நடேசன்
மொழியில் கடுமையும் சுவாரசியமற்ற உரைநடையுமே சமயநூல்களின் பொதுவான தன்மை என்பது எனது அபிப்பிராயம். இதனால் அவற்றை வாசிப்பது சிறுவயதிலிருந்து எனக்குத் தண்டனையாகத் தெரியும்.
கட்டாயத்திற்காக பாடசாலைத் தேர்வில் படித்துவிட்டு அதன்பின்பு அதன்பக்கம் தலைவைத்துப் படுக்காமல் இருப்பது சாலச்சிறந்தது என்ற மனப்பான்மையில் ஊறி பிற்காலத்தில் திராவிட பகுத்தறிவுவாதம், கம்மியூனிசம் பின்பு சோசலிசம் பின்பு செக்கியூரியல் ஏதிசம் என பரிணாமமடைந்த என் போன்ற மத நம்பிக்கையற்ற ஒருவர் மதத்தின் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் இலக்கிய நயத்தை அனுபவிக்கவுமே மதநூல்களை வாசிக்க விரும்புகிறோம்.
அப்பொழுது மேற்கூறியவை தடையாக வந்து நிற்கும். ஆனால் சமய நூலையும் நன்றாக வாசிப்பதற்கேற்ப எழுத முடியும் என்பது பாலச்சந்திரனின் திருவாசகம் பற்றிய விளக்கவுரையாகும்.
திருவாசகத்தை சமய நூலாக அறிந்த சிறுவயதில் இந்துசமய பாடநூலாக வாசித்த எனக்கு மரணவீடுகளில் எல்லாம் பாடாவதியாகப் பாடி அதனை போரடிக்கச்செய்துவிட்டார்கள்.
பக்தி இலக்கியத்தில் முதல்வரிசையில் திருவாசகம் வரும் என்பதை அறிந்திருந்தாலும் அதை சிறிது சிறிதாக மதுரமான வகையில் எழுதியிருப்பது இந்த நூலின் சிறப்பு.
ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் அதைப் படித்து முடிப்பதில்தான் அந்த புத்தகத்தின் வெற்றி தங்கியுள்ளது. அந்தவகையில் பல புத்தகங்கள் எனக்கு இம்முறை கொழும்பு சென்றபோது நண்பர்களால் தரப்பட்டது. அதைவிட நான் கொண்டு சென்ற புத்தகங்கள் இந்தப்பயணத்தில் என்னிடம் இருந்தபோதும் தற்செயலாக எனது கையில் அணிவாசக அணியமுதம் ஒட்டியது. ஆரம்ப பக்கங்களை வாசித்தபின்பு வைத்துவிடுவதென நினைத்துவிட்டு தொடர்ந்தபோது எனது அந்த எண்ணம் நிறைவேறவில்லை.
புதிய பாணியில் அது எழுதப்பட்டிருந்ததும் அதற்குக் காரணமாகும். தமிழ்ப் பேராசிரியரை அழைத்து வந்து அவரது மனைவி மக்கள் பேரப்பிள்ளைகள் நண்பர்கள் மாணவர்கள் நடுவே யதார்த்தமாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது என்ற புதுமையான யுக்தி தமிழுக்குப் புதியது. புத்தகங்களை நிரப்ப பாய் விரித்த மாதிரி எழுதும் நமது பத்திரிகைகளின் பழக்கமும் தமிழர்களை மொழியில் இருந்து விரட்டும் ஒரு காரணம். அவசர யுகத்தில் வாசிப்பது உடலுறவு போல் இன்பத்தை அளிக்கவேண்டியது. அதைச் செய்யாவிடில் மொழி மக்கள் வாழ்க்கையில் இருந்து அந்நியப்பட்டுவிடும்.
இந்தப் புத்தகத்தை நான்கூர்ந்து வாசித்ததற்கு அடையாளமாக சிறிய தவறும் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. போல் அப்போஸ்ரல் பிறந்த நூற்றாண்டு 10 ஆம் நூற்றாண்டு என தவறாக உள்ளது அச்சுப்பிழையாக இருக்கலாம். அவர் நாசரத்து யேசுவின் காலத்தில் வாழ்ந்து ஆரம்பத்தில் யேசுவின் போதனைகளை எதிர்த்தவர். பின்னாளில் அவரே கிறிஸ்துவ மதத்தின் யூதர்கள் அற்றவர்களான ஆசியா மைனர் மற்றும் கிரேக்கர்களிடையே பரப்பிய யூதர். இவராலே பெரும்பாலான விவிலியம் எழுதப்பட்டுள்ளது.
சீடர்களாகிய மத்தியு மாக் எழுதப்படிக்காதவர்கள். மேலும் கிறிஸ்துவை ஒளிவடிவமாக கண்டு அதை முக்கியப்படுத்தியதால் கிறிஸ்துவின் போதனைகளை பின்தங்கச்செய்ததாக இவர்மீது குற்றச்சாட்டு உள்ளது. இவர் நிச்சயமாக பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கமுடியாது. மேலும் இவர் ரோம ராச்சியத்திற்கு உட்பட்ட தற்போதைய ஏசியா மைனர் எனப்படும் துருக்கியில் வாழ்ந்த யூதராவார்.
பக்தி இலக்கியமான திருவாசகத்தை படிப்பதற்கு முன்பு படிக்க வேண்டிய நூல் இந்த மணிவாசக அணியமுதம். இதை எழுதிய இளைஞரான பாலச்சந்திரன் மூலம் மேலும் பல மதநூல்களை மீள்வாசிப்பு செய்யும்போது சாமானியர்களையும் சென்றடையும். அத்துடன் இந்து மத பின்னணியற்றவர்களும் பக்தி இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்