
டாக்டர் என். எஸ். நடேசனின்
‘வாழும் சுவடுகள்’
நூலறிமுகம்
-க. நவம்-
‘உலகில் சொல்ல வேண்டியதை எல்லாம் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக் கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளம் பிராணிகளும் தங்கள் மனோரதத்தை செலுத்தியாவது தேசயாத்திரை செய்து பார்க்க, பிறநாட்டு இலக்கியப் பயிற்சி அளிப்பதே இத்தொகுப்பின் நோக்கமாகும்’.
புதுமைப்பித்தன் இவ்வாறு ஒருமுறை மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி ஒன்றுக்கு வழங்கிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். தான் வாழும் கிணற்றுக்குள்ளேயே முழு உலகையும் அமுக்கிவிட்டதாக இறுமாப்படைந்திருந்த தமிழன், கிணற்றைவிட்டு வெளியே வரவேண்டும்; – வாழ்வியல் அனுபவங்களின் பல்வேறுபட்ட பரிமாணங்களை அவன் பார்க்க வேண்டும் – அனுபவிக்க வேண்டும் – பிறருடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் – விளைவாக வாழ்வின் உன்னதங்களை அவன் எட்டி அடைதல் வேண்டும் என்றெல்லாம் அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே புதுமைப்பித்தன் ஆசைப்பட்டிருக்கின்றார்.
அரசியல், சமூக, பொருளாதார காரணிகளுடன், வேறு இதர காரணங்களின் விளைவாகக் கிணறுகளை விட்டுப் பலவந்தமாக உலகின் அட்டதிக்கெங்கும் அண்மைக் காலங்களில் தமிழன் அள்ளிவீசி எறியப்பட்டுள்ளதனால், அவனுக்கு ஏற்பட்ட அனர்த்தங்கள் ஏராளம். ஆயினும் அவ்வாறான கசப்பான கொடுப்பனவுகளின் விளைவாக, பயன்மிக்க அறுவடைகளையும் அவன் கிடைக்கப் பெற்றிருக்கின்றான். தேச யாத்திரைகள் தமிழன் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டதனால், உலகம் அவனுக்கு இன்று எல்லாத் திசைகளிலும் திறந்து, விரிந்து கிடக்கின்றது. நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்களின் பயன்பாடுகளாலும், பலாபலன்களாலும் தமிழனின் பார்வையில் பதிய வெளிச்சங்கள் புலப்படத் துவங்கியள்ளன. புதுமைப்பித்தனின் அன்றைய கனவு – காலம் கடந்தாவது – நனவாகும் என்பதற்கான அறிகுறிகள் இப்போது தென்படுகின்றன. இவ்விதமான நம்பிக்கையின் ஓர் அடையாளமாக, தமிழுக்கு வித்தியாசமான படைப்பு ஒன்றினைத் தந்துவிட்டு, உலகின் ஒரு கோடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு படைப்பாளியையும் அவரது படைப்பையும் அறிமுகம் செய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
எழுதுபவரெல்லாம் எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் படைப்பாளியாக இருக்க முடியாது. எவன் ஒருவன் தனது எழுத்தின் வாயிலாகத் தன்னைப் பிறருக்கு வழங்குகின்றானோ – தனது அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்கின்றானோ – தனது உள்மன விகசிப்பை மற்றவர்களுக்கும் பாய்ச்சுகின்றானோ அவன்தான் படைப்பிலக்கியவாதி. ‘இறைவன் தன் இருப்பை உணர்த்துவதற்காகவே படைப்புத் தொழிலைச் செய்கின்றான்’ என்று மதவாதிகள் கூறுவர். இது ஒருவகையில் எல்லாக் கலைஞர்களுக்கும் பொருந்தும். ‘வாழும் சுவடுகள்’ என்ற நூலின் மூலமாக டாக்டர் என். எஸ். நடேசன் தனது இருப்பை உலகுக்கு உணர்த்தியிருக்கின்றார். தனது அனுபவங்களை உணர்வுபூர்வமாக தமிழ் வாசகர்களோடு பகிர்ந்திருக்கின்றார். இந்த நூலின் ஊடாகத் தன்னைத் தமிழ் வாசகர்களுக்குக் கொடுத்திருக்கின்றார். நடேசன் தொழில் வழியாகத் தனக்குக் கிடைத்த அனுபவங்களைச் சுவைஞர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட உணர்வலையைத் தோற்றுவிக்கும் வகையில் வழங்கியுள்ளார். தனியே அறிவின் பாற்பட்டதாக அல்லாமல், உணர்வின் வழியாக தனது அனுபவங்களுக்கு உருவம் கொடுத்துள்ள காரணத்தினால், தமிழுக்கு இதுவரை கிடைக்காத புதியதொரு இலக்கிய வடிவத்தை நடேசன் இதன்மூலம் வழங்கியிருக்கின்றார் என்றே கூறவேண்டும்.
தாவரங்கள், விலங்குகள், பறவைகள் மீது நம்பிகையுடன் கூடிய பிடிமானம் உள்ள ஏராளமானோர் எம்மிடையே இருக்கின்றனர். ஐந்தறிவு படைத்த பிராணிகளிடம் காணப்படும் அற்புதமான குணாம்சங்கள் பல, ஆறறிவு படைத்த மனிதனிடம் இல்லாமற் போனமை அந்தப் பிடிமானத்துக்கான காரணங்களுள் ஒன்றாக இருக்கலாம். அதேவேளை மனிதனிடம் உள்ள பல கேடுகெட்ட குணங்கள் தாவரங்கள், விலங்குகள், பறவைகளிடம் இல்லாதிருப்பது அதற்கான பிறிதொரு காரணமாகவும் இருக்கலாம். ‘மனிதனைப் பற்றி எவ்வளவு அதிகமாக அறிந்துகொள்கின்றேனோ, அவ்வளவுக்கு நான் நாயை நேசிக்சிறேன்’ என மார்க் ட்வைன் ஒருமுறை கூறியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது. மேலும் நாயிடம் காணப்படும் நன்றியுணர்வும், யானையிடம் காணப்படும் ஞாபக சக்தியும், தேனீக்களிடம் உள்ள சுறுசுறுப்பும், குருவிகளிடம் இருக்கும் குதூகலமும் மனித சாதியிடம் சிறுகச் சிறுக சிதைந்தழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. இந்த மனிதனுக்குச் சிகிச்சை செய்து கிடைக்கப் பெற்ற அனுபவங்களுக்கு வடிவம் கொடுத்து, நமக்கு படிக்கத் தந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். விலங்குகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற அனுபவங்களை எழுத்தில் வடித்தவர்கள் மிகச் சிலரே. அதிலும் தமிழில் தந்தவர்கள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லவேண்டும். ‘வாழும் சுவடுகள்’ என்ற நூலினை எமக்கு வழங்கியிருக்கும் நடேசன் ஒரு விலங்கு வைத்தியர். இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இலங்கை, இந்தியா உட்பட தற்போது அவர் வாழ்ந்துவரும் அவஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிடைத்த அனுபவங்களைத் தொகுத்திருக்கின்றார். அவர் தான் பராமரித்து வைத்தியம் செய்த விலங்குகளிடமிருந்து பெற்ற படிப்பினைகளை உணர்வோடு கலந்த உருவங்களில் இந்த நூல் வழியாக எங்களோடு பகிர்ந்திருக்கின்றார்.
விலங்குகள், பறவைகள் என்பவற்றைவிட, தான் உயர்ந்தவன் என்ற ‘மாமகுட மமதை’ மனிதனுக்கு இருப்பதற்குக் காரணம் அவனிடமுள்ள பகுத்தறிவுதான். ஆனால் இந்தப் பகுத்தறிவு மட்டும் இருந்தென்ன பயன்? பகுத்தறிவற்ற விலங்குகள், பறவைகளிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள் எராளம் உண்டு என்ற உண்மை ஒருபோதும் அவனுக்குச் சுடுவதில்லை. விலங்குகளிடம் காணப்படும் அவ்வாறான நல்ல பண்புகளை இந்த நூலின் பல இடங்களில் ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கின்றார். ஜெனி என்ற பெண்ணை பலாத்காரம் செய்தவனிடமிருந்து மீட்டுத்தந்த ரைசன் எனும் நாயின் விசுவாசம் – காலையில் தன் எஜமானானனைத் துயில் எழுப்பி, மாலையில் அவர் வரவுக்காக வாசலில் காத்திருக்கும் கில்பேர்ட் என்ற நாயின் அன்பு – எதிரும் புதிருமாக இருந்து யுத்தப் பிரகடனம் செய்து, ஓய்ந்து பின்னர் தமக்கிடையே ஒரு சமரச ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு, வீட்டின் பின் கட்டில் வாழ்ந்த நாயும் – முன்புறத்தில் வாழ்ந்த பூனையும் வேலிச்சண்டை பிடிப்பவர்களுக்கு கற்பிக்கும் பாடங்கள் – என்பனவும் இவை போன்ற இன்னும் பலவும் மனிதன் விலங்குகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பண்புகள் என்பதை நடேசன் சூசகமாகச் சொல்லிக் காட்டியிருக்கின்றார். இவ்வாறாக விலங்குகளிடம் காணப்படும் நல்ல குணாம்சங்களை நினைவுபடுத்துவதன் மூலம், மனிதன் தன் கண்களைச் சற்று அகலத் திறந்து கொள்வதற்கு உதவலாம் என அவர் எதிர்பார்க்கின்றார்.
மனிதனைப் போன்று இந்த உலகின் ஏனைய ஜீவராசிகள் அனைத்தும் அன்பு என்ற பற்றுக் கோட்டினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்புக்காக அவையும் யாசிக்கின்றன. அன்பு என்ற நூலிழை அறுந்து போகும்போது விலங்குகள்கூட மனமுடைந்து போய்விடுகின்றன. ‘ஒரு பூனையின் பார்வையில் எல்லாப் பொருட்களும் பூனையின் பொருட்கள் தான்’ என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. அதன் உட்பொருளை உணரத் தவறியோ அல்லது மறந்தோ என்னவோ, ஆசிரியர் நடந்துகொண்ட விதத்தினால் ஏற்பட்ட இழப்பினை ‘இது ஒரு ராணியின் கதை’ யில் அவர் கூறியிருக்கின்றார். குருவியைப் பாதுகாப்பதற்காக பத்திரிகையைச் சுருட்டிப் பூனையின் தலையில் அடித்ததையும், இரவு பன்னிரண்டு மணிக்குப் புத்தாண்டு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கத் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தபோது, ஓடி வந்து மடியில் தாவிய பூனையை வெளியே தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தியதையும் வைத்து அந்தச் சின்னஞ் சிறிய பிராணி, தன் எஜமானனின் அன்பை தான் இழந்தவிட்டேனோ என்று எண்ணி வருந்தி – பின்னர் துயரம் தாளாமல் வீட்டை விட்டே ஓடிப்போனமை, இந்த நூலில் சித்திரிக்கப்பட்டுள்ள மனசை உதைக்கும் பல சம்பவங்களுக்கு ஒரு நல்ல உதாரணமாகும். ‘வறுமைகளிலெல்லாம் கொடிய வறுமை, தனிமையும் நேசிக்கப்படாமையும் தான்’ என்பதை மனித இனம் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள்கூட உணர்ந்தழுகின்றன போலும்!
கடந்த நூற்றாண்டின் கடைக்கூறில் ஈழத்தமிழனின் வாழ்வியற் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, ஒரு நாட்டில் – ஒரு எல்லைக்குள் வாழும் இனம் என்றில்லாமல் சர்வ உலகும் வியாபித்து வாழும் ஓர் இனத்தவனாக அவன் இப்போது பரிணாமம் அடைந்துவிட்டான். அவனது கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பன ‘கலவைகள்’ ஆகிப் பின்னர் பிரிக்க முடியாத ‘சேர்வைகள்’ ஆதல் இனி வருங்காலங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடப்போகின்றது, கலப்புத் திருமணங்கள் உட்பட! வெளிநாடுகளில் எமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் அல்லது அவர்களது பிள்ளைகள் கறுப்பர்களாகவோ அல்லது வெள்ளையர்களாகவோ அல்லது மஞ்சள் நிறத்தவர்களாகவோ வந்து பிறக்கக்கூடும். அப்போது ‘குய்யோ முறையோ’ என்று தலையில் அடித்துக் கூக்குரலிட்டுக் குழறி அழுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாது என்ற கையாலாகாநிலை வெகு தூரத்திலில்லை! ‘சாதகம் பொருந்தாவிட்டாலும் சாதி பொருந்தவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்து வந்த யாழ்ப்பாணக் கந்தசஷ்டிக் கலாசாரம் இவ்வாறான புதிய ‘கலர்’ பிரச்சினைக்கு இப்போதிருந்தே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கான அபாய அறிவிப்பாகவோ அல்லது இதற்குக் கட்டியம் கூறுமாப்போலவோ, மலையகத்தில் ராகலையில் சூரியகாந்தி தோட்டத்தில் வாழ்ந்த மாரியம்மாவுக்கும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த தோட்டச் சுப்ரிண்டனான வெள்ளைக்காரனுக்கும் பிறந்த ராமுவையும் பானுவையும் ‘கலப்பு உறவுகள்’ என்ற சித்திரத்தில் நடேசன் காட்டியிருக்கின்றார்.
என்னதான் சௌகரியமான வாழ்க்கையினை வெளிநாடுகளில் நாங்கள் வாழ்ந்த போதிலும், சொந்த மண்ணின் சுகங்களையும் சோகங்களையும் நினைந்தழுவதும் நினைந்தழிவதும் மண்ணை நேசிக்கும் எங்கள் ஒவ்வொருவரது மனங்களிலும் தினம்தினம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. அவுஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் வளர்ப்புப் பிராணிகளுக்கென்று வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமைகள், சலுகைகள்கூட எங்கள் நாட்டிலுள்ள எமது மக்களுக்கு இல்லையே என்று எண்ணி மனம் வெதும்புவதும் – எமது மண்ணில் இயற்கையோடு இணைந்து உறவாடி வாழ்ந்த வாழ்க்கை, புகலிட வாழ்வில் கிடைக்கும் செயற்கையான வாழ்வில் இல்லையே என்ற ஏக்கமும் – வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படாத காரணத்தினால் மிகவும் அடிமட்ட வாழ்வையே எமது நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது மக்களுக்கு உதவ முடியவில்லையே என்ற ஆதங்கமும் – இந்த நூலின் பக்கங்கள் பூராவும் இழையோடி நிற்கின்றன. மேற்குலக நாடுகளின் சில்லறைத்தனமான இன்பலாகிரியில் திழைத்து மகிழும் எம்மவர் மத்தியில், எமது மண்ணையும் மக்களையும் பற்றி உண்மையாகச் சிந்திப்பவர்களைக் காண்பது அபூர்வம். ‘வாழும் சுவடுகள்’ நூலின் ஆசிரியர் நடேசன் எமக்குள் அபூர்வமாகக் காணப்படும் ஒருசிலருள் ஒருவர் என்பதை நூலின் உள்ளடக்கங்கள் உறுதி செய்கின்றன.
மேலும் இந்த நூலின் வாயிலாகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, படிப்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாத வகையில் ஆங்காங்கே எள்ளல் கலந்த நகைச் சுவையையும் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கின்றார். ‘சோப்பு என்று தமிழில் சொல்லலாம் தானே சார்’ என்று ராமசாமிக் கோனார் சொன்னதும் -‘ஒஸாமா பின்லேடனின் படத்தைப் பார்த்த ஜோர்ஜ் புஷ்’ என்று உவமை கூறியிருப்பதும்– நாய் வயிற்றில் பிறந்த பலூனின் கதையும் – ‘முன்னங் காலைத் தூக்குவது மன்னாரில் முத்துக் குளிப்பவர்கள் மண்டைக் கயிற்றை மச்சானிடம் கொடுப்பது போன்ற செயலை ஒத்ததாகும்’ எனக் குறிப்பிட்டதும் – சில உதாரணங்கள்.
’வன்னப் பறவைகளைக் கண்டு மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்’ என்றும், ’கொத்தித் திரியும் கோழியைக் கூட்டி விளையாட வேண்டும்’ என்றும், ’வாலைக் குழைத்து வரும் நாய் நமக்கு நல்ல தோழன்’ என்றும், ’வண்டி இழுக்கும் குதிரையையும் வயலில் உழுது வரும் மாட்டையும் அண்டிப் பிழைக்கும் ஆட்டையும் நாம் ஆதரிக்க வேண்டும்’ என்றும் பாரதி நமக்குச் சொல்லித் தந்தான். இவற்றை நாம் சின்ன வயதில் பாடங்களில் படித்திருக்கின்றோம். ஆனால் பறவைகள், விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து மகிழும் பாரம்பரியம் மேற்கு நாடுகளில் வளர்ந்திருப்பது போல எமது கலாசாரத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும். கடந்த கிறிஸ்மஸ் தின விடுமுறைக் காலத்தின் போது லண்டன் மாநகரில் மட்டும் வளர்ப்புப் பிராணிகளுக்கு உடைகள், அன்பளிப்புப் பொருட்களுக்கென்று 54 மில்லியன் பவுண்ஸ் பணத்தை அந்நகர மக்கள் செலவு செய்துள்ளார்கள்! இவ்வாறாக உலகின் வெவ்வேவேறு திக்குகளில் வாழும் மக்கள், தம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக்குவதற்கென வெவ்வேவேறு வழிவகைகளைக் கடைப்பிடிக்கின்றனர். அன்பு எங்கிருக்கின்றதோ அங்குதான் வாழ்வு அர்த்தம் பெறுகின்றது என்ற உண்மையை உறுதிப்படுத்தும் இது போன்ற உதாரணங்களை ஒத்ததாக நடேசனின் அனுபவ முத்திரைகள் பலவும் அமைந்துள்ளன.
‘வாழும் சுவடுகள்’ நூலின் ஆசிரியர் நடேசன், மிருக வைத்தியத் தொழிலை வெறுமனே ஒரு தொழிலாகவோ அல்லது கடமையாகவோ மட்டும் செய்பவராகத் தெரியவில்லை. அற்ப பிராணிகள் என்று தட்டிக் கழித்துவிடாமல், நடு இரவுகளிலும் அகால வேளைகளிலும் சிகிச்சைக்கென அவர் புறப்பட்டுப் போன சம்பவங்கள் பல இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன. உயிர்களின்பால் கொண்ட உண்மையான அன்பு, இரக்கம் என்பவற்றின் அடிப்படையில் ஆத்ம சுத்தியுடன் அவர் தமது தொழிலைச் செய்து வருவதாகவே தெரிகின்றது. மேலும் மனிதனுக்கு மட்டுமல்ல சகல ஜீவராசிகளுக்கும் வாழ்வை விட உயர்ந்தது உலகில் வேறொன்றும் இல்லை – என்பதை நியாயப்படுத்தும் பல சம்பவங்களையும் அவர் இந்நூலில் எடுத்துக் கூறியிருக்கின்றார். ‘மிருக வைத்தியரான எனக்கு, நாலு கால் பிராணிகள் மட்டுமே கருணைக்கு உரியவை என்ற அடிப்படையில் வைத்தியம் பார்க்கும் போது பத்துக் கால் நண்டுக்கும் உயிர்வாழ உரிமை உண்டு என்ற உண்மை புரியத் தொடங்கியது’ என்று ‘அகதி அந்தஸ்துக் கேட்ட பெருநண்டு’ எனும் படைப்பில் கூறுகின்றார். அரசியல், சமூக மற்றும் மனித உரிமைகள் துறைகளில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்த மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவரது நியாயமான சிந்தனை இது. எனவே தனிமனிதனது வாழும் உரிமையை மதிக்காத இன்றைய உலகில் பிராணிகளின் உயிர்களுக்கான உரிமைப் பிரகடனம் என்று இவரது நூலை நாம் துணிந்து கூறலாம்.
‘வாழும் சுவடுகள்’ பிரபல எழுத்தாளர் முருகபூபதியின் முகவுரையும் தமிழ் இலக்கியத்தில் பல்வேறு வடிவங்களையும் பரீட்சித்துப் பார்த்து வெற்றிகண்ட, எழுத்துலக முன்னோடியான எஸ். பொவின் முன்னீடும் அலங்கரிக்க, மித்ர வெளியீட்டின் கையடக்கமான ஒரு நூலாக வெளியிடப் பட்டுள்ளது. விலங்கு நோய்களுக்கு மருந்து மார்க்கம் சொல்லும் நடேசன் தமது அனுபவங்களை இதனூடாக எங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, எமது சமூக வியாதிகளுக்கும் ஆங்காங்கே ஒளடதம் வழங்கியிருப்பது போன்ற ஒரு புதிய அனுபவம் ஏற்படுகின்றது. இது தமிழுக்குப் புதிது. வரவேற்கப்படவேண்டியது. இதனைப் படித்து முடித்த போது ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்ற பாரதியின் வரிகள் மனதில் ஓங்கி ஒலிப்பதை உணரமுடிகின்றது. அதுவே ஆசிரியரின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியல்லவா?


மறுமொழியொன்றை இடுங்கள்