்த முற்றுப்புள்ளியாக இந்த இனமோதலின் தொடர்கதை முடிவுக்கு வருவதற்கு இனிமேல் இப்போது உள்ள அல்லது இனிவரும் இரண்டு சமூகத்தின் அரசியல்வாதிகள் ஒத்துழைப்பார்களா…?

மானிட உயிர்கள் ஒரு முறைதான் இந்த புவியில் வருபவை. அவை புனிதமானவை. அரசியல்வாதிகளின் விளையாட்டுக் கைப்பொம்மைகள் அல்ல என்பதை உணருவார்களா…?

அரசியல் என்பது உங்களுக்கு மற்றவர்களால் தரப்பட்ட தார்மீக சுமை என்பதை எப்போது உணர்வார்கள்…?

இந்த பலிபீடத்தை அமைத்தவர்களோ அல்லது கொலைகளுக்கு காரணமானவர்களில் பலரே இன்று எம்மத்தியில் உயிருடன் இல்லை. என்றாலும், இரண்டு பக்கத்து அரசியல் தலைவர்களும் செய்த விடயங்களை நாம் நினைவு கூர்வதன் மூலம், இனிமேலாவது இதுபோல் அநர்த்தங்கள் நடக்காமல் இருக்கவேண்டும் என்ற எனது வேண்டுதல் இலங்கை சுதந்திரமடைந்த 68 ஆவது வருடமாகிய இந்தருணத்தில் பொருத்தமாக அமையும் என நினைக்கிறேன்.

“68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு” மீது ஒரு மறுமொழி

  1. TAMILS ARE VICTIMS BY SINHALA RACISM ,BRUTALITY & MARGINALISATIONS! FEDERAL SOLUTION BY IC/UNSC IS THE BEST SOLUTION TO TAMILS! TAMIL LEADERS WERE VERY FLEXIBLE & PATIENT EVEN NOW! BUT NOT SINHALA LEADERS!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: