தமிழ் இலக்கியத் தோட்டத்தில் எஸ்.பொ. என்ற பொன்னுத்துரை நீண்டு பருத்து அறுபது வருடங்கள் ஓங்கிவளர்ந்து கிளைவிட்ட வேப்பமரம். அவரால் வெளிவந்த பிராணவாயுவைச் சுவாசித்து எழுதத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன்.
படிப்பறிவற்ற மத்துயுவை ஒரு தேவதை கைகளைப் பிடித்து விவிலியத்தை எழுதுவதாக இத்தாலியில் புகழ்பெற்ற ஓவியம் ஒன்று உண்டு. அதேபோல என் போன்றவர்களின் கையைப் பிடித்து இலக்கியத்தின் ஏடு தொடக்கியவர் அத்துடன் பல வருடங்கள் துரோணராய் இருந்தார் அவர்.
அவுஸ்திரேலியாவில் உதயம் பத்திரிகை நடத்திய காலத்தில் நான் எழுதிய வீட்டு மிருகங்களின் மருத்துவ அனுபவம் பற்றிய கதைகளை ‘தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத பகுதியை நீ எழுதி இருக்கிறாய்’ எனச் சொல்லி அவற்றைப் புத்தகமாகப் பிரசுரிக்க என்னைத் தூண்டி ‘வாழும் சுவடுகள்’ என்ற பெயரில் பதிப்பித்தார். அதன்பின் என்னால் ‘மதவாச்சிக் குறிப்புக்ளாகப் பல காலத்தின் முன்பு எழுதிப் பத்துவருடங்கள்வரை, பத்து வீடுகள், பெட்டிகளின் அடியில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா என அலைக்கழிந்த எழுத்துப்பிரதியை வண்ணாத்திக்குளமாக்கத் தூண்டி அதை நாவலாகப் பதிப்பித்து ஒரு நாவலாசிரியர் என மகுடம் சூட்டினார். அவர் கையால் வைத்த மகுடத்தைக் கீழிறக்க விரும்பாமல் நான் தொடர்ந்து எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். இந்தப் புத்தகத்தை எஸ்.பொ. நினைவுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்