நடேசன்
உடலில் பச்சை குத்தியிருப்பவர்களை பார்த்ததும் எனக்கு பல வருடகாலத்தின் முன்பு படித்த மருத்துவ புத்தகத்தில் எழுதியிருந்தது நினைவுக்கு வரும். ஹெப்பரைற்றிஸ் நோய், பச்சை குத்தியபோது அவர்களிடத்தில் ஊசி மூலம் தொற்றி இருக்கலாம்.
அந்தக் காலத்தில் பச்சை குத்தும் ஒரே ஊசிகள் சுத்தமாக்கப்படாது பலர் மீது மீண்டும் மீண்டும் பாவிக்கப்படுவதே இதற்குக் காரணம். பலர் வெளிநாடுகளிற்கு பயணம் செல்லும்போது இப்படி பச்சை குத்திக்கொள்வது மரபாக இருந்தது.
ஒரு காலத்தில் கடலோடிகளும் மற்றும் சண்டியர்களும் பயங்கரமான சித்திரங்களை வெளித்தெரியும் தங்கள் உடல்பகுதிகளில் பச்சை குத்தியபடி தோற்றமளிப்பார்கள். எங்கள் ஊரில் ஒரு சண்டியரது தோளில் பிச்சுவாக் கத்தி பச்சை குத்தப்பட்டிருந்ததை சிறுவயதில் அவதானித்திருந்தேன். அந்தக் கத்தி அவரை ஒரு சண்டியனாக என் மனதில் பதிவு செய்திருந்தது.
நான் சொல்லும் காலம் இப்பொழுது காலமாகி விட்டது. பச்சை குத்துவது தேர்தல் வாக்குரிமைபோல் ஜனநாயகப்படுத்தப்பட்டு ஆண்கள் மட்டுமல்ல பெண்களிடமும் சென்றடைந்துவிட்டது.
பச்சை குத்துமிடங்களும் இப்பொழுது மாறிவிட்டன. மேலும் பச்சை குத்துபவர்கள் பெருநகரங்களில் தங்கள் தொழிலை நியோன் மின்விளக்குகளின் கீழிருந்து பிரபலப்படுத்தும் காலமும் பச்சை குத்தும் ஊசிகள் மறைந்து மின்சாரத்தில் இயங்கும் ரட்ரு கன் என்பன வந்துவிட்டன.அவற்றை மருத்துவ உபகரணங்களைப்போல் தொற்று நீக்கிப் பயன்படுத்துகிறார்கள். இப்பொழுது பச்சை குத்துபவர் ஒரு ஓவியக் கலைஞராக (உடலோவியர்) பேசப்படுகிறார். சிலகாலத்தின் முன்பு எனது கிளினிக்குக்கு நாய் கொண்டுவரும் பச்சை குத்துபவரை அவரது இடத்திற்குச் சென்று அவதானிப்பதற்கு நேரம் கேட்டிருந்தேன். அவரும் அதற்குச் சம்மதித்திருந்தார். பிற்காலத்தில் ஏதோ காரணத்தால் அவர் என்னிடம் வருவது நின்றுவிட்டது.
பச்சை குத்தல் தற்பொது புது மோஸ்தர் என்பதாக அவுஸ்திரேலியாவில் பலரிடம், அதுவும் இளம் தலைமுறையினரிடத்தில் பார்க்க முடிகிறது. தங்களின் உடலை தாங்கள் என்னவும் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை எழுதிவைக்கும் சுவராக பயன்படுத்துவது சகல மட்டத்திலும் பரவியுள்ளது.
அதிலும் மத்தியதரவகுப்பு பெண்கள், ஆண்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனாலும் பச்சை குத்தியவர்கள் மேல்மட்ட வேலைகளில் இன்னமும் கீழ்முகமாக பார்க்கப்படுவதால் உத்தியோகங்களுக்காக நேர்முகங்களுக்குச் செல்வதற்கு அது தடையாக உள்ளது. இதனால் பலர் இளவயதில் பச்சை குத்தியவற்றை பிற்காலத்தில் அகற்ற முயற்சிப்பார்கள். எனக்குத் தெரிந்த பெண் தனது காதலனது பெயரை பச்சை குத்தி இருந்தாள். ஆனால் அந்தக் காதலன் அவளை விட்டு கழன்றபின்பு அவள் அந்தப் பச்சையை அகற்றினாள். அது பெரிய வடுவாக மாறியது. நல்லவேளையாக அவளது இடுப்பில் இருந்ததால் அவளால் அதனை ஆடையால் மறைக்க முடிந்தது. இரண்டாவது காதலனை திருமணம் செய்து குடும்பமாகிவிட்டாள். அவளுக்கு இந்தப் பழக்கங்கள் நீடித்திருந்தால் அவளின் நிலை என்ன?
தற்போது இந்த பச்சை குத்தல் ஐரோப்பிய வம்சத்தில் இருந்து இந்திய இலங்கை இளம் தலைமுறையினரிடத்திலும் பரவிவருகிறது. நல்லவேளையாக எனது பிள்ளைகளை இந்த ஆசை பீடிக்கவில்லை என்பது தந்தையாகிய எனக்கு மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது.
சமீபத்தில் நான் சந்தித்த பச்சை குத்திய ஜோன் கலகரிடம் அதன் காரணம் அறிந்தபோது பச்சைகுத்தலுக்கு முற்றாக எதிராக இருந்த எனது கருத்து இப்பொழுது மாறிவிட்டாலும், அதை ஒரு பாதகமான செயலாக நினைக்கும் எண்ணம் மாறித்தான்விட்டது. அறுபது வயதிற்கும் பின்பு மனிதனால் தனது சிந்தனையில் கருத்துகளில் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை ஒரு சிறு சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
நான் பார்த்த ஜோன் கலகரின் பச்சை குத்திய முஷ்டியே எனக்கு ஞானோதயம் தரும் அரசமரமாக மாறியது.
அது ஒரு சனிக்கிழமை. காலை நேரத்தில் ஜோன் கலகர் ஒரு அழகான நீல நிற ஸ்ரவ்பேட்சயர் ரெரியர் என்ற வித்தியாசமான நாய்க்குட்டியை நோய் தடுப்பூசிக்காக கொண்டு வந்திருந்தான். இந்த நாய்க்குட்டியின் நீல நிறம் மிகவும் அரியது. இந்த இனத்தில் நீல நிறம் இருப்பதாக அறிந்திருந்தாலும் இதுவே நான் முதன் முறையாக பார்த்தது. அந்த நாய்க்குட்டிதான் அழகானது எனத் தனக்குள்ளே புரிந்து கொண்டு தன் அழகை உணர்ந்து கர்வம் கொண்ட அழகிய பெண்போல் அதுவும் மேசையில் இருந்து பிரத்தியேகமாக போஸ் கொடுத்தது.
‘இந்த நாய்க்குட்டி அழகியது மட்டுமல்ல மிகவும் ஸ்மாட் என்று ஜோனிடம் சொல்லிவிட்டு எனது தொலைபேசியால் முகநூலில் பதிவிட இருப்பதாகச் சொல்லி அதனைப்படம் எடுத்தேன்.
‘உண்மைதான் இந்த நாய்க்குட்டி எங்கள் வீட்டிற்கு வருகை தந்தபின்பு எங்கள் வீட்டில் மகிழ்ச்சி பெருகியுள்ளது’ என்று அவர் சொன்னபோது இதுவரையும் நாய்க்குட்டியை பரிசோதித்து அது சம்பந்தமான விடயங்களை சொல்லிக் கொண்டிருந்த நான் எனது வேலையை நிறுத்திவிட்டு ஜோனை ஏறிட்டுப் பார்த்தேன்
ஆறரை அடி உயரமான நீலநிற கண்களுடய ஜோன் முப்பத்தைந்துக்கும் நாற்பதற்கும் இடையிலான வயதானவன். அவன் பேசும்போது சிறிய கொன்னையை அவதானிக்க முடிந்தது கோடைகாலத்திற்காக நீல நிற கையற்ற பெனியனை அணிந்திருக்கும்போது அவனது உடலின் மேற்பகுதி எங்கும் பல வடிவங்கள் மற்றும் சில வசனங்கள் பல கோணத்தில் சிவப்பு கருப்பு வர்ணங்களில் பச்சை குத்தப்பட்டிருந்தது.
வலது மேற்கையில் அமெரிக்க இந்தியன் பறவைகளின் இறக்கைகளில் உருவாக்கப்பட்ட கிரீடத்தை வரைந்திருந்தான். அதற்குக் கீழே ஒரு வாள் வரையப்பட்டிருந்தது. இடது கையில்மேல் பகுதியில் ட்ராகனும் அதன் கீழே படமெடுக்கும் பாம்பும் வரையப்பட்டிருந்தது. தொடர்புகள் அற்ற படிமங்களாக அல்லது தீய கனவை கண்டு விழித்தவனது மனதின் தொடர்பற்ற நினைவுகளாக எனக்குத் தெரிந்தது. அவனது உடல் குழந்தைகள் வண்ணம் தீட்டி விளையாடிய ஓவிய பேப்பர் போல் காட்சியளித்;து.
தனக்கு எட்டு வயதிலும் ஆறு வயதிலும் இரண்டு பையன்கள் இருவரும் நாய்குட்டியை மிகவும் நேசக்கிறார்கள் என்றான்
‘ நல்லது இந்த வகை நாய் குட்டிகள் மிகவும் தோழமையானவை. அத்துடன் அதிக நோய்ப்பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் குட்டையான மயிர்கள் இருப்பதால் தோல் அலற்சி, முக்கியமாக வசந்த காலத்தில் வரலாம். இந்த வர்க்கத்தின் தலை பெரிதாக இருப்பதால் பெண் நாய்கள் குட்டிபோட கஷ்டப்படும்.’
‘வெளியே நாங்கள் விடப் பேவதில்லை. வீட்டுக்குள் மட்டுமே வைத்து வளர்க்கப் போகிறோம்.’
நான் அதற்கு ஊசியை செலுத்தி, பூச்சி மருந்தும் கொடுத்த பின்பு அறையைவிட்டு இருவரும் வெளியே வந்ததும், திரும்பவும் எனது நேர்ஸ் ஷரனிடம், ‘நாய்குட்டிக்கு பையன்களுடன் மிகவும் பொழுது போகும். அதிலும் எனது கடைக்குட்டியின் படுக்கையில்தான் இரவில் படுக்கிறது.’ என்றான்.
‘அதை உங்கள் மனைவி ஏற்றுக் கொள்வாளோ’ –
இது ஷரனின் கேள்வி. தொடர்ச்சியாக மனிதர்களிடம் உரையாடுவதில் அவளுக்கு திறமையுண்டு. அது ஒரு விதமான கலை.
‘மனைவியில்லை. நான் தனியே இரண்டு பிள்ளைகளையும் வளர்க்கிறேன் ஆறு வருடங்களாக. என்றான்
இப்பொழுது இருவரும் திடுகிட்டோம்.
நமது மட்டுமல்ல மூன்றாவது மனிதனின் அந்தரங்கமும் புனிதமானது. அதையே பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஏன் எழுத்தாளர்களும் வியாபாரமாக்கவில்லையா…?
ஆனால், ஜோன் கலகர் தனக்கு மனைவி இல்லை எனச் சொல்லி அடுத்த அங்கத்திற்கு ஆவலை அதிகப்படுத்தும் தொலைக்காட்சியின் நாடகம் போல் எமக்குள் ஆவலைத் தூண்டி கொழுந்து விட்டெரிய பண்ணிவிட்டான்.
‘மிகவும் கடினமானது உனது நிலை. அதுவும் இரண்டு பிள்ளைகளுடன். எனக்கு கணவனுடன் மூன்று ஆண் பிள்ளைகளை வளர்ப்பது கடினமகிறது.’ என்றாள் ஷரன்.
பேச்சை எப்படித் தொடருவது என்பது ஷரனிடம் நான் நித்தம் கற்கின்றேன். முக்கியமாக ஒருவரது அந்தரங்கத்தை அவருக்கு எந்த வேதனையோ கோபமோ ஏற்படாமல் செய்யவேண்டும். சிறுவிரலால் பனம் நொங்கைத் தோண்டிய இளமைக்காலம் நினைவுக்கு வருகிறது.
‘நானாக விரும்பி இந்த நிலையைத் தேடவில்லை. அவளாக என்னை விட்டு விலகினாள். எனக்கு மனைவியாக இருக்க வேண்டிய தேவையில்லை. நோயுற்ற மகனை சாதாரணமாக வந்து பார்க்கும்படி அழைத்போதும் அவள் வரவில்லை.
அடுத்ததாக மகனுக்கு என்ன நோய் என்று கேட்க எம்மிடையே தயக்கம்.
தனது கடன் அட்டையின் மூலம் பணத்தை செலுத்தி விட்டு எனக்கு தனது வலது கையின் முஷ்டியை காட்டினான்.
அதில் 2014 என இருந்தது.
‘அது என்ன? ” என்றேன்.
‘2014 எனது மகனுக்கு கான்சர் நெஞ்சுக்குள் வந்தது என கண்டுபிடித்தார்கள். அந்த வருடம் எனக்கு மறக்கமுடியாது. அதை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன்.’
‘அப்படியா?’
அதற்குமேல் அவனது சொந்தமான சோகத்தில் நாம் என்ன பேச முடியும்?
இடது கை முஷ்டி வெறுமையாக இருந்தது.
‘அவனது கான்சர் முற்றாக குணமாகியதும் இதில் அந்த வருடத்தை பச்சை குத்தவிருக்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.’
‘எவ்வளவு காலம்?
‘ஆறு வருடங்கள் கான்சர் இல்லையென்றால் இனிமேல் வராது என உறுதியாக செய்யலாம் என வைத்தியர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
‘இப்படியான நோய் மிகவும் கடினமானது. அதுவும் இந்த வயதில். துன்பத்தை சகித்துக் கொள்வதற்கான மனத்திடம் வருவதற்கு முன்பே துன்பம் தொத்திக்கொள்கிறது.’
‘ஜேம்ஸ் நல்லா படிக்கிறான். மிகவும் சூட்டிகையானவன்’ என சொல்லயபடி குட்டிநாயை இடுப்பில் வைத்தான் ஜோன்.
ஜோன் உனக்கு எல்லாம் நன்றாக நடக்க எங்கள் வழ்த்துகள்.
அவன் சென்ற பின்பு இப்படியும் ஒரு தாய் இருக்கமுடியுமா? என்றாள் ஷரன்.
‘இருக்கிறாள் என்கிறான் ஜோன். ஆனாலும் இப்பொழுது ஒரு சாராரின் கதைமட்டுமே கேட்டோம். நாணயத்தின் பக்கம்போல் அடுத்த பக்கம் நமக்குத் தெரியாது. அவர்களிடம் என்ன பிரச்சினையோ? ஆனால் பாசமான தந்தை ஜோன் என்பது மட்டுமே தற்போது நமக்குத்தெரியும்.’’
‘உண்மைதான் அவள்கூட தான் சரியான தாய் இல்லை என்பதை உணர்ந்து விலகி இருந்தால் அது நல்லதுதானே என தனது அபிப்பிராயமே இறுதியான வார்த்தையாக்கி விட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள் ஷரன்.
பல வருட திருமணபந்தத்திலும் பல பெண்களோடு பழகியதிலும் இறுதி வார்த்தையை அவர்களுக்கு உரிமையாக்கி விடும்போது அமைதியான சூழ்நிலை ஏற்படும் என்பதை அறிந்திருந்தேன்.
( டாக்டர் நடேசனின் வாழும்சுவடுகள் அனுபவக்கதைகள் இவ்வருடம் காலசுவடுகள் பதிப்பகத்தால் சென்னையில் வெளியிடப்பட்டது )
மறுமொழியொன்றை இடுங்கள்