சிங்களவர்கள் மட்டுமா இனவாதிகள்?

நடேசனின் நேர்காணல் –
கேள்விகள் அனோஜன் பாலகிருஸ்ணன்.

நன்றி ஆட்காட்டி

மலேசியன்ஏர் லைன் 370
தாங்கள் பிறந்துவளர்ந்த சூழல், இளமைவாழ்க்கை,கல்விப்பின்புலம், இலக்கியத்தின் மீதான பிரியத்தை அதிகரிக்க எவ்வாறு ஒத்தாசை செய்தது? தங்கள் குடும்பத்திலும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள் உண்டா?

சிறு வயதில் கண் தெரியாத பாட்டாவிற்கு வீரகேசரி, கல்கி உரக்க வாசிப்பது எனது கடமையில் ஒன்று, அதற்கு வேதனமும் இருந்தது. இதன் பின்பு நானாக கதைப்புத்தகங்கள் வாசிப்பது அதிலும் யாழ்ப்பாண நூல்நிலையத்தில் உள்ள ஏராளமான கதைப் புத்தகங்களை வாசித்தேன். முக்கியமாக பல்கலைக்கழகப் பரீட்சை எடுத்துவிட்டு இறுதி முடிவிற்காக காத்திருந்து பின்பு பல்கலைக்கழகம் செல்ல என கிட்டத்தட்ட ஒரு வருடம் இருந்த காலத்தில் நேரத்தை கடத்த இந்துக்கல்லுரி நூலகம் மற்றும் யாழ்ப்பாணநூலகம் எனக்கு உதவியது. பல்கலைக்கழகம் சென்ற பின்பு நான் தமிழ் வாசித்தது இல்லை, பின்பு இந்தியா சென்றிருந்த காலத்தில் அங்குள்ள லெண்டிங் நூலகங்கள் அதன்பின்பு ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் அலுவலகத்தில் உள்ள பல முக்கியமான பொதுஉடைமை சம்பந்தமான புத்தகங்களை வாசித்தேன். இவையெல்லாம் துண்டு துண்டாக கிடைத்த வாசிப்பு அனுபவங்கள் அப்பொழுதெல்லாம் வாசிக்கும்போது பொழுதுபோக்கு என்ற நோக்கம் மட்டுமே இருந்தது.

இலக்கியம் என்று சொல்வது இந்துக்கல்லூரியில் மிகவும் கசப்பான பாடமாகியது. எட்டாம் வகுப்பில் இந்துக்கல்லூரியில் சேர்ந்ததும் கம்பராமாயண செய்யுள்களை மனனம் செய்ய வேண்டும். லம்பம் என நாங்கள் சொல்லும் பொன்னம்பலம் மாஸ்டரின் ஆய்கினைதான் நினைவு வரும் ‘கருமலை செம்மலை’ என இராமன் இலட்சுமணன் சம்பந்தமான செய்யுளை பாடமாக்குவதைத் தவிர்ப்பதற்காகவே விஞ்ஞானம் படிக்கச் சென்றேன். இதற்குமேல் என் அப்பா தமிழ் வாத்தியார் அவரது நினைப்பும் சேர்ந்து அந்தப் பக்கம் செல்லாமல் வெளித்தள்ளியது இவ்வளவிற்கும் நான் அதிக புள்ளிகள் எடுத்த பாடங்கள் தமிழ் சரித்திரம் போன்ற கலைப்பாடங்கள்தான்.

2. புலம்பெயர் வாழ்கையை தேர்வு செய்யவேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது? அவுஸ்திரேலிய வாழ்வு உங்களுக்கு உவகையாக இருகின்றதா?

புலம்பெயர்வு வாழ்வு நான் தேர்தெடுக்கவில்லை. எமது தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் இயக்கத்தவர்களின் கொடை. அதுவும் கடைசியில் விடுதலைப்புலிகளின் போராட்டம் கடைசித்தமிழனையும் குழல் புட்டாக வெளித்தள்ளியிருக்கும். நல்லவேளை மகிந்த இராஜபக்சவின் புண்ணியம்.

இலங்கையில் 1984ல் இறாகலையில் வேலை செய்தபோது அங்கு நடந்த சிறுசம்பவத்தால் நானும் விடுதலைபுலியாக ஆக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்பதால் இந்தியாவுக்கு தப்பிச்சென்றேன். அது ஒருவழிப்பாதை. மேலும் நான் அரசியல், அகதி வேலைகள் என தொடர்ந்ததால் வேறு வழியில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்பாக அக்காலத்தில் இலங்கையின் தெற்கே வடக்கே எங்கும் இருக்க முடியாது என்பதால் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டேன். எனது மனைவியின் சகோதரர் அவுஸ்திரேலியாவில் இருந்ததால் குடிவருவது இலகுவானது.
அவுஸ்திரேலியா வந்தபின்பு சிலவருடங்கள் சென்றது எனது கல்வித்தகமை இங்கு ஏற்றுக்கொள்வதற்கு. அதன்பின்பு இங்கு வாழ்வது இலகுவானது.

அவுஸ்திரேலியா குடியேற்றவாசிகளை வரவேற்று நடத்துகிறது. குடும்பம், வீடு, வாழ்வு என மத்தியதரவாழ்வு இங்கும் அமைந்துவிட்டது. ஒருவிதத்தில் நான் கால்நூற்றாண்டுகள் இங்கு வாழ்ந்து தொழில் செய்து பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகியதால் அவுஸ்திரேலியனாக எண்ணும் நிலையுள்ளது. இந்தநாட்டில் நான் அன்னியனாக எண்ணிய தருணங்கள் மிகக் குறைவு. இதே போல் இலங்கையில் கண்டி அனுராதபுரம் என எட்டு வருடங்கள் வாழ்ந்தபோது அங்கும் நான் ஒன்றி வாழ்ந்தேன் அதேபோல் இந்தியாவில் மூன்றுவருடங்கள் இருந்தபோது அங்கும் அந்த நாட்டவனாக வாழ்ந்தேன். நமது வாழ்வு, குடும்பம், நமது மனம், மற்றும் நண்பர்கள் அமைவதைப் பொறுத்தது. நான் எப்பொழுதும் சமூகத்தில் ஒட்டாது வாழ்ந்தது கிடையாது.

அவுஸ்ரேலியா குடியேற்றவாசிகளை வரவேற்கும் நாடு என்கிறீர்கள். ஆனால் அண்மையில் கூட ‘ரொஹிங்கியா’ முஸ்லீம்கள் நடுக்கடலில் தவித்த கண்டுகெள்ளவில்லையே ? இப்போதிருக்கும் டோனிஅபட் புகளிடக் கோரிக்கள்யாளர்களுக்கு எதிரானவர் என்றும் அவருடைய காலத்தில் பல புகலிடக்கோரிக்கையாளர்கள் மரணமடந்தும் உள்ளானர் என்ற குற்றச்சாட்டுக் குறித்து ?

அவுஸ்திரேலியா வருடத்திற்கு இரண்டு இலட்சம் வெளிநாட்டவர்களை உள்ளேற்கிறார்கள். இதில் 12 ஆயிரம் அகதிகளாகவும் வருகிறார்கள் . தற்போது உலகத்தில் 500 இலட்சம் பேர் அகதிகளாக வர இருக்கிறார்கள். எந்த ஒரு நாட்டாலும் சமாளிக்க முடியாத அளவில் இந்த பிரச்சனை உள்ளது. மேலும் அகதிகள் பிரச்சனையில் மேலதிகமாக, ஆட்கடத்தல் பெரிய உலக வியாபாரமாக உள்ளது. சிறிய படகுகளில் அதிகமானவர்கள ஏறும்போது கடலில் மூழ்குவது எப்பொழுதும் நடக்கும். ஒவ்வொரு நாடுகளிலும் அரசியல், இன, மதப் பிரச்சனை மக்களை வெளித்தள்ளுகிறது. குறைந்த பட்டசம் மேற்கு நாடுகள் ஏற்றுக்கொள்வதும், பின்பு ஏற்றுக்கொண்டவர்களை சமமாக நடத்துவதும் பாராட்டக்கூடியவிடயம். ஆசியாவில் இருந்து மக்கள் அவுஸ்திரேலியாவை நோக்கி வருவது வெளிநாட்வர்களுக்கு அவுஸ்திரேலியா சொர்க்மாக தெரிகிறது. ஆனால் இந்த அகதிகள் விடயம் தற்பொழுது சர்வதேசப் பிரச்சனையாகும்.

3 “திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேச முடியாமற்போன சிறுவனைப் போன்று நானும் எனது வாழ்விடத்தில் நடந்த சம்பவங்களை வெற்றுத் தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்” என்று வண்ணாத்திக்குளம் நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் எழுத்துலக பிரவேசம் நாவல் வடிவில் ஆரம்பித்தது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் உங்கள் கிறுக்கல்களை நாவலின் வடிவத்தில் இருந்து ஆரம்பித்ததுக்கான காரணம் என்ன? நாவலில் படைப்பாக்க வடிவத்தில் ஆரம்பித்தே சிறுகதைகளுக்கு வந்திருந்தீர்கள், இவை தற்செயலாக நடந்த ஒன்றா?

80-83 காலத்தில் நான் மதவாச்சியில் மிருகவைத்தியராக வேலை செய்த நான்கு வருடகாலத்தில் சிங்கள மக்களுடன் பழகவும் மற்றும் பல அரசியல் பிரமுகர்களை சந்திக்க முடிந்தது. அதே வேளை யாழ்ப்பாணம் வார விடுமுறையில் செல்லும்போது பல வன்முறை சம்பவங்களை மற்றும் அரசியல் போக்கை தமிழர்கள் மத்தியில் அவதானிக்க முடிந்தது. நாட்டின் அரசியலில் பொருளாதாரம் மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்பபட்டு இனவாதம் மட்டுமே ஒரே தீர்வாக இரண்டு தரப்பினரும் இருந்தபோது இதைப் புரிந்துகொள்பவன் தனிமனிதனாக இருந்தால் ஊமையாவதுதானே இயல்பு?. அவுஸ்திரேலியா வந்த பின்பு உதயம் பத்திரிகையைப் பொறுப்பேற்று நடத்தியதால் பல எழுத்தாளரின் வாசனை என்னையடைந்தது. எனக்கும் தமிழ் எழுதக்கூடிய திறமை சிறிதளவு வந்தது. மேலும் எஸ்.பொவின் தூண்டுதலால் வண்ணாத்திக்குளம் எழுதி முடித்தேன். வாழ்க்கையில் நடந்த ஓரிரு விடயங்களுடன் கற்பனை கலந்தபோது அது நாவலாகியது.

4. உங்கள் சிறுகதைகளைவிட நாவல்களே அதிகம் பேசப்படுகின்றன. உங்களுடைய மூன்று நாவல்களும் ஏதோவொரு அதிர்வை,சலனத்தை வாசகனுக்கு ஏற்படுத்தும். ஆனால் உங்களுடைய நாவல்களுடன் ஒப்பிடும்போது சிறுகதைகள் அவ்வாறன பரவசத்தை தருவதில்லை, நாவலாசிரியனே இலக்கியத்தில் உங்களுடைய இடம் என்று சொல்லப்படுகின்றது. இதை நீங்கள் எவ்வாறு பாக்கின்றீர்கள்?

எனது சிறுகதைகள் 2015ல் புத்தகமாகின நாவல் வெளிவந்து பத்து வருடங்கள் மேலாகியதுடன் ஆங்கிலத்தில் சிங்களத்தில் மொழி பெயர்க்ப்பட்டதாலும் பலர் அவற்றைப்பற்றி எழுதியதாலும் வெளியே தெரியவந்தது. தமிழில் எனது முக்கிய ஆக்கம் மிருகங்கள் பற்றி எழுதியதே. தமிழ் இலக்கியத்திற்கு புதுவரவு. ஆனால் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் இதை இன்னமும் கண்டுகொள்வதில்லை காரணம் புரிந்துகொள்ள முடியாத தன்மையே.

இலக்கியத்தை தமிழில் அறிவுபூர்வமாக விமர்சனம் செய்யும் நடவடிக்கை இன்னமும் துவங்கவில்லை. நீங்கள் கேள்வியில் கூறியது போல் உணர்வுகளில் அதிர்வு ஏற்படுத்துவது என்பதே எமது வாசக பரப்பில் முக்கியமாகப்படுகிறது. பெரும்பாலான விமர்சகர்கள் உணர்வுகளின் அடிப்படையில் இலக்கியதை விமர்சிக்கிறார்கள். அதாவது மின்சாரத்தை மின்குமிழின் ஒளியை வைத்து பார்ப்பதுபோல். ஒளிக்கப்பால் மின்சாரம் பல பாவனைகளைக் கொண்டது. முக்கியமாக இலக்கியம் உணர்வை மட்டுமல்ல அறிவையும் கொடுக்கவேண்டும். அரிஸ்ரோட்டல் உண்மை(ethos) உணர்வு(Pathos) தர்க்கம்(Legos) இருக்க வேண்டுமென்கிறார். இலக்கியத்தை விபரித்து விளக்கமாக பிரித்து இலக்கியத்தின் உன்னதங்களுக்கு அமைய எந்த விமர்சகரும் விபரிப்பது கிடையாது. நம்மவர்கள் மத்தியில ஒருவரது இரசனை என்பது சிறிய ஓட்டைபோன்றது அந்த ஓட்டைக்குள் புகமுடிந்தால் நல்ல இலக்கியம். இதைத்தான் இலங்கையில் உள்ள சிவத்தம்பி கைலாசபதி போன்ற பேராசிரியர்கள் செய்து வழி நடத்தியிருக்கிறார்கள். தனது இரசனைக்கு உள்வாங்க முடியுமானால் அது இலக்கியம் அல்லது இல்லை என்பதே தமிழில் நடைமுறை. இதைத்தான் தமிழகத்து விமர்சகர்களும் ஈழத்து விமர்சகர்களும் செய்து வருகிறார்கள். இல்லையென்றால் நண்பராக முகம் தெரிந்தவராக அல்லது அவர்களது முகாமில் இருக்கவேண்டும். இதைவிட மிகவும் கொடுமையானது ஒரு முக்கியமானவர் ஒருவரை பற்றியோ அல்லது ஒருவரின் எழுத்தை பற்றியோ நன்றாக சொல்லிவிட்டால் அது பின்வருபவர்களால் வாசிக்கப்படாது. அப்படியே காபன் கொப்பியாக எடுத்து சொல்லப்படும். அது தலை முறையாக தொடரும். இதற்கு அப்பால் தமிழ்வாசகர்களில் மிக குறைந்தவர்களே அரசியல் சினிமாவுக்கு அப்பால் சிந்திப்பவர்கள். அதற்கு அப்பால் எழுதினால் தமிழில் புரிந்து கொள்ளவோ வாசிப்பதற்கோ ஆட்களில்லை. இது இவர்களின் தவறில்லை. பாடசாலை பாடநூல் பல்கலைக்கழகம் என முற்றுப்புள்ளியில்லாத சிக்கல்கள்.

தமிழில் சிறுகதைகளில் இரண்டு முக்கிய விடயங்கள் மட்டும் பார்க்கப்படுகிறது. முதலாவது மொழி, இரண்டாவது அவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது. இதற்கு காரணம் தமிழில் பெரும்பாலான சிறுகதை எழுத்தாளர்கள் மனமுடைந்த கவிஞர்கள். இளம் வயதில் கருக்கப்பட்ட ஏக்கங்களையும் செய்யமுடியாத விடயங்களையும் வைத்து தமிழ்சினிமா படம் தயாரிப்பதுபோல் தோல்வியடைந்த கவிஞர்களின் அகங்கள் கவிதையாகின்றன. இது இலக்கியத்தின் ஒரு வெளிப்பாடு ஆனால் நல்ல சிறுகதையில் இதற்கப்பால் படிமம், முரண்ணகை, புதியவிடயத்தை சொல்லுதல், பொருள்மயக்கம், சர்வதேசத்தன்மை எனப் பல இருக்கின்றன. இவைகளை அடிப்படையாக யாராவது இலக்கிய விமர்சனம் செய்தால் எனக்கு சொல்லுங்கள். அப்பொழுது எமது இலக்கியவாதிகளும் புரிந்து கொள்ளமுடியும்.

எனது இடம் எங்கிருக்கிறது என்பதை நான் சொல்ல முடியாது. ஆனால் எனது சிறுகதைகளில் பல அரசியல் நகைச்சுவைத் தன்மை கொண்டது அதற்கப்பால் மனவியல், காமம் என பல விடயங்களில எழுத முயற்சித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் மினிமலிசம் என ஒன்று இருக்கிறது இதை ஏர்ணெஸ்ட் ஹெமிங்வே ரேய்மண் காவர் என்போர் பாவித்தார்கள். அதாவது அதிகமாக விவரித்து அலுப்புக் கொடுக்காமல் வசனங்கள் மிகக்குறைந்த அளவில் பாவித்து பொருள் மயக்கத்தை ஏற்படுத்துவது, அதாவது வாசிப்பவர் முடிவை ஊகிக்க வைப்பது. உதாரணமாக குருடனைப் பாத்திரமாக்கிவிட்டு அவனுக்கு இருட்டு எப்படி இருக்கும் என விபரிப்பது தேவையற்றது. இதைத்தான் நீரில் பனிகட்டி போல் என்பார்கள்.

5. இலக்கிய விமரிசனக் கருத்துக்கள், கொள்கைகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்வீர்களா? அவற்றை கருத்தில் கொள்வதில் பயனுண்டு என எண்ணுகிறீர்களா?

மேற்குலகத்தில் அரிஸ்ரோட்டல் எப்படி கவிதை இருக்கவேண்டுமென்று சொல்லியது பிரபலமானது. அதைத் தொடர்ந்து இலக்கியம் பற்றிய கருத்து வளர்ந்தது. அதேபோல் நாடகம் அதேகாலத்தில் அங்கிருந்து உருவாகியது. 18ம் நூற்றாண்டுகளில் இருந்து நாவல் பின்பு சிறுகதை என இலக்கியம் பல பரிமாணங்களில் வளர்ந்த போது இவைகள் பற்றிய கருத்துக்கள் வளர்ந்தன. இவைகள் திட்டமான உருவம் அல்லது கோட்பாட்டிற்கு அமைய இப்படித்தான் இருக்காவிடிலும், இதை மீறும்போது அவை விமர்சனப்படுத்தினார்கள். மேலும் ஐரோப்பாவில் பொருளாதாரத்திற்கேற்ப அவை வளர்ந்தன. வீரதீர இலக்கியம்(Romanticism) நில அமைப்புடன் முடிந்தது. பின் கைத்தொழிற் புரட்சியால் ஏற்பட்ட வியாபார முதலாளித்துவ காலத்தில் (Mercantile Capitalism) யதார்த்த இலக்கியம்(Realism) உருவாகியது. பின்பு 20 நூற்றண்டில் ஆரம்பத்தில் நவீன இலக்கியமாகி(Modernism) தற்போதய எல்லைகள் கடந்த முதலாளித்துவத்தில் பின்நவினத்துவமாகிறது(Post-Modernism).

நமது சூழ்நிலையில் தமிழ் நவீன இலக்கியத்தில் தெளிவான மாற்றங்கள் இல்லை. தமிழ் இலக்கியத்தில் கல்கியின் நாவல்கள் வீரதீரகாலத்தை சேர்ந்த ஐரோப்பிய படைப்புகளுக்கு ஒத்தவை. அவை யாதார்த்தமில்லை என்றுதான் தமிழ்நாட்டு இலக்கியவிமர்சகர் க.ந.சுப்பிரமணியம் வாதிட்டார்.

ஆனால் தமிழ் கல்வியாளர்கள் நமக்கென கோட்பாட்டையோ அல்லது தீர்க்கமான விமர்சன பாரம்பரியத்தையோ நமக்கு வைக்கவில்லை. சொல்லப்போனால், தமிழில் மட்டுமே வாசிப்பவன் இலக்கிய விதிமுறைகளை வாசித்தறிய முடியாத நிலை. தற்போது ஜெயமோகனது இணையம் மற்றும் அவரது தமிழிலக்கிய வரலாறு என்ற நூல் இலக்கிய விதிமுறைகளை தொட்டுக் கொள்ள உதவுகிறது. இந்த நிலையில் தமிழில் பாரம்பரியமான உள்ள கதை சொல்லி என்னும் முறையில் அதாவது அனுபவித்து இரசித்தல் (Enjoying with Empathy) என்பதில் எமது இலக்கியங்களைத் தொடர்கிறார்கள்.

சிறந்த கதைசொல்லியானவர்கள் மொழி, மற்றவர்களுக்கு தெரியாதவிடயம். உணர்வுகளை கொந்தளிக்கவைத்தல் இவற்றை மட்டும் கொண்டு கதை சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்கள் அல்லது அவர்களது கூட்டத்தை சேரந்தவர்கள். அவர்களை பாராட்ட அறிமுகப்படுத்துவார்கள். இதேவேளை அவர்களது முன்னாள் நண்பராக இருந்தவர்கள் அவர்களது படைப்பை இலக்கியமல்ல என்பார்கள்.
இதனால் தமிழில் நல்ல நாவல்கள் சிறுகதைகள் இல்லை என்பது பொருளல்ல. பல இருக்கின்றன அவைகள் பிரித்து உன்னதப்படுத்தப்படவில்லை. அக்காலத்து மளிகை வியாபாரத்தில் எல்லாவற்றையும் சாக்கில் இருந்தது எடுத்து பழய பத்திரிகையில் வைத்துக்கட்டி சரையாகக் கொடுக்கும் விடயம் நடக்கிறது. இன்னும் வகைவகையாக பிரித்துவைக்கும் சுப்பர் மார்க்கட் முறை இன்னமும் நம்மிடம் வரவில்லை. இந்த நிலையில் இதற்குமேல் எப்படி பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

ஆனால் நம் காலத்திலேதானே ஜெமோ, எஸ்.ரா போன்றவர்கள் திறனாய்வளர்களின் பட்டியல் என்று தமிழிலக்கியத்தை பட்டியலிட்டு இருக்கிறார்களே. இவை அந்த ‘சுப்பர் மார்க்கட்’ முறையினுள் வராதா?

இது அவர்களைக் கேட்கவேண்டிய கேள்வி ஆனாலும் எனது கேள்வி ஆங்கில மொழிக் குடும்பமற்ற மொழிகளான சீனா ஜப்பான் மற்றும் அரேபிய மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் புகழ் பெறுகின்றன. ஏன் இந்திய இதிகாசங்களான மகாபாரதம் இராமாயணம் பிரசித்தியாகின. மிருகங்களை வைத்து உலகத்தில் கதை எழுதியது இந்தியர்களே. அதுவே ஜாதகக் கதைகளாகின . இவற்றின் ஆதாரத்தில் இருந்து ஈசாப் கதைகள் மிக்கிமவுஸ் என்பன தோன்றின. இப்படியான முன்னுதாரணங்கள் நவீனகாலத்தில் இல்லை என்பது எனது கருத்து.
.
6. உனையே மையல் கொண்டு நாவல் பாலியலின்பத்தின் அகச்சிக்கல்களைப் பேசும் சிறந்த நாவலாகக் கருதப்படுகின்றது. அவற்றை எழுதுவதற்கான கருவினை எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள்?
Wrapper

காம உணர்வுகள் உயர்ந்த உயிரினங்களுக்கு ஒரு உற்ற தோழன், வலி நிவாரணி. காமமற்று வாழ்வது இறப்பிற்கு சமமானது. குறைந்த பட்சம் சுய இன்பமாவது செய்யவேண்டும். தனித்து இருக்கும்போது ஆண் என்ன செய்கிறான்.? இவற்றை மிருகங்களில் அவதானிக்க முடியும். காமத்திற்கு மூலம் மூளையாகிறது. இந்த நிலையில் மனிதமனதில் மனப்பிறள்வு (Schizophrenia) , மனத்தாக்கம்,(Depression) மனச்சேர்வு(Melancholy) ஏற்பட்டால் அது காம உணர்வில் பாதிப்பை ஏற்படுத்தும். எந்த நாட்டிலும் வன்முறைகள் எற்படுத்தும் தாக்கங்கள் உடலளவில் பேசப்பட்டாலும், உளப்பாதிப்பைப் பற்றி பேசுவது குறைவு. குறிப்பாக பெண்களின் காமம் எமது சமூகத்தில் பேசாப்பொருள். ஆனால், பெருமளவில் பிறள்வு நிலையில் இருக்கிறது. அதை வெளிக்கொணர விரும்பியதால் உனையே மயல்கொண்டு எழுதினேன். அரசியல், வரலாறு போல் மனதத்துவம் எனக்கு விரும்பமான பகுதியாகும்.
Kaila
7. உங்கள் எழுத்து நடை நேரடியாகவும் எளிமையாகவும் இருக்கின்றது. அதேநேரம் சிக்கலான அகப் பிரச்சினைகளயும் பேசுகின்றது. அப்படி எழுதவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது அது உங்கள் இயல்பா?

நான் விஞ்ஞானம் படித்ததுடன் வாழ்க்கையில் ஏராளமான காலங்களை மற்ற மொழியினரோடு கழித்தவன். இந்த நிலையில் மொழியில் சரளமான தன்மையில்லை. யோசித்து யோசித்து வார்த்தைகளை எழுதுபவன். மற்றவர்களிலும் வித்தியாசமாக எழுத எனது மருத்துவ படிப்பு எனக்கு கைகொடுக்கிறது.

பல சூழல் காரணிகள் மனிதர்களது புறவிடயங்கள் கட்டுப்படுத்தப்படுபவை. முக்கியமாக நமது சமூகம் முகம் பார்த்து பேசுவதும், சமூகத்துக்கு பணிந்தும் நடப்பவர்ககள். இவர்களில் புற நடவடிக்கைகளில் பெரிதாக வித்தியாசமில்லை. ஆனால் மனிதர்கள் அகத்தில் கைரேகை மற்றும் பாரம்பரிய அலகு போன்று ஒருவருக்கொருவர் வேற்றுமையுடன் இருப்பது மட்டுமல்ல கணத்துக்கு கணம் மாறுவார்கள். அதாவது வீட்டில் ஒருவர் வெளியில் ஒருவர், ஏன் இரவில் ஒருவர் ஆனால் பகலில் வித்தியாசம். எனவே அகம் பல வர்ணங்களாலான கம்பளம்போல் மிகவும் அழகானது. மிகவும் பெரிய எழுத்தாளர்களின் கைகளில் அது விளையாட்டு பொருளாகிறது.

8. உதயம் பத்திரிகையை நடத்திய அனுபவங்களில் இருந்து சிற்றிதழ்களின் போக்கு புலம்பெயர் தேசத்தில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துவதாக உணருகின்றீர்கள்? வாசிப்பவர்களும், எழுதுபவர்களும் ஆரோக்கியமான வகையில் அதிகரிகின்றார்களா? அடுத்த தலைமுறையில் இவற்றின்போக்கு எப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கருதுகின்றீர்கள்?

உதயம் நடத்தியபோது எமக்கு தெளிவான நோக்கம் இருந்தது. அதாவது விடுதலைப் புலிசார்ந்த ஊடகங்கள், புலம் பெயர்ந்தவர்களை பிரச்சாரத்தால் மூச்சைத் திணற வைத்த காலத்தில் மாற்று ஊடகமாக உதயத்தை ஆரம்பித்தோம். விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எமக்கு கொடுத்த பல சோதனைகள், போராட்டங்கள் மீது நடந்து நடத்தினோம். 13 வருடமுடிவில் அது தேவையற்றதாகியது. இணைய ஊடகங்கள் பெருமளவில் வந்து விட்டன. மேலும் விடுதலைப்புலிகள் சார்பான ஊடகங்கள் உதிர்ந்து விட்டன. கைக்காசை போட்டு தேவையற்று எங்களது ஈகோவிற்காக நடத்துவதிலும் அந்த பணத்தை பிரயோசனமாக வேறு நல்லவகையில் செலவு செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. சிற்றிதழ்கள் நடத்திவது மரத்தை எரித்து கரியாக்குவதுபோல் பணத்தை கரியாக்கும் ஒரு தொழில். இதை நமது தமிழர்கள் பலர் செய்திருக்கிறார்கள். நான் உதயத்தை நடத்தினதால் நேரடியாக நட்டம் மட்டுமல்ல ஏராளமான எதிர்ப்புகளை சமாளிக்க எனது முழு நேரத்தையும் செலவிட்டிருக்கிறேன். இதனால் ஏற்பட்ட நேரடியானதிலும் விட நூறுமடங்கு மறைமுக நட்டம் ஏற்பட்டுள்ளது. இதைவிட சமூகத்தில் புறக்கணிப்பு. நானும் மனைவியும் சொந்தமாக தொழில் செய்தபோது பகிஸ்கரிப்பு என்பது தொழில்முறையில் பாதிப்பு என இருந்தது. மொத்தத்தில உதயம் மிகப் பெரிய பாரமாக இருந்தது. இதற்கு அப்பால் சமூகத்தில் உதயத்தால் முன்னேற்றமான பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. ஒரே ஒரு நன்மை பத்திரிகையில் பாதிக்குமேல் ஆங்கிலத்தில் இருந்ததால் மற்றய சமூகத்தினர் எம்மை பத்திரிகையூடாக பார்த்தார்கள். உதயமில்லாவிடில், ஈழமுரசு என்ற புலிகளின் பிரச்சார ஏடு தமிழ் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தால் எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்?

அடுத்த தலைமுறை என்ன மொழியில் இலக்கியம் படிப்பார்கள் என்பது திட்டமாக சொல்ல முடியாதுவிடினும் நிச்சயமாக தமிழாக இராது. ஐரோப்பிய மொழிகள் மிகப்பெரிய கடல் போன்றது.. அவற்றோடு ஓப்பிடும்போது தமிழில் நவீன இலக்கியம் விருத்தியடையவில்லை. அதற்கு காரணம் எமது சமூகத்தின் கல்விமுறை, தாழ்வுச்சிக்கல் என்பனவாகும். முக்கியமாக வயதானவர்கள் கடந்தகாலங்களில் நடந்த விடயத்தை நினைவு கூர்வதுபோல் பழம்பெருமை பேசுவதில் காலம் கடத்துவது தலைமுறையாக பரவும் நோயாக உள்ளது. வரலாறு ஒரு சுமை அதை தங்கிவருபவன் எதிர்காலத்தில் அதிக தூரம் போகமுடியாது.

புலம்பெயர்ந்த எமது தலைமுறையில் தாய்மொழி தமிழானதால் நாங்கள் தமிழில் வாசிக்கிறோம் சிந்திக்கிறோம் எழுதுகிறோம் ஆனால் எனது மகன் ஆங்கிலத்திலே சிந்திக்கிறான். அவனை அவனது வழியில் விடுவது நல்லது. சிங்களத் திணிப்பு, இந்தி திணிப்பிலும் தமிழ்த் திணிப்பு பாரதூரமான மன உளைச்சல்களை இளமனங்களில் ஏற்படுத்தும்.

அவுஸ்ரேலியாவில் வாழும் உங்கள் மகன் ஆங்கிலத்தில் சிந்திப்பதில், எழுதுவதில் ஞாயமிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தெரியாமல் உருவாகிவரும் தலைமுறையினரை எப்படிப் பார்க்கிறீர்கள்? அது அவசியமான மாற்றம் தானா?

சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமிழர்கள் மத்தியில் உளள தாழ்வுசிக்களைப்போக்கி குறைந்த பட்சம் கேரளத்தவர்கள் நிலைக்கு வரவேணடும். பழய புராணத்தில் இருந்து விடுபட்டு முன்நோக்கி செல்லவேண்டும். வரலாறு எமக்கு சுமையாக உளளது. இதன்பின்பு விஞ்ஞான, தொழிழ்நுட்ப நூல்களை தமிழில் உருவாக்கி தமிழ்மூலம் வேலைவாய்பு பெறமுடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனால் இதற்கான அறிகுறி தமிழ்நாட்டிலோ, இலங்கைத் தமிழ்பரப்பிலோ தெரியவில்லை.முக்கியமாக ஏராளமான வருடங்களை வெற்றுக்கோசங்களில் வீணடித்துவிட்டார்கள்.

9. புலம்பெயர் எழுத்தாளர்கள் பெரும்பாலும் தாயக மண்ணில் தாம் வாழ்ந்த காலப்பகுதியில் இருந்த நினைவுகளையும் ஏக்கங்களையும், போர்கால சம்பவங்களையும் மட்டுமே எழுதுகின்றார்கள், அந்நிய மண்ணில் எதிர்கொள்ளும் உளவியல், பாலியல், சமூக யதார்த்தப் பிரச்சனைகளை எழுதுவதில் முனைப்புக்காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக வருகின்றன, இக்குற்றச்சாட்டுக்களை தகர்த்தெறியும் வகையில் உனையே மையல் கொண்டு, அசோகனின் வைத்தியசாலை போன்ற நாவல்களையும் பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளீர்கள். இவற்றுக்கான வரவேற்பு வாசகர்களிடையே எவ்வாறு இருந்தன?

புலம் பெயர்ந்தவர்கள் தங்களது சிந்தனையில் சிறு வயதில் பிறந்து வாழ்ந்த நாட்டை வைத்தும் தங்களது அனுபவத்தை வைத்தும் எழுதுகிறார்கள். முக்கியமாக இயக்கத்தில் இருந்தவர்கள் தங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். அது பிழையில்லை. ஆனால் தாய்நாட்டு போர் அல்லது தமிழக சினிமாவுக்கு அப்பால் மற்ற விடயங்கள் எழுதினால் புரிந்துகொள்ள முடியாத வாசகர்களைக் கொண்டது நமதுசமூகம் என்பது நினைக்கும்போது துன்பமாக இருக்கிறது.
நான் கடந்த கால் நூற்றாண்டுகளாக அவுஸ்திரேலியர்களுடன் வேலை செய்கிறேன் பல அவுஸ்திரேலியர்கள் மத்தியில் தொழில்புரிவதால் அவர்களை புரிவது மட்டுமல்ல அவர்களது கலாச்சாரத்தை உள்வாங்க வேண்டும். இதனால் என்னால் அவர்களை பற்றி எழுதமுடியும். எனது வண்ணாத்திகுளத்தை மொழிபெயர்த்த மடுள்கிரிய விஜயரத்தினா என்னிடம் எப்படி சிங்களவர்களை அச்சொட்டாக எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டபோது, எனக்கு பெருமையாக இருந்தது.

பல்கலைக்கழகத்திலும் மதவாச்சி, இறாகல என மொத்தமாக எட்டு வருடங்கள் அவர்களிடையே வாழ்ந்திருக்கும்போது நான் அவர்களாக வாழ்ந்திருக்கிறேன். இதேபோல் இந்தியாவில் பண்ணையில் வேலை செய்தபோது மூன்று வருடம் அப்படியே வாழ்திருக்கிறேன். இதற்கு ஒரு காரணம் நான் பத்துவயதின் பின்பு ஒரு இடத்தில் இருக்கவில்லை; தொடர்ந்து பல இடங்களில் வாழும்போது இந்த தன்மை ஏற்பட்டது என நினைக்கிறேன்.
Book Image
10. புலம்பெயர்ந்தவர்களின் சந்ததிகள் பல்வேறு இனத்தவருடன் கலந்துவிட்டார்கள், இவர்களிடம் இருந்து ஆங்கிலத்திலோ,அல்லது வேறு மொழிகளிலோ இலக்கியங்கள் உருவாக வாய்ப்புள்ளதா? அவ்வாறு இலக்கியங்கள் படைக்கப்பட்டால் அவை பல்வேறு கலாச்சார இடைவெளிகளுடன் பல்வேறு புதிய அனுபவங்களைத் தரக்கூடிய இலக்கியங்களாக பிறக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

இரண்டாவது தலைமுறையினர் எப்படி வாழ்வார்கள் என அவர்களது பெற்றோராலே எதிர்வு சொல்ல முடியாத காலத்தில் வாழ்கிறோம். எனது மருமகன் நாடக நடிகனாக அவுஸ்திரேலியா ஐரோப்பா என சென்று வருகிறான். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த சிங்கள மக்கள் மத்தியிலும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்ததும் தங்கள் வாழ்க்கை போராட்டத்தில் தங்களைப் பறிகொடுப்பதால்; கலை இலக்கியம் இரண்டாம் பட்சம்தான்.

11. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பிரபல இந்திய பதிப்பகங்கள் பணத்தைப்பெற்றுக்கொண்டு வெளியிடுவதாகவும், எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையைத் தருவதில்லையென்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. இதனை எவ்வாறன கண்ணோட்டத்தில் பாக்கின்றீர்கள்?

நான் இந்தியாவில் ஆறு புத்தகங்களை பதிப்பித்தேன். அவைகளை பணம் கொடுத்தே பதிப்பித்தேன். நான் பிரபலமான எழுத்தாளன் இல்லாதபடியால் எனது புத்தகத்தை வலிய வந்து பதிப்பிக்கமாட்டார்கள் என்பது உண்மை. இதில் நான்கு எஸ்.போவிடம் பதிப்பித்தபோது அவர் எனது நண்பனின் தந்தை அவரிடம் பதிப்பித்ததை நான் பண ரீதியாக எண்ணவில்லை. மற்றவர்கள் ஒரு தொகை புத்தகத்தை எனக்கு தந்தார்கள். எதுவிதமான பிரச்சனையும் இல்லை. குறை சொல்லமாட்டேன். ஆனால் இலங்கையில் எனது இரண்டு நாவல்கள் ஆங்கிலமாக விஜித யாப்பா பிரசுரித்ததால் ஒவ்வொரு புத்தகத்திலும் எனக்கு பணம் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். இன்னமும் கணக்கு வைத்திருப்பார்கள் நான் இலங்கைக்கு செல்லும்போது அந்தப் பணத்தில் செலவு செய்வது சந்தோசமனது. இதைவிட முக்கியமான உலகப் பல்கலைக்கழக நூலகங்களுக்கு சென்றுவிட்டது. எனது ஆங்கில பதிப்பான வண்ணாத்திக்குளம் அமரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பதிப்பித்த புத்தங்களில் சென்னையில் கூட ஒழுங்காக வினியோகிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. இந்த மாதிரியான பதிப்பித்தலை ஒழுங்கான தொழிலாக செய்யும் தன்மை இந்திய, தமிழ் பதிப்பகங்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலும் இல்லை என்பதுதான் உண்மை. எழுத்தாளர்களுக்கு அனுப்பிய ஆக்கங்களுக்கு ஈ மெயில் பதில்தராத பத்திரிகை ஆசிரியர்களை கொண்ட பத்திரிகை உலகம். எழுத்துக்கு மரியாதை கொடுக்காத குறுகிய மனம் கொண்ட பத்திரிகை ஆசிரியர்கள். பத்திரிகைகள் நிறுவனங்கள் கொண்ட சமூகத்தில் வாழும் நாம் எப்படி பதிப்பகத்தவரை மட்டும் குற்றம் சாட்டலாம்?

எஸ்.பொ கடைசிக்காலம் வரையிலும் தீவிர புலியாதரவாளர் நீங்கள் அவர்களைக் கடுமையாகச் சாடிக் கொண்டிருந்தவர் எப்படி உங்களால் மித்ரா பதிபகத்தினூடே நூல்களைப் பதிப்பிக்க முடிந்தது?

தமிழ்களில் மிகவும் சொற்பமானவர்களே அரசியலை, இலக்கியத்தை, சொந்த உறவுகளை வேறாக பிரித்து வைக்கக்கூடியர்கள். நாங்கள் இருவரும் அரசியலில் இருவரது நிலைகளையும் மதிக்கும்வேளையில் எனது அரசியலை அவரில் திணிக்கவோ அவர் என்னில் திணிக்கவோ முனைவதில்லை. முரணான விடயங்களில் புன்சிரிபோடு விலகுவோம்.

“தமிழ்க் குறுந்தேசியவாதத்தையும் அதன் குறைகளையும் எதிர்க்கின்றேனே தவிர, புலிகளை எதிர்ப்பதோ ஆதரிப்பதிலோ இல்லை என் கவனம்” என்று நீங்கள் பலமுறை குறிப்பிட்டிருந்தும், பொதுவாக உங்களுடைய எழுத்துகள் புலி எதிர்ப்பு எழுத்துகள் என்றும், நீங்கள் புலி எதிர்ப்பாளர் என்றும் உங்கள் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதை நீங்கள் எவ்வாறு பார்கின்றீர்கள்?

எளிமையாக சிந்திப்பவர்கள் ஒற்றைப்படையாக பார்ப்பார்கள். அதற்கு அதிக அறிவு அல்லது சிந்தனை முதிர்வு தேவையில்லை உதாரணமாக அடித்த தபால் முத்திரையில் எந்த நாடு எனத் தெரிந்துவிடும் என்பதுபோல். இவர்களை பற்றி இதற்கு மேல் சொல்ல வேண்டியதில்லை. மேலும் கால்நூற்றாண்டுகளாக புலி எதிர்ப்பாளர் என்பது எனக்குப் பல்கலைகழகத்தில் பெற்ற பட்டங்களை விட பெருமை சேர்க்கிறது. எனது மிருக வைத்திய அறிவு பல குருக்களிடமும் இருந்து பெற்றது. இலக்கிய அறிவு அதுபோல் பலரது சிந்தனைகளை நோண்டி இரவல் வாங்கியது. ஆனால் அரசியல் அறிவு அப்படியல்ல. அதாவது எனது அரசியல் அறிவை எந்த குருவின் துணையின்றி பெற்றேன். என்னை விடுதலைப்புலி எதிர்ப்பாளன் என அவர்கள் சொல்வதையிட்டு. பிரித்தானியாவில் சேர் என்றால் ஓர் கனவான் எப்படி நினைப்பானோ அப்படி சந்தோசமடைகிறேன். வேறு சமூகமாக இருந்தால் என்னைப்போல் அதிகம் இருந்திப்பார்கள். ஆனால் எனது சமூகத்தில் உள்ள மிக சிலரில் நான் ஒருவன் என்பது எனக்கு பெருமையானது.

நீங்கள் புலிகளைச் சாடுவதில் ஞாயமிருக்கலாம், ஆனால் நீங்கள் ரஜபக்சாவை மூர்க்கமாக ஆதரிப்பதன் பின்னாலுள்ள அறம் என்ன ? அவர் ஒரு இனவெறியர் கூடவே யுத்தக் குற்றவாளியும்தானே ?

உங்களது கேள்வியில் இராஜபக்ச பற்றிய உங்களது பதில் உள்ளது.
எனது பதில்வேறு. என்னைப்பொறுத்தவரை 87 ஆண்டில் இருந்து புலிகள் நாசகார சக்தி என்பதை பேசியும், எழுதியும் வந்தேன். இந்திய அரசாங்கமோ மற்றய தமிழ்த்தரப்புகளோ புலிகளை ஏற்கனவே அழித்திருந்தால் மக்கள் காப்பாறறப்பட்டிருப்பார்கள் ?

முப்பதுகால போராட்டத்தில் விளைவுகள் எதுவும் இல்லைத்தானே ?

யுத்தம் என்பது வெறியுடனே செய்யப்படுவது. யார் முதல் எதிரியை கொலை செய்கிறார்களே அவர்களே வெல்வது இது சாதாரணமானவர்களுக்கும் தெரியும். போரை மாவிலாற்றில் தொடக்கியபோது இது தெரியாத முட்டாள்களா விடுதலைப்புலிகள். ?

இலங்கையில் 2005 முன்பு அரசாங்கத்தில் இருந்தவர்கள் எப்படி யுத்தம் செய்தார்கள் ? விடுதலைப்புலிகள் எப்படி யுத்தம் செய்தார்கள் ?

இனவெறி இராஜாபக்ச கு டும்பத்திற்கு மட்டும் தனிப்பட்ட சொத்தல்ல என்பதை சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் சொல்வார்களே !

முல்லைத்தீவில் 95ல் சரணடைந்த 300 மேற்பட்ட இராணுவத்தின் குடுமபத்தினரிடம் கேட்டாலோ இல்லை இறுதி யுத்தத்தில் புலிகளின் பாதுகாப்பில் இருந்த இராணுவ குடும்பங்கள் என்ன சொல்வலுவார்கள் ?

இலங்கையில் 90 ல் யாழ்பாணப் பிரதேசம் புலிகளிடம் இருந்து கைப்பற்றியபோது மக்கள் வெளியற்றப்பட்டார்கள். பொது மக்கள் பாதிக்கப்படவில்லை. 2007ல் கிழக்குமாகாணம் கைப்பற்ப்பட்டபோது அங்குள்ள புலிகள் மக்களை வெளியேற அனுமதித்தபடியால் உயிர்ச் சேதம் குறைந்தது. இந்த போரையும் இலங்கை இரணுவம் இராஜபக்ச தலைமையில் செய்தார்கள். ஆனால் வடமாகாணப்புலிகள், மாறாக மக்களை யுத்தமுனைக்கு பணயக்கைதிகளாக அழைத்துக் கொண்டபோது அதற்கு எதிராக எத்தனைபேர் குரல் கொடுத்தார்கள் ? தமிழ்மக்கள் உயிர்களைக் கொடுத்து புலிகளை காப்பாறற பலரும் நினைத்தார்கள்..

என்னைப் பொறுத்தவரை இலங்கையில் மூன்றுவிதமாக யுத்தம் முடிவுக்குவரும் : நான்விரும்பியது புலிகள் சமாதானமான யுத்தத்தை நிறுத்தி உடன்படிக்கைகளில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வது. அதனது சாத்தியத்தை 87ல் இந்தியாவுடனும் 94 ல் சந்திரிகாவுடனும் பின்பு ரனில் தலைமையிலான யுத்த நிறுத்தத்தை முறியடித்து புலிகளே

இரண்டாவது புலிகள் வென்று யுத்தம் முடிவுக்கு வருவது – வியட்னாம் போல் -அது சாத்தியமில்லை.

மூன்றாவது இலங்கை அரசாங்கம் வென்று யுத்தம் முடிவுக்கு வருவது- அதுவே சாத்தியமானது

என்பதால் அரசாங்கத்தை ஆதரித்தேன். அந்த இடத்தில் யார் இருந்தாலும் எனது ஆதரவு கிடைக்கும். எனது ஆதரவிற்கு நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஒருவிதத்தில் ஆன்மீகமான ஆதரவு. புலிகளின் எதிர்பாளனாக இருந்ததால் அவர்கள் சிலரை சந்திக்க முடிந்தது.

இந்த யுத்தம் முடிவுக்கு வந்ததால் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் ஜனநாயக நீரோட்டத்தில் வந்துள்ளார்கள். இளம்வயதினர் கல்விகற்றகவும் தங்களது முன்னேற்றத்தை நோக்கி மட்டுமல்ல பாலியல் கனவு கூட காண முடியாத சூழ்நிலை இருந்தது. பச்சத்தண்ணில் பலகாரம் செய்யமுடியாதுபோல்.

அநியாயம் செய்யும் சிலரை அழிக்க மீண்டும் கிருண்ணரை எதிர்பார்க்க முடியாது.

“என்போன்றவர்கள் தமிழர்களுக்கு அதிகாரம் கொடுப்பதை எதிர்பதற்கு காரணம் உண்மையில் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்களிலும் மேல்மட்டத்தமிழர் கொடுமைப்படுத்துவார்கள் என்பது. சாதி ரீதியில், வர்க்க ரீதியில், பாலியல் பழிவாங்கள் என்பன எல்லாம் கடந்து இவர்கள் முதிர்சியடையும்போது அதிக அதிகாரத்தை பற்றி சிந்திக்கலாம்.” என்ற குறிப்பை முகநூலில் எழுதியிருந்தீர்கள், மாற்று இனத்தவர்களைவிட தமிழர்கள் இன்னும் முதிர்ச்சியடையாமல் இருகின்றார்கள் எனின் அதற்கான காரணங்கள் என்ன என்று கருதுகின்றீர்கள்?. இப்போதைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு காணி,பொலிஸ் அதிகாரம் கொடுப்பதுகூட பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றீர்களா?

இது மிகவும் உன்னதமான கேள்வி. அதிகாரத்தை ஒருவன் பெற்று கொள்ளும்போது மற்றவர்களிடம் இருந்து அவனுக்கு அதிகாரம் செல்லுகிறது அதாவது மற்றவர்களின் சொத்தை ஒருவன் காப்பாளனாக வைத்திருப்பதற்கு ஒத்தவிடயம். மேற்கு நாடுகளில் ஜனநாயகத்தில் மற்றவர்கள் தங்களில் ஒருவனைத் தேர்தெடுத்து பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். ஆனால் அப்படியான சமச் சீரான தன்மை அல்லது மற்றவனை நேசிக்கும் தன்மை எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதாரத்திலே வசதியிலோ தாழ்ந்த ஒருவனைப் பாராமரிப்பது அதிகாரத்தில் உள்ளவனது தார்மீக கடமை என்ற எண்ணம் தென்கிழக்காசியாவில் இல்லை. ஆனால் இந்திய மற்றும் தென்னிலங்கை சிங்கள மக்களிடம் தொடர்ச்சியான நிலஉடமை கலாச்சாரத்தால் தனக்கு கீழானவனை குறைந்த பட்சமாகவாவது அவன் ஜீவனைத் தக்கவைத்தால்தான் தான் அதிகாரத்தில் நிலைக்கமுடியும் என் நினைக்கும் தன்மையுளளது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கினாலும் அழிக்கமாட்டார்கள். அது கருணையால் அல்ல. அவனது தேவை அவர்களுக்குத் தேவை. அது சிங்கள வளவுகளாலும் இந்திய பண்ணைத்தன்மையினாலும் தலைமுறையாக அங்கு தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள பொருளாதார கலாச்சாரத்தால் அந்த பெருந்தன்மை உருவாகவில்லை அதே நேரத்தில் மேற்குலக்தில் உள்ள ஜனநாயகமும் எமது மனதில் குடியேறவில்லை. இதை நான் பழகிய விடுதலை இயக்கங்களிடம் பார்க்க முடிந்தது. பிரபாகரன் மட்டுமல்ல உமா, சிறி போன்றவர்கள் மற்றவர்களை நம்பாத, ஆனால் அதிகாரத்தின் மூலம் தலைவர்களாக இருந்தனர். இதற்கு விதிவிலக்கு பத்மநாபா மட்டுமே. ஏன் அமிர்தலிங்கம்கூட பெருந்தன்மையான தலைவர் இல்லை என்பதை நேரடியாக பார்த்த ஒரு சம்பவத்தில் அறிந்தேன். இவர்களிடம் தலைமைக்கான மற்றய குணங்கள் நிரம்ப இருந்தன என்பதை நான் ஏற்கிறேன். மேலும் இதற்கு இவர்கள் பொறுப்பனவர்கள் அல்ல. யாழ்ப்பாணம் ஒருவிதத்தில் இலங்கையில் அமைந்த தார்ப் பாலை நிலம் போன்றது. மிகவும் சிறிதளவே வளத்தைக் கொண்டது. நான் ஒரு முறை எழுதினேன் ‘பன்னிரண்டு எலிகள் ஒரு கூண்டில் வைத்து பன்னிரண்டு சிறிய கருவாட்டுத் துண்டுகள் போட்டால் அவற்றிற்கு அது போதாது. ஓவ்வொரு எலியும் யாராவது ஒரு எலி அந்த இரவில் இறக்கவேண்டும் என சிந்தித்தபடியே நித்திரை கொள்ளாது’.

மக்களிடம் அதிகாரம் செல்லுவது மிகவும் சிறந்த விடயம் அதை எவரும் எதிர்க்க முடியாது. ஆனால் அதிகாரத்தை கொடுப்பதற்கு முதல் கொழும்பில் உள்ள அதிகாரத்தை முக்கியமாக இலங்கை முழுவதும் பரப்பவேண்டும் கொழும்பில் உள்ள பெரும்பாலான காரியங்களை சகல மாகாணங்களுக்கும் கொண்டு சென்று மக்களை முன்னேற்றி செல்வத்தை பெருக்கிய பின்பு மெதுவாக அதிகாரங்களைக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அதிகாரம் தமிழர்களுக்கு செல்வதாக சிங்களமக்கள் எண்ணமாட்டார்கள் மாகாணங்களுக்கு கொடுக்கப்படுவதாகவே சொல்லுவார்கள். மேலும் இனவிரோதத்தை வைத்த மூன்று தலைமுறையான கும்பல்கள், மூன்று இனங்களிலும் மறைந்து, நல்ல நிலமை இலங்கையில் இருக்கும் இந்த முறையில் இன விரோதத்தை தடுக்கலாம். பதவி துஷ்பிரயோகத்தை குறைக்கமுடியும். தற்போதய மாகாண முறை கொழும்பில் அதிகாரத்தை எடுத்து அதனிலும குறைந்த அறவுணர்வும் அதிக அடங்காப் பதவிப்பசியும் கொண்டவர்களிடம் கொடுப்பதற்கு ஒப்பானது. இதன் நன்மைகள் மக்களிடம் போகாது. மிகவும் வீணானது. விரயமானது. மக்கள் விரோதமானது.

ஆனால் சிங்களவர்களிடமும் அதிகாரம் ஒரு குறிப்பிட்டவர்களிடையேதானே கைமாறுகிறது. அதுகுமில்லாமல் அவர்களும் இனவெறியர்களாகத்தானே இருக்கிறார்கள். அவர்கள் எப்படி அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பார்கள் என்று நம்புகிறீர்கள் ?

அதிகாரத்துக்குக்கு ஆசைப்படுவது அரசியல்வாதிகள். சிங்களவாக இருந்தாலும் தமிழராக இல்லை முஸ்லீம்களாக இருந்தாலும் அந்த சமூகத்தின் அரசியல்வாதிகளிடம் செல்கிறது. சாதாரணமக்கள் எதிர்பார்பது இருப்பதற்கு வீடு, குழந்தைகளுக்கு கல்வி ,மற்றும் வேலை என்பன. சாதாரணமக்கள் இவைகளுக்காகவே காலம் காலமாக போராடுவார்கள். உதாரணமாக மேற்கூறியதை எனக்கு தருவது அவுஸதிரேலியாவில் உளள வெள்ளையர்கள். அதுபோல் தமிழர்கள் தங்கள் தேவைகளை நோக்கிபோராடவேண்டியதும் அதை தமிழ்தலைவர்கள் கொடுப்பதுமே அவர்கள் கடமை.

உதாரணமாக இலங்கையில் முன்னுதாரணங்களாக சிறுபான்மைத்தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அதற்கு முதல்த் தேவை சிறுபான்மை இனத்தவர் புத்திசாலித்தனமாக நடக்கவேண்டும். அப்படியான புத்திசாலிகளை தலைவர்களாக்கினால் எம்மிடமும் அதிகாரம் வரும்.

தமிழர்கள் இனவெறியர் இல்லையா ? முஸ்லீம்களில் மதவெறியர்கள் இல்லையா ? அலையோயும் வரை குளிக்க காத்திருப்பவனை என்னன்று அழைப்பது ? எனது மதிப்பிற்கு உரிய மலையகத் தலைவர் தொண்டமான், முஸ்லீம் தலைவர் அஸ்ரப் போன்றவர்கள் தமது சமுகத்திற்கு உதவுவதற்கு அதிகாரத்தை யாரிடம் இருந்து பெறறார்கள் ?

எழுத்தாளனாக இருப்பதினை சௌகரியமாக உணருகின்றீர்களா? தொடர்ந்தும் எழுத்தாளனாக இருப்பதனால் வாழ்வில் எதனையும் கண்டடைந்ததாக கருதுகின்றீர்களா?

எழுத்தாளனாக வேண்டும் என நான் நினைத்து வரவில்லை. அவுஸ்திரேலிய தமிழ்ச்சூழல் என்னை ஒரு பத்திரிகைக்கு ஆசிரியாராக்கியது. ஒருவிதத்தில் என்மேல் சுமத்தப்பட்டது என தத்துவரீதியில் சொல்லமுடியும். எழுதத் தொடங்கிய பின்பு வாசிக்கவேண்டிய கட்டாயம் உருவாகிறது. மேலும் என் எழுத்துக்களை யாரோ கொஞ்சப்பேர் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. இது தொடரும்போது மேலும் படிக்க தூண்டுகிறது. நான் மதிக்கும் நல்ல எழுத்தாளர்கள் நண்பர்களானார்கள்.

எத்தனையோபேர் என்னைப்போல் எகிப்திற்கு போய்வந்தார்கள். ஆனால் அதைப்பற்றி எழுதுவோமா என நான் நினைத்தால் அதற்கு பல மாதங்கள் எகிப்தின் சரித்திரத்தை அறியவேண்டியிருந்தது. இதில் ஒரு சந்தோசம் கிடைக்கிறது. மேலும் தற்பொழுது பகுதி நேரவேலையில் இருப்பதால் நினைப்பதை செய்ய கொஞ்சம் அதிக நேரமுள்ளது. எனது சந்தோசத்திற்காக எழுதுகிறேன். அதுதானே மனிதவாழ்வின் இரண்டு புள்ளிகளுக்கு இடையில் தேவையானது.

அடுத்த படைப்பாக உங்களால் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது என்ன? எப்போது வெளியாகும்?
.

தற்பொழுது எகிப்து மற்று தென்னாபிரிக்க பயண அனுபவங்களை எழுதிவிட்டு சில சிறுகதைகள் எழுதினேன். உண்மையில் இலங்கைபோரைபற்றி எழுத முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை முக்கியமாக இலங்கை இராணுவம் மற்றும் போரில் உள்நாட்டில், வெளிநாட்டில நடந்த பல விடயங்கள் பற்றிய விடயங்களை சேகரித்து வருகிறேன். இதுவரை எழுதியவர்கள் எல்லோரும் தமிழ்தரப்பை மட்டுமே எழுதியுள்ளார்கள். முழுமையான நாவலாக இருந்தால் இரண்டு தரப்பையும் கொண்டு வரவேண்டும். பிரான்சுப் படையினரையும் நெப்போலியனையும் விட்டுவிட்டு டால்டாய் போரும் சமாதானமும் எழுதியிருந்தால் அது சாதாரண நாவலாகவேகூட வந்திராது. என்னால் இரண்டு பக்கத்தையும ஒருங்கிணைத்து எழுத இயலுமோ தெரியாது . ஆனால் அப்படி ஒரு கனவு உள்ளது.

வாழ்க்கையின் கனவுகள் அதிகம்தானே?

இப்போது யுத்தம் முடிவடைந்து, புலிகளும் அழிக்கப்பட்டு விட்டார்கள். அரசியல் தஞ்சம் கோரிய நீங்கள் இன்னும் இலங்கை திரும்பாதிருப்பதன் காரணம் என்ன?

நான் அரசியல் தஞ்சம்கோரி செல்லவில்லை. குடும்பமாக புலம்பெயர்ந்தேன் ஆனாலும் 28 வருடங்கள் ஒரு இடத்தில் தங்கி தொழில், குடும்பம், பிள்ளை வந்ததுடன் இந்த நாடு வாழ்க்கை முறை கலாச்சாரத்தில் ஒன்றாகிவிடும்போது சொந்த நாடாகிறது. ஆனால் முடிந்தவரை இலங்கையில் எனது வாழ்க்கையில் சில காலங்களையும் செலவழிக்கவிருக்கிறேன்.

“சிங்களவர்கள் மட்டுமா இனவாதிகள்?” அதற்கு 5 மறுமொழிகள்

  1. சை.பீர்முகம்மது Avatar
    சை.பீர்முகம்மது

    உங்களின் நேர்காணல் விரிவாகாவும் விளக்கமாகவும் இருந்ததோடு சில உண்மைகளையும்
    ஆறியும் வாய்ப்பு ஏற்பட்டது.
    தாங்கள் அகதியாக ஆஸ்திரேலியா போகவில்லை.அதனால்
    புலம்பெயர் தமிழர் என்ற
    அவமானப்பெயர் உங்களுக்குஇல்லை.போதுமான அளவு பிறந்த பூமியில்
    வாழ்ந்து விட்டதாக கூறும்
    முதல் உலகக்குடிமகன்
    நீங்கள் தான்.நீங்கள் தமிழில் ஏன் எழுதுகிறீர்கள்?
    உங்கள் மகனைப்போல நீங்களும் ஆங்கிலத்தில் சிந்திக்கலாமே? நீங்கள்
    எழுதாமல் போனால் தமிழ்
    முடமாகிவிடாது நடேசன் சார். இது பாவப்பட்டவர்களின் மொழி.
    உங்களைப்போன்ற உயர்
    குடிக்கு தமிழ் சொறு போடாது.

    1. நான் அரசியல் தஞ்சம் கோரி செல்லவில்லை. குடும்பமாக புலம்பெயர்ந்தேன் ஆனாலும் 28 வருடங்கள் ஒரு இடத்தில் தங்கி தொழில், குடும்பம், பிள்ளை வந்ததுடன் இந்த நாடு வாழ்க்கை முறை கலாச்சாரத்தில் ஒன்றாகிவிடும்போது சொந்த நாடாகிறது. ஆனால் முடிந்தவரை இலங்கையில் எனது வாழ்க்கையில் சில காலங்களையும் செலவழிக்கவிருக்கிறேன்.

      மேலே உளளது எனது நேர்முகத்தில் உள்ளது. குடும்பமாக சென்றாலும் புலம் பெயர்நதவர் என்பது அர்த்தம் –தயவு செய்து மீண்டும் வாசியுங்கள்

      புலம்பெயர்ந்த எமது தலைமுறையில் தாய்மொழி தமிழானதால் நாங்கள் தமிழில் வாசிக்கிறோம் சிந்திக்கிறோம் எழுதுகிறோம் ஆனால் எனது மகன் ஆங்கிலத்திலே சிந்திக்கிறான். அவனை அவனது வழியில் விடுவது நல்லது. சிங்களத் திணிப்பு, இந்தி திணிப்பிலும் தமிழ்த் திணிப்பு பாரதூரமான மன உளைச்சல்களை இளமனங்களில் ஏற்படுத்தும்.

      என்மகனிலே எனது சிந்தனையை திணிக்கமாட்டேன் என்பது என் வாதம்.

      தாங்கள் நான் என்ன மொழில் எழுதவேண்டுமென்று சொல்கிறீர்கள். –இது ஜனநாயகமற்ற கூற்று என்பது புரியவில்லையா?. எனது கருத்துகளை எந்தமொழில் எழுதுவது என்பது எனது உரிமை. நான் தமிழில் எழுதியதாலே உங்களுக்கு எழுதமுடிந்தது. இது உங்கள் பதிலில் உள்ளது.

      ‘உங்களின் நேர்காணல் விரிவாகாவும் விளக்கமாகவும் இருந்ததோடு சில உண்மைகளையும் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. ‘

  2. BASIC REASONS FOR SL-CONFLICT: SINHALA RACISM,ARROGANCE,IDIOTISM,NARROW-MINDNESS,UNDIPLOMACY,BRUTALITY & NO VISION! AS WELL AS TAMIL MILITANTS’ NEGATIVE QUALITIES & DISUNITY DUE TO JEALOUSY,EGO,REVENGE & ANGER/INTOLERANSE!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: