சிறைப்பறவையின் விசாலமான மனப்பான்மை.
நடேசன்
தொடர்ச்சியாக முழங்கியபடி கரையை மோதும் நீல நிறமான அத்திலாந்திக் சமுத்திரத்தில் மேற்கு நோக்கி கேப்ரவுணில் இருந்து ஒரு மணிநேரம் பிரயாணம் செய்தால் நெல்சன் மண்டேலாவை 18 வருடங்கள் சிறைவைத்த ரொபின் ஐலன்ட் என்ற தீவை அடையலாம். பிரயாணசீட்டை பெற்றுக்கொண்டு கேப்ரவுண் துறைமுகத்தில் இருந்து சிறிய படகு, ஆனால் பாதுகாப்பான வசதிகள் கொண்டதில் புறப்பட்டோம். அன்று மழையும் காற்றுமாக பருவகாலம் சோதித்தது. காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்பட்டு மீண்டும் அதே படகில் வந்து சேர வேண்டும். இந்தப் பயணம் பலகாலமாக நான் எதிர்பார்த்திருந்த பயணம்.
கொந்தளித்த சமுத்திரத்தில் எங்கள் பயணம் இலகுவானது இல்லை. நிச்சயமாக அந்தத் தீவிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது என்பதை அந்தப் பயணத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தத் தீவில் இருந்து மண்டேலாவை தப்பிக்க வைக்க எக்காலத்திலும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் முயலவில்லை. ஆனால் தென் ஆபிரிக்க உளவு நிறுவனம் முயன்றது. அந்தத்திட்டத்தை மண்டேலா சந்தேகித்து ஒப்புக் கொள்ளவில்லை. மண்டேலாவை தப்ப வைத்து வழியில் கொலை செய்வதற்கான திட்டமது. பல்வைத்தியரைப் பார்க்க அவர் கேப் ரவுனுக்கு சென்றபோது தப்புவதற்கு மனதில் நினைத்தாலும் பின்பு கைவிட்டார்.
நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையை வாசித்து பலவருடங்களாகியும் அதில் உள்ள பல விடயங்களை மறக்க இயலாமல் இருந்ததற்கு எமது தாய்நாட்டிலும் போர்க்காற்று வீசியதே காரணம்.
தவிர்க்க முடியாமல், எம்மையறியாமலே இப்படி ஒரு மனிதர் நமது நாடுகளில் இருக்கமாட்டாரா என ஏங்க வைத்ததுடன் – அவர் சிறையிருந்த தீவை நாமும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.
அவரது சயசரிதையில் அப்படி என்ன விசேடம் உள்ளது எனக் கேட்டால் பல விடயங்கள் – அதிலும் சிறிதாக அவர் குறிப்பிட்ட விடயங்கள் அவரை தனித்துக் காட்டும்.
மண்டேலாவின் சுயசரிதைப் புத்தகத்தில் கூறப்பட்ட ஒரு விடயம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல தனிமனிதர்களுக்கும் தேவையானது.
‘குளிர்காலத்தில் ஒரு கம்பளிப் போர்வை தேவை என்றால் சிறைக்குப் பொறுப்பான மந்திரிக்கு எழுதினால் பதில் வராது. சிறை சுப்பிரிண்டனுக்கு எழுதினால் அல்லது நேரே சென்று பேசினால் இதற்கு சட்டத்தில் இடமில்லை எனப் பதில் வரும். ஆனால் சிறைக்காவலாளியோடு மரியாதையாக நடந்தபின் குளிருக்கு மேலதிக கம்பளி கேட்டால் கம்பளி வந்து சேரும்’
மனித மனங்களை எப்படி கையளவேண்டும் என்பதை புரிந்து கொள்வதற்கு நமது அரசியல்வாதிகள் படிக்க வேண்டியது இந்த மண்டேலாவின் சுயசரிதை.
இன்னும் ஒரு விடயம் இக்காலத்துக்கும் பொருந்தும். மண்டேலாவின் ஆபிரிக்க சோசா (Xhosa) மொழியில் புலிக்கு வார்த்தையிருக்கிறது. அதேபோன்று சிறுத்தைக்கும் வேறு பெயர் உண்டு. ஆனால் புலி ஆசியாவில் மட்டுமே உள்ளது. இதனால் மண்டேலா, ஆபிரிக்காவில் ஆரம்பகாலத்தில் புலி இருந்திருக்கலாம் என்றார். அப்போது இந்திய வம்சாவளியில் வந்து ஆபிரிக்க தேசிய காங்கிரசின் முக்கியஸ்தரான மக் மகராஜா ” இந்தியில் அக்காலத்திலே ஆகாயத்தில் பறக்கும் விமானத்திற்கு வார்த்தை உள்ளது, அதன்படி பார்த்தால் இந்தியாவில் அக்காலத்தில் ஆகாயத்தில பறக்கும் விமானம் இருந்ததா..? ” என்று மண்டேலாவை மறுத்தார்.
இந்த சம்பாசணையை தனது சுயசரிதையில் குறிப்பிடுவதற்கு வித்தியாசமான மனம் வேண்டும்.
தென் ஆபிரிக்க நிறபேதமான அரசியலமைப்பின் தந்தையாகவும் கறுப்பர்களை மிருகங்களையும்விடக் கேவலமாக நடத்திய ஹென்றிக் வேர்வுட் ((Hendrick Verwoerd) ) பிரதமராக இருந்தபோது பாராளுமன்றத்தில் வைத்து ஒரு வெள்ளையரால் கொலை செய்யப்பட்டபோது, அவரது இறப்பு எந்த சந்தோசத்தையும் தங்களுக்குத் தரவில்லை, அரசியல் கொலை எதிரிக்கெதிரான மிகவும் கீழ்த்தரமான செயல் – ஆபிரிக்க தேசிய காங்கிரஸால் அத்தகைய கொலைகள் எக்காலத்திலும் எதிர்க்கப்படும் என்கிறார்.
தென்னாபிரிக்க தலைநகரான பிரிற்ரோரியாவில் தண்டனை விதிக்கப்பட்டதும் மண்டேலாவிற்கும் மற்றைய கைதிகளுக்கும் தென் ஆபிரிக்க கேர்ணல் சொன்னார்.
‘உங்களை நாங்கள் நான்கு சுவர்களுக்கு இடையே அடைக்கப் போவதில்லை. நல்ல இடத்திற்கு அனுப்பப் போகிறோம். அங்கு கடல் காற்று வானம் என சுதந்திரமாக வைத்திருக்க கொண்டு செல்கிறோம்.’
‘அந்த வார்த்தையில் நக்கல் இல்லை’ என்கிறார் மண்டேலா தனது சுயசரிதையில்.
விமானத்தில் அவருடன், வாட்ல்டர் சிசுலு (Walter Sisulu)மற்றும் பல ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர்களை ரொபின் ஐலன்ட் கொண்டு சொல்கிறார்கள். விமானத்தின் கண்ணாடிகள் ஊடாக பார்த்தபோது மேகங்கள் தவழும் ரேபில் மவுண்டன் பின்னர், நீலக் கடலான அத்திலாந்திக் சமுத்திரம் இவற்றுக்கு மேலாக விமானம் பறந்தது.
எம்மைக்கொண்டும் போகும்போது ஒரு சிறைக்காவலர் ‘நீங்கள் அதிக காலம் இருக்க வேண்டியதில்லை. நாட்டின் தலைவர்களாக வெளியே வருவீர்கள்’ என்றார்.
‘அந்த நேரத்தில் மனதுக்கு ஆறுதலாக இருந்தாலும் அந்த வார்த்தைகள் நிறைவாக கால் நூற்றாண்டுகள் சென்றது.’ என்கிறார் மண்டேலா.
ரொபின் ஐலண்ட்டில் இரண்டாவது உலக யுத்தத்தின்போது இராணுவத்தை வைத்திருந்தார்கள். தற்கால நமீபியா, ஜேர்மன் காலனி பிரதேசம். அங்கிருந்து ஹிட்லரின் படைகள் தென் ஆபிரிக்காவை தாக்கலாம் என்ற பயம். ஆனால், அது கடைசிவரையும் நடக்கவில்லை. அதற்கு முன்பு தொழுநோயாளரை இங்கு வைத்திருந்தார்கள்.
சிறையில் மண்டேலாவுக்கு கொடுக்கப்பட்ட இலக்கம் 466/64 அதாவது 64 ஆம் ஆண்டு வந்த 466 ஆவது கைதி என்பதே அதன் அர்த்தம். ஏற்கனவே மண்டேலா இரண்டு கிழமைகள் 1962இல் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ‘ அக்காலத்தில் எல்லா இனத்தவர்களுக்கும் பொதுவான சிறை இரண்டுவருடத்தின் பின்பாக இன ரீதியில் மாற்றப்பட்டு இப்பொழுது வெள்ளைக்காவலர்களும் கறுத்த கைதிகளுமாக முற்றக மாற்றமடைந்துள்ளது’ என எழுதியுள்ளார்.
மண்டேலா அங்கு இருந்ததால் புகழடைந்த ரொபின் ஐலண்ட், இப்பொழுது எந்தக் கைதிகளும் அற்று உல்லாசப் பிரயாணத்திற்காக விடப்பட்டுள்ளது. 3 மைல் நீளம் 2 மைல் அகலமான தீவு புவியில் பாதுகாக்கப்படும் பகுதியாக மாற்றப்பட்டிருப்பதால் எதுவித உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் அங்கு அமைவதற்கு சாத்தியமில்லை. மேலும் கடற்கரை பாறைகள் கொண்டதால் பல கப்பல்கள் உடைந்துள்ளன . இதைத் தடுக்க கலங்கரை விளக்கு உள்ளது.
சிறை என்பது கைதிகளினது தன்னம்பிக்கையை உடைப்பதற்காக உருவாவதால் அரசியல் கைதிகளுடன் சாதாரண கொலை வன்முறைகளில் ஈடுபட்டவர்களும் இருந்தார்கள்.; ஆரம்பத்தில் அரசியல் கைதிகளை எதிர்தவர்கள், பின்பு மண்டேலாவின் தொடர்பால் தங்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள்
மக்களில் இருந்தும் ஆதரவாளர்களில் இருந்தும் அரசியல் தலைவர்களை தனிமைப்படுத்துவதற்கு இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள், அந்தமான் தீவுகளை பாவித்ததுபோல் தென் ஆபிரிக்காவை ஆண்ட டச்சுக்காரர் , ஆங்கிலேயர் பாவித்த அதே வழியை தென்னாபிரிக்க வெள்ளை அரசு பாவித்தது.
ஆறுமாதத்திற்கு ஒரு கடிதம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. குடும்பத்திலிருந்து ஒரே ஒரு பார்வையாளரே வருடத்தில் இருமுறை அனுமதிக்கபட்டவர்கள். மொத்தமான தகவல் தொடர்பு தடைசெய்யப்படுகிறது. புதிதாக வரும் கைதிகள் மூலம் செய்திகள் வரும். மண்டேலாவின் தாய் இறந்த சில காலத்திலே வின்னி மண்டேலா சிறை செல்வதும், மூத்தமகன் கார் விபத்தில்; இறந்ததும் அங்கிருந்தபோது ஒரே காலத்தில் நடந்தது என்கிறார்;.
இங்கு உல்லாச பிரயாண வழிகாட்டிகள் மற்றும் பராமரிப்பவர்கள் என இருநூறு பேர் வாழ்கிறார்கள். இதைவிட கடல் காகங்கள் வான்கோழிகள் பென்குயின்கள் பாம்புகள் ஆமைகள் என்பன அங்கு வாழ்கின்றன. ஆரம்பத்தில் பென்குயின்கள் அதிக அளவில் வாழ்ந்தன. பிற்காலத்தில் அருகி தற்பொழுது மீண்டும் வந்துள்ளன. சிறை தற்பொழுது கண்காட்சி சாலையாக பாதுகாக்கப்படுகிறது.
மிகவும் விஸ்தாரமான இடம். அதி உயர் பாதுகாப்பு சிறைப்பகுதியில் மண்டேலா இருந்த அறையில் அவரது படுக்கைகள் விரிப்புகள் மட்டும் இன்னமும் உள்ளன. இந்தத் தீவிற்கு ரோனி பிளேயர் மற்றும் ஹிலரி கிளின்ரன் போன்றவர்கள் இரவுவேளையில் தங்கி மன்டேலாவின் அனுபவத்தை உள்வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் வசதியான விருந்தினர் பகுதிகளில் தங்கிச் சென்றனர். எங்களை அரைமணித்தியாலம் பஸ்ஸில் ஏற்றி அந்தத் தீவை சுற்றிக்காட்டினர். மற்றைய அரைமணி நேரம் சிறைச்சாலையை சுற்றிப் பார்க்க அனுமதித்தார்கள். அன்று மழைநாள். அதனால் அவசரமான பயணமாக இருந்தது.
எங்களுக்கு வழிகாட்டி ஏற்கனவே மண்டேலாவுடன் மூன்று வருடம் சிறையில் இருந்தவர். அவரது விவரணங்கள் உணர்வு கலந்தது. சிறைக்குப் பின்னால் மண்டேலா உடற்பயிற்சி செய்த இடம் – அவரது சுயசரிதையை புதைத்த பகுதியை பார்க்க முடிந்தது.
மண்டேலா மற்றும் கைதிகள் சுண்ணாம்பு பாறையை உடைத்த இடத்தை பார்த்தபோது அவரது சுயசரிதையில் கூறியபகுதி நினைவுக்கு வந்தது.
‘கல்லுடைத்தபோது உடல் முழுவதும் சுண்ணாம்பால் மூடுவதுடன் சூரிய ஒளி பட்டு கண்ணைக் கூசச் செய்வதால் அதைத் தடுக்க கருப்புக் கண்ணாடி கேட்டு பல மாதங்கள் போராட வேண்டியிருந்தது.’
கற்கள் நிறைந்த கடற்கரையில் கடல் பாசி பொறுக்குவதும் மதிய நேரத்தில் அங்கிருந்து நண்டு, ஊரி, மட்டி என்பன கொண்டுவந்து சூப்பு வைத்து சாப்பிடுவது என்பன சந்தோசமான நினைவுகள் என்று குறிப்பிடுகிறார்.
ரொபின் ஐலண்டின் பிரயாண நினைவுகள் நெஞ்சத்தில் ஆழமாக பதிவன. அதற்கு அப்பால் இவ்வளவு துன்பங்களை வெள்ளை ஆபிரிக்கரால் அனுபவித்த மனிதன் மீண்டும் அவர்களை நேசிப்பது என்பது எவ்வளவு கடினமானது என்ற கேள்வியுடனேயே வரமுடிந்தது.
அவரது சுயசரிதையில் மற்றும் ஒரு செய்தி. அந்தச் சிறையில் மனிதத்தன்மையற்ற ஒரு ஜெயில் வோர்டன் வந்து அரசியல் கைதிகளை மிகவும் மோசமாக துன்புறுத்துகிறான். இறுதியில் அவன் பற்றி மண்டேலா பலமுறை மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லிய பின் ஒரு நீதிபதி விசாரித்து அவன் இடமாற்றம் செய்யப்படுகிறான்.
அவன் அந்த கடைசி நாளில் ” மண்டேலா உங்களை வாழ்த்துகிறேன்” என்கிறான்.
மற்றவர்கள் என்ன செய்வார்கள்…? முகத்தை திருப்பிக் கொள்வார்கள். ஆனால் மண்டேலா அவனை திருப்பி வாழ்த்திவிட்டு எழுதுகிறார:;
‘அவனது மனிதத்தன்மை இப்பொழுதுதான் வெளிவந்தது. இதுவரையும் இந்த இனதுவேச அரசின் ஊழியனாக அவனது மனிதத்தன்மை ஒதுக்கப்பட்டதுடன், அவனது கோர முகத்திற்கு மட்டுமே பதவிஉயர்வு, பணம் எனக் கொடுக்கப்பட்டதால் அவனும் அந்தக் கோர முகத்தை காட்டுவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறான்.’
எவ்வளவு அழகான வார்த்தைகள்.
மறுமொழியொன்றை இடுங்கள்