Ashroff Shihabdeen
·
புதிய பிடித்த நூல்களை இப்போதெல்லாம் ஒரே மூச்சில் நான் படித்து முடித்து விடுவதில்லை. ஒவ்வொரு அல்லது இவ்விரு அங்கமாக ரசித்து ரசித்துப் படிக்கிறேன்.
அப்படித்தான் டாக்டர் நடேசனின் வாழும் சுவடுகள் நூலையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
மருத்துவத் தொழில் ரீதியான இலகுபடுத்தப்பட்ட அதேவேளை சுவை குன்றாத எழுத்துக்கு டாக்டர். முருகானந்தனையும் டாக்டர் நடேசனையும்தான் என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
அடிப்படையில் இருவரும் சிறந்த படைப்பாளிகளாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்பேன்.
மிருக வைத்தியரான டாக்டர் நடேசன் ஐயறிவு ஜீவராசிகளுக்குச் செய்த மருத்துவத்தையும் அதன் பின்னணில் இருக்கும் கதைகளையும் சுவைபடக் கதைகளாகத் தந்திருக்கும் நூல்தான் “வாழும் சுவடுகள்!”
மனிதர்களுக்கு ஓர் உலகம் இருப்பது போல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் உலகங்கள் இருப்பதை இந்நூலின் கதைகள் நமக்கு அழுத்தமாக உணர்த்தி நிற்கின்றன.
ஐந்தறிவு கொண்டவையாயினும் அவற்றின் மீதுள்ள காருண்யம் பொங்கி வழியும் மிருக வைத்தியத் துறை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமானவை மாத்திரமன்றி நமக்குள்ளும் கருணை குறித்த அகத் தூண்டலை ஏற்படுத்தக் கூடியவை.
அதை ரசித்துப் படிக்கத் தூண்டும் எழுத்தாண்மை கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார் டாக்டர் நடேசன்.
ஒரு பிராணி சிகிச்சைக்குக் கொண்டு வரப்படும் போது அதன் எஜமானன், எஜமானி – அவர்களது பின்னணி, அவர்களின் தொழில் சார் அம்சங்கள், பிராணியின் வகை, அவ்வினம் பற்றிய தகவல்கள், எஜமானனின் அல்லது எஜமானியின் குடும்பத்துக்கும் அந்தப் பிராணிக்குமுள்ள ஒட்டுதல்கள், ஒவ்வாமைகள் என்று எதையும் அலுப்புத் தட்டாமல் சுவாரஸ்யத்துடன் சொல்லிச் செல்லும் பாங்கு மெச்சத் தக்கது!
டாக்டர் நடேசனைப் போலவே அவரது எழுத்துக்களும் மிகத் தெளிவானவை! –
மறுமொழியொன்றை இடுங்கள்